Skip to main content

நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளும் பிரமைகளும்!

ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்திற்கான 18-வது தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. நானூறு இடங்களைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெறுவோம் என்று களத்தில் இறங்கிய பாஜக பரிவாரங்களும் மோடியும் தங்களுடைய பிரச்சார பீரங்கிகளை நாடெங்கும் முடுக்கிவிட்டனர். மூலைமுடுக்கெல்லாம் தங்களுடைய வெறுப்புப் பேச்சுகளால் மக்களுடைய மனங்களில் விசத்தைப் பரப்பினர். உண்மைகளைத் திரித்தும் வதந்திகளைப் பரப்பியும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தினர். மக்களை உண்மையை அறிய முடியாமல் தடுத்தனர்.

பொய்களாலும் புனைசுருட்டுகளாலும் கட்டமைக்கப்பட்ட மோடி என்ற பிம்பதைக் காட்டி நாடு முழுவதும் வாக்குகளை அறுவடை செய்யத் திட்டமிட்டது பாஜக. மோடி நாடு முழுவதும் சென்று தேர்தல் பரப்புரை செய்வதற்கு ஏதுவாகவே ஏப்ரல் 19ல் தொடங்கி ஜூன் 1 ல் முடியும் வகையில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது. ஓராண்டு காலமாக மணிப்பூர் இனக் கலவரத்தால் பற்றி எறிந்து வந்த போதும் அம்மாநிலத்திற்கு ஒரு முறை கூட இந்த நாட்டின் பிரதமர் மோடி செல்லவில்லை. அந்த மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. ஆனால் தேர்தலுக்காகப் பரப்புரை செய்வதற்கு எனத் தமிழ்நாட்டிற்கு மட்டும் எட்டு முறை வந்தார். இந்த நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன? மோடியை இயக்குவது, பாஜக வினர் வாய்ச்சவடால் அடித்துக் கொள்வது போல, தேசப்பற்றோ மக்கள் மீதான பற்றோ அல்ல, பதவியை, அதிகாரத்தை எப்படியாவது மீண்டும் பிடித்தாக வேண்டும் என்ற வெறிதான் என்பதை மோடியின் செயல்பாடுகள் தோலுரித்துக் காட்டுகின்றன. 

மீண்டும் ஆட்சியைப்பிடிப்பது ஐயத்திற்கிடமான நிலையில், மோடி தான் இந்த நாட்டின் பிரதமராக உள்ளோம் என்பதையும் மறந்து மூன்றாம் தர, நான்காம் தர மேடைப்பேச்சாளர்களைப் போல கீழ்த்தரமாகப் பேச ஆரம்பித்தார். காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கையை. முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கை போல உள்ளது எனச் சாடினார். காங்கிரசு கட்சியின் தலைமையில் உள்ள ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ‘உங்களிடம் இரண்டு எருமைகள் இருந்தால் ஒன்றைப் பிடுங்கி முஸ்லீம்களுக்குக் கொடுத்துவிடுவார்கள்’என்று இந்து மக்களை அச்சுறுத்தினார். முஸ்லீம் மக்களை ‘ஊடுருவல்காரர்கள்’ என்றும் ‘அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்பவர்கள் என்றும் கேவலப்படுத்தினார். இவருடைய பெற்றோர்கள் ஆறு குழந்தைகளைப் பெற்றனர் என்பதைக் கூட மறந்து விட்டு முஸ்லீம்கள் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் எனப் பேசுவது தான் மிகப்பெரும் முரண்நகை. இதைவிடப் பெரும் முரண்நகை என்னவென்றால் முஸ்லீம்களை மோடி இழிவுபடுத்திப் பேசிய ராஜஸ்தான் மாநில பன்ஸ்வாரா தொகுதியில் பாஜக படுதோல்வி அடைந்தது தான். 

நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து மோடி வேக வேகமாக அயோத்தியில் இராமருக்குக் கோயில் கட்டினார். விரதம் இருந்து இந்துக்களின் புனித தலங்களிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். நாட்டிலுள்ள முதலாளிகளையும் நடிகர்களையும் பெரும் சொத்துடையவர்களையும் மடாதிபதிகளையும் அழைத்து ‘தலைமைப் பூசாரியாக’முன்னின்று பால ராமருக்கு ‘பிரதான் பிரதிஷ்டை’ செய்து வைத்தார். பாஜகவினரும் சங்கப் பரிவாரங்களும் அயோத்திய இராமர் கோயிலுக்கு நாடெங்குமிருந்தும் மக்களை இலவசமாக அழைத்துச் செல்வதாக அறிவித்தனர். இராமர் பக்தியில் மூழ்கி மக்கள் வெற்றிக்கனிகளைத் தங்கள் கரங்களில் அள்ளித்தருவார்கள் என மனப்பால் குடித்தனர் பாஜகவினர். 'அரிய செயல்களை நிறைவேற்றுவதற்காக தனது பிறப்பு நிகழ்ந்துள்ளது’ எனக் கூறி தெய்வீக வேடம் புனைந்தார் மோடி; குமரிமுனையில் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதாகக் கூறி அதைப் படம் பிடித்து உலகம் முழுவதும் பரப்பச் செய்தார். ஆனால் மக்களோ இவர்களுடைய சூழ்ச்சிக்கு இரையாக இல்லை. பக்தியில் மூழ்கி மதி இழக்கவில்லை. மாறாக மோடிக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத கசப்பான பாடத்தைக் கற்பித்தனர். 

அயோத்தியா சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கியுள்ள ஃபைசாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளரை மண்ணைக் கவ்வச் செய்தனர் மக்கள். ஃபைசாபாத் ஒரு பொதுத் தொகுதி. ஆனால் அந்தத் தொகுதியில், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அவதேஷ் பிரசாத் என்ற தலித் வேட்பாளரை மக்கள் வெற்றி பெறச் செய்தனர்; அதன் மூலம் பாஜகவின் பார்ப்பனிய இந்துத்துவக் கொள்கைக்கு மரண அடி கொடுத்துள்ளனர். 

அயோத்தியில் இராமனுக்குக் கோயில் கட்டியதன் மூலம் தங்களுடைய இலட்சியங்களில் மிக முக்கியமான ஒன்றை சாதித்து விட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டது பாஜக.. ‘இராம ராஜ்ஜியத்திற்கு’ அடிக்கல் நாட்டி விட்டதாகக் கூறியது. இனி நாட்டில்’ பாலாறும் தேனாறும்’ என்று மக்களை நம்பச் சொன்னது.. உண்மையில் ‘பாலாறும் தேனாறும்’ ஓடத் தொடங்கியது. ஆனால் அது மக்களுக்கு இல்லை. 

பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட இராமர் கோயிலும் புதுப்பிக்கப்பட்ட தொடர்வண்டி நிலையமும் புதியதாகத் திறக்கப்பட்ட விமான நிலையமும் நாடெங்குமிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தன. அவர்களுக்குச் சேவை செய்ய தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் நவீன வசதிகளுடன் பெருகின. இராமர் கோயிலைச் சுற்றிலும் உள்ள நிலத்தின் மதிப்பு பன்மடங்கு பெருகியது. பெரும் நில உடைமையாளர்களும் மனை ஊக பேர வியாபாரிகளும் (real estate Speculators) கொழுத்தனர். அதே சமயத்தில் கோயிலின் விரிவாக்கத்திற்காகவும் கோயிலைச் சென்றடைவதற்காகப் பாதைகளை அகலப்படுத்துவதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளும் சிறு கடைகளும் இடிக்கப்பட்டன. இடிக்கப்படுவதிலிருந்து சிறு கோயில்களும் தப்பவில்லை. இராமருக்குக் குடியிருக்க பிரம்மாண்டமான கோயில் கிடைத்தது. ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்தனர். இராமனின் பெயரால் தங்களுடைய வாழ்வை இழக்கச் செய்த மோடியின் மீதான மக்களின் ஆற்ற முடியாத சினம் தான் பாஜக வேட்பாளாரைத் தோல்வியுறச் செய்தது. 

புராண நாயகனுக்குக் கோயில் கட்டினாலும் குடமுழுக்குச் செய்தாலும் தலைமைப் பூசாரியாக வேடம் பூண்டாலும் தெய்வீகப் பிறவி எனக் கூறிக் கொண்டாலும் மக்கள் ஏமாந்து வாக்களித்து விடமாட்டார்கள். தங்கள் வாழ்க்கையின் எதார்த்தத்திலிருந்தே எந்த மனிதனையும் எந்தக் கட்சியையும் மக்கள் எடை போடுவார்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை மக்கள் நன்கு அறிந்தவர்கள். 

ஒரு புறம், பெரும்பான்மையாக உள்ள இந்து மக்களின் ஏழ்மைக்கும் வறுமைக்கும் சிறுபான்மையாக உள்ள முஸ்லீம்கள்தான் காரணம் எனக் கூறி அவர்கள் மீது வெறுப்பை மூட்டுவதன் மூலம் பிரச்சினையைத் திசை திருப்புகிறது பாஜக., இந்து மக்களின் வறுமைக்கும் ஏழ்மைக்கும் காரணமாக இருக்கும் இந்து மதத்திலுள்ள முதலாளிகள் மற்றும் பெரும் பண்ணை முதலாளிகளின் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் மறைத்து வருகிறது; அவர்கள் வீசும் எலும்புத் துண்டுகளுக்காக விசுவாசத்துடன் அவர்களுக்குச் சேவகம் செய்து வருகிறது; இன்னொரு பக்கம், மக்களை பக்தி என்னும் போதையில் வீழ்த்தி மதி இழக்கச் செய்து உண்மையைப் பார்க்க விடாமல் தடுக்கும் வேலையைச் செய்து வருகிறது. 

ஆனால் மக்கள் இவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகவில்லை. இவர்களின் வார்த்தை ஜாலங்களும் வாய்ச் சவடால்களும் மக்களிடையே நிலவி வந்த ஏழ்மையையும் வேலை இல்லாத் திண்டாட்டத்தையும் போக்கவில்லை. நாள்தோறும் விசம் போல ஏறி வரும் விலைவாசிகளைக் குறைக்கவில்லை. நாளுக்கு நாள் தங்களுடைய வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி அடைந்து வருவதை மக்கள் உணர்ந்தார்கள். தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து அரிய பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளார்கள். அதனால்தான் தமது இந்துத்துவாக் கோட்டை, அதை யாராலும் தகர்க்க முடியாது என பாஜகவினர் இறுமாந்திருந்த உத்தரப் பிரதேசத்தில் மக்கள் பெரும் அடியைத் தந்து அவர்களின் அகங்காரத்தைத் தகர்த்துள்ளனர். உத்தரப் பிரதேசத்திலுள்ள 80 இடங்களையும் கைப்பற்றுவோம் என்று வாய்ச் சவடால் அடித்து வந்த அவர்களின் வாயில் மண்ணைப் போட்டுள்ளனர் அந்த மாநில மக்கள். அங்கு அவர்களால் 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. உத்தரப் பிரதேசத்தில் அவர்கள் அடைந்த தோல்விதான் நாடாளுமன்றத்தில் அவர்கள் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தடுத்தது எனக் கூறலாம். 

நானூறு தொகுதிகளில் வெற்றிபெற்று விட்டால் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தித் தங்கள் விருப்பம் போல இந்து ராஷ்ட்ராவை அமைத்து விடலாம் என்று மனப் பால் குடித்து வந்த அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை; அமுலாக்கத் துறை, வருமான வரித் துறை, மத்தியப் புலனாய்வுத் துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் துணையுடன் களத்தில் நின்ற போதும் 240 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது. குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களில் பாஜக எதிர்பார்த்தது போல வெற்றி பெற முடியவில்லை. தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசக் கட்சி, நித்திஷ் குமாரின் ஜனதா கட்சி (அய்க்கியம்) ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

மோடியை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்பதுதான் உண்மை. ஆனால் மோடியோ தனிப்பெரும்பான்மை பெறாத நிலையிலும் 75 ஆண்டு கால இந்திய வரலாற்றில் நேருவுக்குப் பிறகு தான் மட்டுமே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து உள்ளதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். தான் பெற்ற வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி என உலகளவில் பெருமை பாராட்டிக்கொள்கிறார். 

கூட்டணி ஆட்சி என்பது மோடிக்கு புதியது. அதிகார மனப்பான்மை கொண்ட மோடி தனது இயல்பை மாற்றிக்கொண்டு ஜனநாயகப் பண்புகளுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இணைந்து செயல்படுவாரா என்பது பெரிய கேள்விக்குறிதான். ஆனால் சந்திரபாபு நாயுடுவின் கட்சியும் நித்திஷ் குமாரின் கட்சியும் சந்தர்ப்பவாதமும் பதவி வெறியும் கொண்ட முதலாளியக் கட்சிகள்தான். எனவே மோடியின் சர்வாதிகாரத்தைச் சகித்துக்கொண்டு தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு இடையே பெரிய முரண்பாடுகள் எழ வாய்ப்பில்லை என்றே கருதலாம். 

காங்கிரசு கட்சியின் தலைமையில் அமைந்திருந்த இந்தியா கூட்டணி 232 இடங்களைப் பெற்ற நிலையில் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் அதைத் தனக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறது; பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் அது முன்பு போல சர்வாதிகாரமாக நடந்து கொள்ள முடியாது எனக் கூறுகிறது; இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றிவிட்டதாகவும் அதன் மூலம் இந்தியாவில் ஜனநாயத்தைக் காப்பாற்றிவிட்டதாவும் கூறிக் கொள்கிறது; அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதான பிரமைகளைப் பரப்பி வருகிறது. 

இவர்கள் கூறுவது போல அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து வராமல் காப்பாற்றிவிட்டாலே போதும். அது ஜனநாயகத்துக்கும் மக்களின் நலன்களுக்கும் உறுதி அளித்து விடும் எனக் கருதலாமா? 

இந்த அரசியல் அமைப்புச் சட்டக் காலத்தில் தான் 1975 ல் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்து இந்தியாவில் பாசிச ஆட்சியைக் கொண்டு வந்தார். MISA (Maintenance of Internal Security Act) என்ற மக்கள் விரோதச் சட்டத்தைக் கொண்டுவந்தார். காங்கிரசு ஆட்சியில் தொடர்ந்து TADA, POTA, UAPA போன்ற கருப்புச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்கப் பயன்படுத்தப்பட்டன. 

இந்தியா மதச்சார்பற்ற நாடு எனக் கூறும் இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் காலத்தில் தான் பாஜக ஆட்சி மத அடிப்படையில் பாரபட்சம் காட்டும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது; ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தைப் பறித்தது; நாட்டையே போலீஸ் ராஜ்யமாக (police State) மாற்ற வழிவகுக்கும் வகையில் இந்தியத் தண்டனைச் சட்டம், இந்திய சாட்சி சட்டம், குற்றவியல் சட்டம் ஆகியவற்றை மாற்றி அமைத்தது. 

இந்த அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போதுதான் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் என்ற பெயரில் பன்னாட்டு மூலதனம் நமது நாட்டுக்குள் தங்கு தடையின்றி நுழைந்து நம்முடைய மக்களின் உழைப்பைச் சுரண்டவும் நம்முடைய இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கவும் கதவுகள் அகலத் திறக்கப்பட்டன. மக்களின் வரிப் பணத்தால் உருவாக்கப்பட்ட பொதுத்துறைகள் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டன. 

எனவே இந்தியா கூட்டணியினர் கூறுவது போல அரசியல் சட்டத்தை விண்ணம் படாமல் காப்பாற்றி விட்டால் மட்டும் போதும். அது மக்களுக்கான ஜனநாயகத்தையும். சுதந்திரத்தையும் நல்வாழ்க்கையும் உறுதிப்படுத்தி விடும் எனக் கருதுவதை விட அறியாமை எதுவும் இருக்க முடியாது. 

இந்த அரசியல் அமைப்புச் சட்டம் உடைமை வர்க்கத்தின் பிரதிநிதிகளால் முதலாளிகள், பண்ணை உடைமையாளர்கள் ஆகியோரின் நலன்களைக் காப்பாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை அனைத்தும் ஆளும்வர்க்கமாக உள்ள முதலாளிய வர்க்கத்தின், உடைமை வர்க்கத்தின் நலன்களைக் காப்பாற்றுவதற்காக இருப்பவை. மக்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களுக்காகப் போராடும் போது எல்லாம் மக்கள் விரோதச் சட்டங்களை, கருப்புச் சட்டங்களை இயற்றி அவர்களை அடக்கி ஒடுக்கவும் இந்த அரசியல் அமைப்புச் சட்டம் தான் வழி வகுக்கிறது. மாநிலங்களின் உரிமைகளை வெட்டிக் குறுக்கவும், பறிக்கவும் இந்த அரசியல் அமைப்புச் சட்டம் தான் வழிவகுக்கிறது. எனவே இந்த அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு ஜனநாயகத்தையும், நீதியையும், வளமான வாழ்வையும் உத்தரவாரப்படுத்தவில்லை என்பதையே கடந்த எழுபதாண்டு கால இந்திய வரலாறு நமக்கு உணர்த்துகிறது. 

தங்களுடைய ஆட்சியின் கீழ் உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உயரப்போகிறது என பாஜக வினர் இன்று தம்பட்டமடித்துக் கொள்கின்றனர். ஆனால் புதிய தாராளவாதக் கொள்கையின்படி ஏக போக முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு ஏதுவான பொருளாதாரக் கொள்கைகளை நடை முறைப்படுத்தி வரும் ஆட்சியாளர்கள் நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி வருகின்றனர். தொழிலில் முதலீடு செய்வது குறைந்து வருகிறது. வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கான ஒட்டுமொத்த வேண்டல் (demand) குறைந்து வருகிறது. வேண்டலை அதிகரிக்க கடன் செலாவணி ஊக்குவிக்கப்படுகிறது. அதனால் இன்று இந்தியப் பொருளாதாரம் பெரும் அளவு கடன் சார்ந்த பொருளாதாரமாக மாறி உள்ளது. எனவே கடன் செலாவணி மூலம் ஊதிப்பெருக்கப்பட்டுள்ள இந்தக் குமிழி எந்த நேரத்திலும் வெடித்துப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும். அதன் விளைவாக எழும் மக்கள் போராட்டங்கள் பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கும். நெருக்கடியிலிருந்து ஆளும் வர்க்கத்தைத் காப்பாற்ற ஆட்சியாளர்கள் கொடுங்கோன்மைச் சட்டங்களைக் கொண்டு மக்களை அடக்கி ஒடுக்க முற்படுவார்கள். அதற்கு இப்பொழுது நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புச் சட்டம் ஒரு சிறிதும் தடையாக இருக்கப் போவதில்லை. 

எனவே மக்கள் தங்களுடை கண்ணியமான வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஜனநாயகத்திற்கும் உண்மையான உத்தரவாரம் வேண்டுமானால் தங்களைச் சுரண்டலுக்கும் அடிமைத்தனத்திற்கும் ஆட்படுத்தி வரும் நிலவுகின்ற முதலாளிய சமூக அமைப்பை மாற்றி அனைவருக்கும் சமத்துவத்தையும் உண்மையான ஜனநாயகத்தையும் வழங்கக் கூடிய சோசலிச சமூக அமைப்பை உருவாக்க வேண்டும். அத்தகைய சோசலிச அமைப்பை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்புச் சட்டமே மக்களுக்குத் தேவை. 

-       மு.வசந்தகுமார்


Comments

  1. 18-ஆவது மக்களவைத் தேர்தல்கள் குறித்தும், விளைவுகள் குறித்தும் இந்தக் கட்டுரை உண்மை நிலவரத்தையும், தேர்தல் முடிவுகள் குறித்த சில பின்னணிகளையும், வரப் போகும் சூழ்நிலை குறித்தும் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளது.

    அரசியல் அமைப்புச் சட்டத்தின் தன்மையை, கடந்தகால விவரங்களோடு எடுத்துக் கூறி, "இந்த அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு சனநாயகத்தையும், நீதியையும், வளமான வாழ்வையும் உத்தரவாரப்படுத்தவில்லை என்பதையே கடந்த எழுபதாண்டு கால இந்திய வரலாறு நமக்கு உணர்த்துகிறது" என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது. மிகவும் ஆணித்தரமான பின்னணி விவரங்களை எடுத்து வைத்து, மிகவும் எளிமையான நடையில் எழுதப்பட்டிருப்பது, கருத்துக்களை அனைவரும் புரிந்து கொள்ள வகை செய்கிறது.

    இறுதியில் இந்த ஆய்வுக் கட்டுரை, ".....மக்கள் தங்களுடைய கண்ணியமான வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் சனநாயகத்திற்கும் உண்மையான உத்தரவாதம் வேண்டுமானால் தங்களைச் சுரண்டலுக்கும் அடிமைத்தனத்திற்கும் ஆட்படுத்தி வரும் நிலவுகின்ற முதலாளிய சமூக அமைப்பை மாற்றி அனைவருக்கும் சமத்துவத்தையும் உண்மையான சனநாயகத்தையும் வழங்கக் கூடிய சோசலிச சமூக அமைப்பை உருவாக்க வேண்டும்" என்று முடித்திருப்பது மிகவும் சரியான தீர்வாகும்.

    இந்தத் தீர்வை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்