Skip to main content

தொழிலாளர்களின் ஒப்பற்ற தோழர் சங்கர் குஹா நியோகியை நினைவுகூர்வோம்!

 

சங்கர் குஹா நியோகி 1943 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று ஜல்பைகுரியில் பிறந்தார். ஓர் இளைஞராக வேலைக்காக எஃகு நகரமான பிலாய்க்கு வந்தவர் அங்கு எஃகுத் தொழிலாளர்களின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். முன்பு மத்தியப் பிரதேசத்தின் பகுதியாக இருந்த சட்டிஸ்கார் கிராமப் புறங்களுக்கும் அவர் சென்றுவரத் தொடங்கினார். தல்லிராஜாரா சுரங்கங்களிலிருந்து இரும்புத் தாதுவை எடுப்பதற்கு கிராமப்புறத் தொழிலாளர்கள் (அவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடி மக்கள்) ஒப்பந்த முறையில் சுரண்டப்பட்டு வந்ததை அறிந்தார்; எஃகு ஆலை நிரந்தரத் தொழிலாளர்களைவிட அந்தக் கிராமப்புற ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெருமளவுக்குத் துன்புற்று வந்ததை உணர்ந்து கொண்டார். அவர்களை ஒன்று திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டிருந்த அவருக்கு அப்போது வயது முப்பத்தியிரண்டு. 

நியோகி தொடக்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) வழியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் விரைவிலேயே போராட்டத்திற்கான தனியானதொரு புரட்சிகர வழியைத் தெரிவு செய்து போராட்டத்தைத் தொடர்ந்தார். 

சட்டிஷ்கார் இரும்புத் தாதுச் சுரங்கத் தொழிலாளர்களும் பிற தொழிலாளர்களும் அவரை ஒரு சகோதரரைப் போல, தங்கள் சொந்த மகனைப் போல போற்றிப் புகழ்ந்தனர். அவர்களுக்கு அவர் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்திருந்தார். தொழிற்சங்கப் போராட்டங்களை விவசாயிகள் போராட்டங்கள், சமூகச் சீர்திருத்தங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் பரந்த அடிப்படையில் ஜனநாயக மாற்றத்துக்காக மக்கள்திரள் அணிதிரட்டல் போன்ற பிரச்சனைகளுடன் இணைத்ததில் அவர் மிகவும் போற்றத்தக்க எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். 

அந்த நேரத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. நியோகி கைது செய்யப்பட்டார்பதின்மூன்று மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு நியோகி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தொழிலாளர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். அவரது தலைமையில் சட்டிஸ்கார் சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் (CMSS) என்ற புதிய தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது. நெருக்கடிநிலைக் காலத்தில் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். புதிய தொழிற்சங்கம் தொழிலாளர்களுக்கான பல போராட்டங்களில் அடுத்தடுத்து வெற்றிகண்டு வந்தது. நாள் ஒன்றுக்கு 3 ரூபாய் கூலியாகப் பெற்றுவந்த தொழிலளர்களுக்கு அதை நாள் ஒன்றுக்கு 20 ரூபாயாக உயர்த்தித் தரவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது இது அதிகாரத்தில் இருந்தவர்களை எச்சரிக்கையடையச் செய்தது. அவர்கள் இந்தப் புதிய தொழிற்சங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். அந்தத் தொழிலாளர்கள் அடுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போது, தொழிலாளர்களைக் கைது செய்வதற்கு எதிராகப் போராடியவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. தொழிலாளர்களில் 11 பேர் கொல்லப்பட்டனர். நியோகி மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த நிகழ்வு தொழிலாளர்களைத் திடமாக உறுதிகொள்ளச் செய்தது. நெருக்கடி நிலைக்குப் பிந்தைய சூழல் தேசிய அளவில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அமைந்தது, நாடெங்கும் பல இடங்களிலிருந்து ஆதரவு பெருகியது. அதன் பிறகு விரைவிலேயே தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. நியோகி விடுதலை செய்யப்பட்டார். 

