தற்போது நாட்டின் தொழிலாளர்களில் 95 விழுக்காட்டினர்
அமைப்புசாரா பிரிவில் வேலை செய்கின்றனர். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், இந்தத்
தொழிலாளர்கள் பட்டபாடு ஒவ்வொருவருக்கும் நன்றாகத் தெரியும், அது தேசியப் பிரச்சனையாகவும்
ஆனது. அந்த நேரத்தில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு e-shram என்ற இணையவழி
உருவாக்கப்பட்டது. அதில் விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள், மகாத்மா காந்தி ஊரக
வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்ட தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டு வேலை
செய்வோர், வாகன ஓட்டுனர்கள், சுமை தூக்குவோர், கைவண்டி இழுப்போர், நெசவாளிகள், குடிசைத்
தொழில் மற்றும் சிறுதொழில் துறை தொழிலாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா தொழிலாளர்கள்,
மதிய உணவுத் திட்டத்தில் வேலை செய்வோர், செங்கல் சூளைத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள்
இன்ன பிறரும் அடங்குவர். இந்தத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி,
தொழிலாளர் காப்புறுதித் திட்டம் ஆகியவை இல்லை.
இதுபோன்ற 28 கோடி தொழிலாளர்கள் e-shram இணையவழியில்
பதிவு செய்யப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 8 கோடியே
30 இலட்சம் ஆகும். இந்தத் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புக்கு உச்ச நீதிமன்றத்தின்
உத்தரவுகள் இருந்தபோதும், அரசாங்கம் இதுவரை எதுவும் செய்யவில்லை. இப்படிப்பட்ட அமைப்புசாராத்
தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்காக 2008 இல் பாராளுமன்றத்தால் சமூகப் பாதுகாப்புச்
சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்துவருகிறது.
இந்தத் தொழிலாளர்களில் 93 விழுக்காட்டினர் மாதம் ஒன்றுக்கு ரூ.10,000/- க்கும் குறைவான
வருமானத்தில் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இது மட்டுமில்லாமல்,
அமைப்புசார் தொழிலாளர்களில் பலர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள் அவர்களும்
சொற்ப ஊதியங்களையே தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். உத்திரப் பிரதேசத்தில்
கடந்த ஐந்து ஆண்டுகளாக குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப் படாமல் இருந்துவருவதால் தொழிலாளர்களின்
ஊதியங்கள் மிகவும் குறைவாகவே இருந்து வருகின்றன, இந்தப் பணவீக்கத்தில், குடும்பத்தின்
வாழ்வாதாரத்தைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்துவருகிரது.
இந்த ஆண்டு ஜூன் 20 அன்றுதான், இந்திய அரசாங்கத்தின்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளரான சுமித்ரா தாரா நாடெங்கும்
உள்ள மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் தொழிலாளர் செயலாளர்கள், தொழிலாளர் ஆணையர்கள்
ஆகிய அனைவரும் அடங்கிய கூட்டம் ஒன்றை டெல்லியில் நடத்தினார். அந்தக் கூட்டத்தில்,
29 தொழிலாளர் சட்டங்களை ஒழித்துவிட்டு, உருவாக்கப்பட்ட 4 தொழிலாளர் சட்டங்களை மட்டும்
நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்திரவிட்டதாகச்
செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களுக்கு ஒத்திசைவாக தங்கள்
மாநிலங்களில் விதிகளை வகுக்குமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. மேற்கு
வங்காளம், தமிழ்நாடு, மேகாலயா, நாகலாந்து, இலட்சத்தீவுகள், சிக்கிம், அந்தமான் நிக்கோபார்
மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களும் ஒன்றியப் பகுதிகளும் இன்னும் இந்த விதிகள் புத்தகத்தை
நிறைவு செய்யாமல் இருந்துவருகின்றன. பல மாநிலங்கள் வகுத்துள்ள விதிகள் மத்திய அரசாங்கத்தின்
தொழிலாளர்கள் சட்டங்கள் மற்றும் அவற்றின் விதிகளின் அடிப்படை உணர்வுக்கு எதிராக இருக்கின்றன.
ஆகவே அவை மத்திய அரசாங்கத்திற்கு ஒத்திசைவாக மாற்றப்பட வேண்டியுள்ளன. 2020 இல் பாராளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டங்களை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசாங்கம்
ஈடுபட்டுள்ளது. மத்திய அரசாங்கம் அதை 100 நாட்கள் நிகழ்ச்சிநிரலில் வைத்திருக்கிறது.
இந்தப் புதிய தொழிலாளர் சட்டங்களில் 12 மணி நேர வேலையை
அறிமுகப்படுத்துவதற்கான தெளிவான விதிமுறை இடம் பெற்றிருக்கிறது. இதன் காரணமாக, 33 விழுக்காடு
தொழில்துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கட்டாய வேலை இழப்புக்கு உள்ளாவார்கள்.
