"பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்" என்ற தலைப்பிலான கட்டுரையைச் செந்தழல் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். பாசிசம் என்பது முதலாளித்துவ நெருக்கடியின் விளைவு என்றும் முதலாளித்துவத்தை வீழ்த்திப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான அதிகாரத்தை நிலை நாட்டாமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது என்றும் அதில் தெளிவுபடுத்தியிருந்தோம். அதற்கு தோழர் தியாகு அவர்கள் தாழி எண் 453 இல் ‘பிற்போக்கும் பாசிசமும் ஒன்றா?’ என்ற தலைப்பில் தமது மறுப்பை எழுதியிருந்தார்.
அவருடைய மறுப்பை இதன் இறுதியில் பின்னிணைப்பாக கொடுத்துள்ளோம். அதில் அவர் பருண்மையான (உருநிலை) பிரச்சனைகளுக்கு பருண்மையான தீர்வுகள் தான் தனது அணுகுமுறை என்றும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் தான் பருண்மையான (உருநிலை) சிக்கலாக உள்ளது என்றும் குறிப்பிடுகிறார்.
தியாகு அவர்களுக்கு இந்திய முதலாளி வர்க்கத்திற்கும் இந்தியப் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையேயான முரண்பாடும், போராட்டமும் பருண்மையான சிக்கலாகத் தெரியவில்லை போலுள்ளது. வர்க்க அடிப்படையில் சமுதாயத்தைப் பகுத்தாய்வதையே
அவர் வர்க்கக் குறுக்கல்வாதம் என முத்திரை குத்தி அவருடைய வர்க்கப் பார்வையற்ற சீர்த்திருத்தவாதப் போக்கிற்கு நியாயம் கற்பிக்க முயல்கிறார்.
அவர் பருண்மையான பிரச்சனை எனக் குறிப்பிடும் தேர்தல் சிக்கலில் கூட தெளிவாக அணுகியுள்ளாரா என்றால், அதுவும் இல்லை. பாசக கூட்டணியைத் தோற்கடிக்க வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறும் அவர் மக்கள் தமது வாக்குரிமையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு வழி காட்ட வேண்டும். ஆனால் நாம் அதற்கு வழி காட்டவில்லை எனக் கூறுகிறார். சரி, அவரோ அல்லது அவர் இணைந்திருக்கும் ‘தமிழ்நாடு பொதுமேடை’ அமைப்போ என்ன வழிகாட்டுகிறது எனப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
எதன் அதிகாரத்தை வீழ்த்த வேண்டும் எதன் அதிகாரத்தை நிறுவ வேண்டும் என்ற தெளிவை நாம் கொண்டுள்ளோம். இந்திய முதலாளி வர்க்கத்திடம் உள்ள அரசியலதிகாரம் வீழ்த்தப்பட்டு பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான அதிகாரம் படைக்கப்பட வேண்டும் என நாம் தெளிவாக முன்வைக்கிறோம்.
ஆனால், பாஜகவை வீழ்த்திவிட்டால் பாசிசத்தை வீழ்த்தி விடலாம் எனக் கனவு காணும் இவர்கள், பாஜகவிற்கு மாற்றாக யாருக்கு ஓட்டளிப்பது என்பதை வெளிப்படையாகப் பேச மறுக்கிறார்கள். அப்படிச் செய்வது அவர்களைக் குற்றவுணர்வு கொள்ள வைக்கிறது போலும். அவர்களால் மறைமுகமாக முன்னிறுத்தப்படும் கட்சிகளும், இத்தனையாண்டு காலமாகத் தொழிலாளி வர்க்கத்தையும், விவசாயத் தொழிலாளர்களையும், ஏழை, வறிய விவசாயிகளையும் அடக்கி ஒடுக்கி ஆண்டு வந்தவர்கள் அல்லது அவர்களோடு கைகோர்த்து நின்றவர்கள் என்பது சாதாரண பாமரனுக்குக் கூடப் புரியும், எனவேதான், இவர்கள் யார் வேண்டாம் எனச் சொல்கிறார்களே தவிர, யார் வேண்டும் எனச் சொல்லத் துணியவில்லை. இந்த நிலையில் பருண்மையான தீர்வைக் கொடுத்து விட்டதாகத் தோழர் தியாகு கூறுகிறார்.
அடுத்ததாக, பாசகவிற்கு எதிராகக் குடியாட்சியத்தின் (ஜனநாயகத்தின்) பக்கம் நிற்பதன் மூலம்தான் இடதுசாரி ஆற்றல்கள் அரசியலில் வலுப்பெறவும் வலுக்கூடவும் வாய்ப்புண்டு என்கிறார். அந்தக் குடியாட்சி ஆற்றல்கள் எவை என்பதை ஏன் நேரடியாகச் சொல்ல மறுக்கிறீர்கள். அப்படிச் சொல்ல உங்களை நாணம் கொள்ள வைப்பது எது? குடியாட்சி ஆற்றல்கள் என இவர் கருதும் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது எத்தகைய முரணற்ற ஜனநாயகத்தை (குடியாட்சியத்தை) உழைக்கும் மக்களுக்கு உறுதிப்படுத்தின என்பதை தியாகு விளக்கினால் நன்றாக இருக்கும். அப்படி முரணற்ற ஜனநாயகம் நிலவிய காலகட்டத்தில் இடதுசாரி ஆற்றல்கள் ஏன் தங்களை வலுப்படுத்திக் கொள்ள முடியவில்லை?
