இடைவிடாத தொடர்ந்த போராட்டங்களாலும் கடினமான தியாகங்களாலும் ஆகஸ்ட் 15-ஆம்
நாள், 1947- இல் விதியுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது, .200 ஆண்டுகளுக்கும்
மேலாக இங்கிலாந்தின் காலனியாக இருந்த இந்தியா, சுதந்திர நாடானது. அப்பொழுதிருந்து 77 ஆண்டுகளில்
அனைத்து துறைகளிலும்
உறுதியான முறையில் வேகமாக முன்னேறி வருகிறது என்னும் உண்மை பாராட்டுக்குரியது. எனினும், தன்னுடைய
சுதந்திரத்தின் உட்பரிமாணத்தையும் உண்மையான நிலைமைகளையும் அடைய இந்தியா இன்னும் கற்பனைக்கு எட்டாத தூரம் செல்ல வேண்டியிருக்கிறது
என்னும் உண்மையை நாம் தாழ்மையுடன் ஒப்புக் கொள்ளவேண்டும்! அவர்கள் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், பன்மைத்துவம், ஒத்திசைவு, கண்ணியம், நேர்மை, மற்றும்
ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில்
அமைந்த சமூகத்துக்காக ஏங்குகிறார்கள்!
இந்தியா அதன் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அதன் சட்டகங்கள்
அடித்து நொறுக்கப்படுவதில் இருந்து விடுதலை பெற கண்ணீர் வடிக்கின்றது. சுவீடனின் கோதென்பர்க் பல்கலைக்கழகத்தின் வி-டெம் நிறுவனத்தின் [V--Dem Institute] ‘2024-ஆம் ஆண்டின் ஜனநாயகம்' பற்றிய அறிக்கை, சமீப
ஆண்டுகளில் உலகின் ‘மிக மோசமான எதேச்சாதிகாரர்களின்’ கீழ் இந்தியா உள்ளது
என்கிறது; மேலும், “இங்கு எதேச்சாதிகாரப்போக்கு சீரிய முறையில் தெளிவாக
ஆவணப்படுத்தப்பட்டுள்ளது; மெதுவாக ஆனால் கணிசமான அளவில் கருத்து சுதந்திரம் அழிக்கப்படுவது, ஊடகங்களின்
சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது, சமூக ஊடகங்கள் முடக்கப்படுவது, அரசாங்கத்தை
விமரிசிக்கும் பத்திரிக்கையாளர்களை தொல்லைக்கு உட்படுத்துவது, மேலும்
குடிமைச் சமூகத்தைத் தாக்குவது போன்ற அடக்குமுறைகள்
நடத்தப்படுகின்றன; இந்தியாவின் “பன்மைத்துவத்துக்கு எதிரான” பாஜக [BJP]
அரசாங்கம், "தேசத் துரோகம், அரசாங்கத்தை
அவதூறு செய்தல், பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய சட்டங்களை தன்னை
விமரிசிப்பவர்களை அடக்கப் பயன்படுத்துகிறது. மோடி தலைமையிலான அரசாங்கம் மத
உரிமைகளுக்கான சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்கி வருகிறது. எதிர்க்
கட்சிக்காரர்களை மிரட்டுவது, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடும்
மக்களை மிரட்டுவது, இவற்றுடன் கல்விசார் வட்டாரங்களின் எதிப்புகளை
ஒடுக்குவது ஆகியவை இப்போது தொடர்ந்து பெரிய அளவில் நடத்தப்படுகின்றன.” கடந்த 10 வருடங்களின்
தரவுகளின் அடிப்படையில், இந்தியா
சர்வாதிகாரமிக்க நாடுகளின் பட்டியலில் 10-வது
இடத்திலும், உலகெங்கும் ஜனநாயக உரிமைகள் நடைமுறைப்படுத்தப்படும்
அடிப்படையிலான பட்டியலில் [Liberal
Democracy Index
- LDI] 104-வது இடத்திலும்
உள்ளது.
தன்னுடைய அடிப்படைத் தேவைகள், வறுமை, பசி மற்றும்
இல்லாமை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற இந்தியா கண்ணீர் வடிக்கின்றது;. இன்னும்
நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கு கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள். மக்களின்
வறுமை குறித்த அதிகாரபூர்வமான
நம்பத் தகுந்த, புதுப்பிக்கப்பட்ட
தகவல்கள் இப்போது கூட நமது
நாட்டில் இல்லை. நம் நாட்டில் வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை பற்றி குறைந்தபட்சம் ஐந்து விதமான மாறுபட்ட மதிப்பீடுகள் உள்ளன; அவை இந்தியாவில் வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3.5 கோடியிலிருந்து 37.5 கோடி வரை என்று குறிப்பிடுகிறது.
இது மொத்த மக்கள் தொகையில் 2.5%-இல் இருந்து 29.5% வரை
என்று 2014-ஆம்
ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட பலவிதமான மதிப்பீடுகள்
குறிப்பிட்டுள்ளன. 2௦23-ஆம் ஆண்டில், உலக பட்டினி குறியீடு பட்டியல் [The Global Hunger Index] 125 நாடுகளில் இந்தியா 111-வது
இடத்தில் உள்ளதாகவும், பட்டினிக் கொடுமை மிக மோசமான நிலைமையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பேச்சுரிமை, கருத்து
சுதந்திரம் ஆகியவற்றின் குரல்வளை நெரிக்கப்படுவதில் இருந்து விடுதலை வேண்டி இந்தியா
ஏங்குகின்றது.. பத்திரிகைகள் மற்றும் மின்னணு
ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. 2024-ஆம் ஆண்டில் உலக பத்திரிகை சுதந்திர பட்டியலில் [World Press Freedom Index - 2024] 180 நாடுகளில் இந்தியா 159-வது
இடத்தில் உள்ளது. எல்லைகள் கடந்த செய்தியாளர்கள் [Reporters without Borders - RSF] என்னும் அமைப்பு இதழியலாளர்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தின்
அடிப்படையில் நாடுகளை பட்டியல் இட்டுள்ளது. இந்த அறிக்கை உலகில்
ஊடகங்களுக்கு மிக அபாயகரமான நாடுகளில் ஒன்றாக
இந்தியா உள்ளதாகத் தெளிவாக அறிவிக்கிறது. கருத்து வேறுபாடுகளை தெரிவிக்கும் உரிமை உயிரோட்டமுள்ள
ஜனநாயகத்துக்கு அடிப்படையாகும். உண்மைக்காகவும் நீதிக்காகவும் குரலெழுப்பும் ஊடகவியலாளர்கள்
துன்புறுத்தப்படுகிறார்கள், சிறைக்குள் அடைக்கப்படுகிறார்கள், கொலைகூட செய்யப்படுகிறார்கள்.
பாராளுமன்றத்தில், ராஜ்யசபை , லோக்சபை இரண்டிலும், நடப்பவற்றை நாம் அனைவரும்
பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவற்றின் சபாநாயகர்கள், மக்களின் நேர்மையான, சரியான,
சட்டபூர்வமான கோரிக்கைகளை எதிர்க் கட்சிகள் முன்வைத்துப் பேசுவதை தடை செய்யவும்,
அவர்கள் பேசும் மைக்குகளை நிறுத்தவும், பேசுவதைத் தடுக்கவும் என அனைத்தையும் செய்கிறார்கள்.
மக்கள் உரிமைகளை பாதுகாக்க முனைபவர்கள், தகவல் அறிய முயல்பவர்கள், உண்மைக்காகவும் நீதிக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் முன்நிற்பவர்கள் ஆகியவர்களின் சுதந்திரத்திற்காக இந்தியா ஏங்குகிறது. அவர்கள் கொடூரமான, பழிவாங்கும் அமைப்பின் முன் நிற்கிறார்கள். அவர்கள், மிரட்டப்படுகிறார்கள்; சிறைக்குள் தள்ளப்படுகிறார்கள்; கொலை செய்யப்படுகிறார்கள்! பீமா கோரிகான் சதி வழக்கில் கைதானவர்கள் இதற்கு ஒரு உதாரணம். இவர்களில் ஸ்டேன் சுவாமி குறிப்பிடத்தக்கவர். அவர் பழங்குடியினரின் சட்டபூர்வமான உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அவர் தேசிய புலனாய்வு முகமையால் [National Investigation Agency - NIA] 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம்தேதி கைது செய்யப்பட்டார்; 2021—ஆம் ஆண்டு ஜூலை 5– ஆம் நாள் சிறையிலேயே, அவரது 84-வது வயதில் மரணமடைந்தார். அவரது மரணம் ‘அரசு நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட மரணம்’ எனப்படுகிறது. டீஸ்டா செடல்வாட், அருந்ததி ராய், பேராசிரியர்.G.N.சாய்பாபா, உமர் காலித், மேதா பட்கர் போன்ற அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டாளர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பழிவாங்கப்பட்டனர்.
