கடந்த
காலத்தின் கலாச்சாரத்தை முதன்மைப்படுத்தும் இந்துத்துவ அடிப்படைவாத, பழமைவாத பி.ஜே.பி
- நவீன கார்ப்பரேட்களோடு எப்படி ஒத்துப்போக முடிகிறது? மக்களிடம் மதவாதக் கட்சியாக இருந்தாலும் ஆளும்வர்க்கத்திற்காக இயங்குவதில் மற்றெல்லா முதலாளித்துவக் கட்சிகளையும் பின்னுக்குத்தள்ளி தலைமைப் பாத்திரம் வகிப்பதால் தான் ஆளும் வர்க்கம்
அதை ஆளும் கட்சியாக்கி அரசை அதனிடம் ஒப்படைத்திருக்கிறது.
மதத்தைப் பிரச்சாரத்தோடு வைத்துக்கொண்டு முதலாளித்துவத்திற்கும், கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கும் சேவையில் முதன்மையாகப் பணியாற்றுவதுதான் அவர்களின் தீர்க்கமான நடைமுறை. எங்காவது இதன் வழியில் மதம்
குறுக்கிட்டால் அதைக் கைவிட்டு, கடந்தும் போகக்கூடியதாகவும் இருக்கிறது அவர்களின் எல்லை கடந்த கார்ப்பரேட் விசுவாசம். இந்த இரட்டை வேடம்
பா.ஜ.க.வுக்கு
அளிக்கும் பலனைவிட பெருநிறுவனங்களுக்கு முழுமையான பலனைத் தருகிறது. அதனால்தான் அது ஆள அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
முதலாளித்துவம் மக்களுக்கு எதிராக நிற்பதை மறைத்துக்கொண்டு இந்துத்துவாவை, மதத்தை முன்னிறுத்தித் திரையிடுகிறது பா.ஜ.க.
பசுவை
தெய்வம் என்பதாகக் கட்சி சொல்லும்; அதன் கழிவுகள் சாணம்,
மூத்திரம் அனைத்தும் கூட புனிதம் என்று
மக்களுக்குப் போதிக்கும். பசுவை இறைச்சிக்காகக் கடத்துவதாகச் சொல்லி பசு பாதுகாப்புக் குண்டர்களை
ஏவி இஸ்லாமியர் மீது கொலைவெறியை நிகழ்த்தும்.
ஆனால் பசு இறைச்சியை அரசின்
லைசென்சுடன் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதில் முதன்மை இடத்தையும் வகிக்கும். பொருளாதாரத்திலும், ஏற்றுமதியிலும் இந்துக் கலாச்சாரத்தைக் குறுக்கே நிறுத்தாது. கார்ப்பரேட் மேம்பாட்டுக்காக கலாச்சாரத்தைக் கைவிட்டு அவர்களுக்கு லாபமீட்டும் பொருளாதாரச் சேவைகளைச் செய்யும்.
முதலாளித்துவக்
கட்சிகளின் குணாம்சமான, சொல் மக்களுக்கும் - செயல் முதலாளிகளுக்கும் என்பதில்
தெளிவாக இருக்கிறார்கள். வாக்குறுதிகள் எனும் பெயரில் செத்துப்போன வார்த்தைகளை மக்களுக்கும், வாழவைக்கும் வளமான நடைமுறையை முதலாளிகளுக்கும் வழங்குவதே அவற்றின் நோக்கமாக வைத்திருக்கிறார்கள். மக்களை மூடநம்பிக்கைகளிலும், சாஸ்திர, சம்பிரதாயங்களிலும், மத வழிகளிலும், மந்திர
தந்திரங்களிலும் ஆழ்த்தி
வைத்துக்கொண்டு கலாச்சாரத்தில் பழமைவாதத்தையும், அதி நவீன டிஜிட்டல்
பரிவர்த்தனை, பங்குச்சந்தை முதலீடு, ஆன்லைன் வரிவிதிப்பு, போக்குவரத்து மற்றும் குற்றவியல் நடைமுறைகளில் சி.சி.டி.வி.பயன்பாடு, என
அரசாங்க நிர்வாகத்தில், பொருளாதாரத்தில் நவீனவாதத்தையும் உத்தியாகக் கடைப்பிடிக்கிறது. முன்னது மக்களின் உணர்வை, பகுத்தறிவை முடமாக்கவும், பின்னது அவர்களின் பொருளாதாரத்தை, உழைப்பை, உழைப்பின் சம்பாத்தியத்தை சுவீகரித்து முதலாளித்துவத்திற்கு சாசுவதப்படுத்துதற்காகவும் தான்.
