Skip to main content

கவிதைகளில் காசாவின் கண்ணீரும் செந்நீரும் …


கவிதைகளில்

காசாவின் கண்ணீரும் செந்நீரும்

 

தமிழில் நிழல்வண்ணன்

 

1.   ! காசாவின் குழந்தைகளே!

             மொஹம்மது ஃபஹத் உல்லா


காசாவின் குழந்தைகளே

நீங்கள் தான் எவ்வளவு வேதனையில் இருக்கிறீர்கள்

நீங்கள் அழுகிறீர்கள்,

புனித வீதியில் ஓடுகிறது உங்கள் தூய இரத்தம்

உங்களில் சிலர் பிறந்து சில மாதங்களே ஆகின்றன

சிலர் இன்னும் தொட்டிலில் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்

சிலர் தத்தித் தவழ்ந்து நடை பயில்கிறீர்கள்

 

உங்கள் அன்னையரின் கருவறையில் இருந்தபோது

இந்த உலகம் அழகானது என்று நினைத்திருப்பீர்கள்

காசா ஏன் உங்கள் நம்பிக்கைகளுக்கு மாறாக இருக்கிறது

வானமெங்கும் தீச்சுவாலையும் புகை மூட்டமுமாய்?

பள்ளி இருக்கைப் பலகைகளில்

நீங்கள் அமராமல் இருக்கச் செய்வது எது?

கொடூரமாகக் காயமுற்று மருத்துவமனைப் படுக்கைகளில்

உணர்விழந்து கிடக்கிறீர்கள்!

சில நாட்களுக்கு முன்பு

உங்கள் பெற்றோரின் அரவணைப்பில்

நீங்கள் பறவைகளைப் போல

கீச்சொலி எழுப்பித் திரிந்தீர்கள்

இப்போதோ உங்கள் தந்தை தாயும்

செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்

உங்களில் சிலர் தந்தையரை இழந்து நிற்கிறீர்கள்

சிலர் அன்னையரை இழந்து தவிக்கிறீர்கள்

இன்னும் சிலரோ இருவரையும் இழந்து

அழுதுகொண்டிருக்கிறீர்கள்

 

உங்கள் விழிகளில் அச்சம் தெரிகிறது

கண்ணீர் வழிகிறது

பசியால் உங்கள் வயிறு சுண்டியிழுக்கிறது

கடைசியாக என்ன உண்டீர்கள்

காலைச் சிற்றுண்டியா மதிய உணவா

இரவுச் சாப்பாடா

இல்லை காதைப் பிளக்கும் இடியும் வெடியுமா!!!

 

காசாவின் குழந்தைகளே

உங்கள் வேதனையையும்

காயமுற்ற முகத்தையும் பற்றி

கவலைப்படுவோர் யார்?

உலகம் மனிதத்தையும் மனித இனத்தையும்

இழந்து விட்டது

நீங்கள் விரும்பும் டைனோசார்கள்

அழிந்தது போல இல்லாவிட்டாலும்

மனிதர்களாகிய நாங்கள் அழிந்துபோனோம்

உங்கள் கண்களின் முன்னே

உலகம் மங்கி மறைந்துகொண்டிருக்கும் போது

உங்கள் கரங்களைப் பற்றிக்கொள்ள யாருமில்லை

வெட்கத்தையும் துயரத்தையும் மறைத்துக்கொண்டு

இந்தக் கொடிய உலகம் நீங்கள் வாழவேண்டும் என்கிறது

நாங்கள் எதையும் உணரவில்லை

நாங்கள் எதையும் சொல்லவில்லை  

நாங்கள் எதையும் செய்யவுமில்லை

இருந்தும் இறுதிவரை

நீங்கள் பிழைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்

ஒவ்வொருமுறை நீங்கள் இறக்கும்போதும்

நாங்கள் அனைவரும் இறந்துபோகிறோம்.

 

_____________________________________

மொஹம்மது ஃபஹத் உல்லா, பேராசிரியர், மிஸ்ஸிசாகா, கனடா.

