வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில்
தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ ஒன்று தொழிலாளர்களிடையே பரப்பப்பட்டு
அச்சத்தையும் இன வெறுப்பையும் பரப்பும் வேலையில் சமூக விரோதிகளும், சங்பரிவார்
அமைப்பினரும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த வதந்தி வேகமாகப் பரவியதையடுத்து
வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல அஞ்சி முடங்கினர். இதே
நேரத்தில் ஹோலி பண்டிகையும் வந்ததால் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லத்
துவங்கினர். திடீரென கூலியுழைப்புச் சந்தையில் ஏற்பட்ட இந்த நெருக்கடியானது,
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர முதலாளிகளையும், வணிகர்களையும் பெருமளவில்
பாதிப்புக்குள்ளாக்கியது.
திருப்பூர்
உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, வடமாநிலத் தொழிலாளர்கள்
பாதுகாப்பாகப் பணியாற்ற சங்கம் முழு ஆதரவு தருவதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
மேலும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றியது. (07 மார்ச் 2023 - தினத்தந்தி)
வடமாநிலத்
தொழிலாளர்கள், நம் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். வடமாநிலத்தவர்கள்
இல்லாவிட்டால், கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் என்று கட்டுமானத்
தொழிலாளர் சங்கத் தலைவர் சீனிவாசன் கூறுகிறார். (IBC தமிழ்நாடு, 06 மார்ச் 2023)
வடமாநிலத்
தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழக முதல்வர் வடமாநில தொழிலாளர்களுக்கு
சரியான முறையில் பாதுகாப்பு வழங்கி வருகிறார் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்
பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறுகிறார் (தமிழ் இந்து, 08 மார்ச் 2023)
முதலாளிகள் தொழிலாளர்களின் நலன் மீதும் பாதுகாப்பு
மீதும் அக்கறைப்படுவது போன்று இந்த அறிக்கைகள் மூலம் பாசாங்கு காட்டினாலும், அது அவர்களின் சொந்த
நலனுக்கானதே. தொழிலாளர்கள் இல்லையென்றால், உற்பத்தி முடங்கும்
அபாயம் ஏற்படும், இதனால், அவர்களின் இலாபம் குறையும், எனவே உழைப்புச் சக்தியைத் தங்கு தடையின்றிச்
சுரண்டுவதற்கு வடமாநிலத் தொழிலாளர்கள் வெளியேறுவதைத் தடுப்பது அவர்களுக்கு
அவசியமாகும். இது குறித்து அவர்களே தெரிவிக்கும் கருத்துகளையும் பார்ப்போம்.
வடமாநிலத்
தொழிலாளர்கள் அச்சத்தின் காரணமாக ஊருக்குத் திரும்புகிறார்கள். எங்களது
நிறுவனங்களில் ஐம்பது சதவீதமும், நூற்பாலைகளில் 80
சதவீதமும் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஹோலியைக் காரணம்
காட்டிச் செல்பவர்கள் திரும்ப வருவார்களா எனத் தெரியவில்லை. இதைக் கட்டுப்படுத்த
வேண்டும் என்று போசியா கூட்டமைப்பினர் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 5
லட்சம் ஸ்கில்டு லேபர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பணியிடத்தை விட்டுச்
சொந்த ஊருக்குச் செல்வார்களானால் கடுமையான நெருக்கடியைத் தொழில்துறை சந்திக்கும்
என ஜேம்ஸ் - டேக்ட் அமைப்பினர் கூறுகின்றனர். கடந்த இரு தினங்களில் ரூ. 40 கோடி
வரை உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று இவர்கள் தெரிவித்துள்ளனர். (நியூஸ்
7 தமிழ், 04 மார்ச் 2023)
முதலாளி வர்க்கத்தின் அக்கறையானது அவர்களின்
மூலதனத்தையும், இலாபத்தையும் பாதுகாப்பதற்கானதே தவிர, உழைக்கும் மக்களின் நலனை
அடிப்படையாகக் கொண்டதல்ல. ஏனெனில், இடம்பெயர் தொழிலாளர்களுக்கு இவர்கள் குறைவான கூலி
கொடுத்து அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்தி அதிகபட்சமான சுரண்டலைச் செய்பவர்கள், சட்டப்படியான உரிமைகள்
எதுவும் தருவதில்லை. பணியிடங்களில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதில்லை, சிறிய அறைகளில் கூட
10க்கும் மேற்பட்டவர்கள் தங்கி வேலை செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. தங்குமிடம்
சுகாதரமற்று உள்ளது, சுத்தமான குடிநீர் வசதியும், கழிவறை வசதிகளும் கூட
செய்து கொடுப்பதில்லை. விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான இழப்பீடும்
வழங்கப்படுவதில்லை. இந்தத் தொழிலாளர்கள் எத்தனையாண்டுகள் வேலை செய்தாலும் அவர்கள்
நிரந்தரமற்றவர்களாகவே இருப்பர். எந்த வரைமுறைகளின்றியும் சுரண்டுவதற்கு இந்த
இடம்பெயர் தொழிலாளர்கள் இவர்களுக்குத் தேவைபடுகின்றனர்.