முதலாளிய ஜனநாயகம் என்பதே முதலாளிய வர்க்கத்தின் சர்வாதிகாரம்தான். வரலாற்றுரீதியாக நிலப்பிரபுத்துவத்தை விட முன்னேறிய ஜனநாயகத்தை முதலாளிய ஜனநாயகம் வழங்கினாலும் கூட அது தொழிலாளர்களையும் பிற உழைக்கும் மக்களையும் பொருத்து சர்வாதிகாரம்தான்; வெட்டிக் குறுக்கப்பட்ட ஜனநாயகம்தான்; முழுமையான, முரணற்ற ஜனநாயகமல்ல. உற்பத்திச் சாதனங்கள் அனைத்தையும் அரசியல் அதிகாரத்தையும் தன்னிடம் வைத்துள்ள முதலாளிய வர்க்கம் முழுமையான, முரணற்ற ஜனநாயகத்தை உழைக்கும் மக்களுக்கு வழங்கும் எனக் கூறுவது மார்க்சியப் பார்வையல்ல.
“சோசலிசத்தை மிகவும் அருகில் கொண்டு வருவதற்கு முழுமையான அரசியல் விடுதலையை விட, ஜனநாயகக் குடியரசை விட, வேறு எந்த சாதனமும் தற்போது இல்லை என்பதையும், இருக்க முடியாது என்பதையும் நாம் மறக்கக் கூடாது” என லெனின் தனது ‘சமூக ஜனநாயகத்தின் இரு போர்த் தந்திரங்கள்’ என்ற நூலில் எழுதினார். ஆனால் அவர் அதில் குறிப்பிடுவது தியாகு கூறும் முதலாளிய வர்க்கத்தின் தலைமையில் அமைந்துள்ள முதலாளிய ஜனநாயகத்தைப் பற்றியல்ல. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் தலைமையில் அமைந்துள்ள அரசின் கீழ் நிலவும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையே லெனின் குறிப்பிடுகிறார். அத்தகைய அரசே முழுமையான ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும் என்று கூறுகிறார். ஆனால் தியாகுவோ பாசிச பாஜகவை வீழ்த்தி விட்டு ஆட்சியில் அமரும் முதலாளியக் கட்சிகளின் தலைமையில், முதலாளிய வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின் கீழ் முழுமையான ஜனநாயகம் கிடைக்கும், அதைப் பயன்படுத்திக் கொண்டு இடதுசாரி ஆற்றல்கள் வலுப் பெற முடியும் என்கிறார்.
முதலாளிய வளர்ச்சிக் கட்டங்கள் குறித்து எந்தவிதமான பருண்மையான (உருநிலை) பகுத்தாய்வும் இல்லாமல் பாசிசத்தின் வளர்ச்சியையும் பாஜக ஆட்சியையும், அது தொடர்வதால் வரும் கேட்டையும் நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாது என்கிறார். ஆனால், அவர் பருண்மையாகப் பகுத்தாய்ந்து எப்படி இந்த முடிவை வந்தடைந்தார் என்பதைச் சொல்லவில்லை. நாம் முதலாளிய வளர்ச்சிக் கட்டங்கள் குறித்தும், அது சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்தும், அந்த நெருக்கடிகளிலிருந்து மீள முதலாளித்துவம் எவ்வாறு பாசிசத்தைக் கைக்கொள்கிறது என்பதையும் பல்வேறு கட்டுரைகளிலும், சிறு பிரசுரங்களிலும் தொடர்ந்து எழுதியும் தொழிலாளர்களிடையே பரப்புரை செய்தும் வருகின்றோம். சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் சார்பில் தற்பொழுது சிறுபிரசுரம் ஒன்றை பரப்புரைக்காகக் கொண்டு வந்துள்ளோம், அதனையும் தோழர் தியாகுவுக்கு அனுப்பி வைக்கின்றோம்.
பாஜகவின் பாசிசத் தன்மைக்குக் காரணமாக இருப்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் நெருக்கடிதான் என்றும் மதவாதம் அதன் வெளிப்பாடுதான் என்றும் சொல்வது கொச்சைப் பொருள்முதல்வாதம் சார்ந்த வகுப்புக் குறுக்கியம் என்கிறார். ஆனால், அதனை தியாகு அவர்களால் விளக்க இயலவில்லை. “இந்து-இந்தி-இந்தியா என்ற ஆர்எஸ்எஸ் கொள்கை தான் இந்துத்துவம்! இதற்குச் செயல்வடிவம் தரும் அரசியல் கட்சியே பாசக!” என்கிறார் தியாகு. இந்தக் கொள்கையின் நோக்கம் என்ன? அதற்குப் பொருளாதார அடிப்படை எதுவுமில்லாமல் அந்தக் கொள்கை அந்தரத்தில் தொங்குகிறதா? இந்து- இந்தி- இந்தியா என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியப் பெருமுதலாளிகளின் நலன்கள் இல்லையா? ஒரே நாடு, ஒரே சந்தை, தங்கு தடையற்ற நிர்வாகம், தங்கு தடையற்ற சுரண்டல் ஆகிய நலன்கள் இல்லையா? இந்துத்துவக் கொள்கைக்கும் அவற்றின் அடிப்படையாக உள்ள பொருளாதார நலன்களுக்கும் இடையில் உள்ள தொடர்பைப் பார்க்காமல், வெறுமனே போகிற போக்கில் இது வர்க்கக் குறுக்கல்வாதம் எனக் கூறிச் செல்கிறார்.
