Skip to main content

சுற்றுச்சூழல் விதிமீறல்களும் உத்திரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தும்!

 

உத்திரகாண்ட் மாநிலம் சார் தாம் (நான்கு மதத் தல) தேசிய நெடுஞ்சாலை (Char Dham National Highway Project) திட்டத்தின் ஒரு பகுதியாக உத்திரகாசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் பர்கோட் சில்கியாரா சுரங்கப்பாதை இடிந்ததில் அதில் பணியாற்றி வந்த 41 தொழிலாளர்கள் நவம்பர் 12 ஆம் தேதியன்று அதிகாலை 5.30 மணி அளவில் சிக்கிக் கொண்டனர். 17 நாட்கள் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு அவர்கள் மீட்டெடுக்கப்பட்டனர்.


இமயமலை பகுதியில் அமைந்துள்ள கேதர்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய நான்கு மதத் தலங்களை இணைக்க கூடிய நான்கு மதத் தல தேசிய நெடுஞ்சாலை திட்டம் 2016இல் திட்டமிடப்பட்டது. 12000 கோடி மதிப்பிலான 889 கி.மீ நீளமுள்ள இந்த நெடுஞ்சாலை திட்டம் இமயமலை பகுதியில் விரிந்த சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை.

பர்கோட் - சில்கியாரா சுரங்கப் பாதையானது 13 மீட்டர் அகலமும், 9 மீட்டர் உயரமும் கொண்டது. 4.5 கி.மீ தொலைவு கொண்ட இந்த இருவழி சுரங்கப் பாதையானது 1383 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கங்கோத்ரி - யமுனோத்ரி ஆகிய மதத் தலங்களுக்கிடையேயான பயணத் தொலைவு 20 கி.மீ வரையும், பயண நேரம் 45 நிமிடம் வரையும் குறையும் என கூறப்படுகின்றது.

சுரங்கப் பாதையானது 4 கி.மீ தூரம் நிறைவடைந்த நிலையில் 441 மீட்டர் தூரம் மட்டுமே முடிக்க வேண்டி இருந்தது. சில்கியாராவிலிருந்து 205 மீட்டர் தொலைவில் 55 மீட்டர் அளவிற்கு நவம்பர் 12 ஆம் தேதியன்று அதிகாலை 5.30 மணி அளவில் கான்கிரீட் சரிந்து விழுந்துள்ளது.

திட்டம் அமைந்துள்ள இமயமலைப் பகுதியிலுள்ள பாறைகளின் தன்மை குறித்து முறையான, முழுமையான ஆய்வு இல்லாமல் சாலை அமைக்கும் பணிகள் நடத்தப்பட்டு வருவதால் தான் இத்தகைய பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதே காரணத்தினால் தான் அவர்களை மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. எந்த ஒரு முயற்சியையும் அறிவியல்பூர்வமாக முன்னெடுப்பதற்கான ஆய்வுகள் இல்லாததால், எடுக்கப்படும் முயற்சிகள் வேறொரு வகையான தடைகளை ஏற்படுத்தின. ஒருவேளை முழுமையான ஆய்வுகள் இருந்திருக்குமானால், அந்த பாறையின் தரத்திற்கு ஏற்றமாதிரியான மீட்பு பணிகள் முன்னெடுக்க வாய்ப்புகள் இருந்திருக்கும். அது இல்லாததால் தொழிலாளர்களை மீட்கும் பணி நீண்டுக் கொண்டே சென்றது. செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் என துளையிட்டு பல்வேறு வகைகளில் அவர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்றது.

இந்த விபத்திற்கு பிறகு இது போன்ற பிற திட்டங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பு சம்பந்தமான ஆய்வுகள் மேற்கொள்ளபடும் என உத்திரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தினை வடிவமைக்கவும், கட்டமைக்கவும் நவயுகா நிறுவனத்துடன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. மகாராஷ்டிராவின் சம்ருதி விரைவு சாலை அமைக்கும் பணியில் மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு 17 உயிர்களை பலி வாங்கிய கட்டுமான நிறுவனம் தான் இந்த நவயுகா நிறுவனம்.

சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் வெடிமருந்துகள் பயன்படுத்துவதில்லை என கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன, ஆனால், பெரும்பாலான நேரங்களில் விதிமீறல்கள் நடந்த வண்ணம் உள்ளதாகவும், அதிபயங்கரமான வெடிமருந்துகள் பயன்படுத்தியிருக்க கூடும் என்பதை நாம் நிராகரிக்க முடியாது என்றும் உத்திரகாண்ட் வனம் மற்றும் தோட்டக்கலை பல்கலைக்கழக பேராசிரியர் எஸ் பி சதி (S P Sati) கூறுகிறார்.