ஆனால், இடம்பெயர் தொழிலாளர்களை இங்கு கொண்டு வருவதற்கு
அவர்கள் சொல்லும் காரணம், தமிழகத் தொழிலாளர்கள் உற்பத்தித் துறையில் ஆர்வம்
காட்டுவதில்லை, சேவைத் துறையில் மட்டுமே ஆர்வம் செலுத்துகிறார்கள் என்பதாகும். இது
குறித்து ஜேம்ஸ்- டேக்ட் அமைப்பினர் கூறுவதைப் பார்ப்போம்.
தமிழகத்தில்
உள்ள தொழிலாளர்கள் உற்பத்தித் துறையில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர்.
உள்மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு வராத காரணத்தால், வடமாநிலத் தொழிலாளர்களைத்
தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
தமிழகத் தொழிலாளர்கள் பெரும்பாலும் சேவைத் துறையைத் தான் விரும்புகிறார்கள்.
உற்பத்தி துறையில் வேலை செய்வதைத் தமிழகத்தில் உள்ளவர்கள் மறுக்கிறார்கள்.
இதுபோன்ற காலங்களில் தான் புலம்பெயர் தொழிலாளர்களை பயன்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களைப் புறக்கணித்து, வடமாநிலத் தொழிலாளர்கள்
வேண்டும் என்ற போக்கில் தொழில்துறை ஒருபோதும் செயல்படுவதில்லை. (நியூஸ் 7 தமிழ், 04 மார்ச் 2023)
இதில் ஓரளவிற்கு உண்மை இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள
அனைத்துத் தொழிலாளர்களும் தனது வாழ்க்கைக்குத் தேவையான கூலியைப் பெறமுடிவதில்லை. எனவே, ஒப்பீட்டளவில், இதனை விடச் சற்று அதிகமான
கூலி கிடைக்க கூடிய இதர நகரங்களுக்கு அல்லது வளைகுடா, தென்கிழக்காசிய
நாடுகளுக்கு இடம் பெயர்கின்றனர் அல்லது சரியான வேலைக்காக காத்திருக்கும் பட்டாளத்தில்
இணைகின்றனர். முதலாளிகள் நிர்ணயிக்கும் மிகக்குறைந்த கூலியைப் பெற்றுக் கொண்டு
வேலை செய்யும் நிர்ப்பந்தம் ஒப்பீட்டளவில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அதிகம்
இருப்பதால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்விடத்திலிருந்து இடம் பெயர்ந்து இங்கு
வருகின்றனர்.