பொதுவாகவே, சோசலிசத்தை எல்லோரும் சொல்லளவில் ஏற்றுக் கொள்வார்கள். ஏன், இந்திய முதலாளிய வர்க்கம் கூடத் தனது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இந்தியாவை ‘சோசலிச நாடு’ எனக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்திய முதலாளிய வர்க்கம் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்ப்பதை விட ஏமாளித்தனம் எதுவும் இருக்க முடியாது. அதே போலத்தான் குட்டிமுதலாளிய வர்க்கத்திற்கு சோசலிசம் பிடித்திருக்கிறது; ஆனால் பாட்டாளி வர்க்கம், வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கத் தலைமை போன்ற வார்த்தைகள் அதற்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன; அவை பற்றிப் பேசினால் வறட்டுவாதமாகவும், வர்க்கக் குறுக்கல்வாதமாகவும் தோன்றுகின்றன.
1922
இல் முசோலினி தலைமையிலான பாசிசக் குடியரசுக் கட்சி ஆட்சியமைத்த பிறகு பாசிசத்தின் போக்கு குறித்து எச்சரித்தும், அதற்கு எதிரான தொழிலாளர் வர்க்க ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டிய அவசியம் குறித்தும் கிளாரா ஜெட்கினால் முன்மொழியப்பட்டு கம்யூனிச அகிலத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தில், "பாசிசம் என்பது தகர்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவப் பொருளாதாரம் மற்றும் சிதைந்து வரும் முதலாளித்துவ அரசின் வெளிப்பாடாகும்" எனக் கூறுகிறார். (பாசிசத்தின் மீதான தீர்மானம், கிளாரா ஜெட்கின்)
மேலும், "பாட்டாளி வர்க்கத்திடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முதலாளித்துவ வர்க்கத்திற்கு உறுதியான, ஆற்றல் மிக்க சக்தி தேவைப்படுகிறது. முதலாளித்துவ அரசின் பழைய மற்றும் வெளித்தோற்றத்தில் ’அரசியல் சார்பற்றதாக’ உள்ள அடக்குமுறைக் கருவி போதுமான பாதுகாப்பை இனியும் வழங்க முடியாது. முதலாளித்துவம் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்திற்குச் சிறப்புக் குழுக்களை உருவாக்கத் தயாரகிறது. பாசிசம் அத்தகைய துருப்புகளை அளிக்கின்றது.”
எனவும் கூறுகிறார் (பாசிசத்தின் மீதான தீர்மானம்)
பாஜக எவ்வகையில் காங்கிரசு உள்ளிட்ட பிற ஆளும் வகுப்புக் கட்சிகளிடமிருந்து அடிப்படையில் வேறுபட்டு நிற்கிறது என்ற முதன்மையான வினாவிற்கு விடை காணாமல் பாசக பாசிசக் கேட்டினை நம்மால் துல்லியமாக இணங்கான முடியாது என்கிறார் தியாகு. சரி என்ன வித்தியாசம் என்று அவர் கூறுவார் என்று பார்த்தால், அதுவும் இல்லை, ஆனால் அந்த வேறுபாடுகளை வர்க்கப் பார்வையில் பார்க்கக் கூடாது என்றும், அவ்வாறு பார்ப்பது 'வர்க்க குறுக்கியம்' என்றும் கூறுகிறார்.
இந்து மதவாதத்தை பாசக கையில் எடுப்பது தேர்தல் உத்திதான் என கூறுவதை அரை உண்மை எனக் கூறும் தியாகு, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவம், பார்ப்பனியம் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா என்கிறார். பாஜகவின் கொள்கையில் இவை இல்லை என நாம் எங்கும் சொல்லவில்லை. சிறுபான்மை முஸ்லீம் மதத்தினரை பெரும்பான்மை இந்து மதத்தினருக்கு எதிரானவர்களாகச் சித்தரிப்பதும், அவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதும், இந்துக்களில் இருக்கும் அடித்தட்டு மக்களை அவர்களுக்கு எதிராக ஏவிவிடுவதன் மூலம் பகையுணர்வை வளர்ப்பதும், சிறுபான்மை மக்களை அடக்கியொடுக்குவதன் மூலம் பெரும்பான்மை இந்து மக்களுக்கு தாம் மட்டுமே உண்மையான பாதுகாவலன் எனக் கூறிக் கொள்வதும் பாசக விரிந்த அளவில் தற்பொழுது செய்து வருகின்றது. இதனைத் தான் நாம் குறிப்பிட்டுள்ளோம். ஆனால் இவை எல்லாம் எந்த நோக்கத்திற்காக, எந்த வர்க்கத்தின் நலன்களுக்காக, அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றன? நாம் மட்டுமல்ல, தமிழ்நாடு பொதுமக்கள் மேடையின் அறிக்கையில் முதல் பக்கம் முழுவதுமே இந்த ஒடுக்குமுறைகளைத் தான் சுட்டிக் காட்டியுள்ளது என்பதை அவர் மறந்திருப்பார் என நினைக்கின்றேன்.
