Skip to main content

ஒரு விரல் புரட்சி!

 

தேர்தல் காலம்-சந்தையின் பார்வையில் மனிதர்கள் சரக்குகளாக மாறிவிட்டதைப் போல, தேர்தல்(கட்சிகளின்) பார்வையில் அவர்கள் வாக்குகளாக மாறிப்போனதையும், அவற்றை எப்படியெல்லாம் அறுவடை செய்வது என்று கட்சிகள் பரபரப்பில் பணியாற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கமுடிகிறது. பொருளுற்பத்தியில் அனைத்தையும் பணமாகப் பார்க்கும் ஆளும் வர்க்கம், அரசியலில் மனிதர்களை வாக்குகளாக நோக்கும் பார்வையை தனது காவலாளியான கட்சிகளுக்குக் (ஆளும், எதிர்க் கட்சிகள்) கையளித்திருக்கிறது. வாக்களிப்பது ஜனநாயகக் கடைமை; உயிரோடு இருப்பதற்கான ஒற்றை சாட்சியம்; வாக்கு செலுத்துவதை புறக்கணிப்பது மனிதத்தன்மையற்றவர்களின் செயல்; அப்படியான செயல் தீவிரவாதமாக இணைவைக்கப்படும் என்றெல்லாம் வேண்டிக்கேட்பதும், அறம் பாடுவதும்; அச்சப்படுத்துவதும் தொடர்கிறது-அச்சுறுத்துவது ஜனநாயகமல்ல என்பதைகூட அறியாமல்.

வழக்கத்துக்கு மாறாக இந்தத் தேர்தலில் முக்கியமான நிரலாக முன்வந்திருப்பது பாசிசமும், பாசிச எதிர்ப்பும். களத்தில் எதிரும், புதிருமான இரண்டு அணிகள்; மற்றவை அவற்றின் மறைமுகங்கள் (பி டீம்) என்றே சொல்லப்படுகிறது. ஒன்று பாசிச அணி; மற்றது பாசிச எதிர்ப்பு அணி. ’பாசிச அடைமொழியை பா... வுக்கு ஒதுக்கிவிட்டு, ஜனநாயகத்தை மீட்கும் பாசிச எதிர்ப்புஅடைமொழியை காங்கிரசுக்கு ஒதுக்கி களத்தில் நிற்கிறார்கள் இவர்கள். மக்களின் மறதி எவ்வளவு வசதியாக இருக்கிறது இவர்களுக்கு! நெருக்கடி நிலைக்காலத்தில் இதே பா.ஜ.க.வைத் துணை வைத்துக்கொண்டு பாசிசக் காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்றப் போராடியவர்கள் இவர்கள் தானே. அப்போது காங்கிரஸ் பாசிசம்; இப்போது காங்கிரஸ் பாசம், பா.ஜ.க. பாசிசம்.

பா.ஜ.க. பாசிசம் என்பது சரியானதுதான்; ஆனால் காங்கிரசின் ஜனநாயகம் எப்படிப்பட்டது? இருண்ட காலமாயிருந்த நெருக்கடி நிலை, அமலிலிருந்த தடா, மிசா, பொடா, உபா என ஆள்தூக்கிச் சட்டங்களின் அறிமுகம், மலைவாசிகளையும், அவர்கள் மேம்பாட்டுக்கு உழைத்த ஜனநாயகவாதிகள்-இடதுசாரி அமைப்புக்களையும் அழித்த பச்சைப் புலிகள் உருவாக்கம், பொதுத்துறைகள் விற்பனைத் தொடக்கம், தனியார்மயம், தாராளமயம், என்று உலகமயத்துக்கு இந்தியாவை பலியிட்டது, மென்மையான இந்துத்துவா என்று மறைமுக இந்துத்துவ வெறியை கடைபிடித்து பாபர் மசூதி இடிப்புக்கு துணைபோனது என்று காங்கிரசின் ஜனநாயக சாதனைகள், இவை உள்ளிட்ட இன்னும் எண்ணற்ற மக்கள் விரோத திட்டங்கள் தானே. காங்கிரஸ் பாசிசத்தின் நீட்சி தானே, பா.ஜ.க.பாசிசம். பாசிசத்தின் அளவீட்டில் கூடுதல், குறைச்சல் என்பது தவிர, வேறென்ன வித்தியாசம்? இதை சுட்டிக்காட்டுபவர்கள் மறைமுகமான பா.ஜ.க. ஆதரவாளர்கள் என குத்துவதற்கெனவே முத்திரையும் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள், இவர்கள். இரண்டும் சரியில்லை என்று சொன்னால் ஒன்றை மட்டும் சொல் என்று அவர்களின் விருப்பத்தேர்வுக்குள் நம்மை திணிக்கிறார்கள்.

