கடந்த மூன்றாம் தேதி செய்தி இணைய
முகப்பான(News Portal) நியூஸ் க்ளிக் (News Click) மீது பாஜக அரசின் டெல்லி போலீஸ்
தாக்குதலைத் தொடுத்து அதன் அலுவலகத்தையும் செயல்பாட்டையும் முடக்கியுள்ளது. அதனோடு
தொடர்புடைய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அதில் பணிபுரியும் பணியாளர்கள் என
46 பேரின் வீடுகளில் சோதனை இட்டு, ஆறு மணி நேரங்களுக்கு மேலாக அவர்களை விசாரணைக்கு
உட்படுத்தி. அவர்களிடமிருந்து மடிக்கணினி, அலைபேசி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளது;
நியூஸ் கிளிக்கின் தலைமை ஆசிரியரான பிரபீர் பர்க்யஸ்தா என்பவரையும் அதன் மனித வளத்
துறைத் தலைவரான அமித் சக்கரவர்த்தியையும் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. நியூஸ்
கிளிக்கின் மீது குறிப்பான எந்தக் குற்றச்சாட்டையும் கூறாமல் பொத்தாம்பொதுவாக அது இந்திய
இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற ஒரே காரணத்தைக் கூறி இந்தப் பாசிச நடவடிக்கையில்
இறங்கி உள்ளது இந்திய பாஜக அரசு.
அனைத்து முதலாளிய ஊடகங்களையும்
பாஜக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தனக்கு ஆதரவாக மாற்றியுள்ளது. இந்த
நிலையில் அதனை எதிர்த்து அதனுடைய அநீதிகளையும் தவறுகளையும் மக்கள் விரோதச் செயல்களையும்
அம்பலப்படுத்தும் பத்திரிகைகளை அது தனது விரோதிகளாகப் பார்க்கிறது.
அந்தப் பத்திரிகைகள் மீது அடக்கு
முறையை ஏவி விடுகிறது. இல்லாவிட்டால் அதனை விலைக்கு வாங்குகிறது. தன்னை விமர்சித்துக்
கொண்டிருந்த NDTV ஐ அதானி மூலம் விலைக்கு வாங்கியது. தனது தவறுகளை அம்பலப்படுத்திக்
கொண்டிருந்த இந்த The Wire இணையதள இதழின் மீது தாக்குதலைத் தொடுத்தது. இப்பொழுது நியூஸ்
கிளிக் இணைய முகப்பின் மீது தனது பாசிசத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. இப்பொழுது கைது
செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் பிரபிர் பர்கயஸ்தா 1975இல் இந்திரா காந்தியின் நெருக்கடி
நிலையின் போதும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
அப்பொழுது அவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்தார். பாசிச சக்திகள்
எந்த வண்ணத்தில் இருந்தாலும் அவற்றிற்கு உண்மை பேசுபவர்கள் எதிரிகளாகத்தான் தோன்றுவார்கள்.
இதைத்தான் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. உண்மை மீதும், நீதி மீதும், ஜனநாயகத்தின்
மீதும் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து பத்திரிகைச் சுதந்திரத்தின்
மீதான இந்தப் பாசிசத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.
சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
கட்டுரை நன்று. பாசிச போக்கை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
ReplyDeleteஜனநாயகம் குழி தோண்டி புகைப்பதை அனைவரும்
எதிர்க்க வேண்டும்.