Skip to main content

போலிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் அம்பலப்படுத்தும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

 

சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்கள், பணிநிரந்தரம், ஊதியத்தைக் குறைக்க கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் சென்னை மாநகராட்சி இயங்கும் ரிப்பன் மாளிகை முன்பு ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொழிலாளர்களின் உறுதியான போராட்டம் தமிழகம் முழுவதும் மக்களின் கவனத்தைப் பெற்றதோடு போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகச் செய்தது. முதலாளித்துவ ஒட்டுக்கட்சிகளும் தமது பங்கிற்கு போராட்டம் நடந்த இடத்திற்கு வருகை தந்து ஆதரவைத் தருவதாக வெற்று வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்து சென்றனர்.

இத்தனை ஆண்டு காலம் மாநகராட்சியின் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் தற்காலிகத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தவர்களை பணிநிரந்தரம் செய்யாமல், ராம்கி என்னும் தனியார் நிறுவனத்திடம் தூய்மை செய்யும் பணியை ஒப்படைத்ததோடு தொழிலாளர்களையும் அந்தத் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்த்து விட்டது திராவிட மாடல் அரசு.

தங்களுடைய எதிர்கால வாழ்வினைப் பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டக்களத்தில் இருந்த தொழிலாளர்களின் உறுதித்தன்மையைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாத ஆட்சியாளர்கள், பேச்சுவார்த்தை என்ற பெயரில், போராட்டக்காரர்களுக்குத் தொடர்பில்லாத துறைகளை சார்ந்த அமைச்சர்களை கொண்டு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து, போராட்டத்தை முடித்து வைக்க முயற்சி செய்தனர்.

உள்ளாட்சி நிர்வாகங்கள் செய்யவேண்டிய பணியை, முதலாளிகளுக்குத் தாரைவார்த்ததன் மூலம், மக்களின் வரிபணத்தைக் கொண்டு முதலாளிகளின் பணப்பையை நிரப்பும் வேலையை ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அரசு, மக்கள் சேவைக்கான பணிகளை, தாமே செய்வதால், அந்தப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பணிநிரந்தரம் செய்யவேண்டும், அவர்களுக்கு நியாயமான கூலியை வழங்க வேண்டிவரும், தொழிலாளர்களின் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிவரும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலிக்கான செலவினங்களை ஈடுகட்ட வரிகளை விதிக்க வேண்டி இருக்கும், இது முதலாளி வர்க்கத்தைப் பாதிக்கும் என்பதால், தொழிலாளர்களின் உழைப்பைக் குறைந்த கூலியில் சுரண்டவும், அதற்கான பொறுப்பை முதலாளிகளுக்கு ஒப்படைப்பதன் மூலம், சுரண்டலின் ஒரு பகுதியை அந்த முதலாளிகள் அபகரித்துக் கொள்ளவும், அரசு செய்யவேண்டிய சேவைப்பணிகளைத் தனியாரிடம் தாரைவார்த்து வருகின்றது.

இவ்வாறு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய, அரசாங்க பணிகளைத் தனியாருக்கு ஒப்படைத்து, ஆட்சியில் உள்ளவர்கள், தங்களுக்குள்ளேயே அந்த ஒப்பந்த வேலையைப் பகிர்ந்து எடுத்துக்கொண்டு, அரசின் வரி வருவாயை கொள்ளையடிப்பதோடு, தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டிக் கொழுக்கின்றனர். இதனை அரசின் கொள்கை முடிவு என்கின்றனர் திராவிடமாடல் ஆட்சியாளர்கள்.

இது சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலத் தொழிலாளர்களின் பிரச்சனை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள தூய்மைத் தொழிலாளர்களின் பிரச்சனை மட்டுமல்ல, தமிழகத்திலும், இந்தியா முழுவதிலும் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் துறைகள் அனைத்தையும் ஒப்பந்த அடிப்படையிலான வேலைமுறையாக மாற்றி, அவர்களின் உழைப்பை அரசே சுரண்டி வருகின்றது.

ஆளும் முதலாளி வர்க்கத்தைப் பாதுகாக்கத் தேவைப்படும் முக்கிய அரசு உறுப்புகளான, இராணுவம், காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை தவிர மற்ற அனைத்து துறைகளும் ஒப்பந்த வேலைகளாக மாற்றப்பட்டு முதலாளி வர்க்கத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மைய அரசும், மாநில அரசுகளும் சட்டம் ஒழுஙகுப் பணியைத் தவிர மற்ற அனைத்தையும் தனியார் மயமாக்கி வருகின்றன.