இது மட்டுமல்ல, 12 மணி நேர வேலைக்குப் பிறகு தொழிலாளர்கள் தங்கள் அன்றாடப் பிழைப்புக்காக
சிறுசிறு வேலைகளில் ஈடுபட்டு 17—18 மணிநேரம் வேலை செய்யவேண்டியிருக்கும். இதனால் இளம்
வயதிலேயே அவர்களுடைய உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும், அவர்கள் நீரிழிவு,
உயர் இரத்த அழுத்தம், காசநோய் போன்ற பல நோய்களால் பாதிக்கப்படுவார்கள். இந்தச் சட்டங்களின்
மூலம் தற்போதைய குறைந்தபட்ச ஊதியங்களுக்குப் பதிலாக தரைமட்ட ஊதியங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
இதன் பொருள் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் நான்கு பேர் அடங்கிய ஒரு குடும்பத்துக்கு
உணவுக்காகவும் உடைகளுக்காகவும் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் தரைமட்டத்துக்குக்
குறைக்கப்படும் என்பதாகும். இதனால் இந்தக் கடுமையான பணவீக்கச் சூழலிலும் எப்படியோ தனது
குடும்பத்தின் வாழ்வாதாரத்தைச் சமாளித்துவரும் ஒரு தொழிலாளரின் வாழ்க்கை மிகவும் கடினமானதாக
ஆகிவிடும்.
புதிய பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட
இந்த 33 ஆண்டுகளில், நாடு முழுவதிலும் ஒப்பந்த முறை மிகப்பெரிய வடிவத்தை எட்டியிருக்கிறது.
நாட்டின் பாராளுமன்றத்திலிருந்து தொழிற்சாலைகள் வரை, ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள்,
செவிலியர்கள், கணினி இயக்குனர்கள் வரையிலும் கூட, ஒப்பந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுக்
கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்த முறையின் ஒரே நோக்கம் உழைப்புச் சக்தியைக் பயங்கரமாகக்
கொள்ளையடிப்பதுதான். நிரந்தரத் தொழிலாளருக்கு மிகுதியான ஊதியம் கொடுத்து, வாழ்க்கைப்
பாதுகாப்புக்கு உத்தரவாதமும் அளித்து வேலை வாங்குவதைவிட ஒப்பந்த முறையில் குறைந்த ஊதியத்தில்
அதே வேலையை வாங்கிவிட முடிகிறது, புதிய தொழிலாளர் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு வேலைவாய்ப்பு என்பது ஒப்பந்தமுறையைவிட இன்னும் மோசமானதாகும்.
இதன் பொருள் தொழிலாளர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு வேலைக்கு அமர்த்தப்படுவார்கள், அந்த
வேலையில் அவர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (EPF), தொழிலாளர் காப்பீட்டு உறுதி
(ESI), ஊக்கஊதியம் (BONUS), ஓய்வூதியம் (PENSION), கருணைத் தொகை (GRADUITY) போன்றவை
இருக்காது. ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 1970 இலிருந்து இருந்து வந்த ஒப்பந்த முறையில்
நிரந்தரத் தன்மையுள்ள வேலையைப் பெறுவதற்கு உள்ள தடை இந்தச் சட்டங்களில் ஒழிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் சமமான வேலைக்குச் சமமான ஊதியத்திற்கான விதிமுறை அகற்றப்பட்டுவிட்டது.
கட்டுமானம், பீடி, சுரங்கம், இன்னபிற அமைப்புசாரா துறைகளில்
வேலை செய்துகொண்டிருக்கும் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்கான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான
ஒரு வாரியத்தை அமைப்பதற்கு தொழிலாளர் சட்டங்களில் உள்ள விதிமுறைகளும் இப்போது அச்சுறுத்தலில்
உள்ளன. தொழிலாளர் துறையின் நடைமுறைப்படுத்தும் அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளருக்கு மாற்றப்பட்டுவிட்டன.
இயல்பாகவே, தொழிலாளர் துறையின் பாத்திரம் முதலாளிகளுக்கான வசதிகளைச் செய்துதருவதாகவே
இருக்கும். தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தொழிலாளர் சட்டங்களில்
பல சட்டத் தடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்கம் ஒன்றை அமைப்பதும் கூட மிகமிகக்
கடினமாக ஆகியிருக்கிறது, பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் பதிவை இரத்து செய்வது
எளிதாக்கப்பட்டுள்ளது. அரசாங்கமும் அதன் நிறுவனங்களும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும்
கார்பொரேட் நிறுவனங்களின் பாதையை எவ்வாறு எளிதாக்கியிருக்கின்றன என்பதற்கான எடுத்துக்காட்டு
நம் முன் உள்ளது. அதிகாரத்துக்கு வந்ததுமே இந்த அரசாங்கம் வருங்கால வைப்பு நிதியின்
விதிகளை மாற்றிவிட்டது, மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியைச் செலுத்தாத உரிமையாளர்கள்
மீது விதிக்கப்படும் அபராதத் தொகையையும் குறைத்துவிட்டது.
உண்மையில், உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு கார்பொரேட்
நிறுவனங்கள் பெருத்த இலாபங்கள் அடையும் வகையில் மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய
தொழிலாளர் சட்டங்கள் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்விலும் சமூகப் பாதுகாப்பிலும்,
வேலை நிலைமைகளிலும், ஊதியத்திலும் பெருத்த மாற்றங்களைக் கொண்டுவரும். அதன் காரணமாக
ஏற்கெனவே இருந்துவரும் வேலையின்மை மேலும் அதிகரிக்கும். இது மட்டுமல்ல, இந்தப் பாதை
நாட்டில் பெரிய பெரிய தொழில்துறை கலவரங்களை உருவாக்கும். தொழிலாளர் சட்டம் மற்றும்
தொழிலாளர் துறையின் பாத்திரம் தொழில்துறை அமைதியை நிலைநாட்டுவதற்கு மிகவும் முக்கியமானதாகும்.
மொத்தத்தில், மோடி அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் பாதை மூலதனத்தின் ஆதித் திரட்சிப்
பாதையாகும். இது உறுதியாக தொழிலாளர்களின் அழிவுக்கே இட்டுச் செல்லும். இந்தக் கொள்கைகள்
காரணமாக, தொழிலாளர் வர்க்கம் மனிதர்களாக இருப்பதிலிருந்து வெறும் சடப் பொருள்களாக மாறுவதன்
மூலம் நவீன அடிமைமுறை வாழ்க்கையை வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும்.
தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்காக, இன்று
இந்தப் பாதையை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. மூலவளங்களில் தொழிலாளர் வர்க்கத்துக்கு
உள்ள பங்கினை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். உண்மையில், இன்று நாட்டில் தலைவாரி வருமானம்
ஆண்டுக்கு ரூ.1,70,000/- ஆக உள்ளது. ஆனால் தொழிலாளர் வர்க்கக் குடும்பங்களில் 93 விழுக்காடு
மாதம் ரூ.10,000/- க்கும் குறைவான வருவாயில் பிழைத்து வருகின்றன. அதற்கு மாறாக நாட்டின்
கருவூலம் எளிய மக்கள் செலுத்தும் வரிகளால் நிரப்பப்படுகிறது. ஊடக தகவல் அறிக்கை
(PIB) யின்படி, ஜி.எஸ்.டி. மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியின் 97.6 விழுக்காடு
நாட்டின் 90 விழுக்காடு ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது.
அதநேரத்தில் நாட்டின் மேட்டுக்குடி வர்க்கத்தின் 10 விழுக்காட்டினர் மொத்த வரியில்
2.4 விழுக்காடு மட்டுமே செலுத்துகின்றனர். அதாவது, வரியாகப் பெறப்பட்ட ரூ
27,48,718 கோடியில் 90 விழுக்காடான ரூ.26,82,748 கோடி எளிய மனிதர்களால் செலுத்தப்படுகிறது.
மேல்தட்டு வர்க்க பணக்காரர்கள் ரூ,65,969/- கோடி மட்டுமே செலுத்துகின்றனர். எளிய மனிதர்களிடமிருந்து
வசூலிக்கப்படும் பணத்திலிருந்து அரசாங்கம் ரூ.5,00,000 கோடி மட்டுமே மகாத்மா காந்தி
ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் இலவசப் பொருட்கள்,
கல்வி, மற்றும் உடல்நலம் இன்னபிறவற்றுக்காகச் செல்வழிக்கிறது. நாட்டின் பெரும் பகுதி
வருமானம் பெரிய கார்போரேட் நிறுவனங்களால் அபகரிக்கப்படுகிறது. இதனால் நாட்டில் பெருமளவுக்கு
ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. உலக ஏற்றத்தாழ்வு ஆய்வக அறிக்கையின்படி, இந்தக் காலத்தில்
நிலவுகிற ஏற்றத்தாழ்வு 1922 இல் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வை விட மிகுதியாகும். மக்களின் உயர்
மட்டத்திலுள்ள 10 விழுக்காட்டினர் நாட்டின் செல்வத்தில் 65 விழுக்காட்டையும் வருவாயில்
57 விழுக்காட்டையும் பெற்றுள்ளனர். ஆகவே வருங்காலங்களில், சமூகப் பாதுகாப்புக்காகவும்
வாழ்க்கை பாதுகாப்புக்காகவும் தொழிலாளர் விரோத புதிய சட்டங்களை ஒழித்துக்கட்டவும்,
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், நாட்டின் வருவாயிலும் மூலவளங்களிலும் உரிய
பங்கினைப் பெறுவதற்காகவும் தொழிலாளர் வர்க்கம் மிகப்பெரிய அரசியல் முன்னெடுப்புக்குத்
தானே தயாராக வேண்டும்.
ஆங்கிலத்தில் - தின்கர் கபூர்
தமிழில்: நிழல்வண்ணன்
__________________________________.
(தின்கர் கபூர், உத்தரப்பிரதேச தொழிலாளர் முன்னணியின் தலைவர் ஆவார்.)
நன்றி: countercurrents.org
Comments
Post a Comment