Skip to main content

சம்பல் ஜமா மசூதி பிரச்சினை - மத வெறிக்குத் துணைபோகும் நீதிமன்றங்கள்!

 

ஆளும் வர்க்கங்கள் தங்களது சுரண்டலைத் தீவிரப்படுத்தவும், நெருக்கடியை மக்கள் மீது சுமத்தவும், மக்களின் உரிமைகள் பறிப்பு, அடக்குமுறைகளை ஏவுதல், மக்களிடையே மோதல்களை உருவாக்குதல் எனப் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றன. இந்திய முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாகச் செயல்படும் முதலாளித்துவக் கட்சிகள் இந்திய அளவிலும் மாநில அளவிலும் இத்தகையப் போக்கை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கடைபிடித்து வருகின்றன.

தற்பொழுது இந்திய ஆளும் வர்க்கத்தின் ஏஜென்டாகச் செயல்படும் பாஜக தலைமையிலான அரசு மதச் சிறுபான்மை மக்கள் மீது பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஏவுவதும் அவர்களின் வழிபாட்டுத்தலங்கள் இருந்த இடங்களில் இந்து மதக் கோயில்கள் இருந்ததாகவும் கூறி வழிபாட்டுத் தலங்களை அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் கையகப்படுத்துவதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் சந்தித்து வரும் கடுமையான நெருக்கடிகளிலிருந்து எழும் போராட்டங்களைத் திசை திருப்புவதற்கு மதவாத அரசியல் என்னும் ஆயுதத்தை தரித்துக் கொள்கின்றது. நீதிமன்றம், போலீசு, அதிகார வர்க்கங்கள் உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் அனைத்தையும் பயன்படுத்தி ஒரு பதட்டமான சூழலை உருவாக்குகிறது. மேலும் இந்துமத மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி சிறுபான்மை மக்களுக்கு எதிராக அவர்களை நிறுத்துகிறது.

உத்திரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் அமைந்துள்ள ஷாஹி ஜமா மசூதி இருந்த இடத்தில் இந்துமதக் கடவுள் கல்கி அவதாரத்தின் ஹரிஹர கோவில் இருந்ததாகவும் 1529 ஆம் ஆண்டு பாபர் ஆட்சி காலத்தில் அந்தக் கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாகவும் கூறி நவம்பர் 19 அன்று மாவட்ட குடிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி மசூதி தரப்பிடமிருந்து கருத்து கேட்காமலேயே அவசரம் அவசரமாக அகழ்வாராய்ச்சி செய்ய வழக்கறிஞர் ஆணையருக்கு உத்தரவிட்டது.

உத்தரவிட்ட அன்றே இரண்டு மணி நேரத்திற்குள்ளாக அவசர அவசரமாக உத்தரப்பிரதேச அரசு வழக்கறிஞர் ஆணையர் தலைமையில் அகழ்வாராய்ச்சி குழு 30 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள மசூதிக்குள் வந்து ஆராய்ச்சி பணியை மேற்கொண்டது. மீண்டும் நவம்பர் 24ஆம் தேதி அந்தக் குழு மசூதிக்குள் ஆய்வு பணியைத் தொடர்ந்தது. இந்த நிலையில் மசூதியின் சுவர்கள் சேதப்படுத்தப்பட்டதாக செய்தி பரவிய நிலையில் நூற்றுக்கணக்கான முஸ்லீம் மக்கள் தங்களுடைய மத வழிபாட்டுத் தலத்தைப் பாதுகாக்க அங்கு அணி திரண்டனர். மசூதியில் நடைபெறும் ஆய்வுப் பணிகள் குறித்து அதிகாரவர்க்கத்திடம் கேள்விகளை எழுப்பினர். அங்கு ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் பொதுமக்கள் மீது தடியடிப் பிரயோகமும் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதனால் ஐந்து முஸ்லீம்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறையினர் அரசு துப்பாக்கிகள் மற்றும் சொந்தத் துப்பாக்கிகளை கொண்டு சுட்டதில் ஐந்து அப்பாவிகள் உயிரிழந்துள்ளதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், நவம்பர் 29 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் சம்பல் வழக்கு தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது. பிரச்சனைகளை சமரசப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளது. மக்களிடையே மோதல்களை உருவாக்கும் இதுபோன்ற வழக்குகளைத் தள்ளுபடி செய்து கண்டனம் தெரிவிக்க வேண்டிய உச்சநீதிமன்றம், இந்த பிரச்சனைகளை நீடிக்கச் செய்யும் வகையில் ஆலோசனை வழங்கியுள்ளது.

