Skip to main content

வங்க தேசப் புரட்சியாளர் ரானோ

கனவு காணும் இன்றைய மனிதர்கள் அபாயகரமானவர்கள், ஏனென்றால் அவர்கள் விழித்திருக்கும் கண்களில் கனவுகளைக் காண்கிறார்கள், அவற்றை நனவாக்கவும் செய்கிறார்கள்

                            - டி.எச்.லாரன்ஸ்

வங்காள தேசத்தின் விடுதலைக் கனவை நனவாக்கிய வீரமிக்க முன்னணிப் போராளிகளில் ஒருவரான ஹைதர் அக்பர் கான் ரானோ கடந்த மே 11 (2024) அன்று தனது 81 வது வயதில் தாக்கா மருத்துவமனையில் உயிர் நீத்தார். வங்காள தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் புரட்சிகரப் பங்கேற்ற அவருடைய இறப்புக்கு வங்காளதேசத்தின் அனைத்து செய்தி ஊடகங்களும், ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி அனைத்து அரசியல் தலைவர்களும் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.

விடுதலைக்கான மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க ஆர்வம் கொண்டுள்ள இளம் தலைமுறையினருக்கு ரானோ அண்ணாவழிகாட்டியாக இருந்தார். புரட்சிகரக் கனவுடன் இருந்த இளைஞர்கள் சமூகப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையை எட்டுகிற துணிகரமான ஒளிமிக்க கனவுடன் அவரைச் சூழ்ந்திருந்தனர், அவருடன் தொடர்பில் இருந்தனர்.

ஹைதர் அக்பர் கான் ரானோ பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள மாகாணத்தில் கல்கத்தாவில் 1942 ஆகஸ்டு 31 அன்று பிறந்தார். பின்னர் வங்காள தேசக் குடிமகன் ஆனார். தாக்கா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பு மாணவராகச் சேர்ந்த அவர் அரசியல் ஈடுபாடு காரணமாக அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டார். பின்னர் சிறையிலிருந்தவாறே இளங்கலை சட்டம் படித்து முடித்தார்.

உழைக்கும் மக்களின் இலட்சியத்திற்கான போராளியான ரானோ மிகவும் இளம் வயதிலேயே வர்க்கப் போராட்டம் என்ற நெடுஞ்சாலையில் தனது பயணத்தை தொடங்கினார். முதலாவதாக மாணவச் செயல்வீரராக, அப்போதைய கிழக்குப் பாகிஸ்தானில், இப்போதைய வாங்காளதேசத்தில், ஜனநாயகக் கல்வி முறைக்கான மாணவ சமுதாயத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றார். கல்வியில் ஏற்றத்தாழ்வு மேலோங்கியிருந்தது. ஒரு சில பணக்காரர்களின் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கிடைத்தது. அதேவேளையில் உழைக்கும் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வாழ்கைக்கான கல்வி எட்டாக்கனியாக இருந்தது. அந்த நாட்களில் ஃபீல்டு மார்ஷல் என்று பட்டம் சூட்டிக்கொண்ட இராணுவத் தலைவரான அயூப் கான் ஆட்சியில் இருந்தார். ஹைதர் அக்பர் கான் ரானோ இராணுவ ஆட்சிக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் முக்கியத் தலைவராக இருந்தார். அப்போது தாக்காவின் முன்னணி செய்தித்தாள்களில் ஒன்று அவர் மாணவர்களின் பிரம்மாண்டக் கூட்டத்தில் ஆற்றிய தீரமிக்க உரையைக் குறித்துத் தலையங்கம் வெளியிட்டிருந்தது. அந்த மெலிந்த ஒடிசலான  மாணவர் தலைவர் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியாக இருந்த வங்காளத்தின் மூலை முடுக்குகளில் இருந்த நகரங்களில் மாணவர்களிடையே உரையாற்றி அவர்களை அமைப்பாகத் திரட்டினார். இயற்பியலில் சிறந்து விளங்கிய மாணவரான அவர் அர்ப்பணிப்பும் தியாகமும் கொள்கைப் பிடிப்பும் கொண்ட சமரசமற்ற மாணவப் போராளியாக இருந்தார்.  அரசியல் ஈடுபாடு காரணமாக அவர் நான்கு முறை சிறைத் தண்டனையை அனுபவித்தார், ஏழுமுறை தலைமறைவு வாழ்க்கையை ஏற்றார். கடின உழைப்பும் ஓய்வறியா உழைப்பும் எளிய வாழ்வும், அவருக்கு உழைக்கும் மக்களிடையேயும் தொழிலாளர்களிடையேயும் மரியாதையைப் பெற்றுத்தந்தது.

