மகான்
சிங் (27 டிசம்பர் 1913 --- 18 மே 1973) பிரிட்டிஷ் இந்தியாவில், முன்பு பாகிஸ்தானின் பகுதியாக இருந்த, பஞ்சாப் மாகாணத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசித்த, குஜ்ரன்வாலா மாவட்டத்தில் கர்ஜாக் என்ற கிராமத்தில் பிறந்தார். 1927 இல், பதிமூன்றாவது வயதில் அவரது குடும்பம் கென்யாவில் நைரோபிக்குக் குடியேறியது. அப்போது நைரோபி பிரிட்டிஷின் கிழக்கு ஆப்பிரிக்க ஆட்சிக்காவலின் நிர்வாகத் தலைநகராக இருந்தது.
பிரிட்டிஷார்
தங்கள் வணிக நலனுக்காக கென்யாவில் மொம்பாசாவிலிருந்து கிசுமு வரை தொடர்வண்டி இருப்புப் பாதையை நிறுவுவதற்காக இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை அழைத்துச் சென்றனர். பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் இந்தியாவிலிருந்த அவர்களுடைய காலனியான கோவாவிலிருந்து கடற்கரை இயேசு கோட்டையை கட்டுவதற்காகத் தொழிலாளர்களை அழைத்துச் சென்றிருந்தனர். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் தான் ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களால் இரும்புப் பாம்பு என்று அழைக்கப்பட்ட அந்த இருப்புப் பாதையைக் கட்டியமைக்கக் பஞ்சாப்பிலிருந்தும் குஜராத்திலிருந்தும் 37000
தொழிலாளர்களும் சிறு வியாபாரிகளும் கொண்டு செல்லப்பட்டனர். அடர்ந்த காடுகள் வழியே சென்ற அந்த இருப்புப்பாதைக் கட்டுமானப் பணியில் 2500 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், 6500 தொழிலாளர்கள் கடுமையான காயங்களால் துன்புற்றனர்.
இந்தப்
பின்னணியில்தான் நைரோபியில் மகான் சிங் ஓர் இளம் மாணவராக 1930 லண்டன் மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார். அவர் மிகவும் அறிவார்ந்த மாணவராக இருந்தார். “மகான் சிங்குக்கு மந்திர மூளை (magic brain), அதைக் கொண்டு அவர் கணிதத்தில் மிகச்சிறந்த மாணவராக விளங்கினார்” என்று பின்னாளில் சுதந்திர கென்யாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆன அவரது வகுப்புத் தோழர் சுனிலால் மதன் எழுதியுள்ளார். மகான் சிங் உயர்கல்விக்காக இங்கிலாந்து செல்ல விரும்பினார், ஆனால் அவரது தந்தை புதிதாக நிறுவியிருந்த அச்சகத்தில் தனக்கு உதவியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். அவருடைய குடும்பத்தின் நிதி நிலைமை மகானை அச்சகத்தில் வேலை செய்ய நிர்ப்பந்தித்தது. அவர் தன்னை ஒரு தொழிலாளராகக் கருதி அதற்குரிய ஊதியத்தை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அச்சகப் பணியை ஏற்றார். ஏன் அக் கோரிக்கையை வைத்தார் என்பதை அவரது எதிர்காலம் விளக்கியது.
1930 களின் மத்தியில் மகான் சிங் தனது உளவலிமையை நிறுவிக்கொள்வதில் தீர்மானகரமான பாத்திரத்தை ஏற்றார். 1933 இலிருந்து தொடர்வண்டித் துறையில் நிரந்தரமாகப் பணியில் அமர்ந்தார். இந்தியத் தொழிலாளர்கள் தற்காலிகத் தொழிலாளர் நிலைக்குக் குறுக்கப்பட்டார்கள். ஏற்கெனவே அவர்கள் 1931, 1933, மற்றும் 1935 இல் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டுத் தோற்றுப் போயிருந்தார்கள். அப்போது குலாம் மொஹம்மது தலைமையிலிருந்த இந்திய தொழிலாளர் சங்கத்தின் கௌரவச் செயலாளராக இருக்குமாறு மகான் சிங் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
மகான்
சிங் அனைத்தையும் பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினார். எட்டுமணி நேர வேலை, தொழிலாளர்கள் மீதான மிகுதியான வரிவிதிப்பு, ஆகியவற்றுடன் இட்லரின் படுகொலைகளைக் கண்டித்தும் தொழிற்சங்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. படிப்படியாக தொழிற்சங்கப் பணி கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதற்கும் விரிவாக்கப்பட்டது: சங்கத்தின் பெயர் அதற்கேற்பத் திருத்தப்பட்டது. அவர் தனது ஆப்பிரிக்க சகாக்களுடனும் குஜராத்தி தேசியவாதி அம்பு படேலுடனும் கூட்டாகச் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அவர் தங்களுடைய சாதி, மதம், பாலினம் மற்றும் தேசிய இனப் பாகுபாடுகளைக் கைவிட வேண்டும் என்று இந்தியர்களை எச்சரித்தார். கென்யா, தான்சானியா மற்றும் உகாண்டா போன்ற பகுதிகளை ஒரே நிர்வாக அலகாக பிரிட்டிஷார் ஒன்றிணைத்ததை அவர் நல்வாய்ப்பாகப் பார்த்தார். ஆனால் இனம் மற்றும் பிராந்திய அடிப்படையில் பாகுபடுத்தும் பிரிட்டிஷ் கொள்கைக்கு அவர் பேரெதிரியாக இருந்தார். ஏழு நாட்கள் முழுமையான பட்டினிப் போராட்டத்தை நடத்தி, பிளவுவாதச் சட்டம் ஒன்றை அரசாங்கம் திரும்பிப் பெற்றுக்கொள்ளச் செய்தார்.
