தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தொழிற்சாலைகள் சட்டம் - 1948 க்கான தமிழ்நாடு தொழிற்சாலைகள் விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வரைவு ஒன்று தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய சட்ட முன்வரைவு ஒரு நாளின் வேலைநேரம் என்பது 8 மணி நேரம் என்பதை 12 மணி நேரமாக அதிகரித்துக் கொள்ள குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு அல்லது தொழிற்பிரிவுகளுக்கு அனுமதியளிப்பதற்கான திருத்தங்களைக் கொண்டுள்ளது.
இந்தத் திருத்த சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்ட பின்பு சிபிஐ, சிபிஎம் ஆகிய இடதுசாரிகள் மட்டுமே தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துப் போராட்டங்களை முன்னெடுத்தன. மற்ற முதலாளித்துவ கட்சிகள் எவையும் இதனைப் பெரியதாகப் பொருட்படுத்தவில்லை.
இந்த நிலையில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று இந்தச் சட்ட முன்வரைவு மீது எந்த விவாதமும் நடத்தாமல், குரல் வாக்கெடுப்பின் மூலம் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.
தேர்தல் கட்சிகளில் இடதுசாரிகள் தவிர மற்ற கட்சிகள் தங்கள் ஜனநாயகக் கடமைகளை வெளிநடப்புடன் நிறைவு செய்து கொண்டன. சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றன. ஆனால், இவர்களின் இந்த எதிர்ப்புகளை வர்க்கப் போராட்டத்திற்கான அறைகூவலாக இல்லாமல், தங்களிடம் உள்ள தொழிலாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு சீர்த்திருத்தப் போராட்டமாகவே கட்டியமைத்து வருகின்றன.
ஏனெனில், தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு என்பது இந்திய ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டங்களைத் திருத்தம் செய்த அன்றிலிருந்தே தொடர்ந்து வருகின்றது. இரண்டாண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசு இத்தகைய முயற்சியை செய்து கொண்டிருக்கும் நிலையில், சிபிஐ., சிபிஎம். ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இதனை அம்பலப்படுத்தித் தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வை மேம்படுத்தச் செய்யாமல், சில கண்துடைப்புப் போராட்டங்களை மட்டுமே நடத்தித் தொழிலாளி வர்க்கத்தை ஏமாற்றி வருகின்றன; திமுக அரசிற்கு மனுக்கள் அளித்து சலுகைகளைப் பெறும் போராட்டங்களை முன்னெடுத்து உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வுகளை மழுங்கடிக்கும் வேலையைச் செய்து வருகின்றன.
தமிழக அரசின் இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான வீரியமிக்க போராட்டங்களை முன்னெடுக்காமல், தொழிலாளர்களிடையே திமுகவின் முதலாளிய வர்க்கச் சார்பை அம்பலப்படுத்தாமல் வெற்றுக் கண்டன அறிக்கைகளைக் கொடுப்பது, அடையாளப் போராட்டங்களை நடத்துவது என்ற அளவிலேயே தங்களுடைய போராட்டத்தை மட்டுப்படுத்திக் கொண்டன.
பாசிச பாஜகவை வீழ்த்துவது என்ற பெயரில் திமுக அரசிற்கு வலிய ஆதரவு தருவது, அதனைத் தாங்கிப் பிடிப்பது போன்ற வேலையைச் செய்து வந்த போலி முற்போக்குகள், தற்பொழுது என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்டாலினிடம் மன்றாடல் செய்வது அல்லது ஈனக் குரல்களில் முனகுவது அல்லது அடுத்த தேர்தலில் வீழ்ந்து விடுவாய் எனச் சாபமிடுவதுமாகவும், எச்சரிக்கை விடுவதுமாகவும் உள்ளன.
பாசிச பாஜகவை தேர்தல் களத்தில் வீழ்த்தினால் போதும் பாசிசத்தை வீழ்த்தி விடலாம் எனக் கற்பனையில் மூழ்கியிருக்கும் இந்தப் போலி முற்போக்குகள், தமிழ்நாட்டில் ஏற்கனவே பலகீனமாக இருக்கும் பாஜகவை வீழ்த்துவோம் எனக் கூறிக் கொண்டு திமுகவிற்கு வால் பிடித்து வருகின்றன.
பாசிசத்திற்கு மூல காரணமாக இருப்பது முதலாளிய வர்க்கப் பொருளுற்பத்தி முறையும், அந்த வர்க்கத்தின் கையில் உள்ள அரசியல் அதிகாரமும்தான். முதலாளிய வர்க்கத்தை அரசியல் அதிகாரத்திலிருந்து வீழ்த்தாமல், சோசலிசப் பொருளுற்பத்தி முறையைக் கொண்டு வராமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது. ஆனால், இந்தப் போலி முற்போக்குகள் பாசிசத்தை பா.ஜ.க. என்ற ஒரு முதலாளியக் கட்சிக்கு மட்டும் உரித்தானது எனச் சித்தரித்து, அதை வீழ்த்தி விட்டு பிற முதலாளித்துவக் கட்சிகளை மாற்றாகத் தேர்தல் மூலம் அரசியலதிகாரத்திற்குக் கொண்டு வரத் துடிக்கின்றன. ஆனால் உண்மையில் பாசிசத்திற்கு மூலகாரணமான முதலாளி வர்க்கத்தைத் தொடர்ந்து உயிர்ப்போடு வைத்துக் கொள்வதற்கான வேலைகளைத்தான் இந்தப் போலி முற்போக்குகள் முன்னெடுத்து வருகின்றன.
தொழிலாளர்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலின்பொழுதும், உழைக்கும் மக்களின் மீதான ஒவ்வொரு தாக்குதலின்பொழுதும், ஜனநாயக உரிமைகள் மீதான ஒவ்வொரு தாக்குதலின்பொழுதும், முதலாளித்துவக் கட்சிகளுக்கிடையில் எந்த விதமான வேறுபாடும் இல்லை என்பதை மக்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறார்கள். புறநிலையைப் புரிந்து கொள்ளாமல், தங்கள் அகநிலை விருப்பத்தின் அடிப்படையில் திமுகவிற்கு முட்டுக் கொடுத்து வரும் போலி முற்போக்குகளைக் கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.
தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பதற்கான உடனடி அவசியம் தமிழக அரசுக்கு வந்தது ஏன்?
கடந்த காலங்களில் தங்களுடைய அர்ப்பணிப்பும், வீரமும் செறிந்த பல போராட்டங்கள் மூலம் தொழிலாளி வர்க்கம் வென்றெடுத்த உரிமைகள் முதலாளிய வர்க்கத்தின் கடுமையானச் சுரண்டலுக்குத் தடையாக இருக்கின்றன. எனவே, இதனை மாற்றியமைத்துத் தொழிலை இலகுவாக நடத்துவதற்கும், மேலும் ஒட்டச் சுரண்டித் தனது மூலதனத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும் ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என முதலாளிய வர்க்கம் விரும்புகிறது..
முதலாளி வர்க்கத்தின் இந்தத் தேவையையொட்டித் தான் இந்திய அரசானது தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்துதல் என்ற பெயரில் 29 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றியமைத்தது. இதன் மூலம், தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற சட்டரீதியான உரிமைகளைப் பறித்துள்ளது.
இந்திய ஒன்றிய அரசு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை எந்தவித விவாதமுமின்றி, எதிர்க்கட்சிகள் விவசாயச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்புச் செய்திருந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு கள்ளத்தனமாக நிறைவேற்றியது.
எனினும் இந்த சட்டத் தொகுப்புகளை அமலாக்குவதற்கு மாநில அரசுகள் விதிமுறைகளை வகுத்து அதற்குச் சட்டவடிவம் கொடுக்க வேண்டும். மாநில அரசுகள் மக்களின் எதிர்ப்புகளை சமாளித்து இதனைச் செய்வதற்கு காலத்தாமதம் ஆகின்றன; சில மாநில அரசுகள் மட்டுமே இதுவரை விதிமுறைகளை வகுத்துள்ளன. இன்னும் சில மாநில அரசுகள் விதிமுறைகளை வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அனைத்து மாநில அரசுகளும் இந்தப் பணியை முடிக்காததால், இந்திய அரசு தான் நிறைவேற்றிய புதிய சட்டத் தொகுப்புகளை நடைமுறைபடுத்துவது தள்ளிப் போய் கொண்டிருக்கிறது. இதனால், முதலாளி வர்க்கத்தின் கோரிக்கைகள் நிறைவேறுதில் காலதாமதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தமிழ்நாடு அரசும் ஊதிய சட்டத் தொகுப்பு, தொழில் உறவு சட்டத் தொகுப்பு, பணியிடப்பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிநிலைமைகள் சட்டத் தொகுப்பு ஆகியவற்றிற்கான விதிமுறைகளை வகுத்து ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதன் மீது பெயரளவிற்குக் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. கூடிய விரைவில் இந்த விதிமுறைகள் தமிழகத்தில் சட்ட வடிவம் பெறும். எனினும் இந்தியா முழுவதும், இந்த விதிமுறைகள் வகுத்துச் செயலாக்கம் பெறும் வரையில் முதலாளி வர்க்கம் காத்திருக்க தயாராக இல்லை. எனவே, உடனடி நோக்கங்களுக்காக, ஏற்கனவே உள்ள சட்டங்களில் திருத்தங்கள் செய்து நிறைவேற்றுமாறு தனது ஏஜண்டுகளான ஆளும் கட்சிகளை முதலாளிய வர்க்கம் நிர்ப்பந்தித்து வருகிறது.
அந்த வகையில் தான், சமீபத்தில் கர்நாடகாவில் இதே போன்று வேலை நேரத்தை மாற்றியமைப்பதற்கான திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டிலும் இப்பொழுது தி.மு.க. ஆட்சி, தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஒரு நாளின் வேலை நேரத்தை 8 மணி நேரம் என்பதற்கு பதிலாக 12 மணி நேரமாக அதிகரித்துக் கொள்வதற்கான வழிவகைகளை செய்துள்ளது. இவ்வாறு செய்ததன் மூலம், எட்டு மணி நேர வேலை, வார விடுமுறை, கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்புச் சம்பளம் ஆகியன பறிக்கப்பட்டுள்ளன. முதலாளிகளின் கோரிக்கைகளை ஏற்று இந்த திருத்தங்களைச் செய்துள்ளதாக தமிழக அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.
முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாகத் தொழிலாளர்களை நசுக்கும் தமிழக அரசின் இந்த ஏற்பாடுகள் தற்காலிகமானதுதான். இந்தத் திருத்தங்கள் போன்று ஏராளமான திருத்தங்களை இந்திய ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டத் திருத்தத்தின் மூலமும், தமிழக அரசு அதற்கான விதிமுறைகளை வகுப்பதன் மூலமும் நிரந்தரமாக தொழிலாளர்களைத் துன்பக்கடலில் தள்ளிவிடும் வேலையைச் செய்து வருகின்றன. தமிழ்நாடு தொழிற்சாலை விதிமுறைகளை விட மேலும் மோசமான சட்டத் திருத்தங்களை இந்திய ஒன்றிய அரசின் பாதையை அடியொற்றி தமிழக அரசு முன்மொழிந்துள்ளது, அது எப்பொழுது வேண்டுமானாலும் இதே போன்று சட்ட வடிமாக்கப்படலாம்.
பாஜகவிற்கு நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ளதாக திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. ஜனநாயக மற்றும் முற்போக்கு இயக்கங்கள் என்ற பெயரில் போலி வேடம் தரித்துள்ள அமைப்புகள் திமுகவின் இந்த ஏமாற்றுச் சித்து வேலைகளை மக்கள் நம்பச் செய்வதற்காக உழைத்து வருகின்றன.
பாஜக அரசும், திமுக அரசும் முதலாளிய வர்க்கத்திற்குச் சேவை செய்யும் பாதையில்தான் பயணித்து வருகின்றன. ஒரு நாளின் வேலை நேரத்தை வரையறுப்பது குறித்த இரண்டு அரசுகளின் முன்னெடுப்புகளும் இதைத்தான் தெளிவுபடுத்துகின்றன.
இந்திய ஒன்றிய அரசின் ஊதிய சட்டத் தொகுப்பில் (2019) பிரிவு 13, ஒரு நாளின் வேலை நேரத்தை உரிய அரசு (மாநில அரசு) நிர்ணயித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளதையொட்டி, தமிழ்நாடு அரசு ஊதிய சட்டத்தொகுப்பு (தமிழ்நாடு) விதிகள் 2022, பிரிவு 6(2) இல் ஒரு நாளின் வேலை நேரம் 12 மணி நேரம் என வரையறை செய்துள்ளது.
பணியிடப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்தான இந்திய ஒன்றிய அரசின் சட்டத் தொகுப்பில் (2000) ஒரு நாளின் வேலைநேரம் என்பது பிரிவு 25(1)(அ)இன் படி 8 மணி நேரம் அல்லது பிரிவு 25(1)(ஆ) உரிய அரசு நிர்ணயிக்கும் காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது. உண்மையில் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டதாக தி.மு.க. அரசு இருந்திருந்தால், பிரிவு 25(1) (அ) வில் உள்ளபடி 8 மணி நேரத்தை மட்டும் வேலைநேரமாக ஏற்றுக் கொண்டு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அதற்கு மாறாக, இந்த அரசு இந்திய ஒன்றிய அரசின் பிரிவு 25(1)(ஆ)வைப் பயன்படுத்தி, பணியிடப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிநிலைமைகள் (தமிழ்நாடு) - 2022 விதிமுறைகள், பிரிவு 27இல் ஒரு நாளின் வேலை நேரத்தை 12 மணி நேரம் என வரையறுத்துள்ளது. இதில் தி.மு.க. அரசின் முதலாளிய வர்க்கச் சேவை தெளிவாக அம்பலப்படுகிறது.
தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு 'மத்திய அரசு கொண்டு வந்ததற்காக நாங்கள் இதனைக் கொண்டு வரவில்லை, தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டு வருவதற்காகத் தான் இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்' என்கிறார்.
எவ்வளவு அப்பட்டமான பொய்யை சட்டமன்றத்தில் அமைச்சர் கூறுகிறார் பாருங்கள். இந்திய அரசின் சட்டங்களின் அடிப்படையிலேயே, அந்த சட்டப் பிரிவுகளை மேற்கோள் காட்டித்தான் அதற்கான விதிமுறைகளை திமுக அரசு கொண்டு வந்துள்ளது என்பதை மேலே எடுத்துக் காட்டியுள்ளோம். புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு வரும் வரையில் கூடக் காத்திருக்க முடியாமல், அவசரத் தேவைக்காக தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்து முதலாளி வர்க்கத்திற்கு தன் விசுவாசத்தை காட்டியுள்ளது இந்த அரசு.
8 மணிநேர வேலை என்பது சட்டத்தில் இருந்தாலும், அமைப்பாக்கப்பட்ட, சங்கமாக அணித் திரட்டபட்ட தொழிலாளர்கள் மட்டுமே இந்த உரிமையினை அனுபவிப்பவர்களாக உள்ளனர். அமைப்பாக்கப்படாத, தற்காலிகத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், சிறு நிறுவனங்களில் வேலை செய்ய்ம் தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், சேவைத் துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு 8 மணி நேர வேலை என்பது கானல் நீராகவே உள்ளது. இவர்கள் தான் தொழிலாளர்கள் வர்க்கத்தில் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த பெரும்பான்மைத் தொழிலாளர்கள் சட்டத்திற்குப் புறம்பாக 8 மணி நேரத்திற்கும் மேலாக 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வேலை வாங்கப்படுவது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகின்றது.
தற்பொழுது சட்டத்திற்குப் புறம்பாகத் தொழிலாளர்களைச் சுரண்டி வந்ததை சட்டப்படியாகவே சுரண்டுவதற்கான வழியை பாஜகவும், மாநில அரசுகளும் செய்து கொடுக்கத் துணிகின்றன. அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களும் இனி 12 மணி நேரம் வரை வேலை செய்யக் கட்டாயபடுத்தப்படுவார்கள்.
தமிழக அமைச்சர்களோ, இது தொழிலாளர்களின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே நடைபெறும் எனக் கூறுகின்றனர். 8 மணி நேர வேலைச் சட்டம் இருந்த காலகட்டதிலேயே முதலாளிகள் தொழிலாளர்களைக் கூடுதல் வேலை செய்யக் கட்டாயப்படுத்தி வருகின்றனர். அதனை மறுத்தால் அவர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இந்த நிலையில் தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே 12 மணி நேர வேலை எனத் தமிழக அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது,
ஆம், தமிழக அரசு கூறுவது போன்று தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே 12 மணி நேரம் வேலை செய்யலாம், இல்லையெனில் பட்டினி கிடந்து சாகலாம், இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தொழிலாளர்களுக்கு நிச்சயம் உண்டு.
8 மணி நேர வேலைக்குக் கூட ஒவ்வொரு தொழிலாளியும் வேலைக்காக, பயண நேரம், உணவு இடைவேளை என 10 மணி முதல் 11 மணி வரை செலவிட வேண்டியுள்ளது. வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தபட்டால் ஒவ்வொரு தொழிலாளியும் 14 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை இதற்காக செலவிட வேண்டி வரும். இதனால் தொழிலாளர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
12 மணி நேரம் வேலை செய்தால், வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும் எனக் கூறும் தமிழக அரசு, மற்ற நாட்களில் விருப்பபட்டால் வேலை செய்யலாம் எனக் கூறுகின்றது. மேலும் வாரம் 48 மணி நேரம் வேலை நேரம் என்பதை தற்பொழுது 60 மணி நேரம் வரை வேலை செய்யலாம் என வரையறுத்துள்ளது.
