தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலம் யார்
வேண்டுமானாலும் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் நிதி
வழங்கலாம். அந்த விவரங்கள் இரகசியமாக இருக்கும். கட்சிகளும் அதை வெளியிடத் தேவை
இல்லை. இதற்கு ஏதுவாக நிதிச் சட்டம் 2017ல் திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்தத்
திருத்தங்களை, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக
உள்ள மாநிலங்களவையில் (Rajya sabha)
நிறைவேற்ற முடியாது என்ற காரணத்தினால், பண மசோதா என்ற
பெயரில் மக்களவையில் மட்டும் நிறைவேற்றி அதைச் சட்டமாக்கியது பா.ஜ.க. அரசாங்கம். இந்தச்
சட்டத் திருத்தங்களை எதிர்த்து, ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கான அமைப்பு
(Association for Democratic Reforms), பொது நலன் (Common cause) என்ற இரு
அமைப்புகளும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யும் வழக்குத் தொடுத்தன.
பிப்ரவரி 15 ஆம் நாள் தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகள் நிதி
வசூல் செய்வது வாக்காளர்களின் தகவல் அறியும் உரிமைக்கு எதிரானது என்றும் அரசியல்
அமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், கூறி நிதிச் சட்டம் 2017ல் கொண்டு
வரப்பட்ட திருத்தங்கள் செல்லாது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்புக்குப் பிறகும் தேர்தல் பத்திரங்களுக்குப்
பொறுப்பான பாரத வங்கி (State Bank of India) அவற்றின் முழு விவரங்களை வெளியிட
நான்கு மாதங்கள் அவகாசம் கேட்டது. ஜூன் மாதம், அதாவது பதினெட்டாவது நாடாளுமன்றத்
தேர்தல் முடிந்த பிறகு தருவதாகக் கூறியது. அதன் மூலம் தனது தில்லுமுல்லுகள்
அம்பலத்திற்கு வராமல் தேர்தலைச் சந்தித்து விடலாம் என பா.ஜ.க. கருதியது. ஆனால்
உச்ச நீதிமன்றம் உறுதியாக இருந்ததால் வேறு வழியில்லாமல் பாரத வங்கி பணிந்து
உடனடியாக விவரங்களை அளிக்க நேர்ந்தது. இவ்வாறு அதன் இரகசியங்கள் வெளி வராமல்
தடுக்கக் கடைசி வரையிலும் பா.ஜ.க. ஆட்சி முட்டுக்கட்டை போட்டு வந்தது. ஆனால்
அதனுடைய முயற்சி வெற்றி பெறாமல் போனதால், இன்று தனது திருட்டுத்தனங்கள் எல்லாம்
அம்பலப்பட்டுப் போய் மக்கள் மத்தியில் கேவலப்பட்டு நிற்கிறது.
அந்தத் தீர்ப்புக்குப் பின் வந்த தேர்தல்
பத்திரம் மூலம் நிதி திரட்டப்பட்ட தகவல்கள், பா.ஜ.க. ஆட்சியினர் எவ்வாறு
அமுலாக்கத்துறை வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத் துறை ஆகிய அதிகார அமைப்புகள்
மூலம் ஒரு பக்கம் முதலாளிகளை அச்சுறுத்தியும், இன்னொரு பக்கம் முதலாளிகளுக்குச்
சலுகைகள், தொழில் நடத்துவதற்கான உரிமங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவை அளித்தும் தேர்தல்
பத்திரங்கள் மூலம் கொள்ளையடித்துப் பெரும் நிதியைக் குவித்துள்ளனர் என்பதை
அம்பலமாக்கியுள்ளன. அது மட்டுமல்லாமல் முதலாளிய வர்க்கத்தின் பாராளுமன்ற
ஆட்சிமுறையையும் அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
“உலகிலேயே மிகப் பெரும் ஜனநாயக நாடு நமது நாடு”
என்று இங்குள்ள முதலாளியக் கட்சிகள் பெருமை பேசி வருகின்றன. ‘பாராளுமன்றமே எனது
கோயில்’ என்று கூறி பாராளுமன்றத்தின் படிகளில் வீழ்ந்து வணங்குகிறார் இந்த
நாட்டின் பிரதமர். இந்த “ஜனநாயகப் பெருமைகளையும்”, பாராளுமன்றப் புனிதத்தையும்
நாற்றமெடுக்க வைத்துள்ளன தேர்தல் பத்திரங்களின் மூலம் நடந்துள்ள ஊழல்கள். இவர்கள்
என்னதான் புனிதப்படுத்தி வந்தாலும், போற்றிப் புகழ்ந்தாலும் இங்கு நடந்து வரும்
ஜனநாயக ஆட்சி என்பது உண்மையில் பணநாயக ஆட்சிதான் என்பதையும், பாராளுமன்றமே
முதலாளிகளின் பணப்பைகளுக்குள்தான் அடக்கம் என்பதையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளன.