“கென்யாவின் தொழிலாளர் வர்க்கத்துக்காக அவர் நேர்மையாகப் பாடுபட்டார். ஒரு போராளியாக, ஒவ்வொரு அங்குலமும் போராளியாக அவரை நான் அறிவேன். கென்யாவின் மிக உயர்ந்த தேசியவாதியாகவும் தொழிற்சங்க சகாவாகவும் எங்களுடைய தேசிய விடுதலைப் போராளியாகவும் இருந்தார்” என்று கென்யாவின் விடுதலைப் போராளியும் மகான் சிங்கின் நெருங்கிய தோழருமான ஃப்ரெட் குபாய் கூறுகிறார்.
ஆனால்
துரதிர்ஷ்டவசமாக அவருடைய சொந்த மக்கள் அவரிடமிருந்து விலகியிருந்தனர், ஏனென்றால் அவர் ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பியத் தொழிலாளர்கள் அனைவருக்கும் அவர் சம ஊதியம் கோரிக்கொண்டிருந்தார். இந்திய விடுதலை, கிழக்கு ஆப்பிரிக்கத் தொழிலாளர்கள் ஒற்றுமை, இந்தியாவில் கல்விக் கொள்கைகளைத் திருத்துதல், பாபா குருமுக் சிங், தேஜா சிங் சுதந்தர் ஆகியோரின் விடுதலை உள்ளிட்ட அவரது தீர்மானங்களை அவர் முன்மொழிந்தார். குருத்வாராவில் அவற்றை முன்வைக்க சிரி குரு சிங் சபா மறுத்துவிட்டது.
1934 இல் சத்வந்த் கவுர் என்பவரை மகான் சிங் மணந்தார். அவருக்கு 1937 இல் பிறந்த தனது முதல் மகனுக்கு ஹிந்த்பால் சிங் என்றும் பின்னர் பிறந்த இரண்டாவது மகனுக்கு சுவராஜ்பால் சிங் என்றும் பெயரிட்டார். 1939 இல் வெற்றிகரமாக முடிந்த மொம்பாசா பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் அவர் செயலூக்கமிக்க பங்கினை வகித்தார். அடுத்த ஆண்டு அவர் தனது மைத்துனரின் திருமணத்துக்காக குடும்பத்துடன் இந்தியா வந்தார். 1940 களில் அவர் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினராக ஆனார். ஊதிய உயர்வு கோரி அகமதாபாத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 30,000 துணி ஆலைத் தொழிலாளர் மத்தியில் மே நாளில் முஸ்லிம் வேடத்தில் உரையாற்றினார். ஒரு வாரத்துக்குப் பிறகு அவர் கைதுசெய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்தியச் சிறையில் இருந்தபோது கார்ல் மார்க்சின் மூலதனம்
நூலை மொழிபெயர்த்தார் 1945
இல் அவர் கம்யூனிஸ்டு கட்சியின் பஞ்சாப் குழுவின் வார இதழான ஜங்
இ ஆசாதியின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தியாவில் சுதந்திரத்தை அனுபவிப்பதற்குப் பதிலாக 1947 ஆகஸ்டு 22 அன்று இந்தியாவை விட்டுக் கிளம்பினார்.