தொழிலாளர்களின் வாழ்வைச் சூறையாடும் இந்தப் போக்கை அரசின் கொள்கை முடிவு என்று ஆட்சியாளர்கள் அறிவிப்பதை, முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்கள், பாசிச எதிர்ப்பாளர்கள் என்ற போர்வையில் வால்பிடிக்கும் கட்சிகளும், இயக்கங்களும் கண்டிப்பதில்லை, மக்களிடம் இதனை அம்பலப்படுத்துவதில்லை, அதற்கு மாறாக, மென்மையாக அறிக்கைகள் விடுவதும், கோரிக்கைகள் வைப்பதும், அல்லது ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக தொழிலாளர்களின் போராட்டங்களைத் திசைதிருப்புவதுமான வேலைகளை இந்தப் போலிகள் செய்து வருகின்றனர்.

13 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றத்தின் துணையுடன் ஒரு உத்திரவைப் பெற்று, ஒடுக்குமுறைக்குப் பெயர்போன தமிழகக் காவல்துறையை கொண்டு இரவோடு இரவாகத் தொழிலாளர்களை கைது செய்து, தனித்தனியாகப் பிரித்து வெவ்வேறு மண்டபங்களில் சிறை வைத்தது திமுக அரசு. அரசின் இந்தச் செயலுக்குத் தமிழகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பால் விடுதலை செய்தது. பின்னர், தொழிலாளர்களின் நலன் என்ற போர்வையில், தொழிலாளர்களுக்கு காலை உணவு, பணியின்போது இறந்தால் காப்பீடு, தொழில் தொடங்குவதற்கான கடனுதவி என்று சில அறிவிப்புகளை செய்தது.

போராடும் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான பணிநிரந்தரம், தனியார்மயம் கூடாது, ஊதிய குறைப்புக் கூடாது ஆகிய கோரிக்கைகளைப் புறந்தள்ளிய அரசு, சில திட்டங்களைத் அவசர அவசரமாக அறிவித்து தொழிலாளர்களின் தோழனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் நாடகத்தைத் தொடங்கியது.

தமிழ்நாடு அரசின் இந்தச் சலுகை அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்துத் தூய்மைப் தொழிலாளர்கள் பேரணியாக சென்று முதலமைச்சரைச் சந்தித்துத் தமது மகிழ்ச்சியை தெரிவித்ததாக அரசு அறிவித்தது. ஆனால், நன்றி தெரிவித்த தொழிலாளர்கள் எவரும், பணிநிரந்தரம் கோரிப் போராடி, கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அல்ல. இவர்கள் ஆளும் அரசினால் தயாரிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கும் போராடும் தொழிலாளர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும், இது அரசின் திட்டமிடப்பட்ட நாடகம் என்பதும் விரைவில் அம்பலமானது.

இதேபோன்று தான் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் நடைபெற்ற பொழுதும் போராடும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாமல், நிர்வாகத்தின் கையாளாகச் செயல்படும் சிறுகுழுவைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவு செய்யபட்டதாக அரசு அறிவித்தது. அரசின் இந்த நாடகப் பேச்சுவார்த்தை அம்பலப்பட்டதோடு, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வீரியம் பெற்றது. இதே போன்ற நாடகபாணியைத்தான் தற்பொழுது தமிழக அரசு செய்துள்ளது. திராவிடமாடலுக்கு வெண்சாமரம் வீசும் போலி முற்போக்குகள், தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்படும் தீவிர சுரண்டலையோ, அரசின் அடக்குமுறைகளையோ, போராட்டத்தை திசைதிருப்பும் நாடகங்களையோ அம்பலப்படுத்தாமல், கண்டிக்காமல் திமுகவிற்கு பின்னால் ஓடி ஒளிந்து கொண்டுள்ளனர். இவர்களின் இந்த போலித்தனத்தைப் போராடும் தொழிலாளர்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் உணர்ந்து வருகின்றனர்.

திமுக அரசு தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தன்னுடைய கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு சமாளிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. அதற்கான வேலையிலும் சில கட்சிகள் இறங்கிவிட்டன. ஆகஸ்டு 16 ஆம் தேதி ஆதிதமிழர் பேரவை அதியமான் அவர்களும், 17 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் அவர்களும் போராடும் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான பணிநிரந்தரம் என்பது கூடாது என்று அறிவிப்பு செய்தனர்.