இப்போது உலகச் சூழலில் என்ன நிகழ்கிறது?அமெரிக்காவில், ஐரோப்பாவில் குடியேறிகளால் தான் பிரச்சனை என்று தேசிய வெறியை உருவாக்கி அங்குள்ளக் கட்சிகள் பழைமைவாத,வலதுசாரி பாசிசத்தைக் கட்டமைக்கிறது. அங்குள்ள சிறுபான்மைக்கு எதிரான அரசியலை அது முன்மொழிகிறது. பின் தங்கிய நாடுகளில் மதம், இனம், மொழி, பிராந்தியம் இவற்றை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைக்கான காரணங்களாக முன்வைத்து அங்கங்குள்ள நிலைமைக்கேற்றவாறு சிறுபான்மைக்கு எதிராக பெரும்பான்மையை கட்டமைக்கிறது. இந்தியாவில் இது இஸ்லாமிய மதச் சிறுபான்மைக்கு எதிரான இந்துத்துவ அரசியலாக உருவெடுத்திருக்கிறது. கடந்த காலங்களில் குறிப்பிட்ட சூழல்களில், குறிப்பிட்ட நாடுகளில் முதலாளித்துவம் பாசிச உருவெடுத்திருந்தது. அதுவும் முதலாளித்துவ சந்தை முரண்களில் இணக்கம் ஏற்படாத சூழலில் இன அழிப்பை (யூத ) காரணமாக்கி ஜெர்மனியிலும்(நாஜி), கம்யூனிச எதிர்ப்பைக் காரணமாக்கி இத்தாலியிலும் (பாசிசம்) அங்குள்ள ஆளும் வர்க்கங்கள் தங்களை கலாச்சார ரீதியாக தயார்படுத்திக்கொண்டு, உலகப்போரை தொடங்கியது. போருக்குக் காரணமான பொருளாதாரக் காரணங்களும், சந்தை ஆதிக்கமும் பின்னணியில் பதுங்கியிருந்தன.

இப்போதும் இதுதான் நிலைமை. சிறுபான்மையினரை ஒடுக்க ஒடுக்க ஜனநாயக சக்திகள் அவர்களைப் பாதுகாக்க விரைவார்கள்; பின்னேயிருந்து பொருளாதார ஒடுக்குமுறையை, உண்மையில் பாசிசத்தை ஏவிக்கொண்டிருக்கும் கார்ப்பரேட் உலகமயம் கட்சிகளைக் கைகாட்டிவிட்டு தன்னைக் காத்துக்கொள்ளும். இந்தவிதமாக, உலகமயத்துக்கு எதிரான, உண்மையான ஜனநாயக எதிர்ப்பை கூர்மையடையாமல் பார்த்துக்கொள்வார்கள். இப்படி முன்னேறிய நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் ஒரே சிறுபான்மை அரசியலை முன்வைத்து, உலகம் முழுவதையும் தனித்தனி திக்குகளில் நிறுத்திவிட்டு நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் பொருளுற்பத்தி மற்றும் சந்தை நெருக்கடியை, மக்கள் திரளுக்குள் திணித்துவிட்டு பிரச்சனையை தணித்துக்கொள்கிறார்கள்.

