18.09.2025 அன்று ஃபிரான்சில் நடைபெற்ற தொழிலாளர்கள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்களின் பேரணியானது மிகப் பிரம்மாண்டமானதாக இருந்தது. அது பத்து இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கு கொண்ட பேரணியாகும்; மேலும் அது ஏராளமான முற்றுகைகளையும் போக்குவரத்து துறை, கல்வி மற்றும் பிற பொது துறைகளின் வேலை நிறுத்தங்களையும் உள்ளடக்கி இருந்தது. உள்துறை அமைச்சர் புரூனோ ரெடைல்லு முன்னறிவித்ததைப் போல அது கலகக்கார்களின் கூட்டமாக இல்லை.
ஃபிரெஞ்சு அரசாங்கத்தால் 2023-- ஆம் வருடம் ஓய்வூதியத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கு கொண்டவர்களின் எண்ணிக்கையை விட 18ந் தேதி நடந்த போராட்டங்களில் பங்குகொண்டவர்களின் எண்ணிக்கை சிறிது குறைந்து இருந்து. ஆனால் அப்போது 'பல நாட்களாகத் திட்டமிட்டு எடுத்த நடவடிக்கைகள்' முப்பது இலட்சதிற்கும் அதிகமான போராட்டக்காரர்களால் நடத்தப்பட்ட மிகப்பெரும் போராட்டமாக அது அமைந்தது.
ஆனால் 2023-இல் நடந்த போராட்டம் அதன் உச்சத்தை அடைய பல நாட்களை எடுத்துக் கொண்டது. இன்னொரு பக்கம், மிக முக்கியமாக, 18.09. 2025 அன்று நடந்த பேரணி உணர்வின்அடிப்படையில் அதிகமாக தீவிரமான ஒன்றாகும். கடந்த இரண்டு வருடங்களாக வாழ்க்கை நிலைமை தொடர்ந்து சீரழிந்து வருதல், காசாவில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஒருவரை மாற்றி ஒருவரை பிரதமராக ஆட்சிக்குக் கொண்டு வந்த ஆட்சியின் நெருக்கடி நிலை ஆகியவை ஃபிரெஞ்சு மக்களிடம் தொடர்ந்து கோபத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.
செப்டம்பர் 10 ல் துவங்கிய இந்த இயக்கத்தின் மையமான அம்சம் மிகப் பெரிய அளவில் இளம் தலைமுறையினர் குறிப்பாக பெரிய நகரங்களில் இருப்பதாகும். உண்மையில் மிகப் பெரும்பாலான இந்த இளைஞர்கள் பிரதமர் லேகார்னு கூட்டிய ஆலோசனைக் கூட்டங்களில் எதையும் எதிர்பார்க்கவில்லை; அவர்கள் அந்தக் கூட்டங்களின் நோக்கம் லேகார்னு தனது வீழ்ச்சியைத் தள்ளிப் போடுவது என்பதுதான் என்பதை அறிந்திருந்தார்கள்; லேகார்னுவின் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் சோசலிசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்புகளும் பங்கு கொள்கின்றன. இந்த இயக்கத்தில் இருந்த இளம் தலைமுறையினர் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்து விலகுவதையும் ஜனாதிபதி மேக்ரோனின் ராஜினாமாவையும் உறுதியுடன் முன் வைத்தார்கள்; இவற்றைத் தொடர்ந்து அண்மைக் காலத்தில் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட அனைத்துச் சிக்கன நடவடிக்கைத் திட்டங்களையும் முழுமையாக எதிர்த்தனர். இந்தச் சூழலில், 'தொழிலாளர்களின் அரசாங்கத்திற்காக' என்னும் நமது கட்சியின் முழக்கம் ஏராளமான இளைஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது அவர்களுடனான நமது கலந்துரையாடலில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
எனினும் 'இந்த இயக்கம் எங்கே போகிறது” என்று இதே இளைஞர்கள் அவர்களுக்கு உள்ளேயே கேள்வி எழுப்புகிறார்கள். 18 ந் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தக் கேள்வி மிகப் பரவலாகக் கேட்கப்பட்டது. 19.09.2025 அன்று காலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒன்றிணைப்புக் குழுவின் தலைவர்கள் அரசாங்கத்திற்கு ஒரு இறுதி எச்சரிக்கையை பத்திரிகைகளின் வாயிலாக அறிவித்தார்கள்: '24.09.2025 ஆம் தேதிக்குள் எங்களது கோரிக்கைகளுக்கு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மிக விரைவில் புதிய வேலை நிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் குறித்துத் தீர்மானகரமான முடிவெடுக்க வேண்டி இருக்கும்" என அவர்கள் அறிவித்தனர்.