மூன்று நாட்களுக்கு முன்னர் தூய்மைத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்று அறிக்கை விடுத்த திருமாவளவன் அவர்கள், திடீரென, பணிநிரந்தரம் செய்யக் கூடாது, அவ்வாறு செய்தால், குப்பை அள்ளும் வேலையை பாரம்பரியமாக அவர்களே செய்ய வேண்டியது இருக்கும் என்று தமது பிறந்தநாள் விழாவில் பேசுகின்றார்.

ஆகஸ்டு 14 ஆம் தேதி திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

"தனியார்மயப்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு அவர்கள் அனைவரையும் தமிழகம் தழுவிய அளவில் பணிநிரந்தரம் செய்ய முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம். பிறதுறைகளில் இதே கோரிக்கை எழும் என்று கருதி இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிட அரசு தயங்க வேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறோம். தூய்மைப் பணியாளர்களை, பிறதுறை பணியாளர்களுடன் ஒப்பிட வேண்டாமெனவும், இவர்கள் ஆற்றும் பணியின் தன்மையைக் கருத்தில் கொண்டு இவர்களுக்குச் 'சிறப்பு முன்னுரிமை' அடிப்படையில் பணிநிரந்தரம் வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்."

தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆதரித்து பேசிய திருமாவளவன் அவர்கள் ஆளும் அரசிற்கு முட்டுக் கொடுக்கும் வகையில் மூன்று நாட்கள் கழித்து தன்னுடைய பிறந்தநாள் விழாவில் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றார்.

ஆகஸ்டு 17 ஆம் தேதி பிறந்தநாள் விழாவில் ஆற்றிய உரையில்

"புரட்சியாளர் அம்பேத்கரின் பார்வையிலிருந்து இந்தப் பிரச்சனையை நாம் அனுக வேண்டும். இவர்கள் குப்பை பொறுக்குகிறவர்கள், தூய்மைப் பணியாளர் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருள் குப்பை பொறுக்குகிறவர்கள் அல்லது குப்பை அள்ளுபவர்கள் என்று பொருள். குப்பையை அள்ளுபவர்களை பணிநிரந்தரம் செய்து அந்தத் தொழிலையே நீங்கள் செய்து கொண்டிருங்கள் என்று சொல்லுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அதிலிருந்து மீள வேண்டுமென்பது தான் நம்முடைய போரட்டம். அந்தத் தொழிலைச் செய்யக் கூடியவர்கள் தொடர்ந்து அதை செய்யக் கூடாது. மலம் அள்ளுபவனே மலம் அள்ளட்டும்; சாக்கடையைச் சுத்தம் செய்பவனே சாக்கடையை சுத்தம் செய்யட்டும்; குப்பையை அள்ளுபவனே குப்பையை அள்ளட்டும் என்கிற அந்த கருத்துக்கு இது வலுசேர்ப்பதாக இருக்கிறது. அரசு ஊழியர்களாக்குங்கள், பணிநிரந்தரம் செய்யுங்கள், அம்பேத்கரின் மாணவனாக இருந்து, பெரியாரின் பிள்ளையாக இருந்து இதை நாம் வலுவாக சொல்ல முடியாது. குப்பையை அள்ளுகிற தொழிலை குப்பையை அள்ளுபவர்களே செய்ய வேண்டும், அரசு பணியார்களாக அவர்களை மாற்ற வேண்டும் என்ற அந்த கோரிக்கையிலேயே நமக்கு மாற்றுகருத்து இருக்கிறது. சொல்லப்போனால், நாம் அதை எதிர்த்துதான் பேச வேண்டும்."

தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பெரும்பாலும் ஒடுக்கபட்ட சாதியைச் சார்ந்த மக்களாகவே இருப்பது உண்மைதான், ஆனால், இன்றைய நிலையில், இது பிறப்பின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை அல்ல. மற்ற சாதியினர் எவரும் இந்த வேலையைச் செய்ய முன்வராத நிலைமை ஒருபுறம் உள்ளது. மற்றோர்புறம், இத்தனை ஆண்டுகாலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வேறு எந்த வாழ்வாதாரமும் கிட்டாத நிலையில், இதற்கு முன்னர் செய்துவந்த வேலையை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இங்கு தொழிலாளர்களுக்கும், பணியை வழங்குபவர்களுக்குமான உறவு சாதிய அடிப்படையிலான உறவு அல்ல, கூலி உழைப்பு அடிப்படையிலான உறவாகும், எந்த ஒரு தொழிலாளியும் இந்தத் தொழிலை விட்டு வெளியேறுவதற்கான சுதந்திரம் உண்டு, இந்தச் சுதந்திரம் பெயரளவிலான சுதந்திரம் மட்டுமே தவிர, உண்மையான சுதந்திரம் கிடையாது, ஏனெனில், இதற்கு முந்தைய சமூகத்தில் கட்டாய உழைப்பின் அடிப்படையில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று சுதந்திரமானவர்களாக இருந்தாலும், தம்முடைய உழைப்புச்சக்தியை விற்பதைத் தவிர வேறு வாழ்வாதாரம் இல்லாத நிலையில், அவர்களின் உழைப்புச் சக்திக்கான சந்தையும் இல்லாத நிலையில் முன்பு செய்து வந்த வேலையைச் செய்து வருகின்றனர்.