சிறுபான்மை மதத்தினரை, பாசகவிற்குப் பெருந்தோல்வியை பரிசளிப்பதன் மூலம் காப்பாற்றலாம் என்கிறார் தியாகு. சிறுபான்மை மதத்தினர் மட்டுமல்ல, துன்பங்களிலும், துயரங்களிலும் உழலும் அனைத்து மதத்தினைச் சார்ந்த தொழிலாளர்களையும் ஏழை எளிய மக்களையும் காக்க வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிறோம் நாம்.
சோசலிசம் வரட்டும் என்பதல்ல, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் அதிகாரம் அமையும் பொழுது மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும் என்பதே எமது நிலைப்பாடு, இதனைப் பாசிசத்திற்கு எதிரான வேலைத் திட்டப் பிரசுரத்தில் தெளிவாக விளக்கப்படுத்தியுள்ளோம்.
மேலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மத ரீதியிலும், இன ரீதியிலுமான ஒடுக்குமுறைகள் எப்பொழுதும் இருந்து வருகின்றன என்பதை வரலாறு நமக்குக் காட்டி வருகின்றது. காஷ்மீர் மக்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கும், வடகிழக்கு பகுதி மக்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கும், சீக்கிய மக்களின் மீதான மத ஒடுக்குமுறைகளுக்கும் காரணமாக இருந்த காங்கிரசுக்கு, பாபர் மசூதி இடிப்பின்பொழுது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் முசுலீம் மக்கள் மீது வன்முறைகளை நிகழ்த்திய பொழுதும், ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க இலங்கை அரசுடன் கைகோர்த்த பொழுதும் ஆட்சியிலிருந்த காங்கிரசுக்கு, இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தாங்கள் குறிப்பிட்டது போல 1975இல் பாசிசத்தைக் கட்டவிழ்த்து விட்ட காங்கிரசுக்கு என்ன பரிசளிப்பது (வெற்றிக் கனியையா?) தியாகு அவர்களே!
இந்திராவின் பாசிசக் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டியதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் தியாகு. ஆம், அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது நாமல்ல, அவர்தான். இந்திராவின் பாசிசத்திற்கு காரணமான முதலாளியத்தை வீழ்த்தி இருந்தால் இன்று பாஜகவின் பாசிசம் வந்திருக்காது. அன்று பாசிசத்தின் முகமாக இருந்த இந்திராவை வீழ்த்தி அதன் அடிநாதமாக இருந்த முதலாளிய வர்க்கத்தை மக்களின் எதிர்ப்பிலிருந்து முதலாளியக் கட்சிகள் காப்பாற்றின, அதனால் தான் பாசிசம் மீண்டும் மோடி தலைமையில் தலையெடுத்து வருகின்றது. இவர்களின் கூற்றுப்படி மோடி தலைமையிலான ஆட்சி வீழ்த்தப்பட்டாலும் கூட மீண்டும் முதலாளித்துவ நெருக்கடி கடுமையாகும் பொழுது ஆட்சிக் கட்டிலில் இருக்கும் கட்சியின் வழியாகப் பாசிசம் வெளிப்படும், தியாகு போன்றவர்கள் மீண்டும் மீண்டும் தனிநபர்களையும், கட்சிகளையும் காரணம் காட்டி மக்களைத் துன்பக் கடலில் ஆழ்த்த துணிகின்றனர். இவர்கள் கூறும் தீர்வு கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையிலிருந்து எரியும் நெருப்பில் குதிப்பது போன்றது. இது பாசிசத்திலிருந்து மக்களை விடுவிக்காது. மீண்டும் பாசிசத்தின் பிடியில்தான் சிக்க வைக்கும். எனவேதான் நாம் பாசிசத்தின் தோற்றத்திற்கான மூலத்தையே ஒழிக்க வேண்டும் எனவும், அதற்கான போராட்டக் களத்திற்கு மக்களை அணித் திரட்ட வேண்டும் எனவும் கூறுகின்றோம்.
குடியாட்சிய ஒற்றுமை முன்னணி என்ற பெயரில் முதலாளியக் கட்சிகளின் பின்னால் வால்பிடித்துக் கொண்டு பாசிசத்திற்கு தோற்றுவாயான முதலாளி வர்க்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதல்ல நமது வழி.
சீர்த்திருத்தவாதிகள் இத்தாலியில் இதே போன்ற முன்னெடுப்பை எடுத்த பொழுது அவர்களை கிளாரா ஜெட்கின் கடுமையாக விமர்சனம் செய்தார்.