இங்கு கோரிக்கைகள் என்று குறிப்பிடப்படுபவை, “பேரு திட்டத்தின் (Bayrou plan) அனைத்து நடவடிக்கைகளையும்” முற்றிலும் கைவிட வேண்டும்; அத்துடன் “பணியிலிருந்து சட்டரீதியாக ஓய்வு பெறும் வயதை 64 என்று அதிகரித்ததை” முற்றிலுமாக நீக்க வேண்டும்; மேலும் “பொது மக்களுக்கான சேவைத் திட்டங்களுக்குத் தேவையான அளவு நிதி ஒதுக்க வேண்டும்” என்பவையே ஆகும்.
தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இந்த வியூகம் ஏராளமான இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏமாற்றத்தையும் குழப்பத்தையும் அளிக்கும். மிகுந்த விழிப்புணர்வு கொண்டவர்களுக்கும் இயக்கங்களின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுபவர்களுக்கும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் உண்டாக்கும். செப்டம்பர் 10 மற்றும்18 தேதிகளில் நடந்த பேரணிகளின் வலிமையை அதிகரித்து முன்னேறிப் போவதற்கு மாறாக மேக்ரோன் மற்றும் லேகார்னு விருப்பப்படி மக்களின் போராட்ட குணம் மிக்க இந்த இயக்கத்தை நிறுத்தி வைத்து அவர்கள் தங்களுடைய பிற்போக்குத்தனமான கொள்கைகளை முற்றிலுமாகக் கைவிட்டு முற்போக்கு கொள்கைகளை ஏற்றுக்கொள்வார்களா என்பதைத் தீர்மானிக்க ஐந்து நாட்கள் தவணை கொடுத்தது.
ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் தொழிற்சங்க ஒன்றிணைந்த கமிட்டியின் 'இறுதி எச்சரிக்கைக்குப்' பணிந்து பதில் அளிப்பார்கள் என்று யாராவது ஒரு நொடியாவது நம்ப முடியுமா? அதிகபட்சமாக லேகார்னு சில நடவடிக்கைகளை அறிவிப்பதோடு மிகச் சிறிய அளவில் சிக்கன நடவடிக்கைகளைக் குறைக்கலாம். இது வர்க்கங்களுக்கு இடையிலான பலத்தைச் சமப்படுத்துவது பற்றிய கேள்வியே ஆகும். பெரும் முதலாளிகளின் பிரதிநிதிகளே மேக்ரோனும் லேகார்னுவும்; அந்த வர்க்கத்திற்கு புற நிலையிலும் உடனடியாகவும் பொது மக்களுக்கான செலவைக் குறைக்க வேண்டி உள்ளது. சமீப ஆண்டுகளில் அதிகரித்து வரும் முதலாளியத்துவத்தின் ஒப்பீட்டளவிலான வீழ்ச்சி ஃபிரெஞ்சு முதலாளித்துவத்தின் போட்டியிடும் திறனை ஆபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
செப்டம்பர், 10 மற்றும் 18-ஆம் நாட்களின் ஆர்ப்பாட்டங்கள் உழைக்கும் வர்க்கத்தின் வீரியத்தையும், அதிகரித்துக் கொண்டிருக்கும் அவர்களது கோபத்தையும் உறுதிப்படுத்துகின்றன; எனினும், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோள்கள் வரையறைக்கு உட்பட்டிருந்தாலும், இந்த இரண்டு அணிதிரட்டல்களால் மட்டும் அரசாங்கத்தைப் பணிய வைக்க முடியாது; 2023- ஆம் ஆண்டு, ஓய்வூதியத்தில் செய்த சீர்திருத்தப் பிரச்சினையில் 14 நாட்கள் முப்பது இலட்சத்திற்கும் மேலான மக்கள் கலந்து கொண்ட போராட்டங்களால் மேக்ரொனை ஒரு சிறிதும் பணிய வைக்க முடியவில்லை. நிலைமை இவ்வாறிருக்க, ஒன்றுபட்ட தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டுக் கமிட்டி 18.09.2025 அன்றைய போராட்டத்தின் விளைவாகவும் மீண்டும் இதே போன்ற போராட்டத்தின் மூலமாகவும் ஓர் அச்சத்தைத் தூண்ட முடியும்; அந்த அச்சத்தால் மேக்ரோனும் அவரது குழுவும் உண்மையிலேயே தவிர்க்க இயலாமல் இந்த முறை பின் வாங்குவார்கள் என்று நம்புவதாக நடிக்கிறது.
