Skip to main content

இயற்கையைச் சூறையாடும் முதலாளிகளும் அதிகாரவர்க்கமும்!

 

28.8.25 அன்று பருவநிலை மற்றும் சூழலியல் நீதிக்கான தேசியக்கூட்டமைப்பு, சத்தீஸ்கர் வனத்துறை,1740 ஹெக்டேர் பரப்பளவு உள்ள ஹேஸ்டியோ காட்டின் அடர்ந்த வனப்பகுதியில் மேலும் அதிக அளவில் நிலக்கரி எடுப்பதற்காக கெண்டே விரிவாக்கப் பகுதிக்கு அனுமதி அளித்ததை வன்மையாக கண்டித்துள்ளது. நிலக்கரி எடுப்பதற்கான இந்தப் பகுதி ராஜஸ்தானின் ராஜ்ய வித்யுத் உட்பாடன் நிகம் லிமிடெட் (RRVUNL)நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது; இந்த நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு சுரங்கம் தோண்டும் வேலையை ஒப்படைத்துள்ளது. அளிக்கப்பட்ட 137 ஹெக்டேர் வனப்பகுதியில் - ஹேஸ்டியோ வனத்தின் ஏராளமான வன உயிரினங்கள் நிறைந்த இந்த வனப்பகுதியில் - பார்சா ஈஸ்ட் மற்றும் கந்தா பேசன் (PEKB) நிறுவனம் நிலக்கரி எடுப்பதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் ஏற்கனவே வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. உடனடியாக அதிகாரப்பூர்வமாக சத்தீஸ்கர் மாநிலத்தின் வனத்துறை அளித்த இந்த அனுமதி நீக்கப்பட வேண்டும் என்று நாம் உறுதிபடக் கூறுகிறோம். "வனப்பகுதிகளில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு சட்டபூர்வமாக கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள், இந்திய வனப்பகுதியை சார்ந்த பழங்குடியினருக்கும் பிற மக்களுக்கும் அந்த வனப்பகுதியை காப்பதற்கும் அதிலிருந்து தங்களது வாழ்க்கைக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்வதை மறுத்த காலனியவாதிகளின் சட்டங்களை நீக்கி, மாறாக, அந்த எளிய மக்களுக்கு வனங்களின் வாழ்வாதாரத்தை அனுமதிக்கும் சட்டம் மற்றும் வனம் சம்பந்தப்படாத பிற வேலைகளுக்காக வனங்களை அழித்துப் பயன்படுத்துவதை தடுத்து அதன் மூலமாக வனப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வனப்பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகளின் மீதும், சட்டத்துக்கு புறம்பாக குற்ற வேலைகளில் ஈடுபட்டு உள்ளவர்கள் மீதும் தீவிர விசாரணைகளின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறோம். மேலும், ஹேஷ்டியோ வனத்தில் திட்டமிடப்பட்டுள்ள பிற சுரங்கங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை நீக்க வேண்டும் என்று கோருகிறோம். 

ஹேஷ்டியோ வனம் ஏறக்குறைய 640 இன மலர் தாவரங்களுக்கும், 128 மருத்துவ தாவரங்களுக்கும், 92 பறவை இனங்களுக்கும் மற்றும் யானைகள் தேன் கரடிகள் மற்றும் சிறுத்தைகள் உட்பட அழியும் நிலையில் உள்ள ஏராளமான வனவிலங்குகளுக்கும், வாழ்விடம் ஆகும். ஹேஷ்டியோ வனத்தில் சுரங்கங்களை அமைப்பது மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்களை அதிகரிக்கும் என்றும் வனவிலங்குகளுக்கான முக்கியமான வழித்தடங்களை பாதிக்கும் என்றும் இந்திய வனவிலங்குகள் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கிறது. சுரங்கங்களின் 99% நிலம் சோர்வை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதி -- நீர் பாதுகாப்பிற்கு முக்கியமானதும் வனவிலங்குகளின் பல்லுயிர் பெருக்கத்திற்கும் அவசியமான பகுதியாகும். நீர்ப் பாதுகாப்பில் காடுகளின் பங்கையும், ஹேஷ்டியோ ஆற்றினாலும், ஹேஷ்டியோ பாங்கோ அணைக்கட்டினாலும் 3 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் பயன்பட்டு வருவதையும் இந்திய வன இயல் ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம் வலியுறுத்தி உள்ளது. சுரங்கங்களை அமைப்பதற்காக ஹேஷ்டியோ ஆற்றின் நீர்ப் பிடிப்பு பகுதியிலும் அணைப்பகுதியிலும் கட்டுப்பாடு இல்லாமல் மரங்களை வெட்டிக் காடுகளை அழிப்பது அந்தப் பகுதியின் நீராதாரத்தை சீரழிப்பதோடு குடிநீருக்காகவும் விவசாயத்திற்காகவும் அதைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான மக்களையும் உயிர்களையும் பாதிக்கும். 