இது ஏதோ ஓரிடத்தில் நடைபெற்ற சம்பவம் அல்ல, கடந்த மூன்றாண்டுகளில் இதுபோன்று பல இடங்களின் பூர்வீகத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏராளமான வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன. இவற்றில் ஞானவாபி மசூதி (வாரணாசி), ஷாஹி இடாக் மசூதி (மதுரா), குதுப்மினார் (டெல்லி), ஹஜி மலாங் தர்கா (மஹராஷ்டிரா) போன்றவை குறிப்பிடத்தக்கவை

17ஆம் நூற்றாண்டில் ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் காசி விசுவநாதர் கோவிலின் ஒரு பகுதி அழிக்கப்பட்டு அந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகக் கூறி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் 1991 இல் இந்துத்துவ அமைப்புகளால் வழக்கு தொடரப்பட்டது. இதன் தொடர்பாக அலாகாபாத் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மேலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யபட்டன.

2019 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியதை அடுத்து ஞானவாபி வழக்கு மீண்டும் விரைவுபடுத்தபட்டு, ஞானவாபியில் தொல்லியல் துறை கொண்டு ஆய்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2021 ஆம் ஆண்டு மசூதி நிர்வாகத்தின் சார்பாகத் தொடரப்பட்ட வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றமானது, வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991ன் படி, ஆகஸ்டு 15, 1947க்கு முன்பு இருந்து வரும் வழிபாட்டு தலங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிகாட்டி ஞானவாபி வழக்கு சம்பந்தமான வழக்குகளின் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு உத்திரவிட்டது. எனினும், 2023 இல் அலகாபாத் நீதிமன்றம் ரேடார் சாதனங்களைக் கொண்டு ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கியது. தொல்லியல் துறை ஆய்வு செய்து அதன் ஆய்வறிக்கையை வாரணாசி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

இந்த ஆய்வறிக்கைக்குப் பின்னர் மசூதியின் மத்திய மாடப் பகுதியிலிருந்து காசி விசுவநாதர் கோவிலின் கருவறைக்கு செல்லும் பாதையில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என மீண்டும் இந்துத்துவ அமைப்புகளின் சார்பாகக் கோரப்பட்டது. இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் தற்பொழுது நிராகரித்துள்ளது.

இதேப் போன்று, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்திருக்கும் அஜ்மீர் ஷரீப் தர்கா சிவன் ஆலயத்தின் மீது கட்டபட்டதாகவும், இது குறித்து தொல்லியல்துறை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் செப்டம்பர் 2024 இல் இந்து சேனா சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளில் மட்டுமல்லாமல் இப்பொது சம்பலில் அமைந்துள்ள ஜமா மசூதி விடயத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளவர் ஹரி சங்கர் ஜெயின் என்னும் இந்துத்துவ வழக்குரைஞர். இதுவரை இவர் நூறு வழக்குகளுக்கும் மேல் இது போன்று தொடுத்துள்ளார். அயோத்தி பாபர் மசூதி வழக்கில் இந்து மகாசபைக்காக 1989ல் வழக்கு தொடுத்தவர் இவர்தான். ‘நீதிக்கான இந்து முன்னணி’ என்ற அமைப்பின் தலைவர். 2021ல் அவர் ‘இந்து சாம்ராஜ்ய கட்சி’ என்னும் கட்சியை நிறுவயவர். அக்கட்சியின் நோக்கம் இந்து ராஜ்ஜியத்திற்காக ஒரு புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதுதான். நீதித்துறையில் அதிகாரத்தில் உள்ள இந்துத்துவ ஆதரவு நீதிபதிகளைப் பயன்படுத்திக் கொண்டு சட்டத்தின் மூலம் சிறுபான்மை மதத்தினரின் வழிபாட்டுத்தலங்களைக் கைப்பற்றுவதுதான் இதன் நோக்கம். இந்த வழிபாட்டுத் தலங்கள் வணிகரீதியாக முக்கியத்துவம் கொண்டதாகவும், கோடிக்கணக்கான சொத்து மதிப்புக் கொண்டதாகவும் இருக்கின்றன. எனவே இந்துமதத்தின் பெயரால் இவற்றைக் கைப்பற்றிக் கொள்ளையடிக்க ஒரு கூட்டம் திட்டமிட்டு வேலை செய்து வருகிறது. அதற்கு இந்துத்துவ வெறியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டுவருகிறது.

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991 ஆகஸ்ட் 15, 1947 அன்று நிலவியவாறே மத வழிபாட்டுத்தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவற்றில் எந்த மாற்றமும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் கூறுகிறது. ஆனால் இந்தச் சட்டத்திற்குப் புறம்பாகக் கீழமை நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவதையே இன்று பார்த்து வருகிறோம். உச்சநீதிமன்றமும் இந்தச் சட்டத்தைக் கறாராகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றங்களை வலியுறுத்துவதில்லை. அவை சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் போது அவற்றைக் கண்டிப்பததோ அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதோ இல்லை. 2022ல் மே மாதம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த D. Y.சந்திர சூட் வழிபாட்டுத் தலத்தின் மதத்தின் உண்மைத்தன்மை பற்றி அறிந்து கொள்வதற்கான ஆய்வை 1991 சட்டம் தடைசெய்ய வில்லை என்று ஞானவாபி மசூதி வழக்கின் சட்டரீதியான தகுதி பற்றிய விசாரணையின்போது குறிப்பிட்டார். இது பின்விளைவு பற்றித் கருத்தில் கொள்ளாத உயர்ந்த அதிகார பீடத்தில் இருப்பவரின் பொறுப்பற்ற வார்த்தைகளாகும். இந்த வார்த்தைகள் அந்தச் சட்டத்தையே காலி செய்துவிட்டன: நீதித்துறையில் இருக்கும் இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவான நீதிபதிகளை தான்தோன்றித்தனமான போக்கில் செயல்பட வழிவகுத்தன.

கடந்த காலத்தில் முகலாய மன்னர்களின் ஆட்சியின்போது நடந்த தவறுகளுக்கு எல்லாம் இன்றைய ஆட்சியில் தீர்வு காண வேண்டும் எனக் கூறி இந்துத்துவ மத வெறியைப் பரப்பி வருகின்றனர். இவர்கள் வழியில் தீர்வு காண வேண்டுமானால் முகலாய மன்னர்களோடு மட்டும் இங்கு வரலாறு தொடங்கவில்லை என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும், புஷ்யமித்திர சுங்கன் காலத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இடிக்கப்பட்ட புத்த மடாலயங்களுத் தீர்வு காண வேண்டும். சைவ, வைணவ மதங்களின் ஆதிக்கத்தின் போது இடிக்கப்பட்ட சமண, புத்தமத வழிபாட்டுத்தலங்களுக்கும் தீர்வு காண வேண்டும். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நமது மக்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றதைத் திரும்பக் கொண்டுவர வேண்டும்,

ஆனால் இந்துத்துவவாதிகளின் நோக்கம் அதுவல்ல. சிறுபான்மை மக்களை எதிரிகளாகக் காட்டுவதும், அவர்கள்தான் தமது பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் எனக் கூறி பெரும்பான்மையாக உள்ள இந்து மக்களின் செல்வாக்கைப் பெற்றுத் தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொண்டு தொடர்ந்து ஆட்சியிலிருந்து கொள்ளையடிப்பதுதான் அதன் நோக்கம். அதற்கு அதிகாரத்தில் உள்ள பாஜக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீதித்துறையும் அதிகாரவர்க்கமும் ஆதரவாக உள்ளன.

இந்து மதக் காவலர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த மதவாதச் சக்திகள் ஏழை எளிய இந்து மக்கள் அடிப்படை வாழ்வாதாரங்கள் கூட இல்லாமல் துன்பத்தில் உழல்வது குறித்து கவலைப்படுவதில்லை. வேலை இன்றி ஏராளமான இளைஞர்கள் இருப்பது குறித்தோ, கல்வியும், மருத்துவமும் ஏழை எளிய இந்துக்களுக்கு எட்டாக் கனியாகவே இருப்பது குறித்தோ இவர்கள் கவலைப்படுவதில்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.

சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்வைச் சூறையாடி அதன் மூலம் தம்மை வளப்படுத்திக் கொள்வதோடு, சுரண்டும் வர்க்கங்களின் நலனைக் காப்பதுமே இவர்களின் முக்கிய ‘கடமையாக உள்ளது. உழைக்கும் வர்க்கத்தைப் பிளவுபடுத்தும் இத்தகைய சக்திகளை தொழிலாளர்களிடமும், விவசாயிகளிடமும், இளைஞர்களிடமும் அம்பலப்படுத்தி ஆளும் வர்க்கத்திற்கு எதிரான களங்களைக் கட்டிமயமைப்பதே இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.

                                                                            

                                                                                        குமணன்

Comments

  1. Very true.👏 Nevertheless I feel that the issue does not prevent the task of exposing and uniting the forces mentioned in the article.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...