Skip to main content

நிகழ்காலப் பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசை திருப்ப பழைய கல்லறைகளைத் தோண்டும் கயவர்கள்!

 

மார்ச் 17 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இந்துத்துவப் பாசிச அமைப்புகளான விஸ்வ ஹிந்து பரிசத்தும், பஜரங் தளமும் இணைந்து முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அது கலவரத்தைத் தூண்டி ஓர் உயிரைப் பலி கொண்டுள்ளது.; முப்பதுக்கும் மேற்பட்டோரை காயமடைச் செய்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி சிலரின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்துள்ளது அந்த மாநிலத்தின் பாஜக தலைமையில் உள்ள அரசு. 

ஏறக்குறைய 318 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த முகலாய மன்னர் அவுரங்கசீப் அடக்கம் செய்யப்பட்ட சமாதி இன்று கலவரம் செய்ய தேவைப்பட்ட, தேடப்பட்ட காரணங்களில் ஒன்றாகியுள்ளது. 

கலைஞனின் பொறுப்பை மறந்து, பொறுப்பற்ற முறையில் சமுதாய அமைதியைக் குலைக்கும் என்று தெரிந்தும் சுயலாபத்துக்காக எடுக்கப்படும் அபாயகரமான படைப்புகளைச் சிலாகித்துப் பேசுவது--- ஊடகங்களில் தேர்தல் பிரச்சார மேடைகளில் தன் பதவியின் பொறுப்பை உறுதியுடன் மறுத்துச் செயல்படுவது என்று சர்வ சாதாரணமாகிவிட்டது பிரதமர் மோடிக்கு. அவரை இந்தியர்களின் பிரதமர் என்று சொல்லலாமா அல்லது இந்துக்களின் பிரதமர் என்பதா? அப்படி கூட சொல்ல முடியாது. ஏனென்றால் ஏராளமான இந்துக்கள் மற்ற மதத்தினரின் உரிமைகளை, உணர்வுகளை மதித்து அன்பு பாராட்டி வாழ்கின்றனர். 

ஆனால் உண்மையில் இங்கு நிலைமை இப்படியெல்லாம் நினைக்கின்ற வகையில் இல்லை. பஜ்ரங்தள்ளும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும் வேறானவை அல்லவே. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துகிற -- இவர்களின் செயல் திட்டங்களைத் தீட்டுவது ஆர் எஸ் எஸ். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை இயக்குவதும் இதுதான்.

 

முன்பு தங்களுடைய மத வெறிப் பிரச்சாரத்திற்காக கஷ்மீர் ஃ பைல்,, கேரளா ஸ்டோரி ஆகிய பிற்போக்கான படங்களைப் பயன்படுத்திக் கொண்டது போல, தங்களுடைய கலவரத்திற்கு ஆதரவாக இப்பொழுது இந்த அமைப்புகள் பயன்படுத்திக் கொண்டது 'சவ்வா' என்ற திரைப்படம். ----- சத்ரபதி சிவாஜியின் மகன் அரசன் சம்பாஜியின் வரலாறு. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசன் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த அன்பையும் பயன்படுத்துவான். கொடூரத்தையும் பயன்படுத்துவான் என்பது எப்போதும் நடக்கும் ஒன்று. அவனது லட்சியம் அவனது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்துவது மட்டும்தான். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசன் தன்னிடம் தோல்வி அடைந்த மன்னனைத் துன்புறுத்தியே தனது வெற்றியைப் பறைசாற்றுவான். இது வரலாறு முழுவதும் நிறைந்துள்ளது. ஏன் பேரரசன் சத்ரபதி சிவாஜி கூட முகலாய மன்னன் அவுரங்கசிப்பின் தளபதியான சைஸ்டா கானை நள்ளிரவில் தாக்கி மிகக் கோரமாக காயப்படுத்தினார். சத்ரபதி சிவாஜியின் படைகள் முகலாய துறைமுகமான சூரத்தை தாக்கி அதன் செல்வங்களை கொள்ளை அடித்து அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தன. இப்போக்கு இந்து- முகலாய மன்னர்களின் போர்களில் மட்டுமல்ல இன்றைக்கும் நாடுகளுக்கு இடையில் நடக்கும் ஒவ்வொரு போரின் நடவடிக்கையிலும் சிக்கிய போர் வீரர்களைச் சித்திரவதைப்படுத்துவது என்பது வழக்கமான ஒன்றாகவே உள்ளது 