ஊழலை ஒழிக்கப் போவதாகத் தம்பட்டம்
அடித்துக்கொண்டு ஆட்சிக் கட்டிலேறிய பா.ஜ.க. ஊழலை ஒழிக்க ஒரு அருமையான வழியைக்
கண்டு பிடித்தது. அதுதான் தேர்தல் பத்திரத் திட்டம். அந்தத் திட்டத்தின் மூலம்
ஊழலைச் சட்டபூர்வமாக்கி விட்டது. ஊழலை ஒழிக்க எவ்வளவு எளிதான வழி பாருங்கள்! அரசியல்
கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கலாம். அவர்களின்
பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது. எல்லாக் கட்சிகளும் இதனால் பயன் பெறலாம். இதன்
மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்படும் என்றெல்லாம் கூறப்பட்டது. இதில் அதிகமாகப்
பயன் பெறும் கட்சி ஆளும் கட்சியாகத்தான் இருக்கும் என்பது ஒரு முட்டாளுக்குக்
கூடத் தெரியும். ஆட்சியிலிருப்போரைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு வேண்டிய
காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முதலாளிகள் வாரி வழங்குவார்கள் என்பது எல்லோரும்
அறிந்த அப்பட்டமான உண்மை. ஆனால் பா.ஜ.க.வின் அகராதிப்படி அது ஊழலோ இலஞ்சமோ அல்ல.
2019 ஏப்ரல் மாதத்திலிருந்து 2024 பிப்ரவரி 15
வரையிலும் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன. இந்தப் பத்திரங்கள்
மூலம் பா.ஜ.க. மட்டும் 6566 கோடி ரூபாயை அறுவடை செய்துள்ளது. மொத்த நிதியில்
பா.ஜ.க. வின் பங்கு மட்டும் 54.77% ஆகும். மற்ற கட்சிகள் அனைத்தும் சேர்ந்து
45.23% பங்கைத்தான் பெற்றுள்ளன.
சுரங்க முதலாளிகள், நில (Real Estate)
முதலாளிகள், மருந்து நிறுவன முதலாளிகள், பொறியியல் மற்றும் கட்டுமானத் துறை முதலாளிகள்,
லாட்டரிச் சீட்டு முதலாளிகள், நிதி நிறுவனங்கள் என அனைத்து முதலாளிகளும் கோடிக்கணக்கில்
நிதியை கட்சிகளுக்கு வாரி வழங்கியுள்ளனர். இதில் பயன்பெறாத முதலாளியக் கட்சிகள்
எதுவும் இல்லை எனக் கூறலாம். போலி நிறுவனங்களும், நட்டத்தில் இயங்கும்
நிறுவனங்களும் கூட கோடிக் கணக்கில் நிதியை வாரி வழங்கியுள்ளன. கருப்புப் பணத்தை
ஒழிக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., கருப்புப்பணத்தை வெள்ளையாக்கும்
வழியை முதலாளிகளுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.
