Skip to main content

பாலஸ்தீனத்தையும் அதன் மக்களையும் சிதறடிக்கும் அமைதித் திட்டம்!

மத்திய காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறியபோதும் அவை காசாவின் 53% பிரதேசத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து உள்ளன; அவை காசாவில் எஞ்சிய வீடுகளையும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் தீ வைத்துக் கொளுத்தின. சிதைக்கப்பட்டுவிட்ட தங்களது வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் காசா மக்களுக்கு இப்போது குடிநீர் கிடைப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 90% குடியிருப்புகள் இஸ்ரேலியப் படைகளால் தரைமட்டமாக்கப்பட்டு விட்டதால் காசா மக்கள் இப்போதும் முகாம்களிலேயே வாழவேண்டிய நிலையில் உள்ளனர். மருத்துவமனைகள் மிக மோசமாக அழிக்கப்பட்டு விட்டதாலும் சிகிச்சைக்கு மிக அவசியமான தேவையான மருந்துகளும் வேறு உபகரணங்களும் பெற முடியாததாலும் நோய்வாய்ப்பட்டவர்களும் காயம் அடைந்தவர்களும் தேவையான மருத்துவ உதவி பெற முடியாது. உணவு, தண்ணீர் மற்றும் மருந்து ஆகியவை மக்களுக்கு நீண்ட காலத்திற்குக் கிடைக்காது. உண்மையில், உயிர் வாழும் காசா மக்கள் அனைவரும் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளார்கள், நோய்வாய்ப்பட்டும் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் சிதைந்த நிலையிலும் உள்ளார்கள்; அவர்களது வாழ்க்கையைச் சீரமைக்கத் தேவையான எதுவுமே கிடைக்காத நிலையே உள்ளது. 

இந்தத் தற்காலிக அமைதி இப்பொழுது வந்ததற்குக் காரணம் என்ன? உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், ட்ரம்ப்புக்கு நெருக்கமான கெத்தார் மீது நெதான்யாகு குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதுடன் இது தொடர்பு கொண்டுள்ளது. கெத்தார் ட்ரம்ப்புக்கு அழகிய புதிய விமானத்தைத் தந்தது மட்டுமல்லாமல், அவருக்காக அங்கு கோல்ஃப் மைதானத்தையும் கட்டித் தந்தது; அது மட்டுமல்லாமல், 24,350 கோடி டாலர் முதலீட்டுக்கான ஒப்பந்தத்தையும் செய்து கொண்டுள்ளது. மேலும் கெத்தார் அமெரிக்க மத்திய ராணுவ அமைப்பின் தலைமையிடமாக உள்ளது. இந்த அமைப்பு 21 நாடுகளின் மீதான ராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்தி வருகிறது. சமீபத்தில் கெத்தாரின் இதாஹோவில் அவர்களது விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கும் மையத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலின் மீதான உலகளாவிய வெறுப்பு உச்சபட்ச நிலையில் அதிகரித்துக் கொண்டிருக்கும்போது, அதற்கு உடந்தையாக உள்ள அமெரிக்காவின் மீதும் வெறுப்பும் எதிர்ப்பும் அதிகரித்து உள்ளது. இதன் காரணாமாகவே நெதன்யாகுவின் கொடுமைகளை நிறுத்தச் சொல்லி ட்ரம்ப் ஆணையிட்டார். அதே சமயத்தில் பாலஸ்தீனத்தின் மீதான ஆட்சியைக் கைவிடச் சொல்லவில்லை, கொஞ்சம் அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளார். 

ஹமாஸ் உயிருடன் இருக்கும் அனைத்து பிணையக் கைதிகளையும், இறந்தவர்களின் சடலங்களையும் திரும்பக் கொடுத்தாலும், இஸ்ரேல் தன்னிடம் வைத்துள்ள 11000 கைதிகளில் 2000 பேரை மட்டும் விடுவிக்கத் தொடங்கியுள்ளது; இவர்களில் ஏராளமானவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை; இந்த சிறைக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் மிக மோசமான முறையில் நடத்தப்பட்டு இருக்கிறார்கள்; அத்துடன் முன்பு விடுதலை செய்யப்பட்ட போது நடந்தது போல இவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் கைது செய்யப்படலாம். இஸ்ரேலியர்கள் பிணையைக் கைதிகளின் திரும்பலை மிகப் பரவலாகக் கொண்டாடும்போது பாலஸ்தீனர்கள் தங்களது மக்களின் திரும்பலைக் கொண்டாடுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது, மீறினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். பாலஸ்தீனர்களுக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் விடுதலை கிடைக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்த இது ஒன்றே போதும்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் பாலஸ்தீனர்கள் மீதான அடக்கு முறையும் அநீதியும் முடிவடையாது என்பதே உறுதியான உண்மையாகும். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையிலும் காசாவிலும் இருக்கும் தடை மதில்கள் தொடர்ந்து இருக்கும். இஸ்ரேலியப் படை வீரர்கள் பாலஸ்தீனத்தில் ஆக்கிரமித்து இருப்பதும், சோதனைச் சாவடிகளும், இஸ்ரேலிய ராணுவ நீதிமன்றங்களின் நடவடிக்கையும், கண்காணிப்பும் பாலஸ்தீனம் முழுவதும் நிலைத்திருக்கும். இங்கு புதிய காட்சி என்னவாக இருக்குமென்றால், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள் மற்றும் அதனுடைய மத்திய கிழக்கு கூட்டாளிகளான கெத்தார், எகிப்து, ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ், சவுதி அரேபியா போன்ற வளமிக்க, எதேச்சாதிகார நாடுகளுக்கு காசாவின் நில வளங்களையும் பூமிப்பந்தில் அது அமைந்துள்ள இடத்தின் முக்கியத்துவத்தைத் தங்களின் சுரண்டலுக்குப் பயன்படுத்தவும் நேரடியான வாய்ப்பு ஏற்படும் என்பதே ஆகும். இந்த ஏகாதிபத்தியங்கள் மற்றும் எதேச்சாதிகாரங்கள் பெரிய அளவில் மதிக்கும் உலகின் மொத்த புதைப்படிவ எரிபொருள்களில் 80% வளம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளது; அவற்றை இழக்க அவை விரும்பவில்லை என்பதே இந்தப் போர்களின் அடிப்படையான உண்மையாகும். பாலஸ்தீனர்களைக் கொன்றோ அல்லது இடம் பெயரச் செய்தோ பாலஸ்தீனர்களிடமிருந்து பாலஸ்தீனத்தை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற இஸ்ரேலின் இலக்கில் மாறுதல் ஏற்பட்டதற்கான அடையாளம் ஒரு சிறிதும் இல்லை. 