இந்திய அரசோ அல்லது தமிழக அரசோ அனைத்து வகையான
வேலைகளுக்கும் சரியான கூலி வழங்கப்படுவதைக் கண்காணிப்பதற்கு எந்தவிதமான திட்டத்தையும்
கொண்டிருக்கவில்லை. மேலும், அரசு குறைந்தபட்சக் கூலியை நிர்ணயிக்கும் பொழுது, அது ஒரு குடும்பம்
உயிர்வாழ்வதற்குப் போதுமானதாக கூட இருப்பதில்லை. தனது அடிப்படைத் தேவைகளைக் கூட
நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் கடுமையான பற்றாக்குறையில்தான் தொழிலாளர்கள்
குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது.
உழைப்புச் சந்தையில் மிகையான கூலியுழைப்பாளர்கள்
இருப்பதால், அதாவது தேவைக்கும் அதிகமாகத் தொழிலாளர்கள் சந்தையில் கிடைப்பதால்
கூலியின் அளவானது தொடர்ச்சியாகக் கீழே இறங்குகிறது. தமிழகத்தில் தொழில் செய்யும்
முதலாளிகள் சொல்வது போன்று வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது போலியான
வாதமாகும். அவர்களின் வாதம் உண்மையானால், தமிழ்நாட்டில் வேலையின்மையின் அளவு
பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் மற்றும் வேலைத் தேடி வெளியே செல்பவர்களின் அளவும்
பூஜ்ஜியமாக இருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலவரமோ இதற்கு நேர்மாறானது. 2022 ஆம் ஆண்டு கணக்குப்படி 67.23 இலட்சம் பேர்
அரசின் வேலைவாய்ப்புத்துறையில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருப்பதாகத் தமிழக
அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசின் குரூப் 4
பிரிவில் 7300 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21 இலட்சம் பேர்.
இதே போன்று ஒவ்வொரு துறையிலும் சில ஆயிரம் வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய
அறிவிப்பு செய்தால் இலட்சக்கணக்கான இளைஞர்கள் அதற்கு விண்ணப்பிகின்றனர். இந்தியா முழுவதும் இந்த
நிலைதான் உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டில் தமிழகத்தில்
வேலையின்மையின் அளவு 7.2 சதவீதமாக உள்ளது என CMIE ஆய்வு தெரிவிக்கிறது. இது
இந்திய சராசரியின் அளவான 8.3 சதவீதத்திற்கு சற்றே குறைவாக உள்ளது. முதலாளிகள்
சொல்வது போன்று ஆட்கள் கிடைப்பதில்லை என்பது தவறான வாதமாகும். தொழிலாளர்களுக்கு
உரிய கூலியைக் கொடுத்து அவர்களுக்கு பாதுகாப்பான, நிரந்தர வேலையை வழங்க
இவர்கள் மறுக்கின்றனர். எனவே, தொழிலாளர்கள் இத்தகைய வேலைகளில் ஆர்வம்
காட்டுவதில்லை.
பீகார் அரசோ திடீரென தங்களுடைய தொழிலாளர்கள் மீது
அக்கறை வந்தது போன்று விசாரணைக் குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், தன்னுடைய ஆட்சியின் கீழ்
இருக்கும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலையும், நியாயமான கூலியையும்
வழங்க வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளது என்பதை அது கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
பீகார் அரசின் திடீர்க் கரிசனத்திற்கு காரணம் என்ன?
பீகாரிகள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக பாஜக
கட்சியினர் வதந்தியைப் பரப்பியதன் மூலம் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் ஐக்கிய ஜனதா
தளம் கட்சிக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தினர். இந்த நெருக்கடியிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவே பீகார் அரசு குழுவை அமைத்து தமிழகத்திற்கு அனுப்பியது.
தொழிலாளர்கள் இடம்பெயர்வதில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் பீகார், தொழிலாளர்கள் தங்கள்
சொந்தப் பகுதிகளிலேயே வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத்தை பெறுவதற்கு எந்த
முயற்சியும் செய்யவில்லை என்பதிலிருந்து அதனுடைய போலியான அக்கறை வெளிப்படுகின்றது.