முதலாளிகள் தமக்கு ஏஜண்டுகளாகச் சேவை செய்யும்
முதலாளியக் கட்சிகளுக்கு நிதி வழங்குவது ஒன்றும் பரம இரகசியமல்ல. முதலாளியப்
பாராளுமன்ற ஆட்சிமுறையே இப்படித்தான் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. அது இந்த
நாட்டில் நடப்பது ஆச்சரியமான ஒன்றல்ல. ஆனால் ஆளும் கட்சியாக உள்ள தனக்குப் பெரும்
அளவு நிதியைத் திரட்டுவதற்கு பா.ஜ.க. பின்பற்றிய வழிமுறைகள்தான் இங்கு மிகவும்
கவனத்திற்கு உரியதும் முக்கியமானதும், விவாதிக்கப்பட வேண்டியதும் ஆகும்.
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும்
முதலாளிகள் அனைவரையும் அழைத்தான். முதலாளிகள் தங்களுடைய தொழிலை அமைதியாகத்
தொடர்ந்து நடத்த வேண்டுமானால் தான் கோரும் நிதிகளை வழங்க வேண்டும் என நிபந்தனை
விதித்தான். அதற்கு உடன்படாதவர்களைத் தன்னுடைய குண்டர்படையைக் கொண்டு பணிய
வைத்தான். தான் பதவிக்கு வந்ததிலிருந்து 1945ல் தான் இறக்கும் வரை ஹிட்லர்
முதலாளிகளிடமிருந்து பெற்ற பணம் 300 கோடி டாலர்கள் ஆகும்..
பாசிச ஹிட்லர் பின்பற்றிய அத்தகைய நடைமுறையைத்தான்
இங்குள்ள பாசிசக் கட்சி பா.ஜ.க. பின்பற்றுகிறது. ஆனால் ஒரு வேறுபாடு; ஹிட்லர் தனது
குண்டர் படையை வைத்து முதலாளிகளை மிரட்டிப் பணிய வைத்தான். ஆனால் இங்குள்ள
பா.ஜ.க.வோ அமுலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்தியப் புலனாய்வுத் துறை
ஆகியவற்றைத் தனது அதிரடிப் படைகளாகப் பயன்படுத்தி, முதலாளிகளை மிரட்டிப் பணிய
வைத்துக் கொள்ளையடித்து வருகிறது. அரசுத் துறைகளே குண்டர் படைகளின் இருப்பிடங்களாக
மாற்றப்பட்டு விட்டன. என்னே அருமையான சாணக்கிய மூளை!
முதலாளிகள் யாரும் இலாபம் இல்லாமல்
பா.ஜ.கவிற்கும் மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ள பிற கட்சிகளுக்கும் நிதியை
வழங்கவில்லை. தேர்தல் பத்திரம் மூலம் மிக அதிகமான நிதி வழங்கிய நிறுவனம்
ஃபியுட்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனமாகும். அது மட்டும் ரூ. 1368
கோடி வழங்கியுள்ளது. அதன் முதலாளி கோவையில் உள்ள மார்ட்டின். அவர் இந்தியாவின்
லாட்டரி சீட்டு “அரசன்” என அழைக்கப்படுபவர். அந்த நிறுவனம் திரிணாமுல் காங்கிரஸ்,
தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., ஆந்திராவில் உள்ள ஆளும் கட்சியாக உள்ள ஒய். எஸ்,
ஆர். காங்கிரஸ், சிக்கிமில் உள்ள கட்சிகள் என பல கட்சிகளுக்கும் நிதி வழங்கியுள்ளது.
தனது லாட்டரி சீட்டு வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெற அந்த நிறுவனம் அனைத்துக்
கட்சிகளுக்கும் வாரி வழங்கியுள்ளது.
மேகா எஞ்சினீயரிங் என்னும் நிறுவனம் ஆந்திரா
நிறுவனம் 966 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் வழங்கி இரண்டாவது இடத்தைப்
பிடித்துள்ளது. . அதற்குக் கைமாறாக ரூ.800 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை HPCL ராஜஸ்தான்
பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனத்திலிருந்து பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல்,
ரூ.4700 கோடி மதிப்புள்ள ஜோசிலா சுரங்கப்பாதைக்கான ஒப்பந்தத்தை தேசிய நெடுஞ்சாலை
மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான (National Highways and Infrastructure
Development corporation) நிறுவனத்திலிருந்து பெற்றுள்ளது. இவ்வாறு பல நிறுவனங்கள்
தேர்தல் பத்திரங்கள் மூலம் சில ஆயிரம் கோடி ரூபாய்களை ஆளும் கட்சிக்கு
வழங்கிவிட்டு, அதற்குக் கைமாறாக பல இலட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை
அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகின்றன. அதன் மூலம் அரசாங்கம்
திட்டங்களுக்காகச் செலவிடப்படும் மக்களின் வரிப்பணம் பல்லாயிரக்கணக்கான கோடி
ரூபாய்கள் முதலாளிகளின் இலாபமாக மடைமாற்றம் செய்யப்படுகிறது..