நன்றி: countercurrents.org

தமிழில் நிழல்வண்ணன்

 


2.   கிளர்ந்து எழும் பாலஸ்தீனம்

             சமினா சலிம்


தீமை உயர்ந்து கொண்டிருக்கிறது

உண்மை தேய்ந்து கொண்டிருக்கிறது

 

அவநம்பிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது

நம்பிக்கை புதைந்து கொண்டிருக்கிறது

 

புகைமூட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது

இருள் மின்னிக் கொண்டிருக்கிறது

 

யுத்தம் சீற்றத்துடன் எழுந்து வருகிறது

அமைதி நொறுங்கிக் கொண்டிருக்கிறது

 

குண்டுகள் விழுந்து கொண்டிருக்கின்றன

குழந்தைகள் நசுங்கிக் கொண்டிருக்கின்றனர்

 

அன்னையர் அலறிக் கொண்டிருக்கிறனர்

தந்தையர் துயருற்றுக் கொண்டிருக்கின்றனர்

 

இரத்தம் பொங்கி வழிகிறது

மரணம் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது

 

யுத்தம் சீற்றத்துடன் எழுந்து வருகிறது

அமைதி நொறுங்கிக் கொண்டிருக்கிறது

 

நம்பிக்கை தளர்ந்து கொண்டிருக்கிறது

வாழ்வு முடிந்து கொண்டிருக்கிறது

 

அநீதி மேலோங்கிக் கொண்டிருக்கிறது

வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன

 

துன்பம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது

மனிதநேயம் மூழ்கிக் கொண்டிருக்கிறது

 

தலைவர்கள் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்

வெகுமக்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள்

 

கொடியவர்கள் நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறார்கள்

இனப்படுகொலை நிகழ்ந்து கொண்டிருக்கிறது

 

உலகம் ஒன்றுபட்டுக் கொண்டிருக்கிறது

பாலஸ்தீனம் கிளர்ந்து எழுந்து கொண்டிருக்கின்றது

_____________________________________________________

சமினா சலிம் இணைப் பேராசிரியர், மருந்தியல், மருந்துத் தயாரிப்பு அறிவியல் துறை, ஹூஸ்டன் பல்கலைக்கழகம்

நன்றி: countercurrents.org

தமிழில் நிழல்வண்ணன்


3.   பாலஸ்தீனம்: ஆசீர்வதிக்கப்பட்ட நிலம்

                     அர்ஷி அல்வி 

நாங்கள் சின்னஞ்சிறு தேவதைகள்

வான வெளியில் வட்டமிட்டுத் திரிகிறோம்

ஆசீர்வதிக்கப்பட்ட பாலஸ்தீன பூமியிலிருந்து

வந்தவர்கள் நாங்கள்

கள்ளங்கபடமற்ற உயிர்களையும் புன்னகைகளையும்

சிதறடித்துக் கொண்டிருக்கும் எரிகணைகளின்

வீச்சுக்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம்

 

மக்களின் வேதனையின், சீற்றத்தின்

ஆழத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்

இனப் படுகொலையை எதிர்கொண்டிருக்கும்

மக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம்

 

தங்கள் குழந்தைகளின் உயிர்களைப்  பாதுகாப்பதற்கு

மக்கள் பைத்தியம் பிடித்த நிலையில்

ஓடிக்கொண்டிருக்கிறார்கள்

ஆனால் அந்தோ,  பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை

ஏவுகணைகளிலிருந்து தப்புவிக்க.

 

அதிர்ச்சியுற்ற மனநிலையில்

தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்  

அஞ்சி நடுங்கிக்கொண்டும்,

இரத்தம் சிந்திக்கொண்டும் செய்வதறியாது

துயரத்தில் கதறிக் கொண்டிருக்கின்றனர்

 

சிறுவன் ஒருவன் சீற்றத்துடன் பிணத்தை மூடியிருந்த

துணியை விலக்குவதைப் பார்த்தோம்

தனது பெற்றோரைப் புதைக்க விடாமல்

அவன் அழுது புலம்பிக் கொண்டும் கெஞ்சிக்கொண்டும் இருந்தான்

 