திருமாவளவனின் கருத்துப்படி இவர்கள், அரசுப் பணியாளர்களாக, நிரந்தரத் தொழிலாளர்களாக இருந்தால், இந்த இழிவேலையை இவர்கள் மட்டுமே செய்யவேண்டி வரும் என்பது கண்மூடித்தனமான வாதமாகும். அரசின் கீழ் தற்காலிகத் தொழிலாளர்களாக இருந்தாலும், தனியார் ஒப்பந்ததாரரின் கீழ் இவர்கள் செய்தாலும் இந்த வேலையை இவர்கள் தான் செய்து வருகின்றனர். மாற்றம் எதுவும் வந்து விடுவதில்லை. பணிநிரந்தரம் செய்யாவிட்டால் அவர்கள் வேறு தொழிலுக்குச் சென்று விடுவார்கள் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இன்று அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வேறு வாய்ப்பு இல்லாததால்தான் அந்தத் தொழிலைச் செய்து வருகின்றனர்.

தனியார் ஒப்பந்ததாரரின் கீழ் மிகக்குறைந்த கூலியில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வந்தால், ஒடுக்கபட்ட சாதியினர் தமது அடுத்த தலைமுறையை இந்த வேலையிலிருந்து விடுவிக்க முடியாது என்பதைத் திருமாவளவன் உள்ளிட்ட ஆளும்வர்க்கத்தின் சேவகர்கள் உணர்ந்திருந்தும், ஒப்பந்தத் தொழிலாளர் முறைக்கு வக்காலத்து வாங்குகின்றனர். தூய்மைத் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக, அரசுப் பணியாளர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கான கூலியின் அளவு ஒப்பந்தத் தொழிலாளருக்கு வழங்கப்படும் அளவைவிட ஒப்பீட்டு அளவில் அதிகமாக இருக்கும். இதனால், அவர்கள் தமது பிள்ளைகளைப் படிக்கவைத்து அடுத்த தலைமுறையை இந்த நிலைமையிலிருந்து விடுவிக்க முடியும்.

தூய்மைத் தொழிலாளர்கள் அரசு பணியாளர்களாக மாற்றப்பட்டால், ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாகச் சற்று முன்னேற்றமடைந்தால், கல்வி விழிப்புணர்வு பெற்றால், தமது வாக்கு வங்கி பாதிக்கும் என்ற அச்சமும், தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தமது கூட்டணிக் கட்சியான திமுகவிற்கும், ஆளும் வர்க்கத்திற்கும் நெருக்கடியைத் தருவதும் திருமாவளவனை இவ்வாறு சந்தர்ப்பவாதமாகப் பேச வைத்துள்ளது.

தொழிலாளர்களுக்கு இலவசங்கள் தேவை இல்லை. அவர்களுக்கு உரிமை அடிப்படையிலான நிரந்தர வேலையும் அதற்கேற்ற ஊதியமும் தேவை. அவர்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப்பட்டால் அவர்களுடைய உணவுத் தேவையையும் அவர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொள்வார்கள். இல்லாவிட்டால் அவர்களுடைய குழந்தைகள் அடிப்படைக் பள்ளிக் கல்வியைக் கூடப் பெற முடியாது. அப்படியிருக்க அவர்கள் உயர் கல்விக்குச் செல்வது என்பதே நடக்காத விடயம். இந்த நிலையில் அவர்களுடைய பிள்ளைகளுக்கு உயர் கல்விச் செலவுக்கான சலுகைகளை அறிவிப்பதால் பயன் என்ன?