இவை மட்டுமல்ல, தேர்தல் பத்திரங்கள் மூலம்
பா.ஜ.க.விற்கு நிதி அளித்தால் கடுமையான சட்டத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளும்
கூட வெகு விரைவில் பிணையில் வெளி வந்து விடலாம். அதற்கு அமுலாக்கத் துறை
எந்தவிதமான ஆட்சேபனையையும் தெரிவிக்காது. தில்லி மதுவிலக்கு ஊழலில் ‘கருப்புப்
பணத்தை வெள்ளையாக மாற்றுவதைத் தடை செய்யும் சட்டத்தின் (Prevention of Money
Laundering Act)’ கீழ் கைது செய்யப்பட்ட சரத் சந்திர ரெட்டி பிறகு குற்ற உடந்தைச்
சாட்சியாக (Approver) மாறினார். வெகு விரைவில் அவருக்கு முதுகு வலி என்ற
காரணத்தின் அடிப்படையில் பிணையும் வழங்கப்பட்டது. அமுலாக்கத் துறை அதற்கு
எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதைச் சாதித்த மாய மந்திரம் எது? தேர்தல்
பத்திரம்தான். அவருடைய கைதுக்குப் பிறகு அவர் ரூ55 கோடியை தேர்தல் பத்திரம் மூலம்
பா.ஜ.க.விற்குத் தந்துள்ளார். அவர் பிணையில் வெளி வந்த பிறகு, அவர் இயக்குனராக
உள்ள அரவிந்தோ பார்மாவும் அதனுடைய கூட்டு நிறுவனங்களும் மேலும் தேர்தல் பத்திரங்களை
வாங்கியுள்ளன. ஆனால் இங்கு தமிழ் நாட்டில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள
நிலையிலும் அதே சட்டப் பிரிவின் கீழ் பல மாதங்களாகப் பிணை கிடைக்காமல் சிறையில்
அடைபட்டுள்ளார் செந்தில் பாலாஜி. அமுலாக்கத் துறையின் “நீதி வழுவா நடுநிலைமைக்கு”
இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
மேலே சுட்டிக் காட்டப்பட்டவை எல்லாம் மிகச் சில
எடுத்துக்காட்டுகள்தாம். தேர்தல் பத்திரங்கள் மூலமாக வழங்கப்பட்ட நிதி
விவரங்கள்தான் இதில் வெளி வந்துள்ளன. வேறு வகைகளில் வழங்கப்பட்ட நிதி விவரங்கள்
இதில் தெரியாது. இதில் பெயர் வராத பெரும் முதலாளிகளும் இருக்கின்றனர். அவர்கள்
எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்களை பா.ஜ.க.விற்கு வழங்கினர் என்பதும் மக்களுக்குத்
தெரியாது.
பா.ஜ.க.வும், பெரும் முதலாளிகளும் அதிகார
வர்க்கமும் எவ்வாறு கூட்டாகச் சேர்ந்து மக்களைக் கொள்ளையடித்து வருகின்றனர்
என்பதைத் தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த எழுபத்தைந்து
ஆண்டுகளாகவே இந்தக் கூட்டுக் கொள்ளை நடந்து வருகிறது என்பதுதான் உண்மை.