'சவ்வா' திரைப்படத்தால் ஏற்பட்ட நாக்பூர் வன்முறைகளை அனுபவித்த ஒரு இஸ்லாமியரின் வார்த்தைகள் உண்மையானவை--- "நாக்பூரின் மஹல் பகுதியில் கலவரத்தை தொடங்கிய முஸ்லிம்கள் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல" என்கிறார். 

அந்தப் பகுதியின் காவல்துறையினர் அன்று அதிகாலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர், 17வது நூற்றாண்டில் எழுப்பப்பட்ட முகலாய மன்னர் அவுரங்கசீபின் சமாதியை இடித்து தள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மஹலின் ஒரு பகுதியான சித்னிஷ் பார்க் சௌக்கில் திரண்டனர் என்கிறார்கள். இதே போன்ற கிளர்ச்சிகள் மகாராஷ்டிரா முழுவதும் இருந்த போதிலும், 'குர்ஆன் வாசகங்கள் எழுதப்பட்ட சடார்' எரிக்கப்பட்ட பின்னரே நாக்பூர் கலவரம் வன்முறையாக மாறியது. அதை யார் செய்திருப்பார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.  

மேலும் கலவரங்களை அடக்க வந்த போலீஸ்காரர்கள் தாமதமாகவும் மேலும் நிலைமையை கட்டுப்படுத்த அதற்குத் தக்க ஏற்பாட்டோடும் வரவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். ஏன்? மேலும் அங்கு குடியிருந்தவர்களின் வீடுகளில் குறைந்தபட்சம் 6 போலீசார் 'தங்களின் பாதுகாப்புக்காக' அடைக்கலம் இருந்தபோது கலவரக்காரர்கள் சுதந்திரமாக தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தனர் என்கிறார்கள் சித்னிஸ் பார்க் பகுதி மக்கள்.  

வரலாற்று வல்லுநரும் சர்வேஸ்வரி டிகிரி கல்லூரியின் முதல்வருமான பிரதிப் கேஷர்வானி, புகழ்பெற்ற சோமேஸ்வரர் மகாதேவர் கோயிலுக்கு தனது பரிவாரங்களுடன் சென்று ஏராளமான நன்கொடைகளையும் வரிவிலக்குகளையும் ஏராளமான கிராமங்களையும் முகலாய மன்னன் அவுரங்கசீப் அளித்ததாக அந்தக் கோவிலில் உள்ள 'தர்ம தந்த்' தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். மேலும் அலகாபாத்தின் முன்னாள் மேயரும், பிறகு ஒரிசாவின் கவர்னராக இருந்த திரு. விஸாம்பர் நாத் பான்டே 27.07.1977 -- இல் ராஜ்யசபாவில் தனது உரையின் போது, அலகாபாத் பாலிக்காவின் மேயராக தான் இருந்தபோது அவரிடம் ஒரு பிரச்சினை முன் வைக்கப்பட்டதாக கூறுகிறார். அப்போது வழக்கில் ஒரு பிரிவினர் முகலாய மன்னர் அவுரங்கசீப் ஏராளமான நன்கொடைகளையும், கோவிலுக்கான அதிகமான நிலத்தையும் கோயிலின் வருமானத்திற்காக கிராமங்களையும் கொடுத்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தனர் என்று குறிப்பிட்டார். 

அப்போதைய நீதிபதி திரு.T.B. சத்ருவின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி அவுரங்கசீப் உஜ்ஜைனியின் மஹா காளீஸ்வர் கோவில், சித்ரக்கூட்டின் பாலாஜி கோவில், கௌஹாத்தியில் உள்ள உமானந்த் கோவில், சரன்ஜேவில் உள்ள சமண கோயில்கள், மேலும் தென்னிந்தியாவில் உள்ள சில கோவில்களுக்கும் ஏராளமான நிதிகளையும் நிலங்களையும் அளித்ததாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளதாகக் கூறுகிறது.  