ரானோ வசதிபடைத்த குடும்பத்திலிருந்து வந்தவர், ஆனாலும் அவருடைய மனிதநேயப் பண்பு அவரை ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டக் களத்திற்கு இட்டுச் சென்றது. தனிச் சொத்து, தனிப்பட்ட வாழ்க்கைத் தொழில் மீதான நாட்டத்தைத் தவிர்த்து கம்யூனிச சித்தாந்ததை, அறிவியபல்பூர்வமான தத்துவத்தைத் தழுவிக் கொண்டார்.

ரானோவுக்கு அறிவியலில், குறிப்பாக இயற்பியலில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆற்றல் அலை வீச்சு (Quantum) இயற்பியல் தொடர்பான சிக்கல்களையும் கேள்விகளையும் விளக்கும் நூல் ஒன்றை எழுதினார். அது எளிய மக்களிடையே பணியாற்றும் செயல்வீரர்களுக்கு அறிவியலைப் பரப்புவதற்கு பெரிதும் உதவக் கூடியது.

 வங்க மொழியில் ரான் என்றால் போர், அவர் வர்க்கப் போரில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டதால் ரானோ என்று பெயரில் அறியப்பட்டார். உழைக்கும் மக்களின் நலனுக்காகப் போராடுவதிலும் வர்க்க அமைப்புக்களை கட்டியமைப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தலைநகரிலிருந்து பல மைல்கள் தொலைவிலிருந்த டோங்கி நகரில் தொழில்துறை தொழிலாளர்களை அமைப்பாக்கிய காலம் அவருக்கு ஒளிமிக்க காலமாக இருந்தது. அங்குதான் அவர் புகழ்பெற்ற விடுதலைப் போருக்கான கெரில்லா அணியை அமைத்தார்.

அங்கு தொழிலாளர் குடியிருப்புக்களில் பல நாட்களைக் கழித்தார். அந்தக் குடியிருப்புக்கள் மிகவும் தாழ்வாக இருக்கும், அவரால் நிமிர்ந்துகூட நிற்கமுடியாது. அங்கு பல தொழிற்சங்கங்களுக்கு வழிகாட்டியாகவும் பல படிப்பு வட்டங்களை உருவாக்கியும் செயல்பட்டு வந்தார். தொழிலாளர்களுக்காகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது, பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பது அவருடைய வாழ்வின் அன்றாடப் பகுதிகளாயின. இந்தக் காலகட்டத்தில், 1969—70 இல், தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொழிற்சாலை நிர்வாகிகளை முற்றுகையிட்டனர், அதற்காகத் திட்டமிடும் பணியில் ரானோ செயலூக்கத்துடன் பணியாற்றினார்.