முதலாளிகளிடமிருந்து பெரும் நிதி பெறுவதும், அதற்குப் பதிலாக ஆளும் கட்சி
அவர்களுக்குச் சலுகைகளையும், மான்யங்களையும், தொழில் நடத்துவதற்கான உரிமங்களையும்,
பல்லாயிரம் கோடி இலாபம் அளிக்கும் ஒப்பந்தங்களையும் வழங்கி, முதலாளிகள் மேலும்
மேலும் வளம் பெற வழி வகுப்பதும், முதலாளிகளுக்குத் தேவையான சட்டங்களை
நிறைவேற்றுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் செயல்கள்தாம். ஒரு முக்கியமான வேறுபாடு
என்ன வென்றால் பா.ஜ.க. ஆட்சி, தேர்தல் பத்திரத் திட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றி,
அதிகாரவர்க்கத்தினைக் கொண்டு முதலாளிகளை மிரட்டித் தங்களுடைய ஆட்சிக்
காலத்திற்குள் முடிந்த அளவு கொள்ளையடிக்கத் திட்டமிட்டதுதான்.
அதிகாரவர்க்கத்தினைக் கொண்டு முதலாளிகளை மிரட்டிப் பெரும் அளவு நிதி சேர்ப்பது,
பணத்தைக் காட்டியோ அதிகாரவர்க்கத்தினைக் கொண்டு மிரட்டியோ எதிர்க் கட்சியினரைத்
தம் பக்கம் ஈர்ப்பது, அதன் மூலம் எதிர்க் கட்சிகளை ஒழிப்பது, எஞ்சியுள்ள எதிர்க்
கட்சிகளையும் தனது பெரும் பண பலத்தைக் கொண்டு தேர்தலில் முறியடித்துத் தனிப்
பெரும் கட்சியாக மாறுவது, பாராளுமன்றத்தில் தனது மிருக பலத்தைக் கொண்டு முதலாளிய
வர்க்கத்தின் தங்கு தடையற்ற சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஏதுவான சர்வ அதிகாரம்
கொண்ட பாசிச ஆட்சியை அமைப்பது. இதுதான் பா.ஜ.க.வின் திட்டம். .
கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாகவே முதலாளிகள்,
அவர்களின் ஏஜண்டுகளான முதலாளிய வரர்க்க ஆளும் கட்சிகள், அவர்களுக்குச் சேவகம்
செய்யும் அதிகார வர்க்கம் ஆகியோரின் கூட்டுக் கொள்ளை ஆட்சிதான் இங்கு நடைபெற்று
வருகிறது; இன்று அது உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இந்தக் கூட்டுக்
கொள்ளையினால்தான் மிகப் பெரும் வளங்களையும், கோடிக்கணக்கான மனித உழைப்புச்
சக்திகளையும் இந்த நாடு கொண்டிருந்தும், மக்கள் வாழ்வு வளம் பெற முடியவில்லை.
அதற்குப் பதிலாக மக்கள் பெற்றது வறுமையும், பசியும், பட்டினியும், வேலை இல்லாத்
திண்டாட்டமும்தான். இவ்வளவு வளங்கள் இருந்தும், உழைப்புச் செல்வங்கள்
நிறைந்திருந்தும் இன்று இந்தியா உலகிலேயே அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட ஒரு நாடாக
மாறியுள்ளது. இந்த நிலை மாற வேண்டுமானால் கூட்டுக் கொள்ளையர்களிடமிருந்து மக்கள்
விடுபட வேண்டும். தங்களுக்கு வாழ்வும் வளமும் அளிக்கக் கூடிய ஒரு ஆட்சிமுறையை
ஏற்படுத்த வேண்டும்.
மேற்கண்ட கட்டுரையின் விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டுமானால் கூட்டுக் கொள்ளையர்கள் இடமிருந்து நம் நாட்டு மக்கள் எந்த வகையில் விடுபடுவது, நம் நாட்டில் மக்களுக்கு வாழ்வும் வளமும் அளிக்கக் கூடிய ஆட்சி முறையை எந்த வகையில் கொண்டு வருவதற்கு சாத்தியம் என்பதை விவரித்து மக்களுக்கு எவ்வாறு சொல்வது அதை எப்படி நடைமுறை சாத்தியமாக்குவது என்ற கேள்விக்கு பதில் தெரிந்தாக வேண்டும்.
ReplyDelete