வரலாற்று வல்லுநரும் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான திரு. யோகேஸ்வர் திவாரி இதை ஆமோதிக்கிறார். மேலும் அவர், மாமன்னர் அக்பரும் தான் அனைத்து மக்களுக்குமான அரசன் என்பதை மக்களுக்கு நிரூபிக்க ஏராளமான இந்து கோவில்களுக்கு அளவற்ற நிதியையும் நிலங்களையும் தானங்களையும் அளித்ததாக சான்றுகளுடன் கூறுகிறார். அவர் ஔரங்கசீப் சோமேஸ்வரர் கோவிலுக்கு அதிக நிதி அளித்த வரலாற்று ஆதாரங்களை முன் வைக்கிறார். 

இந்துத்துவ வெறியர்கள் சித்தரிப்பது போல அவுரங்கசீப் இந்து மக்களின் விரோதி அல்ல என்பதை நிரூபிக்க பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. அவருடைய பேரரசில் ராஜா ஜெய் சிங் போன்ற பெரும் படைத்தலைவர்களும் இருந்துள்ளனர். அவர் 7000 காலாட்படையினரையும், 7000 குதிரைப் படையினரையும் கொண்ட படைக்குப் பொறுப்பாளாராக இருந்தவர். அவர் அவுரங்கசீப்பிற்காக மராத்தர்களையும் ராஜபுத்திரர்களையும் சீக்குகளையும் எதிர்த்துப் போரிட்டவர். 

மேலும் அன்று இந்து மத அடிப்படையில் எந்த அரசும் அமைந்திருக்கவில்லை. ஏனென்றால் இந்து மதம் என்ற பெயரில் எந்த மதமும் அன்று இருக்கவில்லை. இருந்தது எல்லாம் சைவம், வைணவம், சமணம், புத்த மதம் போன்றவைதான். மராத்தர்களும், ராஜபுத்திரர்களும், சீக்குகளும், மேவார்களும் தனித்தனி அரசுகளைக் கொண்டு தங்களுக்குக்கு இடையில் போரிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு மேலோங்கி இருந்தது மத உணர்வு அல்ல. நாடுகளைப் பிடித்துத் தங்களுடைய அரசு எல்லைகளை விரிவாக்கிக் கொண்டு அதன் மூலம் வளங்களைச் சுரண்டுவதுதான். இராஜ்ய உறவுகள் கூட அந்த அடிப்படையில்தான் அமைந்திருந்தன. ஆனால் இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து விட்டு, இந்துத்துவ மத வெறியர்கள் இந்து மத அடிப்படையில் ஒரு நாடு அமைந்திருந்தது போலவும், அதை முகலாயர்கள் மத வெறியுடன் கைப்பற்றி அடக்கி ஒடுக்கி வந்தது போலவும் சித்தரிக்கின்றனர். அதன் மூலம் கடந்த காலத் தவறுகளுக்கு இன்று பழி வாங்க வரலாறு தெரியாத அப்பாவி மக்களைத் தூண்டி விடுகின்றனர். 

நாகரிக வளர்ச்சியில் மேலும் 300 ஆண்டுகளைக் கடந்த இன்றைய ஆட்சியாளர்களின் நடவடிக்கை மக்களுக்கு உணர்த்துவது என்ன? இந்த ஆதாரங்களின் அடிப்படையில் 3.3.2025 --அன்று இதைக் கூறிய சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அபூ அஸ்மியின் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிந்தனர்; முக்கியமான பாராளுமன்ற பட்ஜெட் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது அவர் அவை நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். 

ஆனால் 7.3.2025--அன்று சத்ரபதி சிவாஜியின் வாரிசும் மகாராஷ்டிராவின் சித்தாரா தொகுதியின் லோக்சபா எம்பி---யுமான திரு. உதயன்ரஜே போசல் அவுரங்கசீப் சமாதி இடிக்கப்பட வேண்டும் என்று ஊடகங்களில் கூறினார். சில நாட்கள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் பட்னாவிஸ் அவர்கள் அனைவரும் போசல்வுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் அதே சமயத்தில் அந்த சமாதி இந்தியத் தொல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதை நீக்குவதற்கான நடவடிக்கைகள் சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். 

ஆனால் உண்மையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும் சவ்வா திரைப்படம் பார்க்க திரையரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். "அம்மாநில அரசாங்கத்தால் அந்த திரைப்படம் ஊக்குவிக்கப்பட்டது‌; சரியான முறையில் விவாதிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டிய ஏராளமான மக்கள் பிரச்சினைகள் இருக்கும்போது, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்த கலவரங்களுக்கு சவ்வா திரைப்படம் காரணம் என்று குறிப்பிடுவது நேர்மையானது அல்ல, மாறாக கீழ்த்தரமான அரசியல் செயல்" என்று அகில இந்திய மஜ்லிஸ்--இ-இட்டஹாதுல் முஸ்லிமின் அமைப்பின் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைவரான இம்தியஸ் ஜலில் கூறுகிறார். வழக்கம்போல் அரசியல் தலைவர்கள் குர்ஆன் வாசகங்கள் எழுதப்பட்ட சடார் எரிக்கப்பட்டதை மறுத்த போதிலும், வழக்கத்திற்கு மாறாக, இந்தக் கலவரத்தில் குர்ஆன் வாசகங்கள் எழுதப்பட்ட சடார் எரிக்கப்பட்டதாக போலீஸ் கூறியுள்ளது. 

மக்கள் தங்களுடைய இயல்பான மனநிலையில் இருப்பதற்கும் மதங்களை மீறி மக்களாய் இருப்பதற்கும் சாம்பாஜி நகரில் இருந்த அவுரங்கசீப்பின் கல்லறைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் சுற்றுலா பயணிகளே சாட்சிகள்; வெவ்வேறு மதங்களைச் சார்ந்த அவர்கள் அங்கு சொரியும் மலர்களும் கல்லறையின் மேல் போர்த்தும் சடாரும் மதம் கடந்த அவர்களின் வரலாற்று ஆர்வத்திற்கு நாள்தோறும் சாட்சிகளாய் உள்ளன. மேலும் இந்தக் கலவரத்திற்குப் பிறகு காவலில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ரமலான் மாதத்திற்கு உரிய முறையில் சூரியன் உதிக்கும் முன்னும் மாலையில் நோன்பு திறக்கும் போதும் அங்கு வேலை செய்யும் பணியாளர்களுடன் சேர்ந்து உணவு உண்ணுகிறார்கள். 

தங்கள் மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் 300 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட அவுரங்கசீப்புக்காக அங்கிருந்த முஸ்லிம்கள் வக்காலத்து வாங்கவில்லை, மாறாக அவர்கள் அவுரங்கசீப்பின் கொடும்பாவி எரிப்பதைப் பற்றி பொருட்படுத்தவில்லை; ஆனால் குர்ஆன் வாசகங்கள் எரிக்கப்படுவது கூடாது என்ற அடிப்படையான கோரிக்கையை மட்டுமே வைக்கிறார்கள்.  

அவுரங்கசீப் கல்லறையின் மூத்த பொறுப்பு அதிகாரியான 65 வயது நிசார் அகமது, "இங்கு பல தலைமுறைகளாக மதங்களைக் கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இந்தக் கலவரங்கள் அனைத்தும் மத துவேசத்தை கிளப்ப சில தீய சக்திகளின் வேலையாகும். எப்போதுமே ஏழைகளும் வேலையற்ற இளைஞர்களும் இத்தகைய கலவரங்களில் முன்னால் நிறுத்தப்படுவார்கள்; இவற்றின் விளைவாக மரணமடைவதும் கொடூரமான முறையில் காயம் அடைவதும் இவர்களே, இந்தக் கலவரங்களைத் தூண்டுபவர்கள் அல்ல. மேலும் மிக மோசமான விசயம் புனிதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தி அவர்களை தூண்டுவதற்கான திட்டமே இது" என்கிறார் அவர்.  