”சீர்த்திருத்தவாதக் கட்சிகளும் தொழிற்சங்கத் தலைவர்களும் புரட்சியைக் காட்டிக் கொடுத்து, முதலாளித்துவத்திற்கு அடிபணிந்து பழையபடி வர்க்க ஆட்சியையும் வர்க்கச் சுரண்டலையும் மீட்டமைக்கும் வகையில் முதலாளித்துவத்துடன் கூட்டணியை உருவாக்கினர். இவையனைத்தையும் ’ஜனநாயகத்தின்’ பெயரால் அவர்கள் செய்தார்கள். இதன் விளைவாக, இந்த வகை ’அனுதாபிகள்’ பாட்டாளி வர்க்கத்தை சோசலிசத்தின் மீதும், விடுதலையைக் கொண்டு வருவதற்கான அதன் திறன் மீதும், சமூகத்தைப் புத்தமைப்பதன் மீதும் சந்தேகம் கொள்ளும் வகையில் வழி நடத்தி வருகின்றனர்," (பாசிசத்தின் மீதான தீர்மானம், கிளாரா ஜெட்கின்)
பாசிசத்திற்கு எதிரான மக்கள் முன்னணி என்பது, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அனைத்து இடதுசாரி அணிகளையும், சீர்த்திருத்தவாதத்தில் நீண்டகாலமாக புதைந்து கிடக்கும் இடதுசாரி இயக்கங்களையும் ஐக்கிய முன்னணி பால் திருப்புவதும். இந்த முன்னணியில் பங்கு கொள்ள அதன் அணிகளிலுள்ள தொழிலாளர்களிடம் தொடர்ந்து போதம் அளிப்பதன் மூலம் அந்த இயக்கங்களை நிர்ப்பந்தபடுத்துவதும், முதலாளியக் கட்சிகளின் பின்னால் அணி திரண்டிருக்கும் தொழிலாளர்களை, பொதுவான கோரிக்கைகளின் அடிப்படையில் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவதன் மூலம் அவர்களைப் பாசிசத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்க ஐக்கிய முன்னணிக்குள் கொண்டு வருவதும் ஆகும். மேலும், தொழிலாளி வர்க்க ஐக்கிய முன்னணியை அடிப்படையாகக் கொண்டு சிறு, குறு விவசாயிகள், அறிவுஜீவி பகுதியினர், குட்டி முதலாளியப் பகுதியினரையும் இணைத்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை அமைக்க வேண்டும். பொதுவான முழக்கங்களின் அடிப்படையில் தொடர்ந்து ஐக்கிய முன்னணியை வலுப்படுத்த வேண்டும். இவை கம்யூனிஸ்டுகள் மற்றும் சீர்த்திருத்தவாத இடதுசாரி இயக்கங்கள் இணைந்த அதிகார மாற்றத்திற்கோ அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கோ கொண்டு செல்ல தொடர்ந்து வேலைகளை முன்னெடுக்க வேண்டும்.
இறுதியாக ஜெர்மன் நாடாளுமன்றத்தில் கிளாரா ஜெட்கின் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை தியாகு அவர்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
நாசிச சக்திகள் வளர்ந்து வந்த சூழலில், 1932 ஆகஸ்டு 30ஆம் தேதியன்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் கிளாரா ஜெட்கின் பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணியின் அவசியம் குறித்து உரையாற்றிய பொழுது.
"தற்போதைய பேரழிவுகரமான துயரங்களுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டம் அவர்களுடைய முழு விடுதலைக்குமான போராட்டமாகும். வெகுமக்களின் பார்வைகள் ஒளிமயமான இந்த இலக்கை நோக்கி உறுதியுடன் வழி நடத்தப்பட வேண்டும். ஜனநாயகத்தை விடுவிப்பது என்னும் மாயையால் அவை மூடி மறைக்கப்படக் கூடாது" எனக் கூறுகிறார். (பாசிசம் வீழ்த்தப்பட வேண்டும், கிளாரா ஜெட்கின்)
மேலும் அந்த அறிக்கையில் அவர் தொடர்ந்து கூறுகிறார்:
"பாசிசத்தை வீழ்த்துவதற்கும் அடிமைப்படுத்தப்பட்டவர்களையும், சுரண்டப்படுபவர்களையும் பாதுகாப்பதற்கும், அவர்களுடைய சொந்த இருத்தலையும் மற்றும் அவர்களுடைய அமைப்பின் சக்தி மற்றும் அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததும் உடனடிக் கடமையுமாக இருப்பதும் அனைத்துத் தொழிலாளர்களின் ஐக்கிய முன்னணியை அமைப்பதாகும். வலுக்கட்டாயமான இந்த வரலாற்றுரீதியான தேவையின் முன், தடை ஏற்படுத்தக் கூடிய, பிளவுபடுத்தக் கூடிய அனைத்து அரசியல் சார்ந்த, தொழிற்சங்கம் சார்ந்த, மதம் சார்ந்த, சித்தாந்தம் சார்ந்த கருத்துக்களைத் துரத்தியடிக்க வேண்டும்."(பாசிசம் வீழ்த்தப்பட வேண்டும், கிளாரா ஜெட்கின்).