அதுதான் இந்தியாவில் இந்துத்துவாவாகவும், பாசிசமாகவும் வெளிப்படுகிறது. மற்ற நாடுகளில் அங்குள்ள சூழலுக்கேற்றவாறு வெவ்வேறு வடிவமெடுத்துக் கொள்கிறது. இது யதார்த்தத்தில் உலகலாவிய பிரச்சனையின் ஒரு பகுதி; உலகமய வெடிப்பின் வெளிப்பாடு. இதை சாரமாக உணர்ந்து, போராட்டக் களத்தை தீர்மானிக்காமல், வடிவங்களோடு மல்லுக்கட்டுவது என்பது வெறும் மரணவிளையாட்டு மட்டுமே. அவர்கள் ஒரே சக்தியாக உலகலாவிய நிலையில், பேருரு கொண்டு நிற்கையில் இவர்கள்-ஜனநாயகவாதிகள் கலாச்சாரத் தளத்தில்- பிராந்திய; தேசியப் பின்னணியில் தவறானக் களத்தில் நின்று-சண்டையிட்டு தன் சக்தியெல்லாம் இழந்து நிஜ எதிரியை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் நிழலோடு சமர் செய்துகொண்டிருக்கிறார்கள்.

தேர்தலில் வெற்றி என்பதுகூட சிறுபான்மையில் பெரும்பான்மைதான். வாக்காளரில் 35% வாக்களிப்பதில்லை; மீதமுள்ள 65% வாக்காளரில் 31% பெறுபவர் வெற்றியாளர். ஆக, மொத்தத்தில் 100-ல் ஆதரவு 31; எதிர்ப்பு 69- இது என்னவகை தேர்தல்? இரு மடங்குக்கு மேலான எதிர்ப்பை வைத்துக்கொண்டு என்ன வெற்றி இது? எல்லா இடங்களிலும் 69% எதிர்ப்பைக் கொண்ட- பெரும்பான்மை இடங்களில் வெற்றி என்பது என்னமாதிரி ஜனநாயகம். உண்மையில் இது, பெரும்பான்மையில் சிறுபான்மை வெற்றிதானே. இந்த சிறுபான்மையிலும் நேரடியான கட்சிக்காரர்கள் அதிகமாகப் போனால் 10% இருப்பார்கள்; வாக்களித்த மற்றவர்கள்(21%) வெகுமக்கள். தேர்தலில் நின்று வெல்லும் ஒரு சிறுபான்மை சக்தி பெரும்பான்மை (90%) மக்கள் தொகையைக் கையாள்வதும், சிறுபான்மை சமூகத்தை பதட்டத்தில் வைத்திருப்பதும் எப்படி சாத்தியமாகிறது? ஏவலாளிகள், காவல், இராணுவம், நிர்வாகம், நீதி உள்ளிட்ட அரசின் வழியாக இவற்றை நடைமுறைப்படுத்துவது யார்? இப்போது பின்னணி புரிகிறதா? அனைத்தையும் பின்னிருந்து இயக்கும் சக்தி ஆளும் வர்க்கமான முதலாளித்துவம்? அதற்கு சேவையாற்றும் எடுபிடிகளும், ஏவலாளிகளும் தான் இந்த முதலாளித்துவ கட்சிகளும், குட்டி முதலாளித்துவக் கட்சிகளும் அவற்றின் அரசுகளும்.