சிறுபான்மையினரை தீயசக்திகளைப் போல
உருவகப்படுத்துவது, பாகுபாட்டுடன் நடத்துவது, இழிபடுத்துவது ஆகியவற்றிலிருந்து
விடுதலை பெற இந்தியா ஏங்குகின்றது. இது இன்று அச்சமூட்டும் வகையில்
முறைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறது. சிறுபான்மையினர், முக்கியமாக முஸ்லீம்கள்,
கிருத்துவர்கள் மற்றும் சீக்கியர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்; மேலும்
அவர்கள் ஒருமுனைப்படுத்தப்பட்ட வகுப்புவாத சமூகத்தின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
ஜூன் 26, 2024 அன்று,
அமெரிக்காவின் மாகாணச் செயலர் ஆண்டனி பிளின்கென், சர்வதேச மத சுதந்திரம் பற்றிய அமெரிக்காவின்
வருடாந்திர அறிக்கையை அறிவிக்கும்போது, “இந்தியாவில் சிறுபான்மை மதத்தினருக்கு
எதிரான பலவிதமான வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன” என்று குறிப்பிடுகிறார். மேலும்
அவர், “இந்தியாவில் கவனத்திற்குரிய அளவுக்கு மதமாற்ற எதிர்ப்பு சட்டங்களும்,
வெறுப்புப் பேச்சுகளும், சிறுபான்மை மதத்தினரின் வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் இடிக்கப்படுவதும்
அதிகரித்துக் கொண்டிருக்கின்றன” என்று குறிப்பிடுகிறார். மேலும் ”இந்தியா மதம் மற்றும்
மத நம்பிக்கைகளுக்கான சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரான கொடூரமான செயல்களில் சட்டத்திற்கு
புறம்பான முறையில் ஈடுபடுவதோடு அந்த வன்செயல்களை சகித்துக் கொள்கிறது”; எனவே
‘இந்தியா குறிப்பான கவனத்திற்குரிய நாடு [Country of Particular Concern –CPC]” என்று
பட்டியலிடப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகிறது.
இந்தியாவின் சுற்றுச் சூழல் கொள்ளையடிக்கப்படுவதில் இருந்து விடுபட இந்தியா ஏங்குகிறது. பலவீனமான சுற்றுச் சூழல் அமைப்புகள் அழிக்கப்படுகின்றன. வயநாட்டின் நிலச் சரிவு, டெல்லியின் பயங்கரமான வெள்ளம், ‘இயற்கைப் பேரழிவுகள்’ என்று சொல்லப்பட்ட இந்தியா முழுவதும் ஏற்பட்ட இன்னும் பல நிகழ்வுகள், கவலைக்குரிய அளவில் மோசமாகிக் கொண்டிருக்கும் நிலைமையிலிருந்து சுற்றுச் சூழலைக் காக்க மிக சிறிய அளவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை தெளிவாகக் காட்டுகின்றன. அரசாங்கத்தின் திட்டங்கள் அதன் பெரும் முதலாளி நண்பர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றன; அது அவர்கள் இயற்கை தந்த சுற்றுச் சூழலை கொள்ளையடிக்கவும், முற்றிலுமாக அழிக்கவும் உரிமை தருகின்றன; புதைபடிவ எரிபொருட்களை தொடர்ந்து உபயோகிப்பது இதற்கு ஒரு உதாரணமாகும். நமது சுற்றுச் சூழல் மிக மோசமாகச் சிதைவடைந்துள்ளது! 2024—ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயல்பாடு குறியீட்டுப் பட்டியலில் [Environmental Performance Index] மொத்தம் 180 நாடுகளில் இந்தியா 176—வது இடத்தில் உள்ளது!
‘முன்னேற்றத்துக்கான
திட்டங்கள்’ என்ற பெயரில், விலை மதிப்பற்ற நமது காடுகளையும், பல உயிரினங்களையும்
அழிப்பது நாம் இன்று அனுபவிக்கும் காலநிலை மாற்றத்திற்கான மிகப்பெரும் காரணமாகும்.
2023—ஆம்
ஆண்டின் வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் [Forest Conservation Amendment Act] வனப்பாதுகாப்புக்காக
நிலம் ஒதுக்கப்பட்ட சட்டத்தை நீக்கியது; வன நிலங்களை வனம் சம்பந்தப்படாத
வேலைகளுக்குப் பயன்படுத்துவது, வன நிலங்களைக் குத்தகை மூலமும் வேறு வகைகளிலும்
தனியாருக்கு கொடுப்பது, நகரங்களில் உள்ள அருமையான பயன்பாடுள்ள நீர்நிலைகள்
மூடப்பட்டு வெள்ளப் பெருக்குகள் ஏற்படுவது ஆகியவை இச்சட்டத்தின் விளைவாகும். நமது
நாட்டின் பெரும்பாலான பெரிய ஆறுகள் மாசடைந்துள்ளன; புதைபடிவ எரிபொருட்களையே நாம்
பெரிதும் சார்ந்திருக்கிறோம். இன்றும், அரசாங்கத்தின் நண்பர்களான பெரும்
முதலாளிகளுக்கு ஏலம் என்ற பெயரில் நிலக்கரிச் சுரங்கங்கள் தரப்படுகின்றன. பல கார்ப்பரேட்டுகள்,
முக்கியமாக சுரங்க மாபியாக்கள், லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சிறிதும் மன
உறுத்தல் இல்லாமல் அரிதான சிறந்த இயற்கை வளங்களை அழிக்கின்றனர்.
கடுமையான சட்டங்கள் மற்றும் மக்களுக்கு எதிரான பிற
சட்டங்கள் தீவிரமான ஆலோசனைகள், விவாதங்கள் எதுவுமின்றி குடிமக்களின் சட்டபூர்வமான
உரிமைகளுக்கு சிறிதும் மதிப்பளிக்காமல் நடைமுறைப்படுத்தப்பட்டதற்காக இந்தியா அழுகிறது.
இவை, இந்தியக் குடியுரிமை திருத்தச்சட்டம் [Citizenship Amendment Act], மற்றும் ஜம்மு—காஷ்மீர்
சிறப்புரிமை சட்டம் 370—ம், அங்கு வேறுயாரும் நிலம் வாங்க முடியாது
என்று குறிப்பிடும் 35A சட்டமும் ரத்து செய்யப்பட்டது, வேளாண் விரோதச்
சட்டங்கள், தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு தொகுப்புச் சட்டங்கள், மதமாற்றத் தடைச்
சட்டம், தேசியத் தலைநகர் தில்லி அரசு [திருத்த] சட்டம் 2023 [Government of National Capital Territory of
Delhi (Amendment) Bill, 2023], உத்தரகாண்ட்
மாநிலத்தின் பொது சிவில் சட்டம் [Uniform
Civil Code), ‘ஒரு தேசம்
ஒரு தேர்தல்’ என்பது, ஜூலை1—ஆம் தேதி 2024-ஆம் ஆண்டில் அமலாக்கப்பட்ட பாரதிய நியாய
சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, மற்றும் பாரதிய சாக்ஷிய அதிநியம் என்னும்
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் [New
criminal laws, the ‘Bharatiya Nyaya Sanhita’,
the ‘Bharatiya Nagarik Suraksha Sanhita,’ and the ‘Bharatiya Sakshya Adhiniyam’] ஆகியவை இதற்கு உதாரணங்கள் ஆகும்.
இந்தியா, தரமான மற்றும் நமது நாட்டிற்கு அவசியமான
கல்வி பெறும் சுதந்திரத்திற்காக ஏங்குகிறது. இப்போதும் கூட பெரும்பாலானவர்கள்,
குறிப்பாக நம் நாட்டின் ஏழை மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள், கல்வி
கற்பதற்கான வாய்ப்பு, தகுதிக்கேற்ற வேலை, ஒளிமயமான எதிர்காலம் ஆகியவற்றுக்கான வாய்ப்பு
இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள், தங்களை வாழ்க்கைக்காகத் தயார்படுத்தாத தேசிய
கல்வி திட்டத்தால் நிலைதடுமாறுகிறார்கள். அவர்கள் NEET திட்டத்தின் ஊழல்களால்
பாதிப்படைகிறார்கள்; நூற்றுக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் இதனால் உண்டாகும்
விரக்தியால் தற்கொலை செய்து கொள்ளுகின்றார்கள். இந்தியாவின் கல்வி, சக
மனிதர்களுக்காக வாழும் ஆண்களையும் பெண்களையும் உருவாக்குவதில்லை என்பது இதனால்
தெளிவாகத்தெரிகிறது.
வேலையின்மையிலிருந்து விடுதலை அடைவதற்காக இந்தியா
ஏங்குகிறது. நம் நாட்டின் இளைஞர்கள் வேலையின்மையுடன் மல்லுக்கட்டுகிறார்கள். சர்வதேச
தொழிலாளர் அமைப்பு [International Labour Organisation - ILO] மற்றும் மனிதவள
மேம்பாட்டு நிறுவனம்v[Institute of Human Development - IHD] ஆகிய இரண்டும் இணைந்து
வெளியிட்ட இந்திய வேலைவாய்ப்பு துறையின் 2024 —ஆம்
ஆண்டு அறிக்கையின்படி [India
Employment Report 2024] வேலை இல்லாத
மக்கள் தொகையில் இளைஞர்கள் ஏறக்குறைய 83 விழுக்காடாக இருக்கின்றனர். மார்ச்27, 2௦24 அன்று வெளியான
அறிக்கை, மொத்த வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கையில் 2௦௦௦-வது ஆண்டில் 35.2%-ஆக
இருந்த படித்த இளைஞர்களின், குறிப்பாக 1௦-வது வரை படித்த இளைஞர்களின், எண்ணிக்கை, 2௦22
– வது ஆண்டில் 65.7% ஆக அதிகரித்து உள்ள கவலைக்குரிய போக்கைத் தெளிவாகக்
குறிப்பிட்டுள்ளது.
இந்தியா ஊழலிலிருந்து விடுதலை வேண்டி ஏங்குகிறது.
ஊழல் என்பது இந்தியாவில் இன்று இயல்பான ஒன்றாக கருதப்படும் நிலை இருக்கிறது;
மேலும் அது பெரும்பாலான மக்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகிவிட்டது; அதிகாரத்தைத்
தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களிடம் பணம் கொடுக்காமல் எதார்த்தத்தில்
உண்மையில் ஒன்றும் செய்ய முடியாது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள்
எளிதில் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். அதிகாரத்தில் இருக்கும் ஆட்சி மலைப்பூட்டுகிற
அளவு பணத்தை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை [Demonetization] மூலமாகவும், தேர்தல் பத்திரங்கள் [Electoral
Bonds ----EB] விற்பனை மூலமாகவும் அடைந்தது.
மிக அண்மையில் வெளியிடப்பட்ட ஹின்டன்பர்க்
ஆராய்ச்சியின் தரவுகள், செபி அமைப்பின் தலைவர் அந்த அமைப்பின் விதிகளுக்கு மாறாக
வியப்பூட்டும் அளவுக்கு, அதானி குழுமத்தின் நிறுவனங்களில் பெரும் பங்கு
பற்றுவதற்காக அவற்றில் பெரும் முதலீடு செய்தார் எனக் கூறுகின்றன. சர்வதேச
வெளிப்படையான அமைப்பு [Transparency International] என்னும் சர்வதேச அமைப்பு, அதனுடைய
ஊழல் புலனாய்வு அட்டவணை – 2024 [Corruption
Perception Index (CPI) 2024] – இல் 180 உலக
நாடுகளில் இந்தியாவை 93 – ஆம் இடத்தில் வைத்துள்ளது. இது மோடியின் தலைமையிலான
பாரதிய ஜனதா கட்சி [BJP] இன்றைய உலகின் ஜனநாயக நாடுகளில் அதிக அளவு ஊழல் மலிந்த
நாடு என்பதை எளிதில் உறுதிப்படுத்துகிறது.
இந்தியா அரசியலமைப்பு மற்றும் தற்சார்புள்ள
சுதந்திரமான அதிகாரத்திற்காகவும் அமைப்புகளுக்காகவும் ஏங்குகிறது. இவை எந்த ஒரு அரசியல்
கட்சி சார்பற்றதாக, உறுதியான குறிக்கோள் உடைய, பாரபட்சமில்லாத, வெளிப்படையான,
நேர்மையானவை என்னும் உறுதிப்பாட்டுடன் செயல்பட வேண்டும். இவை தேர்தல் கமிஷன் [Election Commission - ECI], அமலாக்கத் துறை [Enforcement Directorate - ED], மத்தியப் புலனாய்வு அமைப்பு [Central Bureau of Investigation - CBI], தேசிய புலனாய்வு முகமை [National Investigation Agency - NIA], வருமானவரித் துறை [Income Tax Department - IT]
இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் [National Human Rights Commission - NHRC]
காவல் துறை [Police], நீதித் துறையின் சில அமைப்புகளும் உள்ளிட்டவை ஆகும். இன்று,
இந்த அமைப்புகளில் உள்ள பெரும்பாலானவர்கள் மனசாட்சியின் உறுத்தல் சிறிதுமின்றி வெளிப்படையாக
ஒரு பக்கம் சார்ந்து அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு ஊழல் நிறைந்து, முதுகெலும்பற்றவர்களாய்
தங்களது அரசியல் எஜமானர்களின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கிறார்கள்.
இந்தியா ஏங்குகிறது, வினேஷ் போகத்தின்
சுதந்திரத்திற்காக. இன்று இவர் இந்தியப் பெண்களின் கடினமான நிலைமைகளில் இருந்து
மீள்வது, வீரம், வலிமை ஆகியவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இவர்
சக மல்யுத்த வீரர்கள் சிலருடன் சேர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அதிகாரமிக்க
தலைவரான பிரிஜ் பூஷன் பெண் வீரர்களுக்கு எதிராகப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதை
எதிர்த்து உறுதியுடன் போராடினார். பாதிக்கப்பட்ட பெண் வீரர்களுக்கு ஆதரவாக
மத்தியில் ஆளும் BJP ஒன்றுமே செய்யவில்லை; ஆனால் BJP தலைமை
தெளிவாக குற்றவாளிக்கு ஆதரவாக இருந்தது; வினேஷ் போகத் தனிமைப்படுத்தப்பட்டார்;
அவரது ஆற்றல் மிக்க திறமை தெரிந்தும் கூட அவருக்கு ஒலிம்பிக் போட்டியில்
பங்கெடுப்பதில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர் அங்கு உலகின் மிகச் சிறந்த வீராங்கனையை
தோற்கடித்து தனது திறமையை வலிமையைக் காட்டி இருந்தார். ஆனால் இறுதிச் சுற்றுக்கு
முன் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகள் இப்போதும்
தொடர்ந்து கேட்கப்படுகின்றன. இன்று அவர் இந்தியாவின் தேசிய கதாநாயகி; ஆனால் அவர் அதற்காக
மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது.
இந்தியா, மணிப்பூரின் பழங்குடி மக்களுடைய
சுதந்திரத்திற்காக ஏங்குகிறது. 2௦23—ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து அங்கிருக்கும்
பழங்குடிகள், குறிப்பாக குக்கி – ஷோ மக்கள் மனிதாபிமானற்ற, மனித உணர்வற்ற,
பிரித்தாளும் இரக்கமற்ற ஆட்சியால் பலியாக்கப்பட்டனர்; ஆட்சியின் தலைமையில் இருந்தவர்கள்
அப்போது நடந்த கொடூரமான வன்முறைச்செயல்களில் ஈடுபட்டவர்களை வெளிப்படையாக
ஆதரித்தார்கள். நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் கொல்லப்பட்டனர்; ஏராளமானவர்கள் காயப்படுத்தப்பட்டார்கள்;
ஆயிரக்கணக்கானவர்கள் மணிப்பூரை விட்டுத் தப்பி ஓடினார்கள்; பலர் அகதிகள்
முகாம்களில் தஞ்சமடைந்தார்கள்; அவர்களது வீடுகளும் சொத்துக்களும் அழிக்கப்பட்டன;
அவர்களிடமிருந்து அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டன; அவர்களது வழிபாட்டுத் தலங்கள் கூட
மண்ணோடு மண்ணாகச் சிதைக்கப்பட்டன; மணிப்பூர் மக்களின் அமைதியான வாழ்க்கையை
உறுதிப்படுத்த மாநில அரசுக்கோ மத்திய அரசுக்கோ அக்கறை இல்லை.
இந்தியா அதன் மக்கள் அனைவரும் கௌரவத்துடனும்
சமத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் அமைதியுடனும், உண்மையுடனும் நீதியுடனும் மற்றவர்களை
அங்கீகரித்து பன்மைத்துவத்தைப் போற்றி வாழும் சுதந்திரத்திற்காக ஏங்குகிறது; மக்கள்
ஜனநாயக நெறிமுறைகள், அரசியலமைப்பு மதிப்பீடுகள், மற்றும் நாட்டின் மதச் சார்பற்ற
தன்மைக்காக ஏங்குகிறார்கள். உண்மையற்ற தன்மை, ஏமாற்றுதல், பொய்கள் இவற்றிலிருந்து விடுதலைக்காகவும்;
தங்களின் வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்த ஒரு தலைச்சார்பான வரலாறுகளில் இருந்து விடுதலை
பெறவும்; வெறுப்பு, வன்முறை, வன்புணர்வு மற்றும் கொலைகள், மிரட்டி பணம் பறித்தல், ஊழல்,
பன்மைத்துவத்தை மறுக்கும் ஒற்றைத்தன்மை, ஒரே கலாச்சாரம், சர்வாதிகாரம் மற்றும்
அடிமைத்தனம் ஆகியவற்றில் இருந்து அனைவரின் சுதந்திரத்திற்காகவும்; ஆதிவாசிகள்,
தலித்துகள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மை மக்கள் மற்றும்
விளிம்புநிலை மக்கள், பெண்கள், பிற பாலினர், சிறு விவசாயிகள், கடலோரப் பழங்குடியினர்,
நாள் கூலி தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், மற்றும் ஒதுக்கப்பட்ட பிற
மக்கள், மற்றும் சுரண்டப்படும் அனைத்து மக்களும் நேசத்திற்குரிய நமது நாட்டின் அச்சமற்ற
மற்றும் ஒளிவு மறைவற்ற வெளிப்படையான மக்களாக வாழும் சுதந்திரத்தைக் கோருகிறார்கள்.
இந்தியா முழுமையான நிறைவான சுதந்திரத்திற்காக ஏங்கும் இன்றைய நிலைமையில் ‘கவிஞர்
தாகூரின் கீதாஞ்சலியில்’ கூறுவதைப் போல, ”என்னுடைய தந்தையின் சுதந்திரம் நிறைந்த சொர்க்கத்தில்
என் நாடு கண் விழிக்கட்டும்!” என்பதே நமது வேண்டுகோளாக இருக்கிறது.
இந்தியா எல்லாவிதமான அச்சங்களில் இருந்தும்
பாதுகாப்பின்மையில் இருந்தும் விடுதலை பெறுவதற்காக அழுகிறது. நமது நாட்டின்
பெரும்பாலான மக்களை அச்சம் செயலற்று முடமாக்கியுள்ளது. கொடுங்கோன்மையான, தீய,
பழிவாங்கும் நடவடிக்கைகள் கொண்ட ஆட்சியை எதிர்கொள்வது எளிதான ஒன்றல்ல.
பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திற்கு எதிராக 19—ஆம்
நூற்றாண்டின் இறுதியில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் மக்களின் உண்மை நிலைமைகள்
மற்றும் மக்களிடம் நிறைந்திருந்த அச்சம் குறித்த வருந்தத்தக்க சமரசமற்ற விமர்சனம் கொண்ட
இரவிந்திரநாத் தாகூரின் “சுதந்திரம்” என்னும் கவிதை இன்று இந்தியாவை மூச்சு விட
முடியாதபடி இறுக்கிக் கொண்டிருக்கும் அச்சம் மற்றும் எதார்த்தம் பற்றிய விமர்சனமாகவும்
உள்ளது.
ஆங்கில மூலம்: எஸ். ஜெ.செட்ரிக் பிரகாஷ்
தமிழில்:கவிதா
(ஆசிரியர் பற்றிய குறிப்பு: எஸ். ஜெ.செட்ரிக்
பிரகாஷ், மனித உரிமைக்கான போராளி, எழுத்தாளர்.)
Comments
Post a Comment