எனவே பாசிசத்தை வீழ்த்த அனைத்துத் தொழிலாளர்களின் ஐக்கிய முன்னணியைக் கட்டுவதுதான் இன்று நம் முன் உள்ள உடனடிக் கடமையாக உள்ளது. தோழர் தியாகு கூறுவது போல ஜனநாயக ஒற்றுமை முன்னணி என்ற பெயரில் முதலாளியக் கட்சிகளின் வாலாக மாறுவதல்ல.
-
குமணன்
பின்னிணைப்பு:
தியாகு எழுதுகிறேன்...
[திதா453310120242055தை18வி]
தாழி (453)
இனிய அன்பர்களே!
”பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்” என்ற தலைப்பில் செந்தழல் வலைப்பக்கத்தில் அன்பர் குமணன் எழுதியிருப்பதை தாழி மடல் 452இல் பகிர்ந்திருந்தேன். அதற்கான என் மறுமொழி:--
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பிற்போக்கும் பாசிசமும் ஒன்றா?
உருநிலைச் சிக்கல்களுக்கு உருநிலைத் தீர்வுகள் (concrete solutions for concrete
issues) என்பதுதான் என் அணுகுமுறை. இங்கே சிக்கல்: 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாம் செய்ய வேண்டியது என்ன? இதற்கு நான் முன்வைக்கும் உரு நிலைத் தீர்வு: பாசக கூட்டணியைத் தோற்கடிக்க வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். அதாவது பாசக கூட்டணியைத் தோற்கடிக்கும் வலிமையுள்ள கட்சி அல்லது அணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே.
அன்பர் குமணன் 2024 பொதுத் தேர்தல் என்ற உருநிலைச் சிக்கலை அவ்வாறு அணுகவே இல்லை. எனவே அதற்கொரு உருநிலைத் தீர்வை முன்வைக்கவே இல்லை. அவரது கட்டுரை முழுக்க அருநிலைக் கோட்பாடுகளே (abstract theories) நிறைந்துள்ளன. 2024 பொதுத் தேர்தல் குறித்து அவர் சொல்வது என்ன?
”இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல்” என்கிறார். குறிப்பான ஒரு தேர்தல் பற்றிய இந்தப் பொத்தம்பொதுவான கூற்று பாசக மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வர முயல்வதால் எழும் தனித் தன்மைகளைக் கண்டு கொள்ளவில்லை. இடதுசாரி இயக்கங்கள் இந்தத் தேர்தல் போராட்டத்தில் எங்கு நிற்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? மக்கள் தமது வாக்குரிமையை எவ்வாறு பயன்படுத்த வழிகாட்ட வேண்டும்? அல்லது இந்தத் தேர்தல் போராட்டத்தை அலட்சியம் செய்து விட வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு அன்பர் குமணனிடம் விடையே இல்லை. அருநிலைக் கோட்பாடுகளை அள்ளித் தெளிப்பதோடு அவர் நிறைவடைந்து கொள்கிறார்.
இந்திய முதலியத்தின் (முதலாளித்துவத்தின்) வளர்ச்சியில் காங்கிரசு ஆட்சியின் வகிபாகம் குறித்து அவர் சொல்வதை நான் மறுக்கவில்லை. மொத்தத்தில் அது சரியானதே. அதே போது இந்திய முதலியத்தின் வளர்ச்சிக் கட்டங்கள் – தொழில் முதல், நிதி முதல், புதுத் தாராளியம், ஒட்டுமுதல் (crony capital), வல்லரசியம் – என்பன குறித்தும் ஆளும் வகுப்பிலும் அரசிலும் இவற்றின் தாக்கம் குறித்தும் – எவ்விதமான உருநிலைப் பகுத்தாய்வும் இல்லாமல் பாசிசத்தின் வளர்ச்சியையும், பாசக ஆட்சியையும், அது தொடர்வதால் வரும் கேட்டையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியாது. முதலாளித்துவம் என்ற ஒரு சொல்லுக்குள் இவை அனைத்தையும் அடக்கி நிறைவு கொள்ள முடியாது.
பாசக எவ்வகையில் காங்கிரசு உள்ளிட்ட பிற ஆளும் வகுப்புக் கட்சிகளிடமிருந்து அடிப்படையில் வேறுபட்டு நிற்கிறது? என்ற முகன்மையான வினாவிற்கு விடை காணாமல், பாசக பாசிசக் கேட்டினை நம்மால் துல்லியமாக இனங்காண முடியாது. பாசக, காங்கிரசு இரண்டின் பொருளியல் கொள்கைகளும் ஒன்றுதான் என்பது இந்த வினாவிற்கு நேர் விடை ஆகாது.
குமணன் சொல்கிறார்:
”ஆட்சியைக் கைப்பற்றிய பிஜேபி கட்சி தொடர்ந்து ஆட்சிக் கட்டிலைத் தக்க வைத்துக் கொள்ள இந்து மதவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றது. இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை இந்து மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் வாக்கு வங்கிகளைத் தக்கவைத்துக் கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.”