சுரங்கப் பாதைகளை அமைக்க பெரிய இயந்திரங்களை கொண்டு குடையும் (Tunnel-boring machines - TBMs) முறையைக் காட்டிலும் துளையிட்டு வெடி வைத்து தகர்க்கும் (Drill and blast method - DBM) முறையானது குறைந்த செலவினத்தைக் கொண்டது என்பதால் இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பலவீனமாக உள்ள மலைப் பாறைகள் மேலும் பலவீனமடைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது போன்ற திட்டங்களுக்கு அவசரகால வெளியேறும் பாதை கண்டிப்பாக இருக்க வேண்டும் என இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பி சி நவாமி கூறுகிறார். ஆனால், அத்தகையப் பாதை இந்தத் திட்டத்தில் இல்லாததால் இடிபாடுகளிலிருந்து தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்

ஹிமாலாய மலைப்பகுதியானது குறைவான உறுதித்தன்மை கொண்ட பகுதியாகும். பூமிக்கு கீழே உள்ள ஹிமாலய பாறை அடுக்குகள் நிலைத்தன்மை கொண்டவை அல்ல, இந்தப் பாறைகளுக்கு ஏற்றார் போன்று திட்டங்கள் வகுக்கப்படவில்ல, இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் பணியமர்த்தப்படவில்லை. ஆனால், மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும், தொழில்நுட்பங்கள் அப்படியே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

செலவினைக் குறைக்கும் நோக்கோடு இந்தப் பகுதியை உரிய ஆய்வு செய்யாததோடு மட்டுமல்லாமல், உரிய தொழில் நுட்ப நிபுணர்களை கொண்டும் இந்த பணி நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த வேலைகளானது புவியியல் துறை நிபுணர்களின் மேற்பார்வையில் மட்டுமே நடத்தியிருக்க வேண்டும், ஆனால், கட்டுமான நிறுவனமோ இதனை முற்றாக புறக்கணித்துள்ளது.

திட்டம் தொடங்குவதற்கு முன்பே நில அமைப்பு குறித்தான முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தால் இந்த பாறையின் தன்மையும் அதன் உறுதிப்பாட்டின் அளவும் தெரிந்திருக்கும், இதுபோன்ற விபத்துகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

மேலும், இத்தகைய திட்டங்களில் பாறையின் தன்மையானது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில இடங்களில் வலுவாகவும், சில இடங்களில் உறுதித்தன்மை குறைவாகவும் இருக்கும், எனவே, திட்டத்தின் அனைத்து பகுதியிலும், ஒரே மாதிரியான தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியாது, வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மாதிரியான தொழில் நுட்பங்கள் பயன்படுத்த வேண்டும்.

இது போன்ற திட்டங்களை அவசர கதியில் செய்யாமல் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்திய பின்பு தான் ஒவ்வொரு கட்ட நடவடிக்கையையும் எடுத்திருக்க வேண்டும், கொஞ்சம் கொஞ்சமாக வேலைகளை முன்னெடுத்து சென்றிருக்க வேண்டும். ஆனால், இவை எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு அவசரகதியில் இந்த சாலை அமைக்கும் பணியும், சுரங்கபாதைகள் அமைக்கும் பணியும் நடந்து வந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டில் மட்டும் இமயமலை பகுதியில் உள்ள ஜோசிமாத் நகரத்தின் ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கியது, நிலச்சரிவுகள் ஏற்பட்டது, உத்திரகாண்டில் ஏற்பட்ட வெள்ளம், இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், சிக்கிமில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்புகள் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது பர்கோட் சில்க்கியாரா சுரங்கபாதையில் ஏற்பட்டுள்ள விபத்து என இயற்கை இடர்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இயற்கை இடர்கள் என்பது போல் வெளியில் தெரிந்தாலும் இமயமலைப் பகுதியின் இயற்கை வளங்கள் விதிகளை மீறி பயன்படுத்தபடுவதாலும், அழிக்கப்பட்டு வருவதாலும் நடந்து வருவதாகும்.

இமயமலை புவியியல் அமைப்பானது மிகவும் பலவீனமான ஒன்றாகும். இதில் ஏற்படுத்தக்கூடிய சிறிய மாற்றங்களும் கூட பாதிப்புகளை உண்டாக்க கூடியதாகும்.

