தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023இல் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட 12 மணிநேர வேலைநாள் சட்டத்திருத்ததை தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பின்னர், தமிழக அரசு இந்தச் சட்டத்தின் மீதான மேல் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இது தமிழக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.
எனினும், இந்த சட்டத்திருத்ததை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவிக்கவில்லை, அடுத்த கட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக மட்டுமே அறிவித்துள்ளது. மீண்டும் இதன் மீதான மேல் நடவடிக்கைகள் எப்பொழுது வேண்டுமானாலும் முன்னெடுக்கப்படலாம். எனவே இந்த சட்டத்திருத்ததை தமிழக அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.
இது மட்டுமல்லாமல், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான தமிழக அரசின் விதிமுறைகளில் வேலைநாளை எட்டு மணி நேரம் என்பதற்கு பதிலாக 12 மணி நேரம் என வரையறை செய்துள்ளது.
இந்திய அரசு தொழிலை இலகுவாக நடத்துதல் என்ற பெயரில் முதலாளி வர்க்கத்தின் சுரண்டல் நலனை பாதுகாக்கும் வண்ணம், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் சட்டங்களை திருத்தம் செய்து 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றியமைத்துள்ளது. இந்தச் சட்டத் தொகுப்புகளுக்கான விதிமுறைகள் அந்தந்த மாநில அரசுகள் வகுக்க வேண்டும். இந்திய அரசின் சட்டத் தொகுப்பில் வேலை நேரத்தை பற்றி கூறும் பொழுது எட்டு மணிநேரம் அல்லது உரிய அரசு (மாநில அரசு) முடிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசோ தொழிலாளர்களின் நலன் கருதி எட்டு மணிநேர வேலைநாளை விதிமுறைகளில் வகுக்காமல், 12 மணிநேரம் என வரையறை செய்துள்ளது. இது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்காகும்.
ஊதிய சட்டத்தொகுப்பு (தமிழ்நாடு) விதிகள் 2022, பிரிவு 6(2) இல் ஒரு நாளின் வேலை நேரம் 12 மணி நேரம் எனவும், பணியிடப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிநிலைமைகள் (தமிழ்நாடு) - 2022 விதிமுறைகள், பிரிவு 27இல் ஒரு நாளின் வேலை நேரத்தை 12 மணி நேரம் எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
தொழிற்சாலைகள் சட்டத் திருத்தங்களை காட்டிலும், மேற்குறிப்பிட்ட புதிய தொழிலாளர் சட்டங்களும் அதற்கான விதிமுறைகளும் தான் தொழிலாளர்கள் மீது கடும் சுமைகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. புதிய வேளாண் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது போன்று தொழிலாளர் விரோதப் போக்கை கொண்டிருக்கும் புதிய தொழிலாளர் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
- சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
அருமையான பதிவு தோழர்
ReplyDelete