பீகாரில் கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து 40,000க்கும்
மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் வேலையை நிரந்தரப்படுத்தவும், முறையான ஊதியம் வழங்கவும்
கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்; ஆனால் அரசு இதனைச் சிறிதும்
கண்டுகொள்ளவில்லை. ஆசிரியர் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற
ஆசிரியர்கள் வேலைக்கான ஆணையை வழங்கக் கோரி கடந்த ஆகஸ்டு மாதத்தில் போராட்டத்தில்
ஈடுபட்ட பொழுது இதே நிதிஷ்குமார் அரசு காவல்துறையை வைத்து வன்முறையை
அரங்கேற்றியது. இங்கு சுட்டப்பட்ட நிகழ்வுகளெல்லாம் வெகு சிலவே. இது போன்று
நாள்தோறும், அரசு துறைகளில் பணியாற்றுபவர்களும், தனியார் துறைகளில்
பணியாற்றுபவர்களும் நிரந்தரமான வேலைக்காகவும், நியாயமான
ஊதியத்திற்காகவும் பீகாரில் போராடி வருகின்றனர். இந்திய அரசின் அக்னிபாத்
திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீண்ட போராட்டங்கள் எழுந்ததும் பீகாரில்
தான்.
பீகார் மக்களிடையே தொழிலாளர்கள் தாக்கப்படுவது
போன்ற வதந்திகளை பரப்பி, இனவாத அரசியலை முன்னுக்கு கொண்டு வந்து தமது
கட்சியை வலுப்படுத்த பாஜக முயற்சி செய்தது. இந்த வதந்தியைப் பரப்பிய பிரசாந்த்
குமார் என்பவர் பாஜகவின் செய்தி தொடர்புப் பிரிவைச் சார்ந்தவர் ஆவார். அதே போன்று, பாஜகவினர் இந்தப்
பிரச்சனையை மையப்படுத்தி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று
கூறி அரசியல் இலாபம் தேடும் முனைப்பில் இறங்குகின்றனர். இதன் மூலம் தமிழ்நாட்டில்
பாஜக கட்சியை வளர்த்தெடுக்க முயற்சி செய்கின்றனர்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தியாவை
ஆண்டு கொண்டிருக்கும் பாஜக, பல்வேறு மாநில அரசுகளைக் கைப்பற்றியிருந்தும் கூட
அனைவருக்கும் வேலையையும், வேலைக்கான கூலியையும் உத்திரவாதப்படுத்த சிறு
துரும்பையும் அசைக்கவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக
2014 தேர்தல் அறிக்கையில் பிரச்சாரம் செய்து பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது.
ஆனால், நிரந்தரமான, பாதுகாப்பான வேலைகள் என்பது கானல் நீராகவே உள்ளது.
புதியதாக உருவாக்கபடும் வேலைகள் அனைத்து தற்காலிகத் தன்மையுடனும், ஒப்பந்த
அடிப்படையிலானதுமாக இருக்கின்றன.
மேலும், எப்டிஇ (Fixed Term Employment) என்ற
புதிய திட்டத்தின் மூலம், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில்
தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்திப் பின்னர் தூக்கியெறிவதற்கான உரிமையை
முதலாளிகளுக்குச் சட்டப்பூர்வமாகவே இந்திய அரசு வழங்கியுள்ளது. எந்தப் படிப்பு
படித்திருந்தாலும் அவர்களைத் தொழில் பழகுநர்கள் என்ற பெயரில் மூன்று ஆண்டுகள் வரை
பணிக்கு அமர்த்திச் சுரண்டும் முறையை அறிமுகபடுத்தியுள்ளது. ’இலகுவாகத் தொழிலை
நடத்துதல்’ என்ற பெயரில் தொழிலாளர் சட்டங்களைச் சீர்த்திருத்தம் செய்வதாகக் கூறி, தொழிலாளர்களுக்கு இருந்து
வந்த சிறிதளவான ஜனநாயக உரிமைகள் கூட இன்று பறிக்கப்பட்டுள்ளன. மேலும், நீண்டகாலமாக பாஜக
ஆட்சியின் கீழ் இருக்கும் உத்திரபிரதேசத்திலிருந்து தான் வேலை தேடிப் பிற
மாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை
மிக
அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்துத்துவக் கொள்கையை முன்னிறுத்தி தன்னுடைய அரசியலை
முன்னெடுக்கும் இந்த பாஜக அரசு பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களில் உள்ள
தொழிலாளர்களின் நலனில் கூட அக்கறை கொள்வதில்லை. வாக்கு வங்கிக்காக இந்துத்துவ
முகமுடியை அணிந்து அதன் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சியைக் கைப்பற்றுவதும், ஆளும்
வர்க்கத்தின் நலன்களுக்குச் சேவை செய்வதுமே இதன் முக்கிய குறிகோளாக உள்ளது.