கிழக்குப் பாகிஸ்தானின் விடுதலைப் போரில் 1971 இல் பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் நர்சிங்டி பகுதியில் கம்யூனிஸ்டுகள் தீவிரமாகப் போராடிவந்தனர். அங்கு பல விடுதலைப் பகுதிகளை நிறுவினர். அந்த ஆயுதப் போருக்குத் தயாரிப்புச் செய்வதில் ரானோ தீவிரப் பங்காற்றினார். நர்சிங்டி என்ற பகுதியில் இயங்கிவந்த கம்யூனிஸ்டு குழுவில் அவர் இடம் பெற்றிருந்தார். அங்கு கெரில்லா மண்டலங்கள், கள மருத்துவமனைகள், ஆயுதப் பயற்சிக் கூடங்கள், ஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றை நிறுவுவது, தேசிய அளவில் அரசியல் தலைமைகள் மற்றும் இராணுவத் தலைமைகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, ஆயுதங்கள் வெடிமருந்துகளைச் சேகரிப்பது, அறிவிப்புக்களை வெளியிடுவது ஆகியவற்றில் ரானோ முக்கியப் பங்காற்றினார். கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பகுதிக்குள் பாகிஸ்தான் படைகளால் நெருங்கக் கூட முடியவில்லை. அங்கு மக்கள் ஜனநாயக வங்காள தேசத்தை நிறுவுவதற்காக விவசாயிகளும் தொழிலாளர்களும் ஆயுதம் தாங்கிப் போரிட்டனர்.

சுரண்டப்படும் உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்துக்கான கொள்கைப் பிடிப்புடன் கூடிய நிலைப்பாட்டில் ரானோ இருந்தார். இது குருசேவியத் திரிபுவாதிகளின் நிலைப்பாட்டிற்கு எதிரானதாக இருந்தது. வங்க தேசக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமைக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். அவர் ஸ்டாலினைப் பின்பற்றினார். ஸ்டாலினைப் பற்றிய ஒரு நூலையும் எழுதினார். மேலும் புரட்சியாளர்களின் ஒரு புதிய தலைமுறையைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் மார்க்சியம், வரலாறு, முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், முதலாளிகளும் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளும், சோசலிசம், சோவியத் ஆட்சி முறை, கம்யூனிச முகாம்களில் அரசியல் விவாதம், வங்காள தேச விடுதலைப் போரில் இடதுசாரிகளின் பாத்திரம் ஆகிய தலைப்புக்களில் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 2022 ஜனவரியில் அவருக்கு வங்காள அகாடமி இலக்கிய விருது அளிக்கப்பட்டது.. “நாம் ஏராளமாகக் கற்க வேண்டியுள்ளது, ஏராளமான சமூக அரசியல் பிரச்சனைகள் குறித்த ஆய்வே இல்லாத நிலை இருக்கிறதுஎன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மக்களை நேசித்த, மக்களுக்காக எழுதிய, மக்களுக்காகப் போராடிய மாபெரும் தலைவர். இடையறாத அரசியல் மற்றும் சித்தாந்த விவாதங்களில் சுரண்டப்படும் மக்களின் விடுதலையில் அவர் உறுதியுடன் இருந்தார். அப்படிப்பட்ட விவாதங்கள் ஒன்றில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். கட்சியைவிட்டு விலக நேர்ந்த போதும் அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து விலகவில்லை. வர்க்கப் போராட்டத்துக்கான அறைகூவலை அவர் ஒருபோதும் நிறுத்தியதில்லை.

சுரண்டப்படும் மக்களே எழுக! அடிமை விலங்குகளை உடைத்தெறியுங்கள், மலையெனக் குவியும் அவமதிப்புக்களைப் புறந்தள்ளுங்கள், சுரண்டலின் அதிகார மையத்தை தகர்த்தெறியுங்கள் இதுவே தோழர் ரானோவின் இரக்கமற்ற போர் முழக்கம், இதுவே அவரது தடுமாற்றமற்ற அரசியல் நிலைப்பாடு.

வங்காள தேச மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற மாபெரும் பாட்டாளிவர்க்கத் தலைவர் ரானோவின் புகழ் நீடு வாழ்க!

(ஆதாரம்: Wikipedia, countercurrents.org இல் வெளிவந்த வங்காள எழுத்தாளர் ஃபரூக் சௌதுரி அவர்களின் கட்டுரை, Daily Star’s Google News.)


தமிழில் நிழல்வண்ணன்

Comments

  1. வங்க தேசம் புரட்சி பாதை செல்லாமல் போனது வருத்தம் அடைய செய்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...