உண்மையில் இவர்கள் ஒடுக்கபட்ட மக்களின் நலனை விரும்புவார்களானால், இந்த வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குப் பணிநிரந்தரம் வழங்க வேண்டும், அவர்களுக்கு அதிகபட்சக் கூலியை வழங்க வேண்டும் என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்? இதன்மூலம், இந்த வேலைக்கான போட்டி அதிகரித்து அனைத்து சாதியினரும் இத்தகைய வேலைகளில் ஈடுபடும் நிலைமை வரும். மேலும், தூய்மைத் தொழிலாளர்களை, ஓய்வுவயது வரை அந்தப் பணியிலேயே வைத்திருக்க கூடாது என்றும், குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு அவர்களுக்கு மாற்று அரசு பணியை வழங்க வேண்டும் என்றல்லவா கோரியிருக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியை தொடர்ந்து கோவை காரமடை நகராட்சியிலும் 27 வார்டுகளில் 100க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்டு 13 ஆம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர்.

அதேப்போன்று மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களும் மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தனியார் ஒப்பந்த நிறுவன பணியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னையில் நடந்த போராட்டத்தை அரசு கையாண்ட விதத்தைக் கண்டித்தும் பெண் பணியாளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் ஆகஸ்டு 18 முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை இரவில் கைது செய்த போலீசார் நள்ளிரவிற்கு பின்பு விடுதலை செய்தது. எனினும் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை மீண்டும் தொடர்ந்தனர். தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உறுதி அளித்ததன் பேரில் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

ஒருபக்கம் அரசு தொழிலாளர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்குவது, சில திட்டங்களை அறிவித்துவிட்டு, போராட்டத்திற்குத் தொடர்பில்லாதவர்களை கொண்டு தமக்குத்தாமே நன்றி தெரிவிக்கும் நாடகங்களை அரங்கேற்றுவது, கூட்டணிக் கட்சியினரை வைத்துக்கொண்டு போராடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளைத் திசைதிருப்புவது போன்ற வேலைகளில் இறங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. முற்போக்கு வேடமணிந்து ஆளும்கட்சியின் நிழலில் சலுகைகளை அனுபவித்து வரும் கட்சிகள், அரசின் இத்தகைய திசைதிருப்பலுக்கு ஒத்து ஊதி வருகின்றன. தொழிலாளர்கள் இத்தகைய தலைவர்களின் உண்மை முகங்களை அடையாளம் தெரிந்து கொண்டு அடுத்த கட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றார்கள்.

குமணன்

Comments

  1. தோழர் குமணனுடைய இந்த ஆய்வுக் கட்டுரை, சென்னையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுடைய போராட்டத்தின் முக்கியத்துவத்தையும், இந்தப் போராட்டத்தை ஒழித்துக் கட்டி முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர்களையும், மக்களையும் ஏமாற்றுவதற்காக பல கட்சிகளும், பிற சக்திகளும் போடும் நாடகங்களையும் தோலுரித்துக் காட்டியிக்கிறது.

    மிகக் கொடுமான சுரண்டலை சந்தித்து வரும் தூய்மைப் பணியாளர்களை மிகவும் கேவலமாக எவ்வித அடிப்படை உரிமைகளும் இன்றி கொடூரமாகச் சுரண்டி வரும் இந்த ஆட்சியாளர்களையும், முதலாளிகளையும் எதிர்ப்பதற்கு பதிலாக, உண்மைக்கு மாறாக அப்பட்டமாக முதலாளிகளுக்கு ஆதரவளித்துவரும் கட்சிகளின் போலி வாதங்களை தோழர் முறியடித்திருக்கிறார்.

    கட்டுரையின் தலைப்பு கூறுவது போல, முதலாளித்துவ கட்சிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் வெட்ட வெளிச்சமாக்குவதோடு, மிகவும் முக்கியமாக அரசியல் அமைப்பையும் தொழிலாளர்கள், மக்களுக்கு எதிரான கொள்ளைக்கார அமைப்பு என்பதை கட்டுரை மிகவும் அருமையாக விளக்கியிருக்கிறது.

    கம்யூனிஸ்டுகளும், உண்மையான மாற்றம் விரும்பும் முற்போக்கு சக்திகளும் ஒன்றுபட்டு, குறுங்குழுவாத சிந்தனைகளில் சிக்கிக் கொள்ளாமல், தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தி, அவர்களுடைய விழிப்புணர்வை உயர்த்தி, இந்த சுரண்டல் அமைப்பை ஒழித்துக் கட்டுவதற்கு, தொழிலாளிகள் - விவசாயிகளுடைய அரசை நிறுவுவதற்காக முன்வர வேண்டும். அது மட்டுமே இந்த பகற்கொள்ளைக்கு முடிவு கட்ட முடியும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...