அதற்கான செயல்திட்டம்தான் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தம் செய்ததும், விவசாயச் சட்டங்களை
தொடர்ந்து திருத்தம் செய்ய முனைவதும் ஆகும்.
திமுக அரசோ, தன்னுடைய ஆட்சிக் கட்டிலைக்
காப்பாற்றிக் கொள்வதற்கும், தன்னுடைய எஜமானான முதலாளித்துவ வர்க்கத்திற்குச்
சேவை செய்வதாற்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது அக்கறை உள்ளது போன்று
அறிவிப்புகளை செய்து வருகின்றது. வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழக அரசு எத்தகைய
அக்கறையைக் கொண்டுள்ளது என்பதற்கு சான்றாக, ஒரு நிகழ்வை மட்டும் பார்ப்போம்.
ஈரோடு
அருகில் அமைந்துள்ள எஸ்.கே.எம். பூர்ணா ஆயில் நிறுவனத்தில் நடந்த விபத்தில் பீகார்
மாநிலத்தைச் சேர்ந்த காமோத்ராம் என்ற தொழிலாளி உயிரிழந்தார், இதனையடுத்து, தொழிலாளியின்
குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி மற்ற தொழிலாளர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் போலீசார் தடியடி
நடத்தியதையடுத்துத் தொழிலாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், 40 தொழிலாளர்களைக் கைது செய்து அவர்களை ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஒரு
நாள் முழுக்க அடித்து நொறுக்கி, கொலை முயற்சி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் போலீஸ்
வழக்கு பதிவு செய்தது. காவல்துறையின் நெருக்கடிக்குப் பயந்து, சுமார் 300
தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கே தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
(aramonline.in, 08 ஏப்ரல் 202)
மேலும், முதலாளிகள் எந்தவிதச் சட்ட விதிமுறைகளையும்
பின்பற்றாமல் அனைத்துத் தொழிலாளர்களையும் சுரண்டி வருவதைக் கைகட்டி வேடிக்கை
பார்த்து வருகிறது தமிழ்நாடு அரசு. தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக, சட்டப்படியான
உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்கள் மீது போலீசையும், வழக்குகளையும் ஏவித் தாக்குதல் நடத்துகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள சங்கம் அமைக்கும் உரிமையை கூட அது
மறுக்கிறது. மேலும், ஒருபடி மேலே போய், தமிழ் நாட்டரசின் கட்டுப்பாட்டில் உள்ள
நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் ஒப்பந்தமுறையில் தற்காலிக அடிப்படையில் மட்டுமே
அதிகளவில் வேலைகளை வழங்கி வருகிறது. ஆசிரியப் பணியிடங்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் என
அரசே, தொழிலாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிக்கு அமர்த்திச்
சுரண்டும் பொழுது முதலாளிகளை எப்படி அது கண்காணிக்கும் அல்லது கட்டுபடுத்தும்?
இது, தமிழ்நாட்டரசுக்கு
மட்டுமல்ல, இந்தியா முழுமையுமுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் மற்றும் இந்திய
அரசுக்கும் பொருந்தக் கூடியதாகும்.
ஒன்றிய இந்திய அரசானாலும், மாநில அரசுகளானாலும், அவை எந்நாளும்
தொழிலாளர்களின் உரிமைகளுக்கானதாக இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம்
அளித்திருக்கும் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளைக் கூட இவை செயல்படுத்த மறுக்கின்றன.
உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, கொரானா பெருந்தொற்றுக் காலத்தில் தொழிலாளர்கள்
மீது எத்தகைய அக்கறைகளை இந்த அரசும், முதலாளித்துவக் கட்சிகளும் கொண்டிருந்தன என்பதை
நாம் பார்த்தோம். இருபது இலட்சம் கோடி ரூபாய் அளவிற்குச் சலுகைகளை வாரி வழங்கிய
மோடி அரசு தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகள் கூட
செய்யவில்லை.
மற்றொரு புறம் முதலாளித்துவக் கட்சிகளின் வாலாக இருக்கும் இனவாதிகள் இந்தப் பிரச்சனையைக் கொண்டு அரசியல் இலாபம் அடையத் துடிக்கின்றனர். தாக்கரே, வாட்டாள் நாகராஜ் போன்று தமிழகத்தில் சீமான்களும், மணியரசன்களும் இடம்பெயர் தொழிலாளர் சிக்கலைக் கொண்டு இனவெறுப்பை விதைத்து வருகின்றனர். இவர்கள்தாம் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து வரும் தமிழர்களிடையே நிதியைப் பெறும் பிழைப்புவாதத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களால் தூண்டப்படும் இனவெறுப்பால் பாதிக்கப்படுவது ஏதுமற்ற ஏழைத் தொழிலாளர்கள்தான். வடமாநிலத் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் தமிழகத் தொழிலாளர்களும் இதில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், தமிழகத்தை விட்டு வெளியில் கல்விக்காகவும், வேலைக்காகவும் சென்றிருக்கும் தமிழர்களை அச்சத்தில் இருத்தி வைக்க இந்த இனவாதிகள் காரணமாகிறார்கள்.
முதலாளிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் அவர் (நிதிஷ் குமார்) மாநில மக்கள் இங்கே (தமிழ்நாடு) வந்து குடியேறுவது அவருக்கு பெருமையாக இருக்கும். எனக்கு என் வாழ்விடத்தை என் தாய்நிலத்தை இழக்கும் போது கஷ்டமாக இருக்கும். நான் இப்போது சொல்வது எல்லாம் உங்களுக்கு வேடிக்கையாக தெரியும். கொஞ்ச நாள் கழித்துப் பேசுவதற்கு நான் மட்டும் தான் இருப்பேன். நீங்கள் எல்லாம் இருக்க மாட்டீர்கள். (koodal.com, 05 மார்ச், 2023)
இவ்வாறு தமிழ்நாட்டிற்கு உள்ளே வருபவர்கள்
குறித்துக் கொந்தளிக்கும் சீமான், வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குப்
பாதுகாப்பு வேண்டும் எனக் கோருகிறார். வங்காளியர் தமிழர் நட்புறவுக் கழகம் இருப்பது
போன்று அனைத்து மாநிலங்களிலும் நட்புறவுக் கழகம் அமைக்க வேண்டும் எனக் கோருகிறார்.
பிற
மாநிலங்களில் வாழும் இந்தியத் தமிழருக்கு உரிமையும் பாதுகாப்பும் முறைப்படி
கிடைத்திட தேசிய இன நட்புறக் கழகம் மாநிலந்தோறும் அமைப்போம்! (https://www.naamtamilar.org/policies/)
மும்பைப் பகுதியில் மாநகராட்சி தேர்தலில் அங்குள்ள
தமிழர்களிடையே நாம் தமிழர் கட்சி சென்று பிற கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கிறது
வெளிநாடுகளில் வாழும், குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில்
வசிக்கும் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களிடம் சீமான் பெருமளவில் நன்கொடைகள்
திரட்டுகிறார். அங்கு தமிழர்களின் கலாச்சசார நிகழ்வுகள் நாம் தமிழர் கட்சியால்
முன்னெடுக்கபடுகின்றன.
