Skip to main content

நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக் குண்டுகள் வீச்சும் முதலாளியக் கட்சிகளின் திசை திருப்புதலும்!

 

டிசம்பர் 13 ந் தேதி நாடாளுமன்றத்தில் இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து திடீரெனக் குதித்து வண்ணப் புகைக் குண்டுகளை வீசி நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தனர். ஒட்டு மொத்த நட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தனர். இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பாராளுமன்றத்தின் மீது நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலால் ஒன்பது பேர் உயிரிழந்ததை நினைவு கூர்ந்து, “நாட்டின்  ஒற்றுமையையும் இறையாண்மையையும்” காக்க உறுதிமொழி எடுத்துக்கொண்ட பிறகு, “தேசப் பற்றுள்ள” நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் “மக்களின் நலன்களுக்கான” முக்கியமான விவாதங்களில் ஈடுபட்டிருந்தபோது  இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. “ஜனநாயகக் கோயிலின்” மீது நடந்த இந்த அத்து மீறிய தாக்குதலைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத “வீரம் செறிந்த” நமது உறுப்பினர்கள் அந்த இளைஞர்களைச் சுற்றி வளைத்துத் தாக்கிக் காவலர்களிடம் ஒப்படைத்துத் தங்களுடைய ஜனநாயகக் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினர். 

நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக் குண்டுகளை வீசிய இந்த இளைஞர்கள் யார்? தீவிரவாதிகளா? இல்லை பயங்கரவாதிகளா? 

அந்த இளைஞர்களில் ஒருவர் 34 வயது கொண்ட மனோரஞ்சன், கணினிப் பொறியியலில் பட்டம் பெற்றவர். மைசூரைச் சேர்ந்தவர். படித்து விட்டு வேலை கிடைக்காமல் அவருடைய தந்தையின் ஆட்டுப் பண்ணையில் தந்தைக்கு உதவி செய்து கொண்டிருந்தார். இன்னொருவர் 24 வயது  இளைஞர் சாகர் சர்மா; உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில்           e-ரிக்சாவை வாடகைக்கு ஓட்டிக் கொண்டிருந்தவர். 

இவர்கள் நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக் குண்டுகளை வீசிய அதே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே 35 வயது நிரம்பிய நீலம் வர்மா என்ற பெண்ணும், 24 வயதுடைய அமோல் ஷிண்டே என்ற இளைஞரும் “சர்வாதிகாரத்தைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம்”, “பாரத் மாதா கி ஜெய்”, “ஜெய் பீம்”, “ஜெய் பாரத்” என்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டே வண்ணப் புகைக் குண்டுகளை வீசினார்கள். அதைப் படமெடுத்து சமூக வலை தளத்தில் லலித் ஜா என்பவர் பதிவேற்றம் செய்துள்ளார். 

நீலம் வர்மா அரியானாவைச் சேர்ந்தவர். சமஸ்கிருதத்தில் M.Phil. பட்டம் பெற்றவர். அரியானாவின் ஆசிரியர் தகுதித் தேர்தலில் வெற்றி பெற்றவர். வேலை தேடிக் கொண்டிருப்பவர். சமூக உணர்வு கொண்டவர். டெல்லியில் நடந்த வரலாற்றில் இடம் பெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பங்கு கொண்டவர். மல்யுத்த வீராங்கனைகள் மீது நடந்த பாலியல் தாக்குதலைக் கண்டித்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கு கொண்டவர். 

அமோல் ஷிண்டே மராட்டிய மாநிலத்தில் ஒரு தலித் விவசாயத் தொழிலாளியின் மகன். இரானுவத்தில் சேர விரும்பிய அவர், வயது வரம்பு கடந்து விட்டதால், போலீசில் சேர, அதற்கான தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். 

லலித் ஜா பீகாரைச் சேர்ந்தவர். பட்டதாரியான அவர் வேலை கிடைக்காததால் கல்கத்தா சென்று மாணவர்களுக்கு டியூசன் எடுப்பதன் மூலம் தன் வாழ்வை நடத்திக் கொண்டிருந்தவர். 

இவர்கள் முகநூலில் “பகத் சிங்” என்ற பக்கத்தின்  மூலம் ஒன்றிணைந்தவர்கள்; பகத் சிங்கின் புரட்சிகரமான கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்கள்; தொழிலாளர் மற்றும் கீழ் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் இடையில் உள்ள பொதுவான அம்சம் வேலை இல்லாத இளைஞர்கள் என்பதுதான், அல்லது தான் படித்த கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்காதவர்கள் என்பதுதான். 