முன்னதை
நிறைவேற்றி மக்களைக் கடந்த காலத்தில் நிறுத்த கல்வியை, வரலாற்றைத் திருத்துவது, சோதிட, ஜாதகத்தை வளர்த்து அறிவியலை புறக்கணிப்பது, புராணப் புளுகுகளை அறிவியல் என முன்னிறுத்துவது, நிகழ்காலத்தை
மறைத்து, எதிர்காலத்தை மறுப்பது உள்ளிட்ட உபாயங்களைப் பயன்படுத்தி நாட்டைப் பிற்போக்கில் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கருத்தாக்கத்தில்தான் பல லட்சம் கோடிகளை
டிஜிட்டல்மயத்திற்கும்,
சில நூறு கோடிகளை ராமர்
கோயிலுக்கும்; பல லட்சம் கோடிகள்
வங்கிப்பணத்தை கார்ப்பரேட்களுக்கும், சில நூறு கோடிகளை
பட்டேல் சிலைக்கும்; பல லட்சம் கோடிகளை
கொரானா கால நிவாரணமாகப் பெரும்
நிறுவனங்களுக்கும், சில நூறு கோடிகளை
புதிய நாடளுமன்ற கட்டுமானத்திற்குமாக மக்களைப் பின்தங்க வைத்து, மக்களைப் பிழிந்து கொடுக்க பிற்போக்குச் செலவினத்திற்கு ஒரு பங்கையும் பெற்றுக்கொள்கிறது
இந்த அரசு. இதன் பாடு மக்களுக்கு;
பலன் முதலாளிகளுக்கு என்பதே அரசின் தாரக மந்திரம்.
மக்களிடம்
பழைய மூடநம்பிக்கைகளை வலுவாக்கிக் கடந்த காலத்திற்கு உயிரூட்டி அவர்களின் நிகழ்காலத் தேவைகளையும் எதிர்காலத் தேடல்களையும் மறைத்துவிட்டு முதலாளிகளுக்குச் சேவை செய்யவும், அதில்
தானும் இலாபம் பெறவும் செயல்பட்டு வருகின்றனர். இந்து மன்னர்களிடமும், அவர்களின் எடுபிடிகளாயிருந்த ஜமீன்தார்களிடமும் அதிகாரிகளாயிருந்து வரி, வட்டி என்று
மக்களைக் கசக்கிப் பிழிந்தவர்கள் இவர்களே. அன்னிய ஆதிக்கத்தையும், இஸ்லாமிய ஆட்சியாளர்களையும் எதிர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் ஆங்கிலேயரோடும் போரிடவில்லை; மொகலாயரிடமும் போரிட்டதில்லை. அவர்களிடம் மந்திரிகளாகவும், துபாஷிகளாகவும், அதிகாரிகளாகவும் சேவை செய்துகொண்டு செல்வாக்காக
இருந்தார்கள். இப்போதைய முதலாளித்துவ அரசிலும் பதவி, அதிகாரத்தோடு கமிஷனும் பெற்றுக்கொண்டு சுகபோகத்தை அனுபவிக்கிறார்கள்.
எப்போதுமே மக்களுக்கு எதிரான ஆளும் வர்க்கத்தோடு உடன்பட்டவர்களின் வாரிசுகள்தான் இவர்கள். அந்த அனுபவ பாத்தியத்தின்
அடிப்படையில் இப்போதும் அரசிலும், அரசியலிலும் கோலோச்சுகிறார்கள்.
காலங்காலமாக மக்கள் இயல்பின் சூட்சமத்தை அறிந்தவர்கள் என்றவகையில் மக்களின் பொருளாதாரத்தைக் கசக்கிப் பிழியவும், சாரத்தை முதலாளிகளிடம் சமர்பிப்பதிலும் சமர்த்தர்கள் இவர்கள். ஆண்டாண்டு காலமாக ஆளும் வர்க்கத்தோடு போராடுவதைவிட அவர்களின் அடியாட்களான இவர்களோடு போராடுவதே மக்களின் போராட்ட வரலாறாக இருக்கிறது.
அரசு
மக்கள்நல அரசு என்பதற்கு மாறாக
கார்ப்பரேட் நல அரசாகிவிட்டது என்ற
விமர்சனங்கள் முற்போக்குப் பேசுகிற பலராலும் முன்வைக்கப்படுகிறது. உண்மையில், அரசு என்பது ஒரு
வர்க்கத்தின் கருவி என்பதை மேற்காணும் விமர்சனங்கள் மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றன. யாரின் கருவியாக அது இயக்கம் கொள்கிறது
என்பதே பிரதானம். கார்ப்பரேட்டுக்கள் நடத்துகிற இந்த அரசு அவற்றின்
கருவியாக இருந்துகொண்டு மக்கள் நல அரசாக எப்படி
இருக்க முடியும் என்று உணர்தல் அவசியம். மக்களுக்கு விரோதமாகவே இயங்க முடியும். அப்படித்தான் வடிவமைக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்தப் பெரும் நிறுவனங்களின் முதலாளித்துவ அரசு. ஆளும் வர்க்கத்தின் கையாள் என்பதை மறைத்துக்கொண்டு, எல்லோருக்கும் பொதுவான அமைப்பாகத் தன்னைக் காட்டிக் கொண்டால்தான் ஒடுக்கப்படுகிற வர்க்கத்தை கட்டுக்குள் வைக்கமுடியும். பொதுவானது என்பதை திரும்பத் திரும்பப் பொதுபுத்தியில் பதிய வைப்பதன் மூலம்
அரசையும், முதலாளிகளையும் கார்ப்பரேட்களையும் வேறு வேறு என்று
மக்களின் மனதில் பதிய வைத்து, பெருமுதலாளிகள்/
கார்ப்பரேட்கள் மீதான மக்களின் எதிர்ப்புணர்வை திசை திருப்பும் தந்திரமே
அரசு பொது என்பதன் சூட்சமம்.
உண்மையில் அரசு என்பது கார்ப்பரேட்
முதலாளித்துவ வர்க்கத்தின்
பிரிக்கமுடியாத ஒரு அங்கம்தான். நில
பிரபுக்களின் பிரதிநிதியாக அரசர்கள் இருந்தார்கள். தற்போது முதலாளிகளின் பிரதிநிதியாக அரசுகள் இருக்கின்றன, அவ்வளவுதான்.
இந்துக்
கலாச்சாரத்தை முன்னெடுப்பதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளும் ஆதாயமும், அதன்வழியே பெரு நிறுவனங்களுக்கு முழுமையான
பொருளாதார ஆதாயங்களை வழங்குவதும்தான் இந்த இரட்டை வேடத்தின்
அடிப்படைக் கோட்பாடு. இந்த உண்மையை மக்களிடம்
எடுத்துச் சொல்கிறவர்களைத்தான் நகர்ப்புற நக்சலைட்டுகள், அன்னிய சக்திகள், ஏன்ட்டி இந்தியன்கள், தேசத் துரோகிகள்
எனத் தூற்றுகிறது அவர்களின் அரசு.
ஜனநாயகம் பற்றிய இந்துத்துவாவின் சமீபத்திய கருத்துக்கள் அவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி விட்டன. உண்மையில் இந்துத்துவாவின் பார்வையில் ஜனநாயகம் என்பது என்ன? அது இந்தியாவின் உள்ளூர் விவகாரம். அதை வெளியாட்கள் யாரும் பார்க்கவோ, அதைப் பற்றிப் பேசவோ கூடாது. ஆனால் மோடி, கீதை மற்றும் இந்து மதம் பற்றி உலகம் முழுவதும் பேசப்பட வேண்டும். சரி, உள்ளூர் விவகாரம் எப்படி? உண்மைகளை உரக்கச் சொல்வதாகத் தம்பட்டம் அடிக்கும் ஊடகங்கள் விளம்பரங்கள், சலுகைகள் அல்லது அச்சுறுத்தல்கள் மூலம் பொய்யும், புனைசுருட்டுமாக மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் நாடு முழுவதும் அங்கங்கே பிற்போக்குக் கும்பலால் கொல்லப்படுவார்கள். ராமநவமி(கர்கோன்/ம.பி), அனுமன் ஜெயந்தி(ஜஹாங்கீர்புரி/தில்லி) ஊர்வலங்கள் நடக்கிறபோது இஸ்லாமியரின் குடியிருப்புக்கள், கடைகள், அவர்களின் அலுவலகங்கள் தாக்கி அழிக்கப்படும். தற்காப்புக்காக அவர்கள் தாக்குதலைத் தடுக்கிறபோது அரசு அதிகாரம், போலீஸ் படை திரண்டு வரும். புல்டோசர்கள் கொண்டு வீடுகள் இடிக்கப்படும். இவைகூட சிலநேரங்களில் ஊடகங்கள் வழியாக வெளிச்சத்திற்கு வரும். அவலநிலையை வெளிப்படுத்த அல்ல; பாதிக்கப்பட்டோரை அச்சுறுத்த; இனியும் பாதிக்கப்பட இருப்போரை மிரட்டிக் கட்டுக்குள்வைக்க.
ஆக
பா.ஜ.க. தரித்திருக்கிற
இரட்டை வேடம் என்பது ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக மட்டுமே. இதில் உழைக்கும் மக்கள் நலன் என்பது மருந்துக்கும்
இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். சமூக
மாற்றத்திற்காகப் பாடுபடும் புரட்சிகரக் கட்சி இதை உழைக்கும் மக்களுக்கு
விளக்கி உணர்த்த வேண்டும். இந்த விழிப்புணர்வுதான் எல்லோருக்கும் எல்லாமும்
என்ற உன்னதத்தை நோக்கிய பயணத்தை உழைக்கும் மக்களுக்கு உண்மையாக்கும். ஆளும் முதலாளி வர்க்கத்தை வீழ்த்தப் பட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரள்வதும், இந்த இரட்டை வேடதாரிகளையும்,
திரைமறைவில் ஒளிந்திருக்கிற ஆளும்வர்க்கத்தையும் ஒருசேர வீழ்த்துவதும்தான் பரந்துபட்ட மக்களின் முன்னுள்ள முதன்மையான பணியாகும். இன்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது இந்த வர்க்கப் போராட்டத்தின்
வெற்றியில்தான் அடங்கியிருக்கிறது.
-
- பாவெல்
சூரியன்
பாஜக-வை வருகின்ற தேர்தலில் வீழ்த்துவதே தொழிலாளி வர்க்கத்தையும் நாட்டையும் காப்பாற்றுவதற்கான ஒரே வழியென்று கூறி காங்கிரசு அல்லது வேறு ஒரு கூட்டணியை அரியணையில் அமர்த்துவதற்காக பல்வேறு கம்யூனிஸ்டு கட்சிகளும் முற்போக்கு சக்திகளும் முதலாளித்துவ சக்திகளோடு கூட்டாக பரப்புரை செய்து வருகின்ற ஒரு சூழலில் இந்தக் கட்டுரை மிகவும் அடிப்படையான செய்திகளை விளக்கியிருக்கிறது.
ReplyDelete"ஆளும்வர்க்கத்திற்காக இயங்குவதில் மற்றெல்லா முதலாளித்துவக் கட்சிகளையும் பின்னுக்குத்தள்ளி தலைமைப் பாத்திரம் வகிப்பதால் தான் ஆளும் வர்க்கம் பாஜக-வை ஆளும் கட்சியாக்கி அரசை அதனிடம் முதலாளி வர்க்கம் ஒப்படைத்திருக்கிறது" என்பது மிகவும் யதார்த்தமான உண்மையாகும்.
"முதலாளித்துவக் கட்சிகளின் குணாம்சமான, சொல் மக்களுக்கும் - செயல் முதலாளிகளுக்கும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்" என்ற கருத்து முதலாளித்துவ கட்சிகளின் சாராம்சத்தை தெளிவாக அம்பலப்படுத்துகிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்கள் எதிர்பார்ப்பதையெல்லாம் பேசி மக்களுக்காக போராடுவது போல நாடகமாடுவதும், அதிகாரத்தில் அமர்ந்த பிறகு மக்களைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு முதலாளி வர்க்கத்தின் செயல் திட்டங்களைக் கராறாக நடைமுறைப்படுத்துவதுமே முதலாளி வர்க்கக் கட்சிகளுடைய வழிமுறையாக இருந்து வருகிறது.
தற்போதைய இந்திய அரசு, முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம்தான் என்ற மா-லெ கருத்தை இக்கட்டுரை மிகவும் தெளிவாக வெளிக் கொண்டு வந்திருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், முதலாளி வர்க்கத்தின் நம்பிக்கைக்குரிய கட்சியான பாஜக-வை முதலாளி வர்க்கம் அதிகாரத்தில் அமர்த்தியிருக்கிறது. இக்கட்சியின் முகத்திரை மக்களிடையே வெட்டவெளிச்சமாகும் போது, தேவைப்பட்டால் அடுத்து காங்கிரசு அல்லது வேறொரு கூட்டணியை அரியணையில் அமர்த்தி தன் சுரண்டல் ஒடுக்குமுறையைத் தொடர்வதில் ஆளும் முதலாளி வர்க்கத்திற்கு எந்தத் தயக்கமும் இல்லை.
இக்கட்டுரை தெளிவுபடுத்தியிருப்பது போல, எந்தக் கட்சி அல்லது கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், இந்த முதலாளித்துவ அமைப்பு தொடரும் வரை தொழிலாளி வர்க்கத்தின் மீது கொடூரமான சுரண்டலும் மக்கள் மீது ஒடுக்குமுறையும் தொடர்வதோடு மேலும் மோசமடைந்து வரும் என்பது அப்பட்டமான உண்மையும், இந்தியாவின் கடந்த கால அனுபவமும் ஆகும். ஒரு முதலாளித்துவக் கட்சியை மாற்றி, வேறு ஒரு முதலாளித்துவக் கட்சியையோ கூட்டணியையோ அதிகாரத்திற்குக் கொண்டு வருவது எந்த வகையில் தொழிலாளி வர்க்கத்திற்கும் மக்களும் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்பது உறுதி.
உண்மையான அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வர விரும்பும் கம்யூனிஸ்டுகளும், முற்போக்கு சக்திகளும் முதலாளி வர்க்கத்தை அகற்றிவிட்டு, தொழிலாளி வர்க்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
- தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்.