ஹேஷ்டியோ வனம் வெறும் காடு மட்டுமல்ல -- அது கலாச்சார மற்றும் ஆன்மீக வாழ்வுக்கான உயிர் நாடியாகும். மேலும் கோண்டு இன மக்கள், ஒராவோன் இன மக்கள் மற்றும் அந்தப் பகுதியில் வாழும் ஆதிவாசிகள் அனைவரின் கலாச்சார அடையாளமாகவும் உள்ளது. சுரங்கங்களை அமைப்பதற்காக அனுமதி வேண்டப்பட்டுள்ள—முன்மொழியப்பட்டுள்ள 6லட்சம் மரங்கள் வெட்டப்படுவது அவர்களது வாழ்க்கையை அச்சுறுத்துவதாகும்; மேலும் அவர்களது இனங்களை இடம்பெயரச் செய்து, பல தலைமுறைகளாக அவர்கள் பெரிதும் சார்ந்துள்ள அவர்களுடைய வாழ்வாதாரங்களை அழித்து ஒழிக்கும் செயலாகும். அவர்களுடைய புனிதமான, பின்பற்றி வந்த பாரம்பரிய பழக்கங்களும் வனத்தைச் சார்ந்த வாழ்வாதாரங்களும் மிகப்பெரிய அச்சுறுத்தலில் உள்ளன. 

சத்தீஸ்கர் வனத்துறை அளித்துள்ள இந்த அனுமதி, பழங்குடியினருக்கு இந்திய அரசியலமைப்பால் சட்ட ரீதியாக உத்தரவாதம் செய்யப்பட்ட சுயநிர்வாக உரிமையை மதிக்காமல் மீறுவதாகும். பழங்குடியின பகுதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து சட்டம், வனத்தில் செய்யப்படும் எந்த வேலைக்கும் கிராம சபையை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. வன உரிமை சட்டத்தின் 3(1)(1), 3(2), மற்றும் 5 சரத்துக்கள், அத்துடன் 2009-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நியம்கிரி வழக்கின் தீர்ப்பு ஆகிய அனைத்துமே வனத்தில் செய்யப்படும் வனம் சாராத பிற வேலைகளுக்கு கிராம சபையின் ஒப்புதலை உறுதியாகப் பெற்று இருக்க வேண்டும். சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடி மக்கள் ஆணையம் பார்சா நிலக்கரி சுரங்கப் பகுதியின் அருகாமையில் நடக்கும் வேலைகளில் உள்ள முறைகேடுகளையும், கிராம சபையின் ஒப்புதலை போலியாக ஜோடித்தும் மேலும் ஆதிவாசி தலைவர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தி கட்டாய ஒப்புதல் பெற்றதையும் இன்னும் பிற விதிமீறல்களையும் கண்டறிந்துள்ளது. கெண்டே பகுதியில் வழங்கப்பட்டுள்ள அனுமதி வன அழிப்பு என்பதோடு மட்டுமல்லாமல் நில அபகரிப்பு மற்றும் மனித உரிமை மீறல் ஆகிய குற்றங்களையும் அதிகரிக்கும். 

2022-- ஆம் ஆண்டில், மக்களின் தீவிரமான போராட்டம், ஹேஸ்டியோ வனத்தில் திட்டமிடப்பட்டிருந்த 21 நிலக்கரி சுரங்கங்களுக்கான அனுமதியை இரத்து செய்வதற்கான தீர்மானத்தை சத்தீஸ்கர் சட்டசபை நிறைவேற்றியது. அடுத்த 15 வருடங்களுக்கு ராஜஸ்தானுக்கு தேவையான எரி சக்தியை ஏற்கனவே PEKB –பகுதியில் எடுக்கப்பட்ட நிலக்கரி நிறைவுசெய்து விட்டதாகக் கூறப்பட்டது. எனவே வனத்தையும் வன வளங்களையும் பாதுகாக்க வேண்டிய வனத்துறை சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் மீறி கெண்டெ பகுதியில் மரங்ளை அழிக்க அனுமதி தந்துள்ளது. இது சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் நலன் அவர்களது வாழ்வாதாரங்கள் ஆகியவற்றையெல்லாம் புறந்தள்ளி கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கும் வனத்துறையின் செயலாகும். 

கெண்டே பகுதியில் வழங்கப்பட்டுள்ள அனுமதி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்களை சீர்படுத்துவதற்கான சர்வதேச சட்டங்கள் மற்றும் உறுதிமொழிகளுக்கான இந்தியாவின் கடப்பாட்டை கேலிக்குரியதாக்கி விட்டது. பழங்குடியின மக்களின் நிலங்களை பாதிக்கும் திட்டங்கள் முன்பே அறிவிக்கப்பட்டு பழங்குடியின மக்களுக்கு அவற்றைப் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டு அவர்களுடைய அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்ற பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் (UNDRIP) பிரகடனம் மீறப்பட்டுள்ளது. ஹேஷ்டியோ போன்ற வனங்கள் அவை அமைந்துள்ள நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலக அளவில் பல்லுயிர் பெருக்க இலக்குகளை உறுதிப்படுத்த அவசியமானவை என்று அய்ச்சி பல்லுயிர் பெருக்க இலக்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாட்டு உடன்படிக்கையின் அடிப்படையிலான குன்மிங் -- மோன்ட்ரியல் உலகப் பல்லுயிர் பெருக்க சட்டகம் ஆகியவற்றின் விதிகளை ஹேஷ்டியோ வனத்தில் சுரங்கம் தோண்டுவது மீறுகின்றன. 

பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புக்கொண்டபடி கார்பன்-டை-ஆக்சைடு அளவை குறைக்கவும் மற்றும் 2.5 முதல் 3 பில்லியன் டன்கள் கார்பன்-டை-ஆக்சைடை கட்டுப்படுத்த 2030--ஆம் வருடத்துக்குள் வனப் பகுதியை அதிகரிக்கவும், அதற்கேற்ப ஏராளமான மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். ஆனால், கார்பன் அளவை கட்டுப்படுத்தும் ஹேஷ்டியோ காட்டில் அனல் மின் சக்தி உற்பத்திக்காக மேலும் அதிக அளவில் நிலக்கரியை தோண்டி எடுப்பதற்கு கெண்டே விரிவாக்கப் பகுதியைக் கொடுப்பது இந்தியா ஒப்புக்கொண்ட, கார்பன் டை ஆக்சைடு அளவை குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு முற்றிலும் மாறானதாகும். இதனால் பசுமை குடில் வாயுக்களின் அளவு அதிகரித்து பருவநிலை மாற்றத்தை வேகப்படுத்தும் மிகப்பெரும் அபாயம் ஏற்படும்.  

இதன் அடிப்படையில் சத்தீஸ்கர் அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டிய பின்வரும் நடவடிக்கைகளை வலியுறுத்துகிறோம்:  

1) கெண்டே விரிவாக்கத்திற்காக 1749 ஹெக்டேர் ஹேஷ்டியோ வனப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்ட சத்தீஸ்கர் மாநில வனத்துறை அளித்துள்ள அனுமதி உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.  

2) ஞ்சாயத்துகள் (அட்டவணைப் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம் (PESA) 1996, வன உரிமைகள் சட்டம் (FRA) 2006, மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டம் (FCA) 1980 முதலிய பழங்குடியினரையும் வனங்களையும் வனவளங்களையும் பாதுகாக்கும் வனப்பாதுகாப்பு சட்டங்கள் வனத்துறை அதிகாரிகளாலும் நிலக்கரிச் சுரங்க நிர்வாகத்தினராலும் மீறப்பட்டதன் அடிப்படையை தீவிரமாக ஆராய வேண்டும். 

3) சத்தீஸ்கர் மாநில வனத்துறை அதிகாரிகளுக்கும் நிலக்கரி சுரங்க நிர்வாகத்துக்கும் இடையிலான வன பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கை திட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் வனத்துறை அதிகாரிகள் மீதும் நிலக்கரி சுரங்க நிர்வாகத்தினர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு கடுமையான குற்றங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட வேண்டும். 

4) சத்தீஸ்கர் மாநில சட்டசபை 2022--ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தை மதித்து ஹேஷ்டியோ வனத்தில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் நிலக்கரி சுரங்கங்களை மூட வேண்டும். திட்டமிடப்பட்டுள்ள பிற சுரங்களுக்கான உரிமைகளை இரத்து செய்ய வேண்டும். 

ராஜஸ்தானில் ஏற்கனவெ சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலைகளின் மூலமாக அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ராஜஸ்தானின் அனல் மின்சார உற்பத்தி நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்ற ஏற்கனவே அங்கு ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. வனங்களில் வாழும் பழங்குடியினர், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களின் வாழ்வாதாரங்களை காக்க, காடுகளை அழிப்பதை உடனடியாக நிறுத்தி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத - எப்போதும் நிலைத்திருக்கக்கூடிய சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தியின் வாய்ப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.  

ராஜஸ்தான் மாநில அரசாங்கம் உண்மையிலேயே தன்னுடைய மின்சார தேவையின் அளவைத் தீர்மானிக்க வேண்டும்; சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத புதுப்பிக்க கூடிய வகையில் தனது மின்சார தேவையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது மாநிலத்தின் மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை சார்ந்து இருப்பதை நிறுத்தி --- அதற்காகசத்தீஸ்கர் மாநிலத்தின் மிக வளம் நிறைந்த ஹேஷ்டியோ காடுகளை நிலக்கரி சுரங்கங்களுக்காக அழித்து சின்னாபின்னம் ஆக்குவதை உறுதியாக நிறுத்த வேண்டும். அதன் மூலம் அந்த வனங்களை தமது வாழ்வின் மிக முக்கியமான வாழ்வாதாரமாகக் கொண்ட சத்தீஸ்கரின் ஏராளமான பழங்குடியினரின் வாழ்வுரிமையை காக்க நிலக்கரி சுரங்கங்களுக்காக காடுகளை அழிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.


பருவநிலை மற்றும் சூழலியல் நீதிக்கான தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை 

தமிழில்: கவிதா

நன்றி: Counter Currents

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...