1977 இல் அவருடைய 34 வயதில், நியோகி நாடறிந்த தொழிலாளர் தலைவராக ஆனார். அப்போதிருந்து அவரது வாழ்நாளின் இறுதி வரையிலும் அவர் முடிவற்ற தொல்லைகளுக்கு ஆளானார். அவருக்கும் அவருடைய நெருங்கிய தோழர்களுக்கும் அடிக்கடி சிறைத் தண்டனைகள், ஏராளமான வழக்குகள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. அவரை ஆதரித்த தொழிலாளர்களுக்கும் தொல்லைகள் கொடுக்கப்பட்டன. இருபது ஆண்டுகளில் அவர் 25 முறை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஒரு முறை கூட எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை. அத்தனையும் பொய் வழக்குகள். அவருடைய அர்ப்பணிப்பு குறித்து ஏராளமாகச் சொல்வதற்கு இருக்கிறது, அதுமட்டுமின்றி அவர் ஒவ்வொன்றையும் விரிந்த பார்வையுடன் கவனமாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தினார். தொழிற்சங்கப் போராட்டங்கள் வெற்றி பெறுவதற்கான காலத்தைக் கணித்துச் செயலாற்றினார், தொழிற்சங்கப் போராட்டங்கள் மட்டுமின்றி மக்கள் நல்வாழ்வு, சமூகச் சீர்திருத்தம் மற்றும் பல துறைகளிலும் அவர் ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டார். 

மக்கள்நலப் பிரச்சனைகள்

முதல் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் உருவாக்கக் காலகட்டமாக இருந்தன. அப்போது மிக முக்கியமான திட்டங்களில் சில முன்னெடுக்கப்பட்டன. வாங்கும் ஊதியத்தை மதுவில் தொலைப்பதைத் தடுப்பதற்கு சட்டிஸ்கரில் நாட்டிலேயே மிகவும் வெற்றிகரமான மது ஒழிப்பு முயற்சியை நியோகி தொடங்கிவைத்தார். அது வெறும் பாசாங்கு நடவடிக்கையாக இல்லாமல் மதுவைக் கைவிடுவது தங்கள் சங்கத்துக்குப் பெருமை என்று தொழிலாளர்கள் கருதும் அளவுக்கு முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது. குடும்பங்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டன, பெண்களும் குழந்தைகளும் வீட்டிற்குள் இதற்கு ஆதரவாக இருந்தனர். கலாச்சார மற்றும் இசைக் குழுக்கள் நிறுவப்பட்டு மாலைப் பொழுதுகள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்பட்டன. இது படிப்படியாக, துப்பாக்கிச் சூட்டில் இறந்த சக தொழிலாளர்களின் நினைவாக தொழிலாளர்கள் தங்கள் சொந்த உடல்நலத் திட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் சொந்த மருத்துவமனையைஷாஹீது மருத்துவமனை -- கட்டிக் கொள்வதற்கும் இட்டுச் சென்றது. 

உடல்நலத் திட்டத்தின் வெற்றிக்கு தொழிலாளர்கள் பங்கேற்பு தான் முக்கியக் காரணம், அவர்கள் கட்டுமானப் பணீகளிலும் மருத்துவமனை நிர்வாகத்திலும் அர்ப்பணிப்புடன் பங்கேற்றனர். சைபால் ஜனா மற்றும் பினாயக் சென் போன்ற மூத்த நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் அவர்களுக்குத் துணையாக வந்தனர். ஜனா இன்னும் கூட ஷாஹீது மருத்துவமனைக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அண்மையில் அவர் மிகவும் பழைய வழக்கு ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்ட போது நாடெங்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. புன்யபிரதா கன் போன்ற பிற மருத்துவர்களும் சென்னும் சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களுக்கு மிகவும் உயர்வாகக் கருதப்பட்ட மருத்துவ முன்னெடுப்புக்களைத் தொடங்கினர். 

ஷாஹீது மருத்துவமனையும் விரிவான மருத்துவப் பராமரிப்புத் திட்டமும் வெளியிலிருந்து எந்த நிதி உதவியும் பெறாமல் முழுவதும் தொழிலாளர்களின் சுதந்திரமான முயற்சியால் நடைப்பெற்றது. நியோகி மற்றும் சி.எம்.எஸ்.எஸ் சங்கத்தின் ஒப்படைவும் தொழிலாளர்கள் தாமாக முன்வந்து பல ஆண்டுகளாக பணமாக அளித்து வந்த நன்கொடைகளும் தன்னார்வ உடலுழைப்புத் தானமும் இந்தத் திட்டத்தைச் சாத்தியமாக்கின. 

விவசாயிகளுடன் கூட்டணி 

சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த விவசாயிகளுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளும் தெளிவான கொள்கையின் விளைவாக, குத்தகை விவசாயிகள் வெளியேற்றத்தைத் தடுப்பது, இயற்கைக் காடுகளை அழித்து அதற்குப் பதிலாக வாணிபத் தோட்டப் பயிர்களைக் கொண்டுவருவதை எதிர்ப்பது போன்ற பல கிராமப்புறப் பிரச்சனைகளில் தொழிலாளர்கள் ஈடுபட முடிந்தது. இது போன்ற பிரச்சனைகளை எடுத்துக் கொள்வதற்காக சட்டிஸ்கார் முக்தி மோர்ச்சா என்ற அமைப்புத் தொடங்கப்பட்டது. பின்னாளில் இந்த முயற்சி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, பல கிராமங்களில் கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்கு ஆதரவாக அமைந்தது. 

தொழிலாளர்களின் நல்ன்களுக்கான சி.எம்.எஸ்.எஸ் சங்கத்தின் ஆழமான ஒப்படைவு சட்டிஸ்கரின் பிற பகுதிகள் மற்றும் மராட்டியத்தின் தொழிலாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்களுடைய பகுதிகளில் இந்தச் சங்கத்தைத் தொடங்குவதற்கான அழைப்புக்கள் வந்தவண்ணம் இருந்தன. சி.எம்.எஸ்.எஸ். சங்கம் அதற்காகத் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. பல வெற்றிகளையும் ஈட்டித் தந்தது. இதற்கிடையில் எஃகு ஆலை நிர்வாகம் இயந்திரமயமாக்கல் திட்டத்தைக் கொண்டுவந்து தொழிலாளர்களைப் பெருந்திரளாக வேலையிழப்புக்கு உள்ளாக்கத் திட்டமிட்டது. இந்தக் கட்டத்தில், மாபெரும் தொலைநோக்குடன் செயல்பட்ட நியோகி தொழிலாளர்களின் மீது அனுதாபம் கொண்ட ஆலைப் பொறியாளர்களைத் தொடர்புகொண்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவும் அதேவேளையில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலையிழப்பைத் தடுக்கவும் கூடிய பகுதியளவு இயந்திரமயமாக்கல் மாற்றுத் திட்டத்தைத் தயாரிக்கச் செய்தார். 

இருப்பினும், நியோகி பணியாற்ற அழைக்கப்பட்ட சில புதிய இடங்களில் பொதுத் துறை எஃகு ஆலை நிர்வாகத்திலிருந்த, அவரை நன்கறிந்த எதிர்ப்பாளர்கள் மிகவும் இரக்கமற்றவர்களாக இருந்தார்கள். அவரை அவர்கள் பலமுறை வன்முறை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினர். அவரது தோழர்களில் பலர் தாக்கப்பட்டனர். 