வேலை இன்மை என்பது இன்று நாட்டில் கொழுந்து விட்டு எரியும் பிரச்சினையாக உள்ளது. 25 வயதுக்கும் குறைவான பட்டதாரி இளைஞர்களில் 42 விழுக்காட்டினர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் என்று 2023ல் அசிம் பிரேம்ஜி பல்கலைகழகம் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் 23.22 விழுக்காடு வேலை இல்லாத் திண்டாட்டம் நிலவுகிறது என்றும், இது அண்டை நாடுகளான பாகிஸ்தான்(11.3%), வங்காளதேசம்(12.9%), பூட்டான் (14.4%) ஆகியவற்றில் இருப்பதை விட அதிகம் என்றும் 2022ல் வெளியான உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.  ஆனால் இங்கு உள்ள ஆட்சியாளர்களோ “பொருளாதாரத்தில் இந்தியா உலகில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது,” “இந்தியாவின் பெருமை உலக அளவில் இமயமலை அளவுக்கு உயர்ந்துள்ளது” என்று வாய்ப்பந்தல் போட்டு வருகின்றனர். ஆனால் எதார்த்தமோ இவர்களுடைய கோயபல்ஸ் புளுகுகளைத் தோலுரித்துக் காண்பிக்கிறது. விலைவாசி ஏற்றமும் வேலையில்லாத் திண்டாட்டமும் மக்களின் வாழ்வை அதலபாதாளத்தில் வீழ்த்திக் கொண்டிருக்கின்றன. 

இந்த நிலையில்தான், மக்களுடைய வாழ்வை அரித்து வரும்  பிரச்சனைகளை இந்த நாட்டின் உயர்ந்த அதிகார பீடத்தில் அமர்ந்துள்ளவர்களின் கேளாச் செவிகளுக்கு எட்ட வைப்பதற்காக நாடாளுமன்றத்தில் இந்த இளைஞர்கள் வண்ணப் புகைக் குண்டுகளை வீசி உள்ளனர். அமைதியான முறையில் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

இங்கு, பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்திய நாடாளுமன்றத்தில் 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் நாள் பகத் சிங்கும் அவருடைய தோழர் பதுகேஸ்வர் தத்தும் வெடி குண்டு வீசிய நிகழ்வை நாம் நினைவுகூர்வது பொருத்தமாயிருக்கும். அன்று ‘பொதுமக்கள் பாதுகாப்பு மசோதாவை’ (Public Safety Bill)   காலனிய அரசு நிறைவேற்ற இருந்தது. அந்தச் சட்டத்தின் நோக்கம் கம்யூனிஸ்டுகளையும்  சோசலிஸ்டுகளையும் ஒடுக்குவதுதான். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பகத் சிங்கும் அவருடைய தோழரும் நாடாளுமன்றத்தில் வெடிகுண்டுகளை வீசினர். அவர்களுடைய நோக்கம் யாரையும் கொல்வதல்ல. “கேளாச் செவிகளுக்கு எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதுதான் எமது நோக்கம்” என அவர்கள் அறிவித்தனர். அந்தச் சமயத்தில் உறுப்பினர்கள் யாரும், பகத் சிங்கையும் அவருடைய தோழரையும் தாக்கவில்லை. அமைதியாகவே காவலர்களிடம் ஒப்படைத்தனர். 

ஆனால் இப்போதைய நிகழ்வில் நாடாளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்கள், சட்டத்தையும் மக்களின் உரிமைகளையும் சிறிதும் மதிக்காமல் மக்களைத் தாக்கும் இந்த நாட்டுப் போலீசைப் போலவே,  வண்ணப் புகைக் குண்டுகளை வீசிய அந்த இளைஞர்களைத் தாக்கியுள்ளனர். “நாங்கள் உங்கள் மீது தாக்குதல் நடத்த வரவில்லை,  எங்களுடைய எதிர்ப்பைக் காட்டவே வந்தோம்” என்று அந்த இளைஞர்கள் கூறிய நிலையிலும் அந்த இளைஞர்களை அவர்கள் தொடர்ந்து தாக்கியுள்ளனர்; தங்களுடைய “ஜனநாயக மாண்பை” நிலைநாட்டியுள்ளனர். 

இந்த இளைஞர்கள் தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ இல்லை. இந்த நாட்டில் கொழுந்து விட்டு எரியும் பிரச்சினைகளான வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம் ஆகியவை பற்றிச் சிறிதும் அக்கறை எடுத்துக் கொள்ளாத ஆட்சியாளர்கள் மீதான எதிர்ப்பைக் கட்டவே, அதிகாரத்தின் உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ளவர்களின் கேளாச் செவிகளுக்கு உரத்துச் சொல்வதற்காகவே, இந்த வழிமுறையை அந்த இளைஞர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் மோடியின் அரசோ அவர்களைப் பயங்கரவாதிகளை ஒடுக்கும் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்டத்தின் [Unlawful Activities (Prevention) Act, 1967 (UAPA)] கீழ்,  ‘அத்துமீறல், கலவரத்தில் ஈடுபடுதல், சதி வேலை, பொது ஊழியர்கள் பணி செய்வதைத் தடுத்தல், சாட்சியங்களை அழித்தல்’ போன்ற குற்றங்களை இழைத்ததாகக் கூறிக் கைது செய்துள்ளது. 