ஆனால் உண்மையில் தொழிற்சங்கத் தலைவர்கள் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்ற இந்த இயக்கமானது தமது கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடுமோ என்று அஞ்சுகிறார்கள். ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் கொடுத்த 'இறுதி எச்சரிக்கை' என்பது மக்களின் அடுத்த இயக்கத்தை செப்டம்பர் இறுதி வரைக்கும் நடக்காமல் இருக்க செய்யவும் அல்லது இன்னும் சில காலத்திற்கு மக்கள் இயக்கங்கள் நடக்காமல் தள்ளிப் போடுவதற்குமான பாசாங்காகும். ஏராளமான இளைஞர்களும் தொழிலாளர்களும் மட்டுமல்லாமல், ஏராளமான அரசியல் மற்றும் தொழிற்சங்கச் செயல்பாட்டாளர்களும் இதைப் புரிந்து கொண்டுள்ளார்கள். ஆகையால் அவர்களால் இயக்கத்தின் தலைமையை , அந்த ஆர்ப்பாட்டத்தின் லட்சியத்தை, வெற்றியை மடை மாற்ற மற்றும் நீர்த்துப்போக முயற்சிக்கும் ஒன்றுபட்ட தொழிற்சங்க அமைப்பின் கைகளில் ஒப்படைக்க முடியாது.
இவை அனைத்தும், தொழிலாளர் இயக்கத்தில் உள்ள மிகப் பெரிய போர்க்ககுணமிக்க அமைப்புகளின் தோள்களில் மிகப்பெரிய பொறுப்பை சுமத்தியுள்ளன.
நாம் செப்டம்பர் 15 இல் எழுதியவாறு, "முழுமையான வேலை நிறுத்தத்துக்காக அறைகூவல் விடுத்ததன் மூலம், 'மெலன்கோன் (Mélenchon) லா ஃபிரான்ஸ் இன்சௌமைஷ் கட்சி (La France Insoumise) யின் தலைவர் தன் தலையில் தானே ஆணி அடித்துக் கொண்டது போன்ற நிலையில் இருக்கிறார். ஆனால் ஒரு பொது வேலை நிறுத்தத்தை நடத்துவது, எல்லாவற்றிற்கும் மேலாக, ஏராளமான புதிய வேலை நிறுத்தங்களைக் கட்டமைப்பது மட்டுமே நம்முடைய உறுதியான வெற்றிக்கான நிலைமைகளை உருவாக்கும்; இதற்கு ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் பெரிய அளவிலான கிளர்ச்சிகளும் அமைப்புகளும் அவசியமானதாகும்.
“பொதுத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின்
பொதுக் கூட்டமைப்புகளும் (General Confederation of Labour- CGT) மற்றும் உள்ளூர் அமைப்புகளும் தங்களது கூட்டிணைப்புக் கமிட்டியின் விருப்பத்திற்கு
எதிராக கிளர்ச்சிகளுக்கான திட்டங்களில் ஈடுபடுகின்றன. லா ஃபிரான்ஸ் இன்சௌமைஷ் கட்சி (La France
Insoumise) தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்புகளின் இடதுசாரிப் பிரிவை ஆதரிக்க
வேண்டும்; அதனுடன் இணைய வேண்டும்; ஆளும்
வர்க்கத்திற்கு எதிரான மிகப்பெரிய வலிமையான உறுதியான முற்றுகையைக் கட்டமைப்பதற்கான
இயக்கத்தைமுன்னெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொழிலாளர்கள் மக்கள்
அனைவருக்கும் ---- முதலாவதாகவும், முக்கியமனதாகவும் அவர்கள் ஒவ்வொருவருக்குமே
---அவர்களே சமூகத்தின் தீர்மானிக்கும் சக்தி என்பதையும், அந்த சக்தியே ஆட்சி
அதிகாரத்தை கைப்பற்றி நாட்டின் பொருளாதாரத்தை புதிய அடிப்படைகளின் மேல், சோசலிச அடிப்படைகளின் மேல், ஒழுங்கமைக்கும் என்பதையும் காட்ட வேண்டும்."
(ஃபிரான்சின்
புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியினால் marxiste.orgல்
வெளியிடப்பட்ட கட்டுரை)
தமிழில்:
சூர்யா



Comments
Post a Comment