Skip to main content

ஆளும்வர்க்கத்தின் புதிய முகமூடி நடிகர் விஜய்!

 

நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவும் விக்கிரவாண்டியில் 27.10.24 அன்று நடந்த அவருடைய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடும் இன்று தமிழ் நாடெங்கும் பேசு பொருளாக மாறியுள்ளது.

தமிழ் நாட்டில் உள்ள தொலைக்காட்சிகள் அந்த மாநாட்டையும் அதில் விஜய் ஆற்றிய நாடக பாணியிலான உரையையும் போட்டிபோட்டுக் கொண்டு காட்சிப் பொருளாக்கின. அதனைப் பற்றி தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் விவாதங்களும் எதிர் விவாதங்களும் இன்னும் தொடர்கின்றன.

'மாநாட்டில் பல இலட்சம் பேர் கலந்துகொண்டனர். பணம் கொடுத்து அழைத்து வராமல் தானாகச் சேர்ந்த கூட்டம். இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்' எனப் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.

இவ்வாறு அனைத்து ஊடகங்களும் விஜய் பற்றியும் அவருடைய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் பற்றியுமான செய்திகளை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளன.

சினிமா நடிகர் அரசியலுக்கு வருவது தமிழகத்திற்கு ஒரு புதிய செய்தியல்ல.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், பாக்யராஜ், சீமான், கமலஹாசன் என அந்தப் பட்டியல் நீளுகிறது. அரசியலில் எம்.ஜி.ஆரின் வெற்றி சினிமாவில் வெற்றி பெற்ற கதாநாயக நடிகர்களுக்கு அரசியல் ஆசையைத் தூண்டி விடுகிறது. எம்.ஜி.ஆரைப் போல தாமும் அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துவிடலாம் என்ற கனவை அவர்களுடைய மனதில் உருவாக்குகிறது. தாம் செல்லும் இடமெல்லாம் தன்னைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் கூட்டம் அவர்களுடைய எண்ணங்களுக்கு வலுவூட்டுகிறது. அதனை நம்பி அரசியலில் குதிக்கின்றனர். ஆனால் இதுவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் இதில் வெற்றி பெறவில்லை.

எம்.ஜி.ஆர்.அரசியலில் வெற்றி பெற்றதற்கு வேறு காரணங்கள் இருந்தன. எம்.ஜி.ஆர்.வெறுமனே கதாநாயக நடிகராக மட்டுமில்லாமல் தி.மு..வின் அரசியல் பின்னணியையும் கொண்டவராக இருந்தார். அண்ணா, கலைஞர் ஆகியோர் அரசியலில் மட்டுமல்லாமல் சினிமாத்துறையிலும் செல்வாக்கு செலுத்துபவர்களாக இருந்தனர். சினிமா என்னும் ஊடகத்தை மிகத் திறமையாகத் தங்களுடைய கட்சியின் வளர்ச்சிக்காக அண்ணாவும் கலைஞரும் பயன்படுத்திக்கொண்டனர். அதற்கு உறுதுணையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரால் கட்சி பயனடைந்தது. அதே சமயத்தில் கட்சியால் எம்.ஜி.ஆரின் திரை உலக வாழ்வு செல்வாக்குபெற்றது. எம்.ஜி.ஆரின் இரசிகர்கள் தி.மு..வின் தொண்டர்களாகவும், கட்சியின் பொறுப்புகளிலும் இருந்தனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து 1972 ல் விலக்கப்பட்ட போது கட்சி மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையிலும் பிளவுபட்டது. எம்.ஜி.ஆர். .தி.மு..வை தோற்றுவித்த போது அவருடன் இரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் அனுபவமும் அமைப்பு அனுபவமும் கொண்டிருந்த தலைவர்களும் தொண்டர்களும் அவருடன் இருந்தனர். இவற்றுடன் மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு இருந்த சினிமா பிம்பமும் சேர்ந்து அவருடைய அரசியல் வெற்றிக்கு அசைக்க முடியாத பலமான அடிப்படையை அமைத்துக் கொடுத்தன. அவர் உயிரோடு இருக்கும் வரையிலும் தி.மு..வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை.

அதே சமயத்தில் ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய சினிமா பிம்பமல்ல.மாறாக அவருடைய வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது அவர்தான் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது தான்.

அதற்குப் பிறகு தமது சினிமா பிம்பங்களை நம்பி அரசியலில் நுழைந்த எந்த நடிகருக்கும் எம்.ஜி.ஆருக்கு சாதகமாக இருந்த காரணங்கள் இருக்கவில்லை. அதனால் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. அவர்கள் தங்களுக்குத் தேர்தலில் கிடைத்த சில விழுக்காடு வாக்குகளைக் காட்டி தி.மு.., அல்லது அதி.மு..வுடன் கூட்டணி சேர்வதற்குப் பேரம் பேசுபவர்களாக மாறி உள்ளனர். அதன் மூலம் சில சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையோ ஒன்றியத்தில் மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிகளையோ பெற முயற்சி செய்கின்றனர்.

இந்தப் பின்னணியில்தான் விஜய் இன்று அரசியலில் நுழைந்துள்ளார். மாநாட்டில் தனது கட்சியின் கொள்கைப் பிரகடனங்களாக, பிளவுவாத சக்திகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் தனது கட்சி எதிராக இருக்கும் என்றும், மக்களை சாதி, மத, இன, ஏழை - பணக்காரர் என்ற அடிப்படையில் பிளவுபடுத்துவதை தனது கட்சி ஏற்கவில்லை என்றும், தனது கட்சி பெரியாரை ஏற்றுக் கொள்ளும் என்றும், அதே சமயத்தில் அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாது என்றும், அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதுதான் தமது நிலைப்பாடு என்றும் அறிவித்துள்ளார். மேலும் திராவிடமும் தமிழ் தேசியமும் தமது இரு கண்கள் என்றும், ஆளுநர் பதவி தேவை இல்லை என்றும், நீட் (NEET) தேவையில்லை என்றும் பிரகடனம் செய்துள்ளார்.

இந்த நிலைப்பாடுகள் அனைத்தையும் தி.மு..வும் .தி.மு..வும் ஏற்கனவே கொண்டுள்ளன. இவற்றிலிருந்து வேறுபட்டு புதிய நிலைப்பாடு எதையும் விஜய் வைக்கவில்லை.

மேலும் அவர் 'தான் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது, அதாவது கோடிக்கணக்கில் வருவாய் வரும் தொழிலை விட்டுவிட்டு மக்களுக்காக உழைக்க வந்துள்ளதாகத்' தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளார். இவர் ஆட்சிக்கு வந்து விட்டால் மக்களுடைய பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு விடும் என்கிறார். இப்படித்தான் அரசியலுக்கு வரும் ஒவ்வாரு நடிகரும் கூறுகின்றனர்.

திரைப்படங்களில் ஏழைப் பங்களானாகவும், தொழிலாளியாகவும் மீனவ நண்பனாகவும் விவசாயி யாகவும் நடித்து மக்களைக் கவர்ந்து ஆட்சிக் கட்டிலேறினார் எம்.ஜி.ஆர்.. ஆனால் அவருடைய ஆட்சியில்தான் மீனவர்களின் போராட்டங்களும் விவசாயிகளின் போராட்டங்களும் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டன; ஏழை, வறிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் விடுதலைக்காகப் போராடி வந்த நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் "போலீசுடன் மோதல்கள்" என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். திரையில் தேவதூதனாகத் தோன்றிய எம்.ஜி.ஆர்., நிஜத்தில் சாத்தானாக இருந்தார். திரையில் ஏழைப்பங்காளனாக இருந்த எம்.ஜி.ஆர். நடைமுறையில் முதலாளிகளின், பெரும்பண்ணையார்களின் பாதுகாவலனாக இருந்தார்.

ஏற்கனவே இந்த வரலாற்று அனுபவத்தைக் கொண்டுள்ள தமிழ் நாட்டு மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள் என நம்பலாம்.

மேலும், பிளவு வாத சக்திகளையும் ஊழல்வாதிகளையும் தனது எதிரிகள் என அறிவித்த விஜய், பிளவுவாதிகளை கருத்தியல் எதிரிகள் என்றும், ஊழல்வாதிகளை அரசியல் எதிரிகள் என்றும் கூறுகிறார்.

 பிளவுவாதிகளை இன்று நாட்டுக்குப் பேராபத்தாக இருக்கும் இந்துத்துவ சக்திகளுடனும் பாஜகவுடனும் விஜய் அடையாளப்படுத்தத் தவறுகிறார். அது பற்றி மெளனம் சாதிக்கிறார். ஏனென்றால் பாஜகவுடனும் அதன் துணைச் சக்திகளுடனும் விஜய் தொடர்பு உள்ளவர்தான். காங்கிரஸ் கட்சியின் ஊழலை எதிர்த்து அண்ணா ஹசாரே தலைமையில் டில்லியில் பாஜக துணை சக்திகள் நடத்திய நீண்ட போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தவர்தான் இந்த விஜய். அது மட்டுமல்லாமல் 2014ல் அரசியல் பரப்புரைக்காக மோடி கோவை வந்திருந்த போது அவரை நேரில் சந்தித்துத் தனது ஆதரவைத் தெரிவித்தவர்தான் இந்த விஜய். அதே விஜய்தான் இன்று மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராக தமிழ்நாட்டில் மேலோங்கி இருக்கும் எதிர்ப்பு அலையை வாக்குகளாக அறுவடை செய்ததற்காக பிளவுவாதிகளை எதிர்ப்பது போல மேடையில் நடிக்கிறார்.

ஆனால் விஜய் ஊழலை தமிழ் நாட்டில் ஆட்சியில் உள்ள தி.மு..வுடன் அடையாளப்படுத்துகிறார்; தந்தை, தந்தைக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என கலைஞர் குடும்பத்தின் ஊழல் ஆட்சி தொடர்வதாகக் கூறுகிறார். இந்த ஊழல் ஆட்சிதான் தமது அரசியல் எதிரி என அறிவிக்கிறார். இது தவிர்க்க முடியாதது. ஏனென்றால் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு..வை முதன்மை எதிரி என்று கூறி, அதனை வீழ்த்திவிட்டு ஆட்சியைப்பிடிப்பதே தமது இலட்சியம் என்று பரப்புரை செய்யாமல் ஒரு கட்சியால் மக்களைத் திரட்ட முடியாது. அதனால்தான் ஊழல் மலிந்த தி.மு..ஆட்சியை அகற்றுவதே தமது இலட்சியம் என்கிறார். பா...வின் ஆட்சி பாசிசம் என்றால் தி.மு..வின் ஆட்சி பாயாசமா? என்று கேட்டு தி.மு..வும் பாசிச ஆட்சி தான் நடத்துகிறது என்கிறார்.

ஆனால் தி.மு..வை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு அவர் வைக்கும் திட்டங்கள்தான் என்ன? நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும், நாட்டில் அதிகரித்து வரும் ஏற்றத் தாழ்வை நீக்கவும் அவர் எந்த அரசியல், பொருளாதாரத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை. அதற்குப் பதிலாக தி.மு..வைத்துள்ள அதே கொள்கைகளைத்தான் வைத்துள்ளார். ஒரே ஒரு வேறுபாடு. தி.மு.. குடும்ப ஊழல் கட்சி. விஜய் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்து விடுவார். தமிழ்நாடு ஊழல் இல்லா மாநிலமாக மாறிவிடும்.

அவருடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் உண்மையில் ஊழலை ஒழித்து விடுமா? இதுதான் இன்று மக்கள் முன் உள்ள கேள்வி. தமிழ்நாட்டின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் இதன் உண்மை தெரிந்து விடும். காங்கிரசின் ஊழலைப் பற்றிப் பேசி, தாம் வந்தால் ஊழலை அறவே ஒழித்துவிடுவோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்தது தி.மு.. என்ன நடந்தது? ஊழல் ஒழியவில்லை. சட்டப்பிடியில் சிக்காமல் ஊழல் செய்வது எப்படி என்ற அருமையான கலை கலைஞரின் ஆட்சியில் வளர்த்தெடுக்கப்பட்டது. தி.மு..விடம் வரவு - செலவு பற்றிக் கணக்குக் கேட்டதால், ஊழலைப்பற்றிக் கேள்வி எழுப்பியதால் எம்.ஜி.ஆர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவரும் கலைஞர் ஆட்சியின் ஊழலை ஒழிப்பேன் எனக் கூறி .தி.மு..வைத் தோற்றுவித்தார். எம்.ஜி.ஆர், ஆட்சியிலும் ஊழல் ஒழியவில்லை. ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் ஊழல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவே சிறைக்குச் செல்ல நேரிட்டது.ஜெயலலிதாவுக்குப் பின் வந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் ஊழல் கொடி கட்டிப் பறந்ததை மக்கள் பார்த்தனர்.

இந்த நிலைமை தமிழ் நாட்டில் மட்டுமில்லை. இந்திய ஒன்றியம் முழுவதும் இதுதான் நிலைமை. இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அதன் ஊழலையும், அதிகாரத்தையும் எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் போராட்டங்கள் நடந்த போது முக்கிய இளம் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். அவர் பிறகு கால்நடைத்தீவன ஊழலில் சிக்கி சிறை சென்றதை நாடே அறியும். "திருவாளர். பரிசுத்தம்" இராஜிவ் காந்தி ஆட்சியில் போபர்ஸ் பீரங்கி ஊழல் புகழ் பெற்ற ஒன்று. கட்சியின் ஊழலைப் பற்றிப் பேசி ஆட்சிக்கு வந்த மோடியின் ஆட்சியில் ரஃபேல் விமான ஊழல், பங்குச் சந்தை ஊழல், தேர்தல் பத்திர ஊழல் ஆகியவை உலகப் புகழ் பெற்றவை.

எனவேதான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்து விடுவேன் என விஜய் கூறுவது மக்களை முட்டாள்களாக்கும் வார்த்தை ஜாலங்களைத் தவிர வேறு எதுவுமில்லை. நடிப்பதற்காக ஒவ்வாரு படத்திற்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை ஊதியமாகப் பெற்றுக்கொண்டு அதை முழுமையாகக் கணக்கில் காட்டாமல் சட்டத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவரான விஜய் நேர்மை பற்றியும் ஊழல் பற்றியும் பேசுகிறார். இதை விடப் பெரிய முரண்நகை எது இருக்க முடியும்?

கார்ப்போரெட் முதலாளிகளும் வணிக நிறுவன முதலாளிகளும் தொழிலாளர்களைக் கடுமையாகச் சுரண்டி எவ்வளவு வேண்டுமானாலும் சொத்துகளைச் சேர்த்துக் கொள்ளலாம். அரசு வேலைகளை ஏலத்தில் எடுக்கும் ஒப்பந்ததாரர்களும் ரியல் எஸ்டேட் வியாபாரிகளும் நிதி நிறுவன முதலாளிகளும் எவ்வளவு வேண்டுமானாலும் தங்களுடைய சொத்துக்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

கோடிக்கணக்கில் ஊதியம் பெறும் நடிகர்களும் வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் பெருக்கிக் கொள்ளலாம். இவர்கள் எல்லோரும் சட்டத்தை ஏமாற்றவும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும், தேவையானால் சட்டங்களைத் தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளவும் ஆட்சியில் உள்ளோருக்கும் அதிகாரவர்க்கத்திற்கும் கோரக்கணக்கான ரூபாய்களைப் படியளக்கின்றனர். இந்த ஊழலால் ஆட்சியில் உள்ள கட்சிகளும் அதிகாரவர்க்கமும் பெரும் அளவு தமது செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றன. எனவே இந்த நாட்டில் முதலாளிய வர்க்கத்தின் ஆட்சி நீடிக்கும்வரை ஊழலை ஒழிக்க முடியாது. முதலாளியமும் ஊழலும் பின்னிப்பிணைந்தவை.

உண்மையில் ஊழலை ஒழிக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? ஒரு தனி மனிதர் எவ்வளவு வேண்டுமானாலும் சொத்து சேர்த்துக் கொள்ளலாம் என்பதற்கு முடிவு கட்டுவதன் மூலமே ஊழலை ஒழிக்க முடியும். நுகர்வு சாதனங்களைத் தவிர, நிலம், தொழிற்சாலை போன்ற உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமூக உடைமை ஆக்கப்பட வேண்டும். யாரும் யாரையும் சுரண்ட முடியாத சமூக நிலை உருவாக்கப்பட வேண்டும். அதிகாரவர்க்க ஆட்சிமுறை அகற்றப்பட வேண்டும். அந்த இடத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் வர வேண்டும். அவர்கள் அதிகாரிகளாக இல்லாமல் மக்களுக்காக வேலை செய்யும் ஊழியர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தவறு செய்யும் போது அவர்களைத் திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு வேண்டும். அதன் மூலம் மக்களின் அதிகாரம் அவர்கள் மீது நிறுவப்படும். இவ்வாறு மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்போது மட்டுமே ஊழலுக்கு முடிவு கட்ட முடியும்.

ஆனால் இவற்றை எல்லாம் மறைத்து விட்டு தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்து விடுவதாக வாய்ச் சவடால் அடிக்கிறார் விஜய். இவர் மட்டுமல்ல. இங்குள்ள கட்சிகள் எல்லாம் அவ்வாறு கூறித்தான் ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் கட்சிகளாகவும், முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலைக் காப்பாற்றுவதற்காக மக்கள் மீது அடக்குமுறைச் சட்டங்களை ஏவும் கட்சிகளாகவும் மாறி விடுகின்றன. இங்குள்ள கட்சிகள் எதுவும் உண்மைகளை மக்களிடம் கூறுவதில்லை. ஊழலுக்கு அப்படையாக இருக்கும் இந்த அமைப்பை அம்பலப்படுத்துவதில்லை.

ஏனென்றால் இந்தக் கட்சிகளின் வாழ்வும் வளர்ச்சியும் நலன்களும் இந்த அமைப்போடு பின்னிப்பிணைந்துள்ளன. ஆளும் முதலாளிய வர்க்கத்திற்குச் சேவை செய்வதன் மூலமே அவை பயனடைந்து வருகின்றன. இந்த அமைப்பு மறைந்து விட்டால் இந்தக் கட்சிகளுக்கு வாழ்வு இல்லாமல் போய்விடும். அதனால்தான் இந்த அமைப்பை இந்தக் கட்சிகள் மக்கள் முன் அம்பலப்படுத்துவதில்லை. ஆனால் ஒவ்வாரு முறை இந்தக் கட்சிகள் ஆட்சியில் அமரும் போதும், சிறிது காலத்திற்குள்ளாகவே வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு ஊழலில் ஈடுபடும் போதும், மக்களுக்கு எதிராகச் செயல்படும் போதும் மக்கள் முன் அம்பலப்பட்டுப் போய் விடுகின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து விடுகின்றன.

ஆனால் இவர்களை ஊழல்வாதிகளாக, மக்களுக்கு எதிரானவர்களாக, முதலாளிகளுக்கு ஆதரவாளர்களாக மாற்றும் இந்த அமைப்பு மக்கள் முன் அம்பலப்படுவதில்லை. அமைப்பு அப்பழுக்கற்று புனிதமாக இருப்பது போலவும், ஆட்சிக்கு வரும் கட்சிகள்தான் நேர்மையற்று இருப்பதுபோலவும் மக்கள் நம்ப வைக்கப்படுகின்றனர். அதனால் ஆட்சியில் இருக்கும் கட்சி மக்களால் வீழ்த்தப்படுகிறது. ஆனால் உண்மையில் ஊழலுக்கு அடிப்படையாக இருக்கும் ஆளும் முதலாளிய வர்க்கமும் அதன் அதிகாரவர்க்க ஆட்சி முறையும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது.

மக்கள் முன் அம்பலப்பட்டுப் போன கட்சிகள் ஆளும் முதலாளிய வர்க்கத்தைப் பொருத்தவரை சாயம் வெளுத்துப் போன முகமூடிகள்; இனியும் தனது மக்கள் விரோத, கோர முகத்தை மறைக்க அவை பயன்படாது. அதற்குப் பதிலாக தனது முகத்தை மறைக்க இந்த அமைப்புக்கு அவ்வப்போது புதிய புதிய முகமூடிகள் தேவைப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. அத்தகைய புதிய முகமூடிகளில் ஒன்றுதான் விஜய். முகமூடிக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆளும் வர்க்கத்தின் கோரமுகத்தை மக்கள் அடையாளம் காணும் போது முகமூடிகளுக்கு வேலை இருக்காது.

______________________________

மு.வசந்தகுமார்

Comments

  1. முதலாளி வர்க்கம் உருவாக்கும் புதிய கட்சி குறித்து இக்கட்டுரை மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறது. இது பற்றிய விவரங்களோடு, இந்த முதலாளித்துவ அமைப்பு குறித்தும், ஊழல், சுரண்டல் பற்றியும் அவற்றின் பின்புலமாக இருக்கும் முதலாளித்துவம் குறித்தும் மிகவும் எளிமையாக எடுத்துரைத்திருக்கிறது.

    நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்