மோடி அரசின் இந்தச் செயலை எதிர்க் கட்சிகள் அனைத்தும் எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கியிருக்க வேண்டும். இளைஞர்களுக்கு ஆதரவாக எதிர்க் கட்சிகள் நின்றிருக்க வேண்டும். ஏனென்றால் இந்த எதிர்க் கட்சிகள்தான் இதுநாள் வரையிலும் ‘மோடியின் ஆட்சியில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டது, விலைவாசி அதிகரித்து வருகிறது, மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருந்தபோதும் மோடி அது பற்றி வாய் திறக்கவில்லை’ என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன. இந்த இளைஞர்களும் இந்தக் கட்சிகள் பேசியதைத்தான் பேசியுள்ளனர். வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், மணிப்பூரில் பெண்கள் மீதான தாக்குதல், இந்த ஆட்சியின் சர்வாதிகாரத்தன்மை ஆகியவை பற்றித்தான் பேசியுள்ளனர். எனவே இயல்பாகவே இந்தக் கட்சிகள் இந்த இளைஞர்களுக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும். அதன் மூலம் பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கை அம்பலப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக இந்தக் கட்சிகளோ ‘நாடாளுமன்றத்திற்குப் பாதுகாப்பில்லை.  அது பற்றி உள்நாட்டு அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்க வேண்டும்; அது பற்றி விவாதம் நடத்த வேண்டும்’ எனக் கூறி நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். பிரச்சினையைத் திசை திருப்பி வருகின்றனர். மோடியின் தலைமையில் உள்ள அரசு, வரலாறு காணாத வகையில், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 141 உறுப்பினர்களை ரகளையில் ஈடுபட்டதாகக் கூறி நாடாளுமன்றக் கூட்டத்திலிருந்து இடை நீக்கம் செய்து “ஜனநாயகத்தைக்” காப்பாற்றியுள்ளது. 

நாட்டு மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், இந்தப் பிரச்சனைகளை தீர்க்க முடியாத ஆட்சியின் செயலற்ற தன்மை ஆகியவை பற்றி மக்களின் கவனத்திற்கும், விவாதத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்த இளைஞர்களின் நோக்கம். ஆனால் அரசின் கைது நடவடிக்கையும், எதிர்க் கட்சிகளின் திசை திருப்பலும், முதலாளித்துவ ஊடகங்களும் இளைஞர்கள் மக்கள் மன்றத்திற்கு முன் கொண்டு வந்த பிரச்சினைகளை அமுக்கி விடப் பார்க்கின்றன; அந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவிடாமல் மறைக்க முயல்கின்றன. 

முதலாளியக் கட்சிகள், அவை ஆளும் கட்சியாக இருந்தாலும் அல்லது எதிர்க் கட்சிகளாக இருந்தாலும், போராட்டங்களை மக்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதை விரும்புவதில்லை; அவை  மக்கள் அவர்களுடைய பிரச்சினைகளைத் தம்மிடம் விட்டு விட்டு, எப்பொழுதும் தங்களைச் சார்ந்தவர்களாக, செயலற்ற பார்வையாளர்களாக மட்டும் இருக்க வேண்டும் என்றும், மக்கள் வெறுமனே தங்களுக்கு வாக்களிப்பவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் நினைக்கின்றன. தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான போராட்டங்களை மக்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டால் தமக்கு ஆபத்து என இந்தக் கட்சிகள் கருதுகின்றன. இப்பொழுது நிலவி வரும் ஆட்சிமுறைக்கு ஆபத்து எனக் கருதுகின்றன. அதனால்தான் இளைஞர்களின் போராட்டத்தின் நியாயத்தைப் பற்றிப் பேசாமல் பிரச்சினையைத் திசை திருப்புகின்றன இந்தக் கட்சிகள். இந்த விடயத்தில் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. 

ஆனால் மக்களோ இவர்கள் மீது நம்பிக்கை இழந்தவர்களாக உள்ளனர். நாடாளுமன்றம் வெறும் அரட்டை மடமாக உள்ளதையும், அங்கு நிறைவேற்றப்படும் சட்டங்கள் தங்கள் வாழ்வை வளப்படுத்துவதற்குப் பதிலாக, முதலாளிகளின் சுரண்டலுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவும், மக்களை அடக்கி ஒடுக்குவதுமாகவும் இருந்து வருவதை மக்கள் தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து வருகின்றனர். இந்த உணர்வின், கோபத்தின் வெளிப்பாடாகவே இந்த இளைஞர்களின் செயல்பாடும் அமைந்துள்ளது. ஆளும் வர்க்கத்தின் ஏஜண்டுகளான முதலாளியக் கட்சிகளும் முதலாளிய ஊடகங்களும் இந்த இளைஞர்களின் செயலுக்கு அடிப்படையாக அமைந்துள்ள மக்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்காமல் மூடி மறைக்கப் பார்க்கின்றன. இளைஞர்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகளைப் பற்றிய விவாதம் மக்களிடையே பரவி விடக் கூடாது என்றும், அது மக்களின் போராட்டமாக வெடித்து விடக் கூடாது என்றும் அஞ்சுகின்றன. ஆனால் அவர்களுடைய எண்ணம் நிறைவேறப் போவதில்லை. காகிதப் பொட்டலத்தில் நெருப்பை மறைத்து வைக்க முடியாது! 

                                                                                                - புவிமைந்தன்


Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...