நான்கு மதத் தல தேசிய நெடுஞ்சாலை (Char Dham National Highway Project) திட்டத்தினை அமலாக்குவதற்காகவே சட்டங்களும், விதிமுறைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 100 கி.மீக்கும் அதிகமான நீளம் கொண்ட இது போன்ற திட்டங்களுக்கு சுற்றுக்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் அறிக்கையானது இந்தத் திட்டத்திற்காக முழு அறிக்கையாக வரைவு செய்யாமல் 53 சிறிய திட்டங்களாக உடைக்கப்பட்டு அறிக்கை தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தத் திட்டத்திற்கான சூழலியல் மதிப்பீடுகள் குறித்தான அறிவியல் பூர்வமான ஆய்வுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்திற்காக 600 ஏக்கர் அளவிலான காடுகளை ஏறக்குறைய 56,000 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இதைக் காட்டிலும் இரண்டு மடங்கு மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது. மேலும், 889 கி.மீ நீளமுள்ள இந்தச் சாலையின் எந்த இடத்திலும் புதிய மரங்களை நடுவதற்கான முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை.

உள்ளூர் மக்கள், சூழலியலாளர்கள், அறிவியலாளர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை உணர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்தத் திட்டத்தினால் சுற்றுசூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆராய உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய 2019 இல் உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டது. உயர்மட்டக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்தனர். நாட்டின் பாதுகாப்பை கருதியே இந்தத் திட்டம் செயல்படுத்துபடுவதாக இந்திய அரசு கூறியதை ஏற்று உச்ச நீதிமன்றமானது இமயமலையின் சுற்றுசூழலைக் காட்டிலும் அகன்ற சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தத் திட்டத்தினை எவ்வித மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த அனுமதியளித்தது.

மலைகளை உடைத்தும், மரங்களை வெட்டியும் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதால் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒரு இடத்திலாவது நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றது.

இந்தப் பகுதியில் கங்கை மற்றும் யமுனா நதிகள் அமைந்துள்ளன. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் ஆறுகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் கவனம் கொள்ளப்படவில்லை, வெட்டியெடுக்கப்பட்ட பாறைகள், மண், மரங்கள் மற்றும் கட்டுமானக் கழிவுகள் அனைத்தும் ஆறுகளில் கொட்டப்படுகின்றது. இதனால் ஆற்று நீர் மாசடைவதோடு, அடைப்புகள் ஏற்பட்டு ஆற்றின் போக்கு தடைபடுவது அல்லது திசை மாறுவது ஆகியவற்றிற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிரதம மந்திரியின் இந்த கனவுத் திட்டத்தின் இன்னொரு பகுதியானது நான்கு மதத் தலங்களை இணைக்கும் 372 கி.மீ நீளமுள்ள 75,000 கோடி மதிப்பிலான இரயில்பாதை அமைக்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த இதே போன்று மலைகளை வெட்டியெடுத்தும், குடைந்தும், மரங்களை வெட்டியும் சுரங்கபாதைகள், பாலங்கள் ஆகியன அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய இதுவரை எந்தவிதமான விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பார்கோட் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தானது தனித்த அந்த பகுதியில் மட்டும் ஏற்பட்ட பாதிப்பின் விளைவாக நடந்ததல்ல. இமயமலையின் ஒட்டு மொத்த சூழலியலும் சிதைக்கப்பட்டு வருவதன் தொடக்க வெளிப்பாடே இந்த விபத்தாகும்.

இந்தத் திட்டத்தில் ஏறக்குறைய 70 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில் பாஜக அரசானது தன்னுடைய சாதனையாக இதனை தம்பட்டம் அடித்து வரும் தேர்தலில் வாக்குகளை பெற மீதமுள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்கான வேலையில் இறங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு விதிமுறைகள் கூட பின்பற்றப்படாமல் வேலைகள் விரைவுபடுத்தபட்டது. இந்தியா முழுவதும் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் நிலையில், கூலித் தொழிலாளர்களும், அடித்தட்டு மக்களும் அன்றாட வாழ்விற்கே அல்லல்பட்டு வரும் நிலையில் அதற்கான திட்டங்களை முன்னெடுக்காமல் மதத் தலங்களுக்கு பாதையமத்து அதன் மூலம் இந்து மதத்தினரின் காவலனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் முயற்சிகளை மட்டும் முன்னெடுத்து வருகின்றது. உண்மையில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான் பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் பாதிக்கபட்டு வருகின்றனர். ஆனால் மதவாத அரசியலை முன்னிறுத்தி வெகு மக்களிடையே மத நச்சுக் கருத்துக்களை பரப்பி உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி ஆட்சியில் நீடிப்பதற்கான வேலைகளை பாஜக அரசு நடத்தி வருகின்றது.