அவ்வளவுதான், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள இந்து மதவாதம் ஓர் ஆய்தம்! பெரும்பான்மை இந்து மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி வாக்கு வங்கிகளைத் தக்க வைத்துக் கொள்ள பாசக பாடுபடுகிறதாம். இது உண்மைதான், ஆனால் அரை உண்மை. ஒரு புலப்பாடு! முழு உண்மை என்ன? இந்தப் புலப்பாட்டின் சாறம் என்ன? ஆர்எஸ்எஸ், அதன் இந்துத்துவம், பார்ப்பனியம் எதுவுமே உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? எல்லாம் வெறும் தேர்தல் உத்திதான் என்று பார்ப்பது பாசிசத்தையும், அதன் இன்றைய இந்திய (ஓ, பாரத) அவதாரத்தையும் கண்டுகொள்ளாமல் விடுவதும், அவை குறித்து உழைக்கும் மக்களையும் குடியாட்சிய ஆற்றல்களையும் எச்சரிக்கத் தவறுவதும் ஆகும். பாசகவின் இந்து மதவாதம் வெறும் மதவாதமாக மட்டுமே உங்களுக்குத் தெரிகிறது.
இந்து-இந்தி-இந்தியா என்ற ஆர்எஸ்எஸ் கொள்கைதான் இந்துத்துவம்! இதற்குச் செயல்வடிவம் தரும் அரசியல் கட்சியே பாசக! இந்த உண்மைகளின் அடிப்படையில்தான் பாசகவை ஆட்சியிலிருந்து விரட்டுவது உடனடித் தேவை ஆகிறது.
எல்லா மதவாதங்களும் பிற்போக்கானவைதாம். ஆனால் இந்தியச் சூழலில் இந்து மதவாதத்துக்கு மட்டுமே பாசிசமாக உருப்பெற வாய்ப்புண்டு. பாசிசம் அனைத்தும் பிற்போக்கே! ஆனால் பிற்போக்கு அனைத்தும் பாசிசமாகாது! என்ற தெளிவு வேண்டும்.
பெரும்பான்மை மத ஆதிக்கத்திலிருந்து சிறுபான்மை மதத்தினரைக் காப்பது என்றால், அவர்கள் தம்மைத் தாமே காத்துக் கொள்ள நாம் உதவுவதென்றால், உடனே நாம் செய்ய வேண்டியது என்ன? வரும் தேர்தலில் பாசகவுக்குப் பெருந்தோல்வியைப் பரிசளிப்பதுதான்! அது மட்டும் போதும் என்று சொல்லவில்லை. அது அவர்களின் போராட்டத்துக்குப் பேரூக்கமாக அமையும் என்பதே. “சோசலிசம் வரட்டும், அது உங்களைக் காக்கும்” என்று அவர்களைப் பார்த்துச் சொல்ல முடியுமா?
இடதுசாரி அமைப்புகள் வலுக்குன்றி உள்ளன என்று காரணங்காட்டி… பாசிச பாசகவுக்கும் குடியாட்சிய ஆற்றல்களுக்குமான இந்தத் தேர்தல் போராட்டத்திலிருந்து விலகி நின்று வேடிக்கை பார்ப்பதற்குச் சாக்குச் சொல்வதை ஏற்பதற்கில்லை. தமக்கிருக்கும் ஆற்றல் முழுவதையும் திரட்டி பாசகவுக்கு எதிராகக் குடியாட்சியத்தின் பக்கம் நிற்பதன் ஊடாகவே இடதுசாரி ஆற்றல்கள் அரசியலில் வலுப்பெறவும் வலுக்கூடவும் வாய்ப்புண்டு.
”பிஜேபியின் பாசிசத் தன்மைக்குக் காரணமாக இருப்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் நெருக்கடிதான்” என்றும், மதவாதம் அதன் வெளிப்பாடுதான் என்றும் சொல்வது கொச்சைப் பொருண்மியம் (vulgar materialism) சார்ந்த வகுப்புக் குறுக்கியம் (class reductionism) ஆகும். யார் ஆட்சிக்கு வந்தாலும் பாசிசமாகத்தான் இருக்கும் என்பது பாசிசப் போக்குகளைத் தடுத்து நிறுத்தவும் எதிர்த்து முறியடிக்கவும் குடியாட்சிய ஆற்றல்களை எச்சரித்து விழிப்பூட்டும் கடமையைத் தட்டிக்கழித்து விட்டு ஊழ்வினைக் கொள்கையில் வீழ்வதாகும்.
1975-77 நெருக்கடி நிலைக் காலத்தில் என்ன நடந்தது என்பதையும், 1977 பொதுத் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்திராவின் பாசிசக் கொடுங்கோன்மைக்கு மக்கள் எப்படி முடிவு கட்டினார்கள் என்பதையும் பாடமாகக் கொள்ள வேண்டும். அப்போதும் எதிர்க்கட்சிகளில் ஜனசங்கம், பழைய காங்கிரசு உள்ளிட்ட முதலியக் கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஜனதா தளமும், தேர்தல் அறிவிக்கப்படும் வரை இந்திரா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஜெகஜீவன் ராம் தலைமையிலான ஜனநாயகக் காங்கிரசும் லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் தலமையில் ஒன்றுபட்டு நின்று இந்திராவை விரட்டியடித்தன. அப்போது அந்தத் தேர்தலில் இந்திராவை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையிலான அணிக்கு ஆதரவளிப்பதுதான் குடியாட்சிய ஆற்றல்களின் கடமை ஆயிற்று.
