தமிழ்நாட்டின்
ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, ஏப்ரல் 6ந் தேதி கிண்டி ராஜ்பவனில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.
போன்ற குடிமைப் பணித் தேர்வுகளுக்காகத் தயாராகும் மாணவர்களுக்கு எடுத்த வகுப்பில்
தான் ஒரு முதலாளிய வர்க்கத்தின் அடிவருடி என்றும், முதலாளிய வர்க்கம் வீசி எறியும்
எலும்புத் துண்டுக்காக நன்றியுடன் பணியாற்றும் அதிகாரவர்க்கத்தின் ஒரு பிரதிநிதி
என்பதையும் அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஸ்டெர்லைட்டுக்கு
எதிராகவும், கூடங்குள அணு உலைக்கு எதிராகவும் மக்கள் நடத்திய வீரம் செறிந்த
போராட்டங்களை அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு நடந்த போராட்டங்கள்
எனக் கூறிக் கொச்சைப்படுத்தியுள்ளார். அவை நாட்டின் நலன்களுக்கு எதிராக நடந்த
போராட்டங்கள் என்று கூறி, அந்தப் போராட்டங்களை நடத்திய மக்கள் நாட்டின்
நலன்களுக்கு எதிரானவர்கள் எனக் கேவலப்படுத்தியுள்ளார். அதன் மூலம்
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொண்டு போராடிய மக்கள் மீது
மிருகத்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி பதினைந்து இன்னுயிர்களைக் குடித்த,
முதலாளிகளின் பாதுகாவலர்களான போலீஸ் ரவுடிகளை நாட்டு நலன்களைக் காப்பாற்றியவர்களாக
அர்த்தப்படுத்துகிறார்.
சுற்றுச்சூழல்
பாதுகாப்பு, மனித உரிமைகள் என்ற பெயரில் நாட்டின் நலன்களுக்கு எதிராக
வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு போராடுபவர்களாக மக்கள் மீது குற்றம்
சுமத்தும் இவர் யாருடைய நலன்களுக்காக நிற்கிறார்?
உண்மையில்
வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு மக்கள் எங்கும் போராடுவதில்லை. நாட்டின்
வளர்ச்சி என்ற பெயரில் இவரைப் போன்ற முதலாளிய வர்க்க அடிவருடிகள்தான் உள்நாட்டு
முதலாளிகளிடமிருந்தும் வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்தும் அவர்கள் வீசும் எலும்புத்
துண்டுகளைப் பெற்றுக் கொண்டு, சுற்றுச் சூழலையும், நீரையும், காற்றையும்
மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைத் தொடங்க அனுமதிக்கின்றனர். வளர்ச்சி என்ற பெயரில்
மனித உயிரைப் பறிக்கும் புற்று நோய் போன்ற கொடிய நோய்களும், சுவாசக் கோளாறு, தோல்
நோய் ஆகியவற்றைப் பரப்பும் மையங்களாகத் தொழிற்சாலைகளை உருவாக்கி வருகின்றனர்.
தொழிற்சாலைகளைச் சுற்றி அமைந்துள்ள சமூகம் இந்தக் கொடிய நோய்களுடன் சிறுகச் சிறுக செத்து
மடிந்து கொண்டிருக்கும். அதே சமயத்தில் முதலாளிகளும் ஆட்சியாளர்களும் கொழுத்த இலாபத்தில்,
ஆடம்பர வாழ்வில் திளைப்பார்கள்.
முதலாளிகளுக்கு
இலாபம் ஒன்றுதான் குறியே தவிர மக்களின் நலன்கள் அல்ல. தொழிற்சாலைகள் வெளியிடும்
கழிவுகளையும் மாசுகளையும் சுத்தப்படுத்தி ஆபத்தில்லாமல் ஆக்கும் தொழில்நுட்பங்கள்
இருந்தும் முதலாளிகள் அவற்றைத் தங்கள் தொழிற்சாலைகளில் அமைத்து அவற்றைச்
சுத்தப்படுத்தமாட்டார்கள். . ஏனென்றால் அவ்வாறு செய்தால் முதலாளிக்கு உற்பத்திச்
செலவு அதிகரிக்கும். அதனால் இலாபத்தில் குறைவு ஏற்படும். எந்த முதலாளியும் தனது
இலாபம் குறைவதை ஏற்றுக் கொள்ள மாட்டான். தொழிற்சாலைகள் தனது மாசு கட்டுப்பாட்டு
வேலையை முறையாகச் செய்கின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரிகளும் அதைக் கண்டு
கொள்ள மாட்டார்கள். அவர்களது நோக்கமெல்லாம் தங்கள் பைகளை நிரப்புவதுதான்.
இந்த
விவரங்கள் எல்லாம் மக்களுக்குத் தெரியாது என்று கருதிக் கொண்டு முதலாளிகளும்
இவரைப் போன்ற முதலாளிய அடிவருடிகளும் நாட்டு நலன்களைப் பற்றிப் பேசி வருகின்றனர்.
இணையவழி
ரம்மி சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்ட முன்வரைவை தமிழ்நாடு சட்டசபை ஏகமனதாக
நிறைவேற்றி அனுப்பியும், நான்கு மாதமாகக் கிடப்பில் போட்டுவிட்டுத் திருப்பி
அனுப்பியவரும் இவர்தான். தொடர்ந்து பல உயிர்கள் இணையவழி சூதாட்டத்தினால் பறி போய்க்
கொண்டிருக்கும் நிலையில் மக்கள் நலனுக்கான ஒரு சட்ட முன்வரைவை ஒப்புதல் அளிக்காமல்
திருப்பி அனுப்புகிறார் என்றால் இவர் யாருடைய நலன்களுக்காக இருக்கின்றார்?