இவ்வாறு பல்வேறு மாநிலங்களுக்கும்,
வெளிநாடுகளுக்கும் புலம் பெயர்ந்துள்ள தமிழ்த் தொழிலாளர்களைக் கொண்டு நிதி
திரட்டுவது ஒரு பக்கம், வெளிமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களை முன்னிறுத்தி
இனவாதக் கூச்சலிட்டு அதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே வாக்குகளை அறுவடை செய்வது
இன்னொரு பக்கம் என இரட்டை வேடம் போடுகிறார் சீமான்.
இன்னொருபுறம் வடமாநிலத் தொழிலாளர்கள் என்றாலே
பாஜகவினர் என்பது போலப்பிரச்சாரம் செய்யப்பட்டு அவர்கள் தமிழ்நாட்டிற்குள்
புகுந்து பாஜகவை வலுப்படுத்துவார்கள் என்ற வாதம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் உத்திரபிரதேசம் மற்றும் பீகாரில் இருந்துதான் அதிகளவில் தொழிலாளர்கள்
இடம்பெயர்கின்றனர். இந்த மாநிலங்களில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம்,
ராஸ்ட்ரிய ஜனதா தளம் என்ற மாநிலக் கட்சிகள் நீண்டகாலம் ஆட்சியில் இருந்தன, இருந்து
வருகின்றன. எனவே, வடமாநிலத் தொழிலாளர்கள் என்றாலே பாஜகவின் ஆதரவாளர்கள் என்பது
போலியான வாதமாகும். வடமாநிலத்தினர் என்றாலே பா.ஜ.க. வினர்; இந்துக்கள் என்றாலே
பா.ஜ.க.வினர் எனக் கருதி அவர்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது மிகவும் அபத்தமான
ஒன்றாகும். இவர்களுடைய பிரச்சாரத்திற்கும் இஸ்லாமியர்கள் என்றாலே பாகிஸ்தான்
ஆதரவாளர்கள் என்று இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்வதற்கும் வேறுபாடு
எதுவுமில்லை.
வடமாநிலத் தொழிலாளர்கள் என்றாலே சமூக விரோதிகள்
என்ற முத்திரையை குத்தவும் சீமான், மணியரசன் போன்ற இனவாதிகள் தயங்குவதில்லை.
சமூகத்தில் நிறைந்திருக்கும் சீர்கேடுகளுக்கும், சமூக விரோதச் செயல்களுக்கும் காரணம்
இந்த முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பும், அதனைப் பாதுகாத்து வரும் அதிகார
வர்க்கங்களும் தான் என்பதனை இவர்கள் மூடி மறைக்கின்றனர். இத்தகைய சமூக விரோதச்
செயல்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஈடுபடுபவர்கள்
அனைத்துத் தரப்பைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஒடுக்கபட்ட சாதியினர்
என்றாலே திருடக் கூடியவர்கள், குற்றங்கள் புரியக்கூடியவர்கள் என்ற மனோபாவம் எப்படி
ஆதிக்க சாதியினரிடம் உள்ளதோ, அதேபோன்று இந்தச் சிந்தனையை இனரீதியாகத் திணிக்க இந்த
இனவாதிகள் முயல்கிறார்கள்.
இந்த இனவாதிகளின் அரசியலால் பாதிக்கப்படுவது வட
மாநிலத் தொழிலாளியாக இருந்தாலென்ன, தமிழகத் தொழிலாளியாக இருந்தாலென்ன, அவர்கள் பிழைப்பு நடத்தத்
தேவைப்படுவது வெறுப்பு அரசியல்; அதில் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு
என்ன கவலை?
இடம்பெயர் தொழிலாளர் சிக்கலை வைத்து அரசியல்
செய்து வயிறு வளர்க்க நினைக்கும் இனவாதிகளின் வெறுப்பு அரசியலிலிருந்து
தமிழகத்தில் சமீபத்தில் தொடங்கிய இந்தப் பிரச்சனையானது இனவாதிகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, தொழிலாளர்கள் மீது அக்கறை
உள்ளது போன்று வேடம் போடும் அனைத்து முதலாளித்துவ அரசியல் கட்சிகளையும், அவர்களின்
பாதுகாப்பிற்காகக் கவலைபடுவது போன்று நீலிக் கண்ணீர் வடிக்கும் முதலாளி
வர்க்கத்தையும் அம்பலத்தியுள்ளது.
முதலாளி வர்க்கம் இடம்பெயர் தொழிலாளர்கள் தடுக்கக்
கூடாது என்று கூறுவதற்கும் பாட்டாளி வர்க்கம் கூறுவதற்கும் வேறுபாடு உண்டு.
முதலாளி வர்க்கம் இடம் பெயர் தொழிலாளர்களைக் கொண்டு குறைந்த கூலியில் அதிகளவு
சுரண்டுவதற்காக இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறது. மேலும், உழைப்புச் சந்தையில்
போட்டியை அதிகரித்து அதன் மூலம் குறைந்த கூலிக்கு உழைப்புச் சக்தியை விற்பதற்குத்
தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்துகிறது. ஆனால், பாட்டாளி வர்க்கம் இந்த
இடப்பெயர்விற்குக் காரணம் முதலாளித்துவ உற்பத்தி முறையே என்பதை உணர்ந்து அந்தக்
காரணத்தை அகற்றப் போராடுகிறது.
இது குறித்து மூன்றாம் அகிலத்தில் நான்காவது
காங்கிரசில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பொருத்தமானதாக உள்ளன.
முதலாளிகளும்
இத்தகைய குடியேற்றத்தடைச் சட்டங்களை எதிர்க்கின்றனர். ஏனெனில் மலிவான, வெள்ளை நிறமல்லாத
தொழிலாளர்களைத் தடையில்லாமல் இறக்குமதி செய்வதால் வெள்ளை இனத் தொழிலாளர்களின்
கூலியைக் குறைத்து ஆதாயத்தைப் பெறமுடியும். முதலாளிகளின் உள்நோக்கத்தை வெற்றிகரமாக
எதிர்கொண்டு பதிலடி கொடுப்பதற்கு இங்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது. அது
குடியேற்றத் தொழிலாளர்கள் ஏற்கனவே உள்ள வெள்ளையினத் தொழிலாளர்களின் சங்கத்தில்
இணைக்கப்படவேண்டும். அதே நேரத்தில், வெள்ளை நிறமல்லாத
தொழிலாளர்களின் ஊதியத்தை வெள்ளை இனத் தொழிலாளர்களின் ஊதியத்திற்குச் சமமாக
உயர்த்தப்பட வேண்டும் எனக் கோரவேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகளின் இத்தகைய முயற்சி
முதலாளித்துவ உள்நோக்கங்களை அம்பலப்படுத்தும். கூடவே சர்வதேசப் பாட்டாளி வர்க்கம்
எந்தவிதமான இன வேறுபாட்டிற்கும் இடமளிக்காது என்பதை வெள்ளை நிறமல்லாத
தொழிலாளர்களுக்கு உணர்த்தும்.
தமிழகத் தொழிலாளர்கள், இடம்பெயர் தொழிலாளர்களை
சகோதர உணர்வுடன் அரவணைத்து, அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்திற்குத் துணை
நிற்பதோடு அனைத்து தேசிய இனத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து இந்திய முதலாளிய
வர்க்கத்திற்கு எதிரான போராட்டங்களைக் கட்டி எழுப்ப வேண்டும். முதலாளி வர்க்கம்
தன்னுடைய நலனுக்காக அனைத்துத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களையும்
ஓரிடத்தில் குவித்தும், தேசிய இனங்களுக்கிடையே நெருக்கமான ஒற்றுமையையும்
ஏற்படுத்தி வருகின்றது. எனினும், இந்தப் போக்கை தொழிலாளி வர்க்கமானது தன்னுடைய
விடுதலைக்கான போராட்டக் களத்தைப் கட்டியமைப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டு
முன்னேற வேண்டும்.
-
குமணன்
Comments
Post a Comment