இஸ்ரேல் வேண்டுவது போல ஹமாஸ் தனது ஆயுதங்களை ஒப்படைத்து விடுமா என்பது பற்றி நமக்குத் தெரியவில்லை; ஆனால் அது சந்தேகத்துக்கு உரியது. ஆகையால் இஸ்ரேல் இந்த விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு அல்லது வேறு பல பிரச்சனைகளின் அடிப்படையில் பாலஸ்தீனர்களை அழித்து ஒழிப்பதற்கான போரை மீண்டும் துவங்கும். மீண்டும் போரைத் தொடங்காவிட்டாலும் கூட ஏகாதிபத்தியத்தால் வழிநடத்தப்படும் அமைதிக் குழு பாலஸ்தீன அதிகார அமைப்பு (Palestinian Authority) உட்பட எந்தப் பாலஸ்தீனர்களாவது காசாவில் எந்த வகையிலாவது செயல்பட அனுமதிக்குமா என்பது சந்தேகத்துக்குரியது ஆகும். ஆனால் பாலஸ்தீன அதிகார அமைப்போ ஹமாஸ் அமைப்பினரோ பாலஸ்தீனத் தொழிலாளர்களுக்கான எந்தத் திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. இந்த இரண்டு அமைப்புகளும் தங்களுடைய வளத்தை பெருக்கிக் கொள்வதற்காகவும் ஆட்சியில் தங்களது இருப்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொண்டனர்; மக்களுடைய நலன்கள் பற்றி அவர்கள் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. பாலஸ்தீன நாடு என்ற உரிமைக்காக உலக முதலாளித்துவ ஆட்சியினர் நடத்தும் உதட்டளவு சேவை தொடருமா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள, அதிகாரமற்ற, சிதறுண்ட, வறுமையில் உள்ள ஒரு நிலத்தில் பாலஸ்தீன நாடு என்பது சாத்தியமில்லை என்பது நமக்குத் தெரியும். உண்மையில் இந்த கற்பனையான கருத்து, இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி இனப் படுகொலையை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் அரசாங்கங்கள் நேர்மையாக இருப்பது போல நடிப்பதற்கு மட்டுமே உதவும். 

அழிவுகளிலிருந்து மீண்டு வர்க்க உணர்வு கொண்ட, முதலாளிய எதிர்ப்பையும், தேசியவாத எதிர்ப்பையும் கொண்ட இயக்கம் தோன்றினால் ஒழிய பாலஸ்தீனத் தொழிலாளர்களுக்கு - சூடான், காங்கோ, எல் சால்வடார், ஏன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கும் கூட - எதிர்காலம் இல்லை. போட்டியிடும் முதலாளிய நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் இவற்றின் கூட்டணிகளுக்கு இடையிலான பெரும் அழிவைத் தரும் போரை நோக்கி உலகம் போய்க் கொண்டிருக்கிறது. மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் பருவநிலை மாற்றம் இந்த பூமிப் பந்தில் நமது இருப்பை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ இலாபங்களும் அதிகாரமும் வீழ்ச்சி அடைந்து வருவதால் மிகவும் தாராளவாத அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் கூட ஃபாசிசம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. புரட்சிகரமான அமைப்பு மாற்றம் மிகச் சமீபத்தில் இல்லை; ஆனால் அது மிக அவசியமானது. நாம் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியங்களின் பிடியிலிருந்து மீள உலகம் முழுவதும் இந்த நொடியில் இருந்தே திட்டமிடுவோம்; தொழிலாளர்களுக்காக தொழிலாளர்களால் ஆளப்படும் உலகை நாம் இப்போதே திட்டமிடுவோம். 

ஆங்கிலத்தில்: எல்லன் இசாக்ஸ்

தமிழில்: கவிதா

(இந்தக் கட்டுரையின் ஆசிரியர் எல்லன் இசாக்ஸ் ஒரு மருத்துவர்; இனவாதத்திற்கு எதிரானவர், முதலாளித்துவத்திற்கு எதிரான செயல்பாட்டாளர்.)

 நன்றி: Countercurrents


Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...