மகான்
சிங்கின் உண்மையான பிரச்சனைகள் அவர் கென்யா திரும்பிய பின் தொடங்கின. சுத் சிங் என்பவர் அவர் கென்யா திரும்பி வருவதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் முன்கூட்டியே பெற்றிருந்தார், இருப்பினும் அவர் கென்யா நுழையும் முன்பே, அவர் கவனக் குறைவாக அனுமதிக்கப்பட்டு விட்டதாகக் கூறி, பிரிட்டிஷ் அரசாங்கம் நாடு கடத்தல் உத்தரவைப் பிறப்பித்தது, பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்திய அரசாங்கமும் அவருக்கு ஆதரவளித்தனர். அதிர்ஷ்டவசமாக, அவரை நாடு கடத்துவதற்கு முன்பு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்துமாறு கென்யா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தொழில்நுட்பக் காரணங்களால் அந்த வழக்கு தோல்வியில் முடிந்தது. அரசாங்கம் மீண்டும் ஒருமுறை நாடு கடத்தல் உத்தரவைப் பிறப்பித்தது. 1947 க்கும் 1950 க்கும் இடையில் அப்படிப் பலமுறை கைதுசெய்யப்பட்டதும் விடுதலை செய்யப்பட்டதும் அவரை எஃகுறுதி கொள்ளச் செய்தன. அவரது புகழ் கென்யாவில் பெரிய அளவுக்குப் பரவியது. அந்த நாட்டின் சுதந்திரப் போராளிகளில் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்பட்டார்.
நைரோபி
மாநகர அந்தஸ்து பெற்றதை அடுத்து நிகழ்ந்த கொண்டாட்டங்களுக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். ஏனென்றால் அந்த நகரம் ‘ஏழைகளுக்கும்’ ‘பணக்காரர்களுக்கும்’ இடையில் தெளிவாகப் பிளவுபட்டிருந்தது, ஏழைகள் அந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்க முடியாது. 1950 மே 1 அன்று நைரோபி கலோலெனி அரங்கில் உரையாற்றினார். அந்த உரையில் “கிழக்கு ஆப்பிரிக்க ஆட்சிப் பகுதிகளின் முழு விடுதலையையும் இறையாண்மையையும்” கோரினார். முதன் முதலில் அந்தக் கோரிக்கையை கென்யாவில் அவர்தான் முன்வைத்தார். 1935 இலிருந்தே அவர் ஸ்வாஹிலி மற்றும் ஆங்கில அச்சு ஊடகங்களில் எழுதிவந்துள்ளார். அப்போதிருந்துதான் அரசாங்கம் அவரைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியிருந்தது. அவர் கைது செய்யப்பட்டு, முறையான விசாரணையின்றி தொடர்ந்து பதினொரு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கென்யா விடுதலை பெற்ற பிறகே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
கம்யூனிசத்தின்
ஆர்வமிக்க தொண்டராக மகான் சிங் இருந்தபோதும் வன்முறையற்ற கொள்கையில் முழுமையான நம்பிக்கை வைத்திருந்ததோடு அதைப் பின்பற்றவும் செய்தார். பிரிட்டிஷாரின் கரங்களில் பல்லாயிரக்கணக்கான கென்ய மக்களைப் பலிகொடுத்த சீற்றமிகு மாவ்--மாவ் இயக்கம் அவர் சிறையில் இருக்கும்போது நிகழ்ந்தது.
விடாப்பிடியான
போராளி
.கென்யாவில் அவருடைய தாயார் இறந்தபோது, பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை விடுதலை செய்ய ஆயத்தமாக இருந்தது, ஆனால் இறுதிச் சடங்குகள் முடிந்ததும் அவர் கென்யாவை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. ஆனால் தன்னைப் பெற்றெடுத்த அன்னையைக் காட்டிலும் தன்னைத் தத்தெடுத்துக்கொண்ட தாயகத்திற்கு அவர் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தார்.
பஞ்சாபிலிருந்து
வந்த தனது சொந்த மக்களின் விருப்பங்களுக்கு எதிராக அவர் ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்கத் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் கோரி விட்டுக்கொடுக்காமல் போராடினார். ஏழைகளின் நலனுக்காக எந்தச் சமரசமும் இல்லாமல் விடாப்பிடியாகக் களமாடினார். ‘இருபதாம் நூற்றண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் வசித்த மிக முக்கியமான ஆசியர்” என்று ஆங்கிலேய எழுத்தாளர் டானா சீடன்பெர்க் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். மகான் சிங் குறித்து, “அவர் எதற்காகவும் கொள்கைகளைச் சமரசம் செய்துகொள்ள மாட்டார்” என்று கென்யாவின் முதலாவது தேசியப் பேரவையின் துணை அவைத் தலைவர் டாக்டர் ,ஃபிட்ஸ் டி சௌஸா குறிப்பிட்டுள்ளார்.