இந்திய ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதச் சட்டத் தொகுப்புகளை அப்பொழுது எதிர்கட்சியாக இருந்த திமுகவின் தொழிற்சங்க அணியான தொமுச எதிர்ப்புத் தெரிவிப்பது போன்று நாடகமாடியது ஆனால், தற்பொழுது மாநில ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு இந்திய அரசின் தொழிலாளர் விரோதச் சட்டத் தொகுப்புகளை வழிமொழிந்து அமல்படுத்தி சோதனை செய்யும் களமாக தமிழகத்தை மாற்றியமைத்துள்ளது.
இந்தியாவில் 1923 ஆம் ஆண்டில் சிங்காரவேலர் அவர்களால் முதன்முதலாக மேதினம் கொண்டாடப்பட்டு இந்த ஆண்டை நூற்றாண்டாக கொண்டாடவிருக்கும் தருணத்தில், தொழிலாளி வர்க்கம் இரத்தம் சிந்தி போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலை நாள் உரிமையைத் தமிழ்நாடு அரசு பறித்துள்ளது.
இந்த ஆண்டு மே நாளில் இந்திய, தமிழக அரசுகளின் எட்டு மணி வேலைநேரப் பறிப்பிற்கு எதிராகத் தொழிலாளர்கள் அணி அணியாய் அணித்திரள்வோம்!. உரிமைகளை மீட்டெடுப்போம்! ஆளும் வர்க்கத்தின் சுரண்டலுக்கு முடிவு கட்ட சூளுரைப்போம்!
- குமணன்
தோழர் குமணனுடைய இந்தக் கட்டுரை தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கும், கம்யூனிச இயக்கத்திற்கும் மிகவும் முக்கியமான பல கருத்துக்களை சிந்திப்பதற்கு அளித்திருக்கிறது.
ReplyDeleteபாசிசம் என்பது ஒரு கட்சியா, அல்லது இந்த அமைப்பா?
தொழிலாளி வர்க்கத்தின் மீது இந்தத் தாக்குதல்களை யார், எதற்காக நடத்துகிறார்கள்?
தொழிலாளி வர்க்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு முடிவு காண வேண்டுமானால், தொழிலாளர் இயக்கங்களும், கம்யூனிஸ்டுகளும் எந்தத் திசையில் செயல்பட வேண்டும்?
என்பன போன்ற பல முக்கியமான கேள்விகளுக்கு மிகவும் தெளிவாகவும், இன்றைய சூழ்நிலையை எடுத்துக்காட்டாக கொண்டும் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
கட்டுரையில், பாசிசம் பற்றி குறிப்பிடுகையில்
"பாசிசத்திற்கு மூல காரணமாக இருப்பது முதலாளிய வர்க்கப் பொருளுற்பத்தி முறையும், அந்த வர்க்கத்தின் கையில் உள்ள அரசியல் அதிகாரமும்தான். முதலாளிய வர்க்கத்தை அரசியல் அதிகாரத்திலிருந்து வீழ்த்தாமல், சோசலிசப் பொருளுற்பத்தி முறையைக் கொண்டு வராமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது. ஆனால், இந்தப் போலி முற்போக்குகள் பாசிசத்தை பா.ஜ.க. என்ற ஒரு முதலாளியக் கட்சிக்கு மட்டும் உரித்தானது எனச் சித்தரித்து, அதை வீழ்த்தி விட்டு பிற முதலாளித்துவக் கட்சிகளை மாற்றாகத் தேர்தல் மூலம் அரசியலதிகாரத்திற்குக் கொண்டு வரத் துடிக்கின்றன..." என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும்,
"தொழிலாளர்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலின் பொழுதும், உழைக்கும் மக்களின் மீதான ஒவ்வொரு தாக்குதலின்பொழுதும், ஜனநாயக உரிமைகள் மீதான ஒவ்வொரு தாக்குதலின்பொழுதும், முதலாளித்துவக் கட்சிகளுக்கிடையில் எந்த விதமான வேறுபாடும் இல்லை.." என்பதையும்,
அனைத்து முற்போக்கு அரசியல் சக்திகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேலும், தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான சட்டங்களையும்,
தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பதற்கான உடனடி அவசியம் என்ன என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ள எல்லா விவரங்களும் நியாயமானவையும், யதார்த்த பூர்வமானவையும் ஆகும்.
கம்யூனிஸ்டுகளும், முற்போக்கு சக்திகளும், இன்றைய மிகவும் மோசமான சூழ்நிலைக்கு மாற்றைக் கொண்டு வர வேண்டுமென முயற்சிக்கின்ற எல்லா சக்திகளும் இக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் குறித்து சிந்தித்து செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்.