பள்ளி மாணவர்களுக்கான பொருட்களை விற்கும் கடைக்காரர் சவ்வா திரைப்படம் பார்த்தவர். "திரைப்படத்தில் பேரரசன் சம்பாஜி அனுபவித்ததாக காட்டப்படும் சித்திரவதை உண்மையில் 10 சதவீதமே. மராத்திய இலக்கியங்கள் படித்தால் முழு உண்மை விளங்கும். எங்கள் பகுதி, ஊடகங்கள் சொல்வது போல இந்து முஸ்லீம் கலவர பூமியாக காட்சி தருகிறதா என்ன? இங்கு நாங்கள் ஒற்றுமையாக மகிழ்ச்சியாகவே வாழ்கிறோம். அவர்களது நலனுக்காக அரசியல்வாதிகள் எங்களை ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக காட்டுகிறார்கள்" என்று வெளிப்படையாக சொல்கிறார்.  

மராத்தியர்கள் அதிகம் வாழும் லஹானியாலியில் வாழும் 15 வயதான சிவானி தீபக் லகத், "பல வருடங்களாக நானும் எனது நண்பர்களும் சுஃபி புனிதரான சர் சரி சர் பாக்ஸ் நினைவு நாள் விழாவான உறுஸ் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம். எங்களது முஸ்லிம் நண்பர்களின் தாய்மார்கள் ஒவ்வொரு முறையும் ஷீர் குருமா அல்லது மாமிசம் செய்யும் போது நிச்சயமாக எங்களை அழைப்பார்கள். என் அம்மா விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் போதும் தீபாவளி கொண்டாடும் போதும் அவர்களை விருந்துக்கு அழைத்து கொண்டாடுவார்கள்"என்கிறார். 

இவை அனைத்தும் உணர்த்துவது எப்போதும் மக்கள் ஜாதி மத இன வேறுபாடுகளைக் கடந்து அன்புடன் ஒருவருக்கொருவர் இணக்கத்துடன் வாழ்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளோ மதவெறியையும் சாதி வெறியையும் தூண்டி விட்டு, மக்களைப் பிளவுபடுத்தி, அரசியல் இலாபம் அடையத் திட்டமிடுகின்றனர். 

மதச் சிறுபான்மையினராக உள்ள முஸ்லீம்களை அந்நியர்களாகவும், இந்து மக்களுக்கு விரோதிகளாகவும் சித்தரித்து, இந்து மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக, தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து மதக் கலவரங்களைத் தூண்டுவதும், அதற்கு எதிர் வினை ஆற்றும் முஸ்லீம் மக்கள் மீது அரசு அதிகாரத்தைக் கொண்டு கடுமையான அடக்குமுறையை ஏவுவதும், சட்டத்திற்குப் புறம்பாக அவர்களுடைய வீடுகளை புல்டோடோசர்கள் கொண்டு இடித்துத் தள்ளுவதும் தொடர்கதையாக உள்ளது. 

மக்களைத் தொடர்ந்து மதவெறியில் ஆழ்த்துவதன் மூலம் அதிகரித்து வரும் விலைவாசி ஏற்றம், நிலவி வரும் வேலை இல்லாத் திண்டாட்டம், நாள்தோறும் அதிகரித்து வரும் ஏற்றதாழ்வு ஆகிய பிரச்சினைகளிலிருந்து இவர்கள் மக்களைத் திசை திருப்புகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணமாக இருக்கும் முதலாளிய வர்க்கச் சுரண்டலை மறைத்து, முதலாளிய வர்க்கத்தைக் காப்பாற்றி வருகின்றனர். இந்த மக்கள் விரோதிகளை அடையாளம் கண்டு கொள்வதன் மூலமே மக்கள் தங்களுடைய விடுதலைக்கான வழியைக் காண முடியும்.

 

- கவிதா

Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடி...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...