பாசிசம் ஆளும் வர்க்கத்துக்கு உரியது; ஆளும் கட்சியுடையதல்ல என்கிற அரிச்சுவடியை ஏன் எப்போதும் ஜனநாயகவாதிகள் மறந்துபோகிறார்கள்? இன்றைய எதிர்க்கட்சி நாளைக்கு ஆளும் கட்சியாகும் போது உலகமய கார்ப்பரேட் யுகத்தில் அவர்களுக்கான சேவையைத்தானே தொடரமுடியும். மக்களைக் கசக்கிப் பிழியாமல் எப்படி அவர்கள் இதை ஈடேற்றமுடியும்?அதிகார வர்க்கமும், அரசும் கார்ப்பரேட் முதலாளித்துவத்திற்கும் மக்களுக்கும் இடையிலான ஊடகம் என்பது உண்மையானாலும் அது முதலாளித்துவத்திடமிருந்து அனுமதி பெற்று மக்களின் மேல் அதிகாரம் செலுத்துகிறது. பெயரளவுக்கான அந்த அனுமதியை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வற்காக தேர்தல் நாடகத்தை அரங்கேற்றுகின்றன கட்சிகள். இதற்கான முதலீட்டையும் (தேர்தல் கால செலவு) முதலாளித்துவமே வழங்குகிறது. தன் பெருங்கொள்ளையான முதலீட்டை தக்கவைக்கவும், அதை கவனமாய்க் காக்கவும், தேர்தல் நன்கொடையாக கட்சிகளிடம் முதலீடு செய்கின்ன. தனியார் முதலீடுகளை வெளிப்படையாக எதிர்க்கும் கட்சிகளுக்கும் இவர்களின் உட் படையான கட்சிகள் வழியாக முதலீட்டு விநியோகம் முழுமை செய்யப்படுகிறது. கார்ப்பரேட் சேவையைக் கைவிட்டு இவர்கள் மக்களுக்கு ஏதும் செய்துவிட முடியுமா? ஆட்சியும், அரசும் முதலாளியத்துக்கு சொந்தமானபோது கட்சிகள் அதற்கு சேவை மட்டுமே செய்யமுடியுமே தவிர ஆட்சிக்கும், அரசாங்கத்திற்கும் சொந்தம் கொண்டாடமுடியுமா?

இதைத்தான் தேர்தல் புரட்சி என்று சொல்லிக்கொள்கிறார்கள். புரட்சி என்ற சொல் முதலாளிகளுக்கு பயத்தைக் கொடுத்தது போக, அதை தொலைதூரத்திற்கு தள்ளி நிறுத்திவிட்டதாக நினைத்து தன்னையும் முற்போக்கு சாயத்தில் முக்கி எடுத்துக்கொண்டு புரட்சிப் பேசுகிறது முதலாளித்துவம். வகை வகையாய் கொள்ளையடிக்க, பணம் பார்க்க, லாபம் என்பதே ஒற்றைக் குறிக்கோள் என்பதை மறைத்து பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சி என்று நிறநிறமாய்ப் புரட்சிப் பேசுகிறது. நிலத்துக்கு உரம் என்று பேசி இரண்டாம் உலகப்போரின் இரசாயனங்களை விற்றுத் தீர்த்தப் பிறகுஉண்மையில் மானுடத்துக்கு மரணத்தையும், நோயையும் பரிசளித்துவிட்டு இப்போது இயற்கைக்கு திரும்பு என்கிறது அது. இந்த இயற்கையிலும் பணம் பார்க்க தந்திரம் செய்துகொண்டது, தனியார்மயம். முதலாளித்துவம் முன்வைக்கும் அனைத்துப் புரட்சியும் பணவேட்டைக்கான தந்திரச்சுருக்கு தான். அதன் தொடர்ச்சிதான் இப்போது நடக்கும் தேர்தலும், இவர்கள் முழங்கும் ஒருவிரல் புரட்சியும். எதிரியே புரட்சி மோகத்தில் கட்டுண்டு இருக்கும் போது, நம்மவர், மார்க்சீயர் லேபில்காரர்கள் சும்மா விடுவார்களா? இப்போது இவர்களும் தேசிய ஜனநாயக, மக்கள் ஜனநாயக, புரட்சிப் பாதைகளின் வழியாக வந்தடைந்திருக்கும் முட்டுச்சந்து மறைமுக பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் அதே- ஒரு விரல் புரட்சிதான்.

உண்மையில் ஒரு விரல் புரட்சி! உட்பட இவை எதுவுமே புரட்சியில்லை- எதிர்ப்புரட்சி மட்டுமே. மக்கள் எழுச்சி மட்டுமே மெய்யானப் புரட்சி. அப்படியான எழுச்சிப் பேரலையில், பொய்யான புரட்சி பேசும் இரு தரப்பும் துடைத்தெறியப்படும்.

                                                                            பாவெல் சூரியன்


Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்