இன்று ஒற்றுமை (ஐக்கிய) முன்னணியை முன்னின்று அமைக்கும் வலிமை இடதுசாரிகளிடம் இல்லை என்பதை குமணன் ஏற்றுக் கொள்கிறார். பாசிசத்துக்கு எதிராக ஒற்றுமை முன்னணி உத்தியைக் கடைப்பிடிப்பது என்றால் பாசிசத்தை எதிர்த்து அனைத்துச் சமூக ஆற்றல்களையும், அனைத்து அரசியல் ஆற்றல்களையும் ஒன்றுபடுத்திக் களம் காண்பதாகும். இந்த முன்னணியைக் கட்டுதல் ஓர் இயங்கியல் செயல்வழியே தவிர ஏற்கெனவே இருக்கிற ஆற்றல்களை எந்திரத்தனமாகக் கூட்டிச் சேர்ப்பதன்று. இங்கே அரசியல் ஆற்றல்களின் ஒற்றுமை என்பது வடிவம்தான், இந்த அரசியல் ஆற்றல்கள் குறித்திடும் பலவாறான மக்களின் ஒற்றுமை என்பதுதான் உள்ளடக்கம்.
உள்ளடக்கத்திலும் உருவத்திலும் ஒற்றுமை முன்னணி என்பது போராட்டத்தின் மூலவுத்திவகை, தந்திரவுத்திவகைக் கட்டங்களைப் பொறுத்தது. ஒற்றுமை முன்னணி என்றாலே குமுகிய (சோசலிச) ஒற்றுமை முன்னணி மட்டும்தான் என்று அன்பர் குமணனைப் போன்றவர்கள் கருதுவது போல் தெரிகிறது. குடியாட்சிய (ஜனநாயக) ஒற்றுமை முன்னணி என்ற பார்வையே அவர்களுக்கு உவப்பானதாகத் தெரியவில்லை என்னும் போது, பாசிச எதிர்ப்பு அனைத்தளாவிய ஒற்றுமை முன்னணி (All-in United Front Against
Fascism) என்பதை அவர்களால் எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தத் தோழர்களுக்குக் குமுகியம் (சோசலிசம்) ஒரு பெருங்கனவாக இருக்கலாம். எனக்கும்தான்! ஆனால் அந்தக் கனவை நனவாக்கும் நீள்பெரும் பயணத்துக்கு அவர்கள் அணியமாய் இல்லை. ஒரே பாய்ச்சலில் எல்லாக் கட்டங்களையும் தாண்டிக் குதித்துக் குமுகியம் அடைவது என்ற கருத்தியத் திட்டம் மெய்ப்பட வாய்ப்பில்லை.
பாசகவுக்கு எதிரான கட்சிகளைக் குற்றாய்வு செய்யும் உரிமையை யாம் தூக்கியெறிந்து விடவும் இல்லை. அவர்களுக்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. பாசிச பாசகவை எதிர்த்து அணிவகுப்பது பாசிசத்துக்கு எதிரான போரட்டம் மட்டுமன்று, உண்மையாகவும் முரணற்ற வகையிலும் பாசிசத்தை எதிர்ப்பது யார் எனக் காட்டும் போராட்டமும் ஆகும். பாசக கூட்டணிக்கு எதிராக வெல்லத்தக்க கட்சி அல்லது கூட்டணியை ஆதரிப்பதற்கு நேரான கட்டுக்கூறு (நிபந்தனை) விதிப்பதும் ஆதரிக்க மறுப்பதும் ஒன்றுதான். அதே போது நம் ஆதரவு குற்றாய்வு இல்லாத ஒன்றன்று. மக்கள் நலன் காக்கும் கோரிக்கைகள் நாம் சுற்றடியாக முன்வைக்கும் கட்டுக்கூறுகளே ஆகும். புறஞ்சார் பொருளியல் விதிகள் அங்காடியில் இயங்குவது போல் நம் கட்டுக்கூறுகளும் வாக்குக் களத்தில் உணர்த்தப்படும்.
”பாசிசத்தை வீழ்த்துவது என்பது ஒரு கட்சியை மட்டும் வீழ்த்துவதோடு தொடர்பு கொண்டதல்ல” என்பது சரிதான். எனவேதான் --
இந்தத் தேர்தலில் பாசக தோற்பதோடு பாசிசம் ஒழிந்து விடும் என நாம் கருதவில்லை. ஆனால் பாசகவின் தோல்வி பாசிசத்தின் தோல்வியாக அமைந்து, பாசிச எதிர்ப்புப் போராட்டத்துப் பேரூக்கமாகப் பயன்படும்.
பொறுத்திருந்து பாருங்கள்.
Comments
Post a Comment