அவர்
கம்யூனிஸ்டாக இருந்ததால் கென்யாவில் விடுதலைக்குப் பிறகு அவருடைய பாத்திரம் குறித்த முக்கியத்துவம் மறுக்கப்பட்டது. ஏழை ஆப்பிரிக்கர்களின் நில உரிமைகள் மேற்கத்திய அபகரிப்பாளர்களிடம் இருந்துவந்தன. அது கென்யாவின் இறையாண்மை குறித்த கட்டுக்கதையை அம்பலப்படுத்தியது. கென்யாவில் காலனிக்குப் பிந்தைய அடுத்தடுத்த நிகழ்வுகள் போலிச் சுதந்திரத்தை அம்பலப்படுத்தின. புதிய ஆட்சியின் கீழ் முன்னணி விடுதலைப் போராளிகள் பலரும் கொலை செய்யப்பட்டனர் அல்லது சிறை வைக்கப்பட்டனர். வேறு சிலர் நாடு கடத்தப்பட்டனர். அவர்களில்
பிண்டோ பியோ காமா, டாம் மூயா, ஜே.எம். கரியுகி, பிரான் லால் சேத், ஒனேகோ மற்றும் ஒடிங்கா ஆகியோர் அடங்குவர். ஊழல் எதிர்ப்பு பிடாட் கக்கியா அவரது நேர்மைக்காக அவமானப்படுத்தப்பட்டார், மிகவும் நேர்மையான மகான் சிங் புறக்கணிக்கப்பட்டார்.
இவ்வாறு
அவருடன் போராடியவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்ட பிறகு துரோகத் தொழிற்சங்க இயக்கமும் கென்யாவின் காலனிக்குப் பிந்தைய போலி ஜனநாயக ஆட்சியும் அவரை வரலாற்றிலிருந்து இருட்டடிப்புச் செய்தன. அவரின் இருத்தல் குறித்த எந்த அறிதலும் எந்த ஆதரவும் இல்லாத நிலையில் அவர் நொடித்துப் போனவராக நைரோபியின் புறநகர்ப் பகுதியில் ஒரு விவசாயியாக வாழ்ந்து வந்தார். 1973 மே 18 அன்று மாரடைப்பு காரணமாக மகான் சிங் இறந்துபோனார்.
__________________________________________________
மகான்
சிங் வரலாறு பிரிட்டிஷ் மற்றும் இந்திய ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்டுவிட்டாலும் அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் மனதில் நிறைந்திருந்தார் என்பதற்கு மக்கள் அவருக்களித்த பட்டப் பெயர்கள் இன்னும் நிலைத்திருக்கின்றன.
- குஜராத்தில் அகமதாபாத்தில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் ஐந்து ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த போது, காந்தியும் நேருவும் அவரை எதிர்த்தபோதும், அவர் மக்களால் குஜ்ராத்னா பிதா என்று அழைக்கப்பட்டார்.
- கென்யாவில்
நைரோபியில் தொழிலாளர்களுக்காகவும் ஏழை மக்களுக்காகவும் கென்யாவின் விடுதலைக்காகவும் போராடியதால் கென்யா மக்களால் அவர் நைரோபி மகாராஜா என்று அழைக்கப்பட்டார்.
- பஞ்சாபைச்
சேர்ந்தவர் என்பதால் அவர் பஞ்சாபிவாலா என்றும்
மக்களால் அழைக்கப்பட்டார்.
- விடுதலை
பெற்ற கென்யாவில், கென்யா
பாராளுமன்றம் அவரது
பெயரை முதலாவது குடியரசுத் தலைவராகப் பரிந்துரைத்த போது இந்திய அரசாங்கமும் பிரிட்டிஷ் அரசாங்கமும் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்து அவரை இருட்டடிப்புச் செய்தன.
- குலைந்த அமைதி: மகான் சிங்கின் வாழ்வும் காலமும் நைரோபி அவாஸ்
என்ற நூல் 2006
இல்
ஜரினா படேல் என்பவரால் எழுதி வெளியிடப்பட்டது.
- நைரோபி பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவரும் கென்யாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு லண்டனில் வசித்துவருபவருமான ஷிராஜ் துர்ரானி மகான் சிங்கின் வரலாற்றை அகழ்ந்தெடுத்து, மகான் சிங்: கென்யாவின் புரட்சிகரத் தொழிற்சங்கவாதி என்ற நூலை 2017 இல் பதிப்பித்துள்ளார்.
_____________________
தொகுப்பும்
தமிழாக்கமும்: நிழல்வண்ணன்
ஆதாரங்கள்:
countercurrents.org, Wikipedia, Sikh Net, Shikiwiki



Comments
Post a Comment