இந்தத் திட்டத்தினை ஒப்பந்தம் எடுத்த நிறுவனமோ செலவினைக் குறைத்து கொள்ளை இலாபம் அடிக்கும் பொருட்டு துறைச் சார்ந்த வல்லுநர்களை பணிக்கு அமர்த்தாமல் வெறும் கட்டுமானத் தொழிலாளர்களை கொண்டு வேலை செய்வதும், தடைசெய்யப்பட்ட வெடி மருந்துகளை பயன்படுத்துவதும், அவசரகால வெளியேறும் பாதையை அமைக்காமல் முற்றிலும் விதி மீறல்களை செய்ததனால் தான் ஏறக்குறைய 18 நாட்கள் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்காக போராட வேண்டியிருந்தது. இத்தகைய திட்டங்களினால் கட்டுமானத் துறை முதலாளிகள் கொழுத்து வருகின்றனர். மறுபுறம் மதத் தலங்களை இணைக்கும் திட்டத்தின் மூலம் சுற்றுலா துறையானது மேம்படுத்தப்பட்டு அதன் மூலம் சுற்றுலாத்துறை முதலாளிகள் கொழிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதலாளித்துவமானது இலாபத்தை அதிகரிக்கும் நோக்கோடு தொழிலாளர்களின் உயிர்களை துச்சமென கருதி அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் புறக்கணிப்பதோடு, இயற்கையை வரைமுறையின்றி சுரண்டுவதும், சீரழிப்பதும், நீர் நிலைகளை மாசாக்குவதும் என மனித குல விரோத செயலில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடத்தி, அதற்கேற்ப திட்டங்களை வடிவமைத்தும், முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றினால் மட்டுமே இது போன்ற விபத்துக்களை தடுப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுசூழலை பாதுகாத்து பெரும் பேரிடர்களையும், நிலச்சரிவுகளையும், வெள்ள அபாயங்களையும் தடுத்து நிறுத்த முடியும். மேலும், இயற்கை சமநிலையை பேணுவதன் மூலம் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், காடுகளில் வாழும் உயிரினங்களை பாதுகாக்கவும், மனிதர்களுக்கு ஏற்படும் தீங்குகளை தடுக்கவும் முடியும்.

-    குமணன்

Comments

  1. இமயமலைப் பகுதியில் பர்கோட் - சில்கியாரா சுரங்கப்பாதை விபத்து, முதலாளித்துவ அமைப்பாலும், இந்திய அரசாங்கத்தாலும் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய விபத்து என்பதை தோழர் குமணனுடைய இந்தக் கட்டுரை மிகத் தெளிவாக எல்லா விவரங்களோடும் எடுத்துக்காட்டியிருக்கிறது.

    அரசாங்கம் முதலாளிகளுடைய இலாபத்தைப் பெருக்குவதற்காகவும், பிற்போக்கான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவும் பல்வேறு சாதாரண பாதுகாப்பு விதிகளையும், சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்த ஆய்வுகளையும், அந்தப் பகுதிக்கு ஏற்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தாதன் விளைவாக 41 தொழிலாளர்களுடைய வாழ்வா - சாவா என்ற மிக மோசமான ஆபத்துக்கு உள்ளாக்கிய விபத்து நிகழ்ந்திருக்கிறது. இறுதியில் பிற தொழிலாளர்களுடைய கடுமையான உழைப்பின் காரணமாகவும், சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுடைய மன உறுதியாலும் அவர்கள் 17 நாட்களுக்குப் பின்னர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்த முதலாளித்துவ அமைப்பில் எந்த அளவிற்கு உழைக்கும் மக்களுடைய உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் தெரிந்தே, அவர்களை மிகவும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடச் செய்கிறார்கள் என்பதற்கு இந்த விபத்தும் ஒரு எடுத்துக் காட்டாகும்.

    விபத்து ஏற்படுவதற்கும், தொழிலாளர்களை எவ்வித முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இந்த ஆபத்தான வேலையில் ஈடுபடச் செய்ததற்கும் காரணமான அரசாங்கம், தன்னுடைய இந்த கொடிய செயலுக்கு வருத்தம் தெரிவிக்காமல், தொழிலாளர்கள் மீட்கப்பட்டதை தன்னுடைய சாதனையாக பேசி வருவது, இந்திய அரசாங்கத்தின் பிற்போக்கான கொடூரமான மனநிலையைக் காட்டுகிறது.

    இந்தத் திட்டத்தை எல்லா அடிப்படை மற்றும் பாதுகாப்பு விதி முறைகளை மீறி, துவக்கியதற்கும், அதை நடத்தியதற்கும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளும், அதை செயல்படுத்திய நிறுவனங்களின் முதலாளிகளும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    உழைக்கும் மக்களுக்குப் பாதுகாப்பும், உயிர்களுக்கு உத்திரவாதமும், நல்ல வாழ்க்கைத் தரமும் உறுதி செய்யப்பட வேண்டுமானால், இந்த அரசியல் அமைப்பு மாற்றப்பட்டு, தொழிலாளிகள் - விவசாயிகளுடைய ஆட்சி அதிகாரம் நிறுவப்பட வேண்டுமென்பதை இந்த பயங்கரமான நிகழ்வும் சுட்டிக் காட்டுகிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட