வங்கதேசத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அதன்படி 2023 ல் குறைந்தபட்ச ஊதிய உயர்விற்கான பேச்சு வார்த்தை அரசு, ஆயத்த ஆடை முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர்களுக்கு இடையே நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மாத ஊதியமாகத் தற்போது பெற்றுவரும் 72 டாலருக்குப் பதிலாக (அதாவது வங்கதேச ரூபாய் மதிப்பிலான 8300 டாக்காவிலிருந்து) 203 டாலராக (அதாவது 23000 டாக்காவாக) உயர்த்தித் தரவேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர். இதை நிராகரித்த தொழிற்துறை முதலாளிகள் குறைந்தபட்ச ஊதியமாக 113 டாலர் (அதாவது 12500 டாக்காவாக) மட்டுமே உயர்த்தித் தரமுடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
முதலாளிகளின் தர முன்வந்த குறந்தபட்ச ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து தலைநகரான டாக்கா மற்றும் தொழில்துறை மாவட்டமான காசிப்பூரில் அரசு மற்றும் ஆயத்த ஆடை முதலாளிகளுக்கு எதிராக வீரியமிக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். போலிசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோவிட் முடக்கத்திற்குப் பிறகு விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை ஆகியவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்தப் போதுமானதாக இல்லை என்று தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
பணவீக்கமும் விலைவாசி ஏற்றமும்
வங்கதேசத் தொழிலாளர் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் பணவீக்கம் 7.23% இருந்து 9.37% உயர்ந்துள்ளதாகவும், மேலும் உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் ரசிய-உக்ரைன் போர் போன்ற சர்வதேசக் காரணங்களால் வங்கதேச நாணயத்தின் மதிப்பு 30% அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளதாகவும், இதனால் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு பாதியாகக் குறைந்துள்ளதால் நாட்டின் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்து இருப்பதால் தொழிலாளர்களின் குறந்தபட்ச ஊதியத்தை 302 டாலராக (அதாவது 33,0368 டாக்காவாக) உயர்த்துமாறு அரசுக்குப் பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயத்த ஆடை உற்பத்தியில் வங்கதேசம்
வங்கதேசம் ஆயத்த ஆடை உற்பத்தியில் உலகளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. சுமார் 4000 சிறு, குறு நிறுவனங்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அதிலும் குறிப்பாக கிராமபுற ஏழைப் பெண்கள் அதிகளவில் இத்துறையில் பணியாற்றுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தின் 2022 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 85% அதாவது 55 பில்லியன் டாலர்கள் இத்துறையில் இருந்து மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. இது உலக உற்பத்தியில் சுமார் 8 சதவீதமாகும். மேலும் இங்கிருந்துதான் 57% அளவிற்கு ஐரோப்பாவிற்கும், 23% அளவிற்கு அமெரிக்கவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களான Levi, H&M, NIKI, GAP, ESPIRIT போன்றவை ஒப்பந்த அடிப்படையில் நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுகின்றன.
ஆபத்தான பணிச்சூழல்
பொதுவாகவே வங்காளதேசத் தொழிலாளர்களின் பணிச்சூழல் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாக ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் மிகவும் மோசமான பணிச் சூழலில் பணிபுரிகின்றனர். 2005-2014 வரை நடைபெற்ற கட்டிட இடிபாடுகள் மற்றும் தடுத்து இருக்கக் கூடிய தீ விபத்துகள் ஆகியவற்றில் மட்டும் சுமார் 1500 தொழிலாளர்கள் பலியானதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2012ல் நடைபெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் சுமார் 112 தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். 2013 ஏப்ரலில் டாக்கவில் உள்ள ராணா பிளாசா கட்டிடம் இடிந்து விழுந்தது. அதில் நான்கு நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது அவற்றில் பணிபுரிந்து கொண்டிருந்த சுமார் 1129 தொழிலாளர்கள் இடிபாடுகளில் கொல்லப்பட்டனர் சுமார் 2500 பேர் படுகாயம் அடைத்தனர்.
தற்போது நடைபெற்று வரும் தொழிலாளர்களின் போராட்டத்தை வெறும் ஊதிய உயர்வுக்கான போராட்டமாக மட்டும் பார்க்க முடியாது. வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் எதிர் கொண்டிருக்கும் கடுமையான சுரண்டல் மற்றும் ஆபத்தான வேலை நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இதைக் காண வேண்டும்.
உலகமயமாக்கலும் அதன் நெருக்கடியும்
உலகமயமாக்கலுக்கு பிறகு முதலாளிய நாடுகள் தங்களின் மூலதனத்தை உலகில் உள்ள எந்த நாட்டுக்கும் கொண்டு செல்ல எளிதாக இருப்பதால், அவை எங்கு மலிவான உழைப்புச் சக்தி கிடைக்கிறதோ அங்கு சென்று உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவது அதிகமாகியுள்ளது. முதலாளிய நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் வங்கதேசம் போன்ற வளர்ச்சி குறைவான பின்தங்கிய நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தியில் ஈடுபடுவதன் மூலம் தொழிலாளர்களின் பணிநிலைமை, வேலை நேரம், பாதுகாப்பு, ஊதியம், சுகாதார நிலைமைகளைச் சரிபார்த்தல் போன்ற தங்களுடைய பொறுப்புகளிலிருத்து தப்பித்துக் கொள்கின்றன. அதன் மூலம் அவற்றிற்கான செலவினத்தைக் குறைத்து, உபரி உழைப்போடு இதனையும் தனதாக்கி இலாபத்தை பன்மடங்காக்கி கொள்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களின் நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக, "உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல்" என்ற முழக்கத்தை முன்வைத்து உலகம் முழுவதும் உள்ள வளர்ச்சி அடையாத பின்தங்கிய நாடுகளுக்குத் தம்முடைய மூலதனத்தை ஏற்றுமதி செய்து அந்த நாடுகளில் உள்ள இயற்கை வளங்களையும் தொழிலாளர்களின் உபரி உழைப்பையும் கடுமையாகச் சுரண்டி தங்கள் மூலதனத்தைப் பெருக்குவதில் ஈடுபட்டுள்ளன.
ஆனால் இன்று உலகு தழுவிய அளவில் முதலாளியத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி வங்காளதேசம் போன்ற வளர்ச்சி குன்றிய நாடுகளிலும் பிரதிபலிக்கின்றன. அங்குள்ள தொழிலாளர்களும் போராட்டத்தை நோக்கித் தள்ளப்படுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள பின்தங்கிய நாடுகளில் தொழிலாளர் பிரச்சனைகள் எழுந்து தீர்க்க முடியாத இடத்தை நோக்கி நகர்வதை இன்று நடைபெற்று வரும் தொழிலாளர் போராட்டங்கள் நமக்குக் காட்டுகின்றன. மூலதனத்திற்குச் சாவு மணி அடிக்கும் வரை உலகுதழுவிய அளவில் தொழிலாளர்களின் போராட்டங்களும் தொடரும்.
- சதீசு
Comments
Post a Comment