குட்டிக் குழந்தை ஒன்றை மார்புடன் அணைத்தவாறே

தாங்கமுடியாத வேதனையுடன், கண்ணீருடன்

மெலிந்த ஒரு தாத்தாவையும் பார்த்தோம்

 

இடிபாடுகளுக்கு இடையில் கிடந்தன

இரத்தத்தில் நனைந்த உடல்கள்

எரிந்து போயிருந்தன சில

அடையாளம் காணக்கூட முடியாத வகையில்

 

மௌனித்துக் கிடந்தனர்

உயிரீந்த குழந்தைகளும் பெண்களும் ஆண்களும்

சிலர் அவயங்களை இழந்தும்

சிலர் துண்டுதுண்டாகவும்

 

எண்களிடப்பட்ட உடல்கள் எங்கும்

வரிசையில் கிடத்தப்பட்டிருந்தன

பெரும் குழிகளில் ஒன்றாகப் புதைக்கப்பட

தயாராக இருந்தன  

 

மருத்துவமனைகள், அடுமனைகள், பள்ளிகள்

குண்டுகளால்  தகர்க்கப்பட்டிருந்தன அனைத்தும்

எரிபொருள் இல்லை, நீர் இல்லை, உணவு இல்லை, இணையம் இல்லை

நிறுத்தப்பட்டு மறுக்கப்பட்டன அனைத்தும்

 

வீடுகள், பூங்காக்கள், குடியிருப்புக்கள்

தரைமட்டமாக்கப்பட்டிருந்தன அனைத்தும்

அனைவரையும் அழித்தொழிக்க விரும்பினர் 

அவர்கள் இறுதியாக

 

பெருகுழப்பம், கண்ணீர், இரத்தம், வறண்டுபோன குரல்வளைகள்

உணவில் நாட்டமில்லை அனைத்தையும்

ஆசீர்வதிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தின் மேலிருந்து

நாங்கள் பார்க்க முடிந்தது

 

தீய ஒற்றைக் கண்சியோனிசப் பயங்கரவாதத்தின்

கீழிருந்தது அந்த நிலம்

பாலஸ்தீன நிலத்தை முற்றுக்கைக்குள்

கொண்டு வந்திருந்தார்கள் அவர்கள்

 

நிலவின் ஒளியிலும் விண்மீன்களின் ஒளியிலும்

இழைந்து இழைந்து பறந்து கொண்டிருகின்றோம்

சின்னஞ்சிறு தேவதைகளான நாங்கள்

பாலஸ்தீனத்தில் அமைதியைக் கொண்டுவரும்

எரிநட்சத்திரத்தை எதிர்பார்த்துக்கொண்டே

 

சொர்க்கத்தின் கதவுவழி நுழைவதற்கு

இறுதியாக நாங்கள் காத்துக் கொண்டிருகின்றோம்

பாலஸ்தீன மக்களுக்கு ஏனிந்தச் சோதனைகள் என்று

இறைவனிடம் கேட்க

 

ஏன் இவ்வளவு துயரம்? ஏன் இவ்வளவு துன்பம்?

ஏனிந்த இதய வலி?

ஆசீர்வதிக்கப்பட்ட நிலமாக

பாலஸ்தீன பூமி இருப்பதற்கு

நாங்கள் பெற்றது இதுதானா?

 

நாங்கள் நன்கறிவோம்

உயிரினங்களும் பொருட்களும் அனைத்தும்

மரணத்தைச் சுவைக்கும் இறுதியில்

என்பதை

ஆனால் ஆசீர்வதிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தை

வேதனை ஏன் வசப்படுத்திக் கொண்டுள்ளது?

 

நாங்கள் கேட்டோம்

ஒட்டுமொத்த உலகே எங்களுக்கு எதிராக ஏன் சதி செய்கிறது

கடவுள் சொன்னார்

இதன் மூலம் வெளிப்படுத்த வேறு திட்டங்கள்

அவருக்கு இருப்பதாக.

 

___________________________________

அர்ஷி அல்வி,  சுதந்திர எழுத்தாளர், கவிஞர், துபாய் Bazm_e_Urdu வுடன் இணைந்துள்ளார்.

நன்றி: countercurrents.org

தமிழில் நிழல்வண்ணன்

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட