Skip to main content

பாஜகவின் ஆணவமும் தி.மு.க.வின் போலித்தனமும்!

 

ஒருங்கிணைந்த கல்வி திட்டம் (Samagra Shiksha) என்ற திட்டத்திற்காகத் தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய ரூ.2152 கோடியை கடந்த ஓராண்டு காலமாக ஒன்றிய அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் 40 இலட்சம் மாணவர்களும் 32000 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டால்தான் இந்த நிதியை அளிப்போம் என மோடியின் அரசாங்கம் முரட்டுப் பிடிவாதம் பிடித்து வருகிறது. அதன் மூலம் தமிழ்நாடு அரசாங்கம் புதிய மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது.

ஒன்றிய அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தமிழ்நாடு அரசாங்கம் புதிய மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அப்பொழுதுதான் நிதி வழங்குவோம் என்றும் ஆணவத்துடன் அறிவித்துள்ளார்; மேலும், மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தாதன் மூலம் தமிழ்நாடு அரசாங்கம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படுகிறது என்று கூறி தனது அறியாமையும் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.

அரசியல் அமைப்புச் சட்டம் அலுவல் மொழி பற்றியும், தொடர்பு மொழி பற்றியும் கூறுகிறதே தவிர கல்வியில் எந்த எந்த மொழிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று எதுவும் கூறவில்லை என்பதை அறியாமலேயே ஒன்றிய அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் இருக்கிறார் என்பதுதான் பரிதாபம். இவரைப் போன்றவர்களின் தலைமையில் இந்தியக் கல்விக் கொள்கையும், கல்வி முறையும் இருப்பதுதான் அவலம். அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வரும் இவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பற்றிப் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போல உள்ளது.

தான் விரும்புவதை மாநில அரசாங்கங்கள் செய்ய வேண்டும் என்ற நாட்டாண்மை மனப்பான்மையுடன் மோடியின் ஒன்றிய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது; மாநிலங்களின் கூட்டிணைப்புதான் இந்திய ஒன்றியம் என்பதை மறந்துவிட்டு எதேச்சதிகார ஆட்சி நடத்த முயற்சி செய்து வருகிறது. ஒன்றிய அரசாங்கத்திற்கு மாநிலங்களிடமிருந்தே நிதி கிடைக்கிறது. அவற்றில் பங்கு கோருவது மாநிலங்களின் உரிமை. அவற்றை மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுப்பது ஒன்றிய அரசாங்கத்தின் கடமை. அதனை மீறுவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

தமிழ்நாட்டின் வரலாற்றை அறியாமல் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்க மோடியின் அரசாங்கம் முயற்சி செய்கிறது. பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் போதே, சென்னை மாகாணத்தில் 1938ல் இராஜாஜி முதலமைச்சராக இருந்த போது இந்தித் திணிப்புக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தியவர்கள் தமிழ் நாட்டு மக்கள். 1965ல் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய வரலாறு காணாத போராட்டம்தான் இன்று வரை காங்கிரஸ் கட்சி இங்கு மீண்டும் வலுவாகக் காலூன்ற முடியாமல் தடுத்து வருகிறது.

இந்த வரலாற்றிலிருந்து பாஜக எந்தவிதமான படிப்பினையையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் உயர்த்திப் பேசிவிட்டாலே தமிழர்கள் மயங்கி விடுவார்கள், அந்த மயக்கத்திலேயே அவர்களை ஏமாற்றி இந்தியைத் திணித்து விடலாம் என அக்கட்சி கருதுகிறது. அதனால்தான் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அரசியல் கற்றுக்குட்டி அண்ணாமலை அறிவிக்கிறார். ஆனால் இவர்களின் எண்ணமும் முயற்சியும் இங்கு நிறைவேறப் போவதில்லை.

இவர்களின் நப்பாசைக்கும் முயற்சிக்கும் காரணமாக இருந்து வருவது கடந்த 58 ஆண்டுகளாக மாறி மாறி இங்கு நடந்து வரும் தி.மு.. .தி.மு.. ஆட்சிகளின் கல்விக் கொள்கைதான். தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட அலையில் ஆட்சியைப் பிடித்தது தி.மு.. தமிழன்னையை அரியணை ஏற்றுவோம் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த தி.மு.. மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றினால் இந்தி ஆதிக்கம் பெற்று விடும் எனக் கூறி தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றியது. அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த .தி.மு..வும் அதே கொள்கையைப் பின்பற்றியது.

ஆனால் இவர்களுடைய ஆட்சியில் தமிழுக்குப் பதிலாக ஆங்கிலம்தான் அரியணை ஏறியது. உண்மையில் தமிழுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருபவர்களாக இருந்திருந்தால் பள்ளிப் படிப்பு முதல் பட்டப் படிப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்கி இருக்க வேண்டும்.

அதற்குப் பதிலாக ஆங்கிலத்தில் போதிக்கும் தனியார் பள்ளிகள்தான் இவர்களுடைய ஆட்சியில் அதிகரித்துள்ளன. பள்ளிக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஆங்கிலமே பயிற்று மொழியாக இன்று மாறி உள்ளது.

தாய் மொழியில் பயிலும் போதுதான் புரிதல் ஆழப்படும்; சுய சிந்தனை வளரும்; தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆனால் ஆங்கிலத்தில் பயிலும் இன்றைய மாணவர்களின் நிலை எப்படி உள்ளது? அவர்களால் ஒரு பக்கம் கூட பிழையில்லாமல் தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுத முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது; தாய் மொழியான தமிழைக் கூடப் படித்து முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை நீடித்தால் தமிழ்நாட்டிற்குள்ளே தமிழில் வாசிக்கவும் எழுதவும் முடியாத தலைமுறை உருவாகும் அபாயம் உள்ளது.

இன்னொரு பக்கம், ஆங்கில வழிப் பள்ளியில் படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் ஆதிக்கம் பெற்று தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் ஆண்டு தோறும் பல்லாயிரம் ரூபாய்கள் கட்டணம் கட்டி தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர். இதனால் குடும்பங்களின் கல்விச் செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மக்களின் ஆங்கில மோகத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு இங்கு கல்வி வியாபாரிகள் மக்களைக் கொள்ளையடித்து வருகின்றனர். இவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாகவும் அரசின் கல்விக் கொள்கையைத் தீர்மானிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்தத் தனியார் பள்ளிகளின் முதலாளிகள் தங்கள் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழிப் பாடமாக வைத்திருப்பதன் மூலம் அரசாங்கத்தின் இரு மொழிக் கொள்கையை முறியடித்து வருகின்றனர். அதனால் பாஜகவினருக்கு இருமொழிக் கொள்கையை விமர்சிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

மேலும், இந்திராகாந்தியின் பாசிச ஆட்சியின்போது 1976 ல் அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட 42-வது திருத்தத்தின் படி அது வரை மாநிலப் பட்டியலிருந்து வந்த கல்வி பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன் மோசமான பின்விளைவுகளைத்தான் இன்று மாநிலங்கள் அனுபவித்து வருகின்றன. மாநிலங்களின் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடிய 'நீட்,' (NEET), புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றிற்கு அடிப்படைக் காரணமாக இருப்பதும் அதுதான். தி.மு..வும், .தி.மு..வும் மாறி மாறி ஒன்றிய அரசாங்கத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்த போதும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

'தமிழ்தான் தங்களுடைய உயிர்' என்று தி.மு..வினர் வார்த்தைக்கு வார்த்தை முழங்கினாலும் கூட அவர்களின் செயல்பாடுகள் தமிழின் வளர்ச்சிக்குத் தடையாகவும், ஆங்கில வழிப் பள்ளிகள் நடத்தும் கல்வி வியாபாரிகளின் வளர்ச்சிக்கு ஆதரவாகவும் மட்டுமே இருக்கின்றன.

மேலும், கல்வித் துறையில் மட்டுமல்லாமல் இவர்களுடைய ஆட்சியில் அரசு அலுவலகங்களில் இருக்கும் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தைக் கூட இவர்கள் ஒழிக்கவில்லை. அரசு அலுவலகங்களில் பெரும்பாலான கடிதப் போக்குவரத்துகளும் கோப்புகளும் இன்றும் கூட ஆங்கிலத்தில்தான் உள்ளன.

இவை அனைத்தும் இவர்களுடைய தமிழ்ப் பற்று எவ்வளவு போலியானது என்பதை அம்பலப்படுத்துகின்றன.

இந்த நிலையில் ஆட்சியில் உள்ள தி.மு.. உண்மையில் தமிழை அரியணையில் ஏற்றவும் சுதந்திரமான கல்விக் கொள்கையைப் பின்பற்றவும் விரும்பினால் பின்வரும் பணிகளைச் செய்ய வேண்டும்.

  • ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கிலிருந்து விடுபடுவதற்கு கல்வியை பொதுப் பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப் போராட வேண்டும்.
  • சமூக நீதி பேசுபவர்கள் முதலில் பணம்படைத்தவர்களுக்கு ஒரு கல்விமுறை, ஏழைகளுக்கு ஒரு கல்வி முறை என்ற வேறுபாட்டை ஒழிக்க வேண்டும். தனியார் பள்ளிகளை ஒழிக்க வேண்டும்.
  • அடிப்படைப் பள்ளிக் கல்வியை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும்.
  • பள்ளிக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை பயிற்று மொழியாக தமிழே இருக்க வேண்டும். தொடர்பு மொழியான ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக வைக்க வேண்டுமே தவிர பயிற்று மொழியாக வைக்கக் கூடாது.
  • ஒரு மொழியின் வளர்ச்சி சமூகத்தின் வளர்ச்சியுடன் இணைந்தது. சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது பொருளுற்பத்தி. எனவே பொருளுற்பத்தியின் அனைத்துச் செயல்பாடுகளிலும் மற்றும் நிர்வாகம், கல்வி, மருத்துவம், தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் ஒருமொழி புழங்கும் போதுதான் அந்த மொழி வளர்ச்சி அடையும். அத்தகைய ஒரு மொழியாக தமிழைப் பயன்படுத்த அதனை அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்க வேண்டும்

-        மு.வசந்தகுமார்

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...