1991 செப்டம்பர் 28 அன்று, பிலாயில் தொழிற்சங்க அலுவலகத்தில் சங்கர் குஹா நியோகி உறங்கிக்கொண்டிருந்த வேளையில் கொலையாளி சன்னல் வழியே உள்ளே நுழைந்து ஆறு குண்டுகளால் அவரைத் துளைத்தான். அவர் படுகொலை செய்யப்பட்ட போது அவருக்கு வயது நாற்பத்தெட்டு. 

அவர் கொல்லப்பட்ட செய்தி கேட்டதும் சில மணி நேரத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மருத்துவமனையைச் சுற்றிலும் குவிந்தனர். சிவப்பு-பச்சை நிறக் கொடி போர்த்த அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த நேரத்தில் சட்டிஸ்கர் பகுதியில் அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர், 150 தொழிற்சாலைகள் பணியை நிறுத்தின. ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அந்த இறுதி ஊரவலத்தில் கலந்துகொண்டனர். 

தனது மரணத்தை நியோகி எதிர்பார்த்திருந்தார். முதலாளித்துவ சக்திகள் முன்பே அவரது உயிருக்குக் குறிவைத்திருந்தன. கொல்லப்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு அவர் பின்வருமாறு பேசியிருந்தார்: 

இந்த உலகம் அழகானது, நான் உறுதியாக இந்த உலகை நேசிக்கிறேன். ஆனால் எனது பணியும் எனது கடமையும் எனக்கு மிகவும் முக்கியமானவை. நான் எடுத்துக்கொண்ட பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இந்த மனிதர்கள் என்னைக் கொன்று விடுவார்கள், ஆனால் என்னைக் கொல்வதன் மூலம் நமது இயக்கத்தை ஒருவராலும் முடித்துவிட முடியாது என்பது எனக்குத் தெரியும்.” 

நியோகி கொலையில் தொடர்பு உடையவர்களாக 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சிம்ப்ளக்ஸ் நிறுவன உரிமையாளர் மூல்சந்த் ஷா, ஆஸ்வால் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரகாந்த் ஷா என்ற இரண்டு தொழிலதிபர்களும் அவர்களில் அடங்குவார்கள். மாவட்ட நீதிமன்றம் வாடகைக் கொலையாளியான பல்தன் மல்லாவுக்கு மரண தண்டனையும், தொழிலதிபர்கள் உள்ளிட்ட இன்னும் 5 பேருக்கு (ஞான பிரகாஷ் மிஸ்ரா, அபய் சிங்க், அவதேஷ் ராய்) ஆயுள் தண்டனையும் வழங்கியது. தொழிலதிபர்கள் இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.

கோரக்பூரைச் சேர்ந்த பல்தான் மல்லா ஒரு வாடகைக் கொலையாளி என்று நிரூபிக்கப்பட்டிருந்தது. "எந்த விதமான தனிப்பட்ட விரோதம் இல்லாமல், பணத்திற்காக மட்டுமே எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்த நியோகியை கொன்றதன் மூலம் அவருடைய குடும்பத்துக்கு மட்டுமில்லாமல் நமது சமூகத்தின் அடிப்படையான ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் பெரும் தீங்கு செய்திருந்தான் பல்தான் மல்லா." இது போன்ற குற்றங்களைத் தடுப்பதற்கு இந்த வழக்கை, ‘அரிதிலும் அரிதான ஒன்றாககருதி மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பு சொல்லியிருந்தார்.

ஆனால், உயர்நீதி மன்றம் போதுமான ஆதாரம் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது. சிபிஐயும் மத்திய பிரதேச அரசாங்கமும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

துர்க் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வந்த சந்திரகாந்த் ஷா, அபய் சிங், மூல்சந்த் ஷா ஆகியோர், நியோகியின் தொழிற்சங்க நடவடிக்கைகளால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதற்கும் அவர்களது தொழில்களுக்கு பெரும் பண இழப்பு ஏற்பட்டிருந்தது என்பதற்கும் சிபிஐ விரிவான ஆதாரங்களை கூடுதலாக சமர்ப்பித்தது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு உயர்நீதி மன்ற தீர்ப்பை பெரிதளவு மாற்றி விடவில்லை. வாடகைக் கொலையாளிக்கு மட்டும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. செல்வாக்குமிக்க தொழிலதிபர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

காலம் செல்லச் செல்ல நியோகியின் மீதான பாசமும் மரியாதையும் அதிகரிக்கவே செய்தன. இருந்தபோதிலும் அவரது எழுச்சியூட்டும் முன்னிலை இல்லாமல் அவர் வழிநடத்திய சங்கங்களும் இயக்கங்களும் சிதறுண்டு வலிமையிழந்தன. எவ்வாறாயினும் முன்னெப்போதையும் விட தொழிலாளர்களின் ஒற்றுமையின் பேராற்றல் இப்போது தேவைப்படுகிறது. அவரது செயல்களும் நினைவுகளும் அந்தப் பேராற்றலைக் கொண்டுவந்து சேர்க்கட்டும். 

____________________________________

(ஆதாரம்: கவுன்ட்டர் கரன்ட் வலைத் தளத்தில் வெளிவந்த பரத் தோக்ராவின் கட்டுரை, ஜன் விகாஸ் அந்தோலன் வெளியீடு, விக்கிபீடியா)

 தமிழில் நிழல்வண்ணன்.


Comments

  1. Very poignant. I do remember is killing while I was in Coimbatore. A true revolutionary and linked labour struggles with peasantry.

    ReplyDelete
  2. தோழர் சங்கர் குகா நியோகியின் அர்பணிப்பான தொழிற் சங்கப் பணிகளும், மற்றும் அவர் மேற்கொண்ட சமுதாய வேலைகளும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தோழர் மீது பெரும் மதிப்பை உருவாக்குகிறது. இளம் வயதிலேயே மிகப் பெரிய அளவில் தொழிலாளர்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தோழர் நியோகிக்கு செவ்வணக்கம்.

    இத்தகைய போராளிகளும் தியாகச் செம்மல்களும் நாடெங்கிலும் இருந்திருக்கிறார்கள். இன்றும் நம்மிடையே வாழ்ந்து சமுதாய மாற்றத்திற்காக இரவும் பகலும்,முதலாளித்துவ அரசின் கொடுமைகளுக்கு அஞ்சாமல் போராடி வருகின்றனர்.

    தொழிலாளி வர்க்கப் புரட்சியை மைய நோக்கமாக வைத்து அதற்கான அறிவியல் திட்டங்களோடு தொழிலாளர்களை அணி திரட்டி வரும் ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து செயல்படாமல் தனி நபர்களாக நாம் எவ்வளவு தான் கடுமையாக உழைத்தாலும், வாழ்க்கையை அர்பணித்தாலும், தியாகங்களைச் செய்தாலும், அதனால் தொழிலாளி வர்க்கத்தை சுரண்டலிலிருந்து விடுவிக்க முடியாது என்பது தான் நாம் கடந்த கால அனுபவத்திலிருந்து பெறும் முக்கியப் படிப்பினையாகும்.

    இந்தப் படிப்பினையை மனதில் கொண்டு சுரண்டலுக்கு முடிவு கட்டவும், தொழிலாளி வர்க்க ஆட்சியை நிலைநாட்டவும் ஆர்வம் கொண்டுள்ள நாம் அனைவரும், ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியைக் கட்டுவதிலும், புரட்சிகர ஒருங்கிணைப்பைத் தொழிலாளர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களிடையே கொண்டு வருவதும் அவர்களை புரட்சிக்காக அணிதிரட்டுவதும் மட்டுமே, தோழர் நியோகி மற்றும் எண்ணற்ற வீரப் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், அவர்கள் நெஞ்சில் கொண்டிருந்த கனவுகளை நிறைவேற்றுவதாகவும் அமையும்.

    - தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட