Skip to main content

இந்திய அரசே, பாலஸ்தீன மக்களைக் கொல்ல ஆயுதங்களை ஏற்றுமதி செய்யாதே!

 

கடந்த ஆண்டு அக்டோபர் 7ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீன மக்களை அடக்கி ஒடுக்கி வரும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தனர்; 1200 இஸ்ரேலியர்களைப் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். தற்காப்பிற்காகப் பதிலடி கொடுப்பதாகக் கூறிக்கொண்டு கடந்த ஒன்பது மாதங்களாக இஸ்ரேலின் பாசிச நெதான்யாகு அரசு வரலாறு காணாத அளவுக்குக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைத் தொடுத்து பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்து வருகிறது. இதுவரையிலும் 37,000 பேருக்கும் மேல் போரில் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அதில் 70% மேல் குழந்தைகளும் பெண்களும் ஆவர். பல்லாயிரக்கணக்கானோர் கை, கால்களை, கண்களை இழந்து நடைபிணமாக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் அரபு நாடுகளிலும் என உலகெங்கும் இஸ்ரேலின் மனிதகுல அழிப்புப் போருக்கு எதிரான போராட்டங்களை மக்களும் மாணவர்களும் நடத்தி வருகின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியமோ ஒருபக்கம் ஒப்புக்காக இஸ்ரேலிடம் போரை நிறுத்துமாறு கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் போரை நடத்துவதற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி வருகிறது. மத்திய ஆசியாவில் தன்னுடைய நலன்களைக் காப்பதற்கான அடியாளாகச் செயல்படும் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா ஆயுதங்கள் அளிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 

ஆனால், இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தத்திற்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், பாலஸ்தீனர்களுக்கான தனி ஒரு நாட்டை உருவாக்குவதன் மூலமே இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என ஒரு புறம் கூறிக் கொண்டே இன்னாரு புறம் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி வரும் இந்திய அரசின் இரட்டைவேடம் இன்று உலக அரங்கில் அம்பலமாகியுள்ளது. அய்தராபாத்தில் ஆயுதம் தயாரிக்கும் ஆலை ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் 900 ட்ரோன்களை இஸ்ரேலிய இராணுவத்திற்கு வழங்கியுள்ளது. இந்த ஆலை இந்திய முதலாளி அதானிக்கும் இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் (Elbit Systems) என்னும் நிறுவனத்துக்கும் சொந்தமான கூட்டு நிறுவனமாகும். அதுமட்டுமல்லாமல் கடந்த மே மாதம் மரியன்னே டானிக்கா (Marianne Danica) என்னும் கப்பல் மூலம் 27 டன்கள் ஆயுதங்களை இந்திய அரசு இஸ்ரேலுக்கு அனுப்பி உள்ளது. இந்தச் செய்தியை Ynetnews என்னும் இஸ்ரேல் செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தி உள்ளது. 

உலக அமைதிக்கே மோடியின் தலைமையில் உள்ள இந்தியா வழி காட்டுகிறது எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மோடி ஆட்சியின் இரட்டை வேடம் இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. ஆயுதங்களைத் தயாரிக்கும் முதலாளிகள் தங்கள் இலாபத்திற்காக உலகெங்கும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்து மரண வியாபாரிகளாக இருக்கின்றனர். இவர்களுக்கு உலகம் அமைதியாக இருக்கக் கூடாது. உலகின் ஏதாவது ஒரு பகுதியில் யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் தாம் தயாரிக்கும் ஆயுதங்களை விற்றுக் கொள்ளை இலாபம் அடிக்க முடியும். மனித குலத்தின் இரத்தத்தைக் குடித்துத் தம் தொந்திகளைப் பெருக்கிக் கொள்ளும் இரத்தக் காட்டேரிகள் இவர்கள். இந்தப் பட்டியலில் இன்று இந்திய முதலாளிகளும் இணைந்து கொண்டுள்ளனர். அதற்கு இந்திய அரசும் துணைபோகிறது. 

ஆயுதங்கள் ஏற்றுமதி மூலம் மனித குலத்திற்கே எதிராகச் செயல்படும் இந்திய முதலாளிகளையும் அதற்குத் துணை போகும் இந்திய அரசையும் வன்மையாகக் கண்டிப்போம்! இந்திய அரசே, பாலஸ்தீன மக்களைக் கொல்ல ஆயுதங்களை ஏற்றுமதி செய்யாதே! என உரக்கக் குரல் எழுப்புவோம்!

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

தமிழ்நாடு


Comments

Popular posts from this blog

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...