Skip to main content

இந்த நாளும் கடந்து போகும் - முனைவர் சாய்பாபா.

 

இந்த நாளும் கடந்து போகும்

தலைசுற்றல், குமட்டல், மூச்சுவிட இயலாமை
வழுவழுப்பான இன்றைய செய்தித்தாளில்
எனது நாட்டின் வண்ண வரைபடங்கள்
எனது பார்வையை மங்கச் செய்கின்றன
 
கொழுத்த இலாபங்களுக்காக
பெரு வணிக நிறுவனங்கள்
தொன்னூறு விழுக்காடுவரை
தள்ளுபடி அறிவித்து
கொண்டாடுகின்றன
 
உள்நாட்டு மொத்த உற்பத்திக் குறியீடு
இக்காலாண்டில் என்றைக்கும் விட உயரப்போவதாக
அதிகாரபூர்வ மதிப்பீடுகள் முன்னறிவிக்கின்றன
புனித நாளில் உரத்த சீற்றமிகு குரலில்
சந்தைகள் கர்ஜனை செய்கின்றன
 
அரசு எனக்களித்த உறைவிடத்தின்
வானுயர்ந்த சுவர்களுக்கு அப்பால்
தீவுச் சதுக்கத்தைச் சுற்றிலும்
போக்குவரத்து நெருக்கடியில்
ஆதரவற்ற குழந்தைகள்
அரை-நிர்வாண சீருடைகளில்
துயரத்துடன் மெலிந்த கரங்களில்
சீனத் தயாரிப்பு தேசபக்தக் கொடிகளுடன்
கையேந்திக்கொண்டிருக்கிறார்கள் என
செய்திகள் தெரிவிக்கின்றன
 
தலைசுற்றல், குமட்டல், மூச்சுவிட இயலாமை
சிறை மருத்துவர் கேட்கிறார்,
அன்றாடம் காலையில் மாத்திரைகள்
எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா?
சில்லுசில்லாய் வலியின் துகள்கள்
எனது கலங்கிய கண்களில்
புழுதிப் புயலை வீசுகின்றன
அவர் பரிசோதனையை முடித்துக்கொள்கிறார்
உங்கள் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறது
கவலைப்பட ஒன்றுமில்லை.”
 
அரசுத் தரப்பு வழக்கறிஞர்
மாண்பமை நீதிமன்றத்திடம் சொல்கிறார்:
அவரது முக்கிய உடலுறுப்புக்கள் இப்போதைக்கு
திடமாக இருக்கின்றன.”
எதிர்த்தரப்பு வழக்கறிஞர் தனது குரலை உயர்த்துகிறார்
அவரது முக்கிய உறுப்புக்களில் எவை திடமாக இருக்கின்றன
ஒவ்வொன்றும் எவ்வளவு காலமாக அப்படி இருக்கின்றன?”
 
தலைசுற்றல், குமட்டல், மூச்சுவிட இயலாமை
 
ஆட்சியின் பொருளியலாளர்கள்
சுட்டிக்காட்டுகிறார்கள்,
மக்களில் பாதிப்பேர் துன்பத்தில் உழல்கையில்
சந்தைகள் விலங்குணர்வுடன் செயல்படுகின்றன
 
அமேசான், ஃபிளிப்கார்ட்
மன்னிக்கவும், வால்மார்ட்,
இந்துஸ்தான் லீவர்
அதாவது, யுனி லீவர் யு.கே.
தாமஸ் குக்,
ஃபேஸ்புக்,
அலிபாபா, ஓப்போ
ஒன் பிளஸ், பே டிஎம்
சோனி, சாம்சங்,
மைக்ரோசாஃப்ட், பிக்பாஸ்கட்
பிக்பஜார், ஜியோ, ஜகுவார்,
ஹோன்டா, டாட்டா, பாட்டா,
ரிலையன்ஸ் டிஃபென்ஸ்
புனித நிகழ்வுக்கு மூவண்ணத்தில்
சிறப்பு சலுகைளை அறிவிக்கின்றன
 
தேசம் வண்ணமய வணிகங்களால்
தழைத்தோங்குகிறது
 
அலங்காரச் சொற்களில்
பேச்சுவன்மைமிக்க தலைவர்  அறிவிக்கிறார்
வானொலி உளறிக்கொட்டுகிறது
 
“இந்த நாடு செய்யப்பட்டதல்ல
நினைவுக்கெட்டா காலங்களில் பிறந்தது.
பூமியில் மிகவும் பழமையானது
உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்”
 
எனது கடவுளின் இருப்பிடத்தில்
அவரது ஆசீர்வதிக்கப்பட்ட சமையலறையிலிருந்து
எண்ணெய் வழிய கருஞ்சிவப்பு நிறத்தில்
காலை 9.30 மணிக்கு
புனித பக்கோடாக்கள் வருகின்றன
ஆனால் அடிப்படையில் நிறுவனத் தயாரிப்பின் தோற்றத்தில்,
தொடர்வண்டி அல்லது பேருந்து நிலையங்களின் வெளிப்புறத்தில்
அல்லது நடைபாதையில்
தேசத்தின் வேலையற்றோர், சுயவேலையில் உள்ளோரால்
முழுநிறைவாய் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை போல.
 
தலைசுற்றல், குமட்டல், மூச்சுவிட இயலாமை..
 
எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்கச்சொன்ன
மருத்துவரின் அறிவுறுத்தல் மனதில் வருகிறது
பதினெட்டு பிற முக்கிய உறுப்புக்கள் போல
எனது கணையமும் நலிவுறுகிறது
ஆனால் சுதந்திரதின பக்கோடாக்களை
நீங்கள் மறுக்கக்கூடாது
இல்லையென்றால் உங்கள் பெயர்
தேசத் துரோகக் கணக்கில் சேர்க்கப்படும்
 
உங்கள் சாதியைப் போல
உங்கள் தேசியவாதத்தையும்
ஒருபோதும் மறுக்க முடியாது
முதன்மை வாயிலுக்கு வெளியே
முன்னதாக காவலர்கள் பெரிய கொடிக்கு
வணக்கம் செலுத்த, ஒலிபெருக்கிகளிலிருந்து
பெருக்கெடுக்கும் பாலிவுட் தேசபக்தப் பாடல்கள்
தொடர்கின்றன
 
தலைசுற்றல், குமட்டல், மூச்சுவிட இயலாமை
சுதந்திர மக்களுக்கு அது ஒரு விடுமுறை நாள்
ஆனால் உள்ளே
ஒவ்வொரு பொதுவிடுமுறை நாளிலும் போல
அல்லது பரபரப்பான பண்டிகை நாளில் போல
முன்கூட்டியே நீண்ட பதினெட்டு மணிநேர
சிறையடைப்பு
சிறப்பு விருந்து மதியம் 1.30 க்கு
எண்ணெய் வழியும் உருளைக் கிழங்கு சோறு
 
எனதறையில் நான்
வழுவழுப்பு செய்தித்தாளுக்குத் திரும்புகிறேன்

_________________________________

2018 ஆகஸ்டு 15 அன்று சிறையில் முனைவர் சாய்பாபாவால் எழுதப்பட்டது. அவரது துணைவியார் வசந்தகுமாரி அவர்களால் வெளியிடப்பட்டது24. ஏப்ரல் 2020 அன்று காரவன் இதழில் வெளியானது.

 

தமிழில்: நிழல்வண்ணன்

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...