மக்களின் நலன்களுக்காகவா இல்லை சூதாட்ட முதலைகளின் நலன்களுக்காகவா? இத்தகைய
சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்கிறார். இவரை இங்கு ஆளுநராக
அனுப்பிய ஒன்றிய அரசின் அமைச்சரோ இத்தகைய சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம்
மாநிலத்திற்கு இருக்கிறது என்கிறார். அப்படியானால் அரசியல் சட்டத்தையும் மீறி இவர்
யாருக்காக சேவை செய்ய விரும்புகிறார்?
இங்குள்ள முதலாளிய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கூட மதிக்காமல் நடக்கும் இவர் தன்னை வானளாவிய அதிகாரம் கொண்ட நபராகக் கருதிக் கொள்கிறார். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் ஒரு ஆளுநருக்கு இருந்த அதிகாரம் தனக்கு உள்ளது என்ற கற்பனையில் இருக்கிறார் போலும். இப்பொழுது உள்ள அமைப்பில் ஆளுநர் என்பது வெறும் அலங்காரப் பொம்மை என்பதையும், ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளுக்கும், அதிகாரத்தில் இருந்தபோது தங்களுக்கு விசுவாசமாக இருந்த அதிகாரிகளுக்கும் ஆளுங்கட்சியால் வழங்கப்படும் கவுரவப் பிச்சை என்பதையும் அவர் மறந்து விட்டார் போலும்.
மேலும்,
குடிமைப் பணிக்காகத் தேர்வு எழுதப் போகும் மாணவர்கள் மத்தியில் எத்தகைய எண்ணங்கள்
உருவாக்கப்படுகின்றன என்பதை இவருடைய பேச்சு எடுத்துக்காட்டுகிறது. சுற்றுச் சூழல்
பாதுகாப்பு, மனித உரிமை என்ற பெயரில் போராடும் மக்கள் அனைவரும் வெளி
நாட்டிலிருந்து வரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு போராடுபவர்கள்; முதலாளிகள் மட்டுமே
நாட்டு நலன்களில் அக்கறை கொண்டவர்கள். நாம் நாட்டுக்காக வேலை செய்ய வேண்டுமானால்
முதலாளிகளுக்காக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைப் புதியதாக குடிமைப் பணிக்கு வர
உள்ளவர்களின் மூளையில் பதிய வைக்கும் வேலைதான் இது. இவ்வாறுதான் முதலாளிய வர்க்கம்
தனக்குச் சேவை செய்யும் அதிகார வர்க்கத்தைத் திரும்பத் திரும்ப உருவாக்கி
வருகிறது.
முதலாளிய
வர்க்கத்தின் பாதம் தாங்கியான இவர் சில நாட்களுக்கு முன்பு ‘மார்க்சின் கருத்துகள்
இந்திய சமூகத்தைச் சிதைக்கின்றன’ எனத் திருவாய் மலர்ந்து அருளியதில் வியப்பொன்றுமில்லை.
முதலாளிய
வர்க்கத்திற்குச் சேவை செய்யும் இன்னொரு நாடகத்தை அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற
வரவு செலவுத் தொடர் கூட்டத்தில் நாம் பார்த்தோம். மோடி தலைமையில் உள்ள ஒன்றிய
ஆட்சி அதற்கு நெருக்கமாக உள்ள முதலாளி அதானியைக் காப்பாற்றும் முயற்சியில்,
இவர்கள் உயர்வாகப் பேசும் முதலாளிய ஜனநாயகத்தை எவ்வாறு குழி தோண்டிப்
புதைத்தார்கள் என்பதைப் பார்த்தோம். வரவு செலவுத் திட்டம் விவாதமே இல்லாமல்
நிறைவேறிய வினோதம் இந்தக் கூட்டத் தொடரில்தான் நடந்தது.
அதானி
நிறுவனத்தின் பித்தலாட்டங்களை ஹிண்டன்பர்க் நிறுவனம் அம்ப்பலப்படுத்தியதும் ‘இது
உண்மையல்ல என்றும், இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுக்க மாட்டாதவர்களின் சதி இது’ என்றும்
கூறி அதானி விடயத்தைத் திசை திருப்ப முயன்றார். ஆட்சியாளர்களும், முதலாளிய
ஊடகங்களும் அதற்கு ஒத்தூதின.
‘முதலாளிகளின்
வளர்ச்சிதான் இந்தியாவின் வளர்ச்சி’, முதலாளிகள்தான் இந்தியா’ என்ற கருத்தைத்தான்
இங்குள்ள முதலாளிகளும் அவற்றின் அடிவருடிகளான ஆட்சியாளர்களும் கொண்டுள்ளனர்.
இவர்களைப் பொருத்தவரையிலும் இந்தியா முதலாளிகளின் நாடு, முதலாளிகளுக்கே சொந்தம்,
தங்கள் வாழ்வுக்காக முதலாளிகளை எதிர்த்துப் போராடும் மக்கள் எல்லோரும் நாட்டு
நலனுக்கு எதிரானவர்கள், வெளி நாட்டின் தூண்டுதலால் போராடும் தேசத் துரோகிகள்.
இந்த
நிலை நீடிக்கும் வரையிலும் மக்கள் தங்கள் வாழ்வைப் பெற முடியாது. உழைக்கும் மக்கள்
அனைவரும் ஒன்றிணைந்து இந்த முதலாளிகளின் நாட்டை தமக்கான நாடாக மாற்ற வேண்டும்.
அப்பொழுது மட்டுமே மக்களின் வாழ்வு மலரும்.
- புவிமைந்தன்
திரும்பி போ...!!!
ReplyDelete