Skip to main content

கவிதை - ஊசி துளைக்கப்பட்ட கரங்கள்


ஊசி துளைக்கப்பட்ட கரங்கள் 

அவள் கரங்களின் சித்திரவேலைப்  பின்னலில் 

பேரழகு வடிவங்கள் மிளிர்ந்தன

அழுக்கடைந்த சிறிய இருட்டறையில்

ஒளிமிக்க நிலாக்களும் விண்மீன்களும் 

அவளுடைய தோல் போர்த்திய கரங்களால்

ஆடைகளில் உயிர்பெற்று மின்னின.

குவிந்து கிடந்த நூற்கண்டுகள்

அவளுடைய ஊசி துளைத்த விரல்களால்

இரவின் ஒளியில் மின்மினிகளாய்

துணிமணிகளில் மாயம் புரிந்தன

கடிகாரம் நள்ளிரவு மணியை ஒலித்தபோது

அவளது காய்த்துப் போன கரங்களால் 

அவள் படைத்த மெல்லிய அலங்கார  ஆடைகளை 

அணியும் பேறு அவளுக்கில்லை என்பது

அவளுக்குத் தெரியும்

அனைத்து வலிகளும் 

உங்கள் வாழ்வின் அனைத்து உயிராற்றல்களையும்

உறிஞ்சக் கூடிய ஒரு கருந்துளையின் 

ஆற்றல் போல் வருவதில்லை 

சில வலிகள்

நீங்கள் உருவாக்கிய அந்தக் கணத்தில் 

உங்கள் கரங்களிலிருந்து பறித்துச் செல்லப்படும் போது.  

பளிச்சிடும் வண்ண ஆடைகள் 

வடிவத்திலும் வரும். 


மகிழ்ச்சியற்ற  கொண்டாட்டம்

அவர்கள் ஜொலிக்கும் சிவப்பு வண்ண

மேலங்கிகளை அணிந்திருக்கிறார்கள்

இடுப்பில் தங்கமென மின்னும் கச்சைகள்

படாபடோபமான மணவிழாத் தலைப்பாகை

தூரத்தில் இருந்தாலும் கூட்டத்தில்

அவர்கள் தனித்துத் தெரிகிறார்கள்

ஆனால் அவர்களை யாரும் பார்க்கவில்லை 

தங்களுடன் கொண்டுவந்த

பித்தளை இசைக்கருவிகளை இசைத்தவாறே

பின்னணியில் அவர்கள் கரைந்து போனார்கள்

மணவிழா அரங்குக்கு பேருந்தில் வந்து

இறங்கியதிலிருந்து அனைவரும் ஆயத்தமாகும் வரை

மணிக் கணக்கில் காத்திருந்தார்கள்

அவர்கள் உரத்து எழுப்பிய இசையில் 

அழகிய ஆடை அணிந்த மனிதர்கள்

மகிழ்ச்சியுடன் நடனமாடினார்கள்

ஆனால் இசைக் கலைஞனிடமிருந்து 

ஒருவர்  எதிர்பார்ப்பதைப் போல

அவர்கள் விழிகள் மூடியிருக்கவில்லை

அவர்களுடைய முகங்கள் 

இசையின் களிப்பில் மகிழ்ந்திருக்கும் 

அமைதியான முகக்கவசமாக இல்லை.

அவர்கள் சோர்ந்து போயிருந்தார்கள் 

அவர்கள் அணிந்திருந்த மின்னும் ஆடைகளால்

கண்களின் கருவட்டங்களை மறைக்க முடியவில்லை

அவர்களுடைய உற்சாகம் பொங்கும் இசையால்

அவர்களுடைய அவநம்பிக்கையை  

மறைக்க முடியவில்லை. 

அவர்கள் பிற சிறுசிறு வேலைகள் தவிர்த்து

சிறிது கூடுதலாகப் பணம் ஈட்ட வந்திருந்தார்கள்

அவர்கள் மகிழ்ச்சி பொங்கத் திரிந்த

விருந்தினர்களைக் கவனித்தார்கள்

வான வேடிக்கைகளைக் கவனித்தார்கள்

குதிரைமீது வந்த மணமகனைக் கவனித்தார்கள்

ஆனால் எந்தக் கொண்டாட்ட மனநிலையும்

அவர்களுடைய இதயங்களுக்கு ஒளியூட்டவில்லை

இரவினூடே அழகிய வண்ண உடைகளில் திரும்பிய அவர்கள்

காரை உதிர்ந்த சுவர்களில்  

தங்கள் இசைக்கருவிகளைத்

தொங்கவிட்டார்கள் 


தழும்பேறிய மனிதர்கள்

வியர்வையும் கரிப்புகையும் படிந்திருந்தன 

அவர்களுடைய முகங்களில் 

அவர்களுடைய உருவங்கள் மாறியிருந்தன

நிலக்கரி சுமக்கும் இயந்திரங்களைப் போல 

குறுகிய பாதாளப் பாதைகளில் 

புழுதி நிறைந்த காற்றைச் சுவாசித்து 

நுரையீரல்கள் கருத்துத் தடித்தன

அவர்களுடைய பாதங்களுக்கடியில் 

அகழ்வுண்ட பூமி துடித்தது. 

மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன 

மண் வாரி இயந்திரத்தின் கொடுங்கரங்களால் 

மண் சுரண்டி எடுக்கப்பட்டது.

அவர்கள் தழும்பேறிய பூமியில்

உழைத்துக் கொண்டிருக்கும்  

தழும்பேறிய  மனிதர்கள்.


மூன்று கவிதைகளும் அலிகாரைச் சேர்ந்த மாணவர், எழுத்தாளர்.

மாளிகா இக்பால் மே நாளை ஒட்டி எழுதியவை. 

தமிழில்: நிழல்வண்ணன்

நன்றி: countercurrents.org. 


Comments

  1. Three different situations how they labour for their livelihood for others to enjoy. Really nice 👍

    ReplyDelete
  2. மூன்று கவிதைகளும் அருமை. எழுதிய
    தோழர் இக்பாலுக்கும்,
    மொழி பெயர்த்த
    தோழர்
    நிழல் வண்ணன் அவர்களுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துகளும், வணக்கங்களும்..
    அதிலும் மகிழ்ச்சியற்ற கொண்டாட்டங்கள் கவிதை